அன்புள்ள அம்மாவுக்கு—
நான், 33 வயது பெண். அரசு துறையில் அதிகாரியாக பணிபுரிகிறேன். இரண்டு வயதில், போலியோவால் பாதிக்கப்பட்டு, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.
இக்குறையை கண்ட அப்பா, என்னையும், அம்மாவையும் தனியாக விட்டு விட்டு, எங்கோ சென்று விட்டார். ஆரம்ப பள்ளி ஆசிரியையான, அம்மா தான், என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.
அம்மாவின் அம்மா, அதாவது என் பாட்டி, வீட்டை கவனித்துக் கொள்ள, என்னை துாக்கி சென்று பள்ளியில் விட்டு, திரும்பவும் துாக்கிக் கொண்டு வருவார், அம்மா.
'நன்றாக படிக்கணும், நிறைய படிக்கணும்...' என்று சொல்லி சொல்லியே வளர்த்தார். அம்மா, ஆசிரியையாக இருந்ததால், எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அவரது அன்பாலும், ஆதரவாலும் நான்கு டிகிரி பெற்றேன். அரசு தேர்வுகள் எழுதி, முதல் கிரேடு பணிக்கும் தேர்வாகி, இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.
இதற்கிடையில், பாட்டி இறந்து விட்டார். அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
'நான் இருக்கும் காலத்திற்குள், உனக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட வேண்டும்...' என்று, நாளும் புலம்புவார், அம்மா.
ஆனால், எனக்கு தான் திருமணத்தில் விருப்பமில்லை. சொந்த அப்பாவே, ஊனமுற்ற என்னை ஒதுக்கி சென்று விட, என்னை திருமணம் செய்பவரும் அப்படி இருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்.
என்னை விட்டால், அம்மாவுக்கு வேறு துணை இல்லை. நான் திருமணம் செய்து போன பின், அவரை யார் கவனித்து கொள்வர். மேலும், காலம் முழுக்க எனக்காக கஷ்டப்பட்ட அம்மாவை, அவரது கடைசி காலம் வரை கண் கலங்காமல், ராணி மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
சக்கர நாற்காலி துணையுடன், என் வேலைகளை நானே செய்து கொள்கிறேன். ஊனமுற்றோருக்கான மூன்று சக்கர வாகனத்தை நானே ஓட்டி அலுவலகம் மற்றும் பல இடங்களுக்கு சென்று வருகிறேன். நானும், அம்மாவும் சந்தோஷமாக இருக்கிறோம். இதைவிட வேறு என்ன வேண்டும்.
'திருமணமே செய்து கொள்ள மாட்டேன்...' என்று, பலமுறை கூறி விட்டேன்.
ஆனால், அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று, எனக்கும் புரியவில்லை.
நான், மேலும் மேலும் பதவி உயர்வு பெற்று, நிறைய சம்பாதித்து, என்னை போன்றவர்களுக்கு உதவ நினைக்கிறேன்.
என் எண்ணம் சரிதானா... அம்மாவை எப்படி சமாதானப்படுத்துவது. வழி கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
இளம்பிள்ளைவாதம், உன் உடலுறுப்புகளை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பது, எனக்கு தெரியாது. எது எப்படி இருந்தாலும் இளம்பிள்ளைவாதம் தாக்கப்பட்ட பெண்கள், திருமணம் செய்து கொள்கின்றனர், குழந்தைகளும் பெற்றுக் கொள்கின்றனர். மரபியல் ரீதியாக தாயிடமிருந்து குழந்தைக்கு போலியோ வராது.
பொதுவாக, போலியோ பாதித்த பெண்களை, ஆண்கள் பணத்துக்காக மட்டுமே திருமணம் செய்து கொள்கின்றனர்.
உன்னைப் பொறுத்தவரை நீ பெரிய பதவியில் இருக்கிறாய். கைநிறைய சம்பாதிக்கிறாய். உன்னுடைய வேலைகளை யாரையும் சார்ந்திருக்காமல், நீயே செய்து கொள்கிறாய். உன்னை மணந்து கொள்ள நுாற்றுக்கணக்கான ஆண்கள் முன் வருவர்.
வருகிற ஆண், உன்னை மதிப்பானா, அன்பாக பார்த்துக் கொள்வானா என்பது, மில்லியன் டாலர் கேள்வி. உடல் ஊனம் இல்லாத பெண்களுக்கு, அழகான பணக்கார பெண்களுக்கு, அன்பான கணவன் கிடைப்பது உத்திரவாதம் இல்லை. ௧௦௦ல், ௧௦ பெண்களுக்கே கனவுக்கணவன் அமைகிறான்.
உன்னை பொத்தி பொத்தி வளர்த்த பாட்டி இறந்து விட்டார். உன் வாழ்நாள் முழுக்க, உன்னுடன் தாய் இருப்பாரா என்பதையும் யோசி. உனக்கொரு ஆண் துணை வேண்டுமா, தாம்பத்யம் வேண்டுமா என்பதை, உன் மனதிடமும், உடலிடமும் ஆத்மார்த்தமாக கேட்டுப்பார்; உன்னை புரிந்து கொண்ட ஆண் கிடைக்கிறானா என தேடிப்பார்.
வாழ்க்கைத்துணை அமைத்து கொள்வதில், 'ரிஸ்க்' எடுத்துக்கொள். உன்னை புரிந்து வாழ்ந்தான் என்றால், அது ஆயுட்காலபந்தம்; இல்லை என்றால், அந்த திருமண வாழ்க்கை, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளே.
திருமணமே செய்து கொள்ளாமல் ஒற்றை ஆளாக வாழ்ந்து போவதை விட, சில பல ஆண்டுகள் தாம்பத்யத்தை அனுபவித்து விட்டு போகலாமே!
'எனக்கு தாம்பத்யம் முக்கியம் இல்லை. 'ரிஸ்க்' எடுத்து திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடில்லை. தந்தை உட்பட உலகின் அனைத்து ஆண்களையும் வெறுக்கிறேன். என்னை போல் ஊனமுற்ற ஆயிரக்கணக்கான சகோதரிகளுக்கு சேவை செய்தே தீருவேன்...' என்கிற வைராக்கியத்துடன் இருக்கிறாய் என்றால், திருமணம் செய்து கொள்ளாதே.
உன் தாயாரின் பெயரால் ஒரு அறக்கட்டளை ஆரம்பி. மாற்றுத் திறனாளி பெண்களின் கல்விக்காக, அறக்கட்டளை பணத்தை செலவு செய்.
அம்மா சிறிது காலத்துக்கு புலம்புவார். அறக்கட்டளை ஆரம்பித்து, மக்கள் சேவையை, ஐந்து அல்லது 10 ஆண்டுகள் கண்ணார கண்டு விட்டார் என்றால், உன் வழிக்கு முழுவதும் வந்து விடுவார்.
உன் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.