என் முன் அமர்ந்திருந்த இளைஞனுக்கு, 20 வயதிருக்கலாம். பெயர், சிவராமன். சுருள் சுருளான கேசம். தீட்சண்யமான கண்கள். ஆனால், முகத்தில் சிரிப்பையோ, லேசான புன்னகையையோ காட்டாமல், 'உம்'மென்று அமர்ந்திருந்தான். ஒருவேளை, நான் மனோதத்துவ மருத்துவன் என்பதால், புன்னகையை அடக்கி, அமர்ந்திருக்கலாம்.
ஐயாம், மனோகரன். மனோதத்துவ மருத்துவர். பேச்சிலேயே சிகிச்சைக்கு வந்திருப்பவர்களின் கோளாறுகளை துல்லியமாக கண்டறிந்து, தகுந்த சிகிச்சையளிப்பதில் நிபுணன். ஒரு, 'அப்பாயின்மென்டு'க்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டுமென்றால், நான் எவ்வளவு, 'பிசி'யானவன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு வாரத்துக்கு முன், என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட, சிவராமனின் தந்தை, சாமிநாதன், 'டாக்டர் சார்... என் மகன், என் பேச்சை கேட்க மாட்டேன்கிறான்.
'என்னை மாதிரியே அவனையும் ஒரு எழுத்தாளனாக்கணும்ங்கிறது, என் கனவு, ஆசை, லட்சியம். ஆனா, அவன், எழுத்துன்னாலே எரிஞ்சு விழறான். நீங்கதான் அவனுக்கு, 'கவுன்சிலிங்' கொடுத்து, புத்தி சொல்லி வழிக்கு கொண்டு வரணும்...' என்று கூறி, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கியிருந்தார்.
இன்று, சிவராமனை என் முன் கொண்டு வந்து அமர்த்தி, ''டாக்டர் சார்... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... நான் போயிட்டு ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடறேன். நீங்க, அதுக்குள்ள, 'கவுன்சிலிங்' முடிச்சிருங்க,'' என்று சொல்லிச் சென்றார்.
மனோதத்துவ சிகிச்சை கொடுக்கும்போது, உறவினர்கள், குறிப்பாக, தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் போன்ற ரத்த சம்பந்தமான உறவுகள் அருகில் இல்லாமல் இருப்பது, ஒரு விதத்தில் நல்லது தான்.
சிவராமனை பார்க்கும்போது, அவன் சிகிச்சைக்கு வந்திருப்பது போல் தெரியவில்லை. கேஷுவலாக அமர்ந்திருந்தான்.
''சொல்லு தம்பி... உனக்கு என்ன பிரச்னை,'' என்றேன்.
''பிரச்னை எனக்கில்லை, டாக்டர்... எங்க அப்பாவுக்கு தான். அதை உங்ககிட்ட சொல்றதுக்கு தான், அவரு உங்க பேரை சொல்லி, வா, பார்த்துட்டு வரலாம்ன்னு கூப்பிட்டப்போ, பிரச்னை பண்ணாம வந்தேன்,'' என்றான்.
அதிர்ந்தேன்.
அப்பன் என்னடான்னா, 'மகன், என் பேச்சை கேட்க மாட்டேங்குறான். அதான் பிரச்னை...' என்கிறார்.
'அப்பா தான் பிரச்னை...' என்கிறான், மகன்.
நெற்றியை சுருக்கி யோசித்தேன்.
''மிஸ்டர் சிவராமன்... ஒரு டாக்டர், தன் மகன் டாக்டராகணும்ன்னு ஆசைப்படுகிறார். ஒரு வக்கீல், தன் மகன் வக்கீல் ஆகணும்ன்னு, ஒரு அரசியல்வாதி, தன் மகனை அரசியல்வாதியாகணும்ன்னு ஆசைப்படுகிறார்.
''அதுபோல், எழுத்தாளரான, உங்கப்பா, உன்னை எழுத்தாளனா ஆக்கணும்ன்னு ஆசைப்படுகிறார். நியாயமான ஆசை தானே, அதை ஏன் நீங்க தப்பா பார்க்குறீங்க... உங்கப்பாவை, பிரச்னையா ஏன் நினைக்குறீங்க.''
''அவர், ஆசைப்படலாம் டாக்டர்... அது தப்பே இல்லை. ஆனா, அந்த ஆசை எனக்கும் இருக்கணும்ல... இல்லையே, அதுமட்டுமில்லே, எழுத தெரியாது. அதனால், நான் நிறைய காதல் கதைகள் எழுதி பிரபலமாகி, சாகித்ய அகாடமி விருது வாங்கணுமாம். அவரோட அந்த ஆசையை என் மேல திணிக்க பார்க்குறது தப்பில்லையா, டாக்டர்.''
''தம்பி... அப்பாக்களோட ஆசையில எப்பவுமே குறை கண்டுபிடிக்க கூடாது. அப்பாக்கள் பல பேரு வீட்டுல இருக்குற கஷ்டத்தால படிக்காம இருக்கலாம். ஆனா, தன் மகனும் அதுபோல இருந்துட கூடாதுன்னு, தன் சக்திக்கு மீறி கடனோ உடனோ வாங்கி படிக்க வைக்கிறதில்லையா...
''அது மாதிரி உங்கப்பாவும், தன்னால வாங்க முடியாத விருதை, தன் மகனாவது வாங்கணும்ன்னு நினைக்கிறார். அதுல ஒண்ணும் தப்பில்லையே.''
''தமிழ் எழுத்தாளர்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு, சாண்டில்யன் மாதிரி, பெண்களை அங்கம் அங்கமா வர்ணிச்சு எழுதினவங்க வேற யாராவது இருக்காங்களா, டாக்டர்.''
''இல்லை.''
''அவரோட, கடல் புறாவுக்கும், யவன ராணிக்கும் இணையான நாவல்கள் ஏதாவது வந்திருக்கா.''
''இல்லை.''
''சரி, அவருக்கு, சாகித்ய அகாடமி விருது கிடைச்சுதா?''
''வாட்... சாண்டில்யனுக்கு, சாகித்ய அகாடமி விருது கிடைக்கலியா?''
''ஆமா டாக்டர்... கிடைக்கலை. சரி, அதை விடுங்க. பல்லவ மன்னன் மாமல்லனையும், சோழ மன்னன், ராஜராஜனையும் பற்றி விலாவாரியா, விபரமா, சிவகாமி சபதத்தையும், பொன்னியின் செல்வனையும் எழுதின, கல்கிக்கு, சாகித்ய அகாடமி கொடுத்தாங்களா?''
''தம்பி... நீங்க தப்பா சொல்றீங்க. கல்கிக்கு, சாகித்ய அகாடமி விருது கொடுத்திருக்காங்க,'' என்றேன்.
''கொடுத்திருக்காங்க. எதுக்கு, அலை ஓசைங்கிற அவரோட சமூக நாவலுக்கு.''
''தம்பி, நீ என்ன சொல்ல வர்றே,'' என்றேன்.
''டாக்டர்... உங்களுக்கு தெரிஞ்சு தமிழ் எழுத்தாளர்கள்ல, 'மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்'ன்னு, யாரையாவது ஒருத்தரை குறிப்பிட்டு சுட்டிக் காட்ட முடியுமா?''
''ஏன் முடியாது, சுஜாதாதானே அந்த பெருமைக்கு சொந்தக்காரர். அவரை விட பொருத்தமானவர் வேற யாராவது இருக்க முடியுமா... இன்னிக்கு நாம எலெக் ஷன்ல ஓட்டு போட்டுட்டு இருக்கிற, ஈ.வி.எம்., மிஷின் தயாரிப்புல கூட அவரோட பங்கிருக்கே தம்பி,'' என்றேன்.
''குட். சரியா மேட்டருக்கு வந்துட்டீங்க. இந்த அரசாங்கம், சுஜாதாவுக்கு, சாகித்ய அகாடமி விருது கொடுத்து கவுரவிச்சிருக்கா?''
சிவராமனின் கேள்வி என்னை திக்குமுக்காட வைத்தது.
''ஒரு எழுத்தாளர்ன்னா, சமூகத்துல நிமிர்ந்து நிற்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, டாக்டர்... விரல் நோக எழுதணும். அதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, பிரசுரமாகுதான்னு தவமிருக்கணும்.
''அது, கதையோ, கட்டுரையோ, அந்த பத்திரிகை ஏத்துக்கிட்டு அது பிரசுரம் ஆச்சுன்னா மகிழ்ச்சி. அதுக்கு ஒரு சன்மானம் கொடுக்கிறாங்க இல்லையா, அதோடு அந்த அத்தியாயம், 'க்ளோஸ்!' பிரசுரம் ஆகாதவைகளை புத்தகம் போடுறதுக்கு வேணா, 'யூஸ்' பண்ணிக்கலாம். அதுலயும் நுாறு பாலிடிக்ஸ் இருக்கு,'' என்றான்.
கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தேன்.
சாமிநாதன் நினைப்பது போலல்ல சிவராமன்; விபரமானவன் என்பதை, அவனது ஒவ்வொரு வார்த்தையும் எடுத்து காட்டிக் கொண்டிருந்தது.
''இதை, நான் எவ்வளவு பக்குவமா, தெளிவா, நிதானமா எடுத்துச் சொன்னாலும், எங்கப்பாவுக்கு புரிய மாட்டேங்குது, டாக்டர்... திரும்ப திரும்ப எழுத்து எழுத்துன்னே புலம்பி, சாகித்ய அகாடமி விருதுன்னு சொல்லிச் சொல்லி, என் பிராணனை வாங்கிட்டிருக்காரு. அதான் சொன்னேன், எனக்கு பிரச்னையில்லை; எங்கப்பாவுக்கு தான்...'' என்றான், சிவராமன்.
''தம்பி... அவர் உன் அப்பா. உன்னோட எதிர்கால வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு, ஒரு ஆலோசனை சொல்றார். அதை ஏன் நீங்க தப்பாவே புரிஞ்சுக்கறீங்க.
''கதைங்கிறதே, ஒன்பதே ஒன்பது, 'கான்செப்ட்'ல முடிஞ்சு போற விஷயம். அந்த ஒன்பது, 'கான்செப்ட்'ட வெச்சு தான், நாட்டுல இருக்குற எல்லா எழுத்தாளர்களும், கதாசிரியர்களும் ஒப்பேத்திகிட்டு இருக்காங்கன்னு, இயக்குனர், பி.வாசு ஒரு பேட்டியில சொல்லியிருக்கார். நானும் படிச்சிருக்கேன்,'' என்றேன்.
''டாக்டர்... ஒன்பது, 'கான்செப்ட்' கூட தப்பு தான். ரெண்டே ரெண்டு, 'கான்செப்ட்' தான். ஒன்று, ராமாயணம், இன்னொன்று, மகாபாரதம். இன்னிக்கு நாட்டுல நடக்குற அத்தனை அநியாயங்களையும், அந்த ரெண்டே ரெண்டு, 'கான்செப்ட்'ல, வால்மீகியும், வேதவியாசரும் எழுதி வெச்சுட்டு போயிருக்காங்க. அந்த ரெண்டை தான், இயக்குனரு, ஒன்பதா, 'இம்ப்ரூவ்' பண்ணியிருக்காரு. அவ்வளவு தான்,'' என்றான், சிவராமன்.
கேட்ட எனக்கே, ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது.
'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிசுங்கிறா மாதிரி, விபரங்களை, கைவிரல் நுனியில் வைத்து பையன் அசத்துறானே... இவனுக்கா இவன் தந்தை பித்து பிடிச்சிருக்குன்னு சொல்லி, 'ட்ரீட்மென்ட்' கொடுக்க அழைச்சிட்டு வந்திருக்கார்...' என, என் மனதில், கேள்விகள் ஊர்வலம் வரத் துவங்கியிருந்தது.
''என்னப்பா சொல்றே,'' என்றேன்.
''ஆமாம் டாக்டர்... இன்னிக்கு, 'டிவி' தொடர்களில், ஒவ்வொன்றிலும், கல்யாணம் ஆன தம்பதியரை ஒண்ணு சேர விடாம தடை போடுறதை தவறாம காட்டுறாங்களே, அந்த, 'கான்செப்ட்'டை எதிலிருந்து காப்பி அடிச்சிருக்காங்கன்னு நினைக்குறீங்க?''
''எதுலேர்ந்து.''
''ராமாயணத்துலேர்ந்து தான், டாக்டர். கல்யாணம் பண்ணிட்டு வந்தவுடனே, ராமனையும், சீதையையும் ஒண்ணு சேர விடாம, ஒரு நாள், ரெண்டு நாள் இல்ல, 14 வருஷம் காட்டுக்கு துரத்தினாங்களே, அதுலேர்ந்து சுட்டது தான்.
''அதே மாதிரி, அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசை வைக்கிறதும், அதுக்காக எந்த லெவலுக்கும் போறதுமான, 'கான்செப்ட்' எல்லாமே அந்த வால்மீகியோட ராமாயணத்துலேர்ந்து சுட்டது தான்.''
நான் பிரமித்தேன்.
''அது மட்டுமில்லே, அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறதுக்கு என்ன செய்யலாம், எப்படி செய்யலாம்னெல்லாம் காட்டுறாங்கள்ல, அதெல்லாம் எதுலேர்ந்து சுட்டது... மகாபாரதத்துலேர்ந்து தான்...
''டாக்டர், என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும். உங்க கொள்கையை என் மேல திணிக்காதீங்க, சுமத்தாதீங்க. என்னோட சிந்தனைப்படி என்னை இயங்க விடுங்கங்கறேன். அது தப்பா,'' என்றான்.
''அது சரி, உங்க வாழ்க்கையில, முன்னேற்றத்துக்கு நீங்க என்ன ஐடியா டிசைன் பண்ணி வெச்சிருக்கீங்க, தம்பி,'' என்றேன்.
''டாக்டர், நான் கர்நாடக இசையில, எம்.ஏ., முடிச்சிருக்கேன். 72 மேளகர்த்தா ராகமும் அத்துப்படி. தவிர, 100 கீர்த்தனைகள் வரை தெரியும். இதை வெச்சு என் வாழ்க்கையை நான் ஒப்பேத்திடுவேன்னா, நம்ப மாட்டேங்குறாரு,'' என்றான், சிவராமன்.
புரியாமல் அவனை பார்த்தேன். என் பார்வையில் பொதிந்திருந்த கேள்வியை புரிந்து கொண்ட அவனே தொடர்ந்தான்:
''டாக்டர்... ஒரு கச்சேரின்னு போனா, அதுல அதிகபட்சம், 20 பாட்டு பாடுவோம். அடுத்த கச்சேரியிலயும், இதே, 20 பாட்டை திரும்ப பாடினாலும், யாரும், ஏன்னு கேட்க மாட்டாங்க. நாமளா அந்த அட்டவணையை மாத்தி, வேறொரு, 20 பாட்டு பாடலாம். அதையும், 10 - 20 கச்சேரிகள்ல திரும்ப திரும்ப பாடி பொழைச்சுக்கலாம்...
''பொழைக்கிறதுக்கு வழி, விரலா, குரலான்னா... நான் குரல்ங்கறேன்; அவர், விரல்ங்கிறார். இதுதான் டாக்டர் வித்தியாசம்,'' என்றான், சிவராமன்.
''சரி... கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதே. ரெண்டே ரெண்டு, 'கான்செப்ட்'ல முடியற எழுத்தை, பாலோ பண்ணி கதை எழுத முடியாதுன்னா, ஏழு ஸ்வரங்கள்ல, 72 மேளகர்த்தா ராகங்கள், அதுலேர்ந்து ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ள ஜன்ய ராகங்கள்ன்னு ஏகப்பட்டது இசையில இருக்கே, அதையெல்லாம் எப்படி சமாளிப்பே,'' என்றேன்.
''டாக்டர்... வீணை பாலசந்தர், பாலமுரளி கிருஷ்ணா இந்த ரெண்டு பேரை தவிர, கர்நாடக சங்கீத வித்வான்கள்ல, அந்த, 72 கர்த்தா ராகங்களையும் கரைச்சு குடிச்சவங்க யாரும் கிடையாது. 25லேர்ந்து, 50 ராகங்கள் வரைக்கும் கரதலப்பாடமா தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. அவ்வளவு தான். அதை வெச்சுதான் ஒப்பேத்திகிட்டு இருக்காங்க...
''இப்ப சொல்லுங்க, டாக்டர்... என்னோட கோணம் சரியா, இல்ல எங்கப்பாவோட கொள்கை சரியா...'' என்றான், சிவராமன்.
சிந்தித்து பார்த்ததில், சிவராமனின் கோணம் தான், 100க்கு 100 சரி என்று தோன்றியது. நான் கணித்து முடிப்பதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.
''எஸ்... கம் இன்,'' என்றேன்.
''டாக்டர், 'ட்ரீட்மென்ட்' முடிஞ்சுதா... பையன் தெளிவாயிட்டானா, கதை எழுதறதுக்கு ஒத்துக்கிட்டானா,'' என்று கதைத்தபடியே, எதிரில் வந்தமர்ந்தார், சாமிநாதன்.
''இல்லை சார். 'ட்ரீட்மென்ட்' முடியல. இனிமேதான் ஆரம்பிக்கணும்,'' என்றேன்.
''இனிமேல் தானா, என்னாச்சு டாக்டர்... எனி ப்ராபளம்,'' என்றார், சாமிநாதன்.
''எஸ்... ப்ராளம் தான்.''
''யாருக்கு, என்ன ப்ராபளம் டாக்டர்?''
''உங்களுக்கு தான்.''
''எனக்கா?''
''ஆமாம். உங்களுக்கு தான். உங்க மகன் தெளிவா இருக்கார். நீங்கதான் குழம்பிப் போயிருக்கீங்க. அதனால, உங்களுக்கு தான், 'ட்ரீட்மென்ட்' தேவை,'' என்றேன்.
உட்கார்ந்த நிலையிலேயே உறையத் துவங்கியிருந்தார், சாமிநாதன்.
அவரை, ஆழ்நிலை உறக்கத்தில் ஆழ்த்த ஆயத்தமானேன்.
திருவரங்கன்