சாவி நடத்திய, 'பூவாளி' இதழில் இருந்து: இயக்குனர், கே.பாலசந்தர் முதன்முதலில் சினிமா நடிகர் ஒருவருக்கு கதை சொல்லப் போன நிகழ்ச்சி, இது. பாலசந்தரே சொல்கிறார்:
கடந்த, 1949ல், கல்லுாரி படிப்பை முடித்து, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக, எந்த, 'டிபார்ட்மென்டி'லாவது, வேலை கேட்டு, ஜெமினி ஸ்டுடியோவிற்கு ஒரு விண்ணப்பம் போட்டேன். அதில், கல்லுாரியில் நான் நாடகங்களில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களையும் இணைத்திருந்தேன். சில நாட்களுக்கு பின், எனக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், 'உங்களுக்கு, தற்போது வேலை தர முடியாத நிலையில் இருக்கிறோம். உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வரும்போது, தகவல் தரப்படும்...' என்று எழுதியிருந்தது. வழக்கமான, 'ரிக்ரட்' கடிதம்.
கடிதத்தின் கீழ், 'காஸ்டிங் அசிஸ்டென்ட், ஆர்.கணேஷ்' என்று கையொப்பம் இடப்பட்டிருந்தது. சந்தர்ப்பமில்லை என்று தெரிவிக்கிற மறுப்பு கடிதத்திலாவது, வாசன் கையெழுத்து இருக்குமென்று நினைத்து, ஏமாந்தேன்.
பல ஆண்டுகள் கழித்து, அந்த கடிதத்தை, நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையொப்பம் இட்டிருந்தவர், அப்போது, மிக பிரபலமாக இருந்த, காதல் மன்னன், ஜெமினி கணேஷ் என்பது.
பிறகு, 1962 - 63ம் ஆண்டில், நான், சென்னை, ஏ.ஜி.எஸ்., ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்போது, சென்னை நகரில் மிக நல்லவிதமாக பேசப்பட்ட நாடகமாக, மேஜர் சந்திரகாந்த் அரங்கேறியிருந்த நேரம்.
'ஹிந்து' குரூப்பில் பணிபுரிந்த, டி.எம்.ராமசந்திரன் என்ற பத்திரிகையாளர், என்னிடம் வந்து, 'ஹிந்து' ரங்கராஜன், உங்களுடைய, மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை, படமாக்க விரும்புகிறார். தாங்கள், என்னோடு நேரில் வர வேண்டும். நாடகத்தை, அவர் இன்னமும் பார்க்கவில்லை என்பதால், அதன் கதையை, நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டும்...' என்று, அன்புடன் வேண்டுகோள் விடுத்தார். நானும், அவரது பேச்சைத் தட்ட முடியாமல் சென்றேன்.
'ஹிந்து' ரங்கராஜனை நான் சந்தித்த போது, அவருடன், முன்னணி நடிகராக இருந்த, ஜெமினி கணேசனும் இருந்தார். அப்போது தான், நான் முதன் முதலில், ஜெமினி கணேசனை நேரில் சந்தித்தேன்.
நாடகக் கதையை அப்படியே சொல்லும்படி, 'ஹிந்து' ரங்கராஜன் என்னைக் கேட்டுக் கொண்டார். நானும், கதை சொல்ல ஆரம்பித்து இரண்டு மூன்று நிமிடம் இருக்கலாம். ரங்கராஜன், கடிகாரத்தைப் பார்த்தபடி, 'திரையுலகம் சம்பந்தப்பட்ட ஒரு பெரும்புள்ளி கல்கத்தாவிலிருந்து அன்று திரும்பி வருகிறார். நாங்கள் இருவரும், விமான நிலையத்துக்குப் போக வேண்டும்...' என்று, கூறினார்.
நான் கதை சொல்ல ஆரம்பித்து, கதை சூடு பிடிப்பதற்கு முன், இடையில் நிறுத்தி, விமான நிலையத்துக்குப் போன் செய்து, 'கல்கத்தா விமானம் எப்போது வருகிறது...' என்று கேட்டுக் கொண்டார். என் கதைக்குப் பிடித்த துரதிருஷ்டம், அன்று விமானம் சரியான நேரத்திற்கு வருவதாக தகவல் வந்தது.
மறுபடி கடிகாரத்தை பார்த்துவிட்டு, என்னைப் பார்த்தனர். நான், நண்பர் டி.எம்.ராமச்சந்திரனைப் பார்த்தேன். இப்பிரச்னைக்கு பளிச்சென்று, ஒரு விடை கண்டுபிடித்தார், ஜெமினி கணேசன்.
'பாலசந்தரும் நம் கூடவே காரில் வரட்டும். விமான நிலையத்திற்கு போகும் வழியில், மீதி கதையை சொல்லட்டுமே...' என்றார். ரங்கராஜன், டிரைவர் இருக்கையில் அமர, ஜெமினி முன் இருக்கையிலும், நானும், டி.எம்.ஆரும் பின், இருக்கையிலும் உட்கார்ந்து கொண்டோம்.
மீனம்பாக்கத்தை நோக்கிப் புறப்பட்டது, கார். மீண்டும் ஒரு முறை தொண்டையைக் கனைத்து, விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர ஆரம்பித்தேன்.
'இது எங்கே ஓ.கே., ஆகப்போகிறது...' என்ற நினைப்பில், நானும் உணர்ச்சி இல்லாமல் கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.
நடு நடுவில், ரங்கராஜனும், ஜெமினியும் ஏதோ சில சொந்த விஷயங்களை பேசிக் கொள்வர்.
அப்போது, என்னை நிறுத்தச் சொல்வர். பேசி முடித்ததும், என்னைத் தொடரச் சொல்வர்.
'எந்த இடத்திலே நான் கதையை நிறுத்தினேன்...' என்று அவர்களைக் கேள்வி கேட்கத் தோன்றும். இன்னும் சில சமயம், 'காரை நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்கிறேன்...' என்று சொல்லத் தோன்றும்.
அதற்குள் விமான நிலையம் வந்து விட்டது. என்னையும் விமான நிலையத்துக்குள் வரும்படி அழைத்தனர். நான், காரிலேயே உட்கார்ந்திருப்பதாக சொல்லி விட்டேன்.
திரையுலகம் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளி வந்து விட்டார். அவரோடு, ஜெமினியும் சென்று விட்டதாக கேள்விப்பட்டேன். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. என்னை அழைத்துப் போக அவர் வருவதற்குள், ராமச்சந்திரனிடம் சொல்லிவிட்டு, ஒரு டாக்சியைப் பிடித்து, வீட்டிற்கு வந்து விட்டேன்.
பிறகு, ஜெமினி கணேசுடன் எத்தனையோ படங்களில் வேலை செய்து விட்டேன். ஜெமினியிடம், இது பற்றி கடைசி வரைக் குறிப்பிட்டதே இல்லை.
நடுத்தெரு நாராயணன்