துப்பறியும் எழுத்தாளரால் துப்பறிய முடியாத விஷயம்!
அப்பாவிடம் நான் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை.
ஏன் அடி வாங்கினேன் என்று விளக்கப் போனால், வெட்கத்தை விட்டு சில விஷயங்களை வெளிக் கொட்ட வேண்டியிருக்கும்; வேறு வழியில்லை.
சிறு வயதில், என்னிடம் காசு திருடும் பழக்கம் உண்டு. என் வாழ்நாளில் இதுவரை, எந்த பேட்டியிலும், (வானொலி, 'டிவி' மற்றும் பத்திரிகை) வெளிவராத செய்தி இது. 'வாரமலர்' வாசகர்களிடம் தான், முதல் முறையாக இதை வெட்கம் விட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்.
பெரியம்மா வீட்டில், ஓரணாவைக் கூட வெளியில் பார்க்க முடியாது. அலமாரியில் பணத்தை வைத்து பூட்டி, சாவியை வேஷ்டியில் சொருகி வைத்துக் கொள்ளும் பழக்கம், பெரியப்பாவிடம் உண்டு. அவர் துாங்கும்போதோ, தலையணைக்கடியில் போய் விடும், சாவி.
அதே நேரத்தில், மேல் தீனிப் பிரியனான எனக்கு, கடையில் கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். பெரியம்மாவிடம், சாப்பாட்டைத் தவிர ஏதும் கிடைக்காது.
கடைத் தெருவுக்கு கூடவே போனால் கூட, எதுவும் வாங்கித் தரமாட்டார்கள். மிஞ்சிப் போனால், கொடுக்காய் புளி, முந்திரிப் பழம் கிடைக்கும். மிட்டாய், ரொட்டி, ஊஹும் மூச்!
எங்கள் சென்னை வீட்டில் சமையல்காரராக இருந்த முத்து என்பவர், விடுமுறைக்கு அவரது ஊரான தேவகோட்டைக்கு வந்தால், என்னை வந்து பார்ப்பார். கடைக்கு அழைத்துப் போய் வேண்டிய தின்பண்டங்களை வாங்கி கொடுப்பார்.
கயிற்றால் ஆன மிட்டாய் ஒன்று. கயிற்றை இழுத்தால் இது சுற்றும். இது, எங்கள் வீட்டு எதிர்க் கடையில் பிரபலம். கொஞ்ச நேரம் இதில் விளையாடி விட்டு, எப்போது சாப்பிடத் தோன்றுகிறதோ அப்போது தான் அதைச் சாப்பிடுவேன்.
சென்னை வந்ததும், காட்சிகள் மாறின. அப்பாவும் சரி, அம்மாவும் சரி, காசை 'பர்சை' அங்கங்கே பார்வையில் படும்படி வைத்து விடுவர். (பிள்ளைகள் எப்படிக் கெட்டுப் போகின்றனர் பார்த்தீர்களா, பெற்றோரே!)
எங்கள் வீட்டிலிருந்து ஒரு திருப்பம் வரை நடந்தால், தீனதயாளு முனையில், நாயர் டீக்கடை. அதில், 10 காசுக்கு, விரித்த கையின் அளவிற்கு ஒரு, 'பன்' கிடைக்கும். 'பன்' என்றால், எனக்கு கொள்ளை ஆசை.
அம்மா தினமும், 10 பைசா தான் தருவார். தினம் ஒரு, 'பன்' உறுதி. ஆனால், அதற்கு மேல் கடலை மிட்டாய், தேன் மிட்டாய் என, ஆசைப்படுவேன். கிடைக்காது.
ஒருமுறை, அப்பா, குளிக்கும்போது வெளியில் வைத்துவிட்டு போன, குண்டு சிவப்பு, 'பர்ஸ்' என்னை ஈர்த்தது. எட்டணா மட்டும் எடுத்தேன். பள்ளிக்கு எடுத்துப் போனேன். ஓரணா தான், 'ரீட்டா ஐஸ்!' பாலால் செய்தது. அவ்வளவு ருசியாக இருக்கும். பரவாயில்லை, எட்டு நாளைக்கு, 'ரீட்டா ஐஸி'ற்கு போதும்.
ஆனால், இரண்டாவது நாளே வில்லனாக, என் நண்பன் வேணுகோபால் வந்து சேர்ந்தான்.
'டேய்... எனக்கும் ஒண்ணுடா...' என்றான்.
வேறு வழியின்றி வாங்கிக் கொடுத்தேன். இதற்கு பிறகு என்னுடன் ஒட்டிக்கொண்டான். சாப்பாட்டு நேரமோ, 'ரீசஸ்' நேரமோ நிழலாய்த் தொடர்வான். அங்கிங்கு அசைய மாட்டான். சரி என வாங்கிக் கொடுத்ததில், அந்த எட்டணா சீக்கிரமே தீர்ந்து போயிற்று.
அப்பாவின் அடுத்த குளியலின்போது, ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை உருவினேன். அடுத்த குளியல், இம்முறை, 10 ரூபாய் எடுத்தேன். கையில், பையில் வைத்துக் கொள்ள பயம். பள்ளி வாசலில் ஐஸ்கிரீம் விற்கும், என்னுடன் சினேகமான, ஐஸ்காரர் ராஜுவிடமே கொடுத்து வைத்தேன்.
'ஐஸ்கிரீம் அக்கவுண்ட்' ஆரம்பமானது இப்படித்தான்.
ராஜு கணக்கும், செலவுக் கணக்கும் நீள நீள, என் கையும் நீள ஆரம்பித்தது. என் தேவை, 50 ரூபாயாக மாறியது.
எனக்கு வியப்பெல்லாம் இப்படி, 'பர்சி'லிருந்து உருவப்படுகிற காசு அதிகமாகி, 'பர்சின்' கனம் குறைந்தாலும், பணம் குறைகிறதே, திருடு போகிறதே என்று, வீட்டில் உள்ள எவரையும் இதுவரை அப்பா கேட்கவே இல்லையே, எப்படி?
இவ்வளவு துப்பறியும் கதைகளை எழுதுகிறவர், எப்படி இந்த திருட்டைக் கண்டுபிடிக்காமல் விட்டு விட்டார் என்பது தான், என் வியப்பு.
ஒருநாள், இதற்கு விடை கிடைத்தது.
தமிழ்வாணன் பற்றி இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்!
கடந்த, 1972ல், எனக்கு, 'ஹார்ட் அட்டாக்' வந்து, ஆபத்தான நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். ஜெமினி கணேசன் மட்டும் என்னைத் தினமும் வந்து பார்த்து விட்டுச் செல்வார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள், என் வீட்டிற்கு வந்து, வாசலில் காவலாளியிடம் என்னைப் பார்க்க அனுமதி கேட்டவர், தமிழ்வாணன்.
சிறு வயதிலிருந்து யாரைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ, அவரே என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று அறிந்ததும், இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
உள்ளே வந்து அமர்ந்ததும், என் இரு கைகளையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். அந்தப் பிடியில் ஒருவித மின்சார சக்தி பாய்வது போல உணர்ந்தேன்.
'கவலைப்படாதீர்கள், விரைவில் குணமாகி பழையபடி கலை உலகில் வலம் வருவீர்கள்...' என்று கூறினார்.
அவருடைய பேச்சில் ஓர் இனம் புரியாத அன்பும், ஆதரவும், நல்ல மனமும் தெரிந்தன.
என் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தபோது, அவர் பார்க்க வந்ததை, வாழ்நாளில் மறக்கவே முடியாது.
— தொடரும்
லேனா தமிழ்வாணன்