ப
கி.முத்துகிருஷ்ணன் என்ற வாசகர் சென்னையில் இருந்து அனுப்பிய கடிதம்:
நான், சென்னையில் வருமான வரி அலுவலகத்தில் பல பதவிகளில், 1968லிருந்து பணிபுரிந்து வந்தேன். 2001ல், வரி மீட்பு அதிகாரியாக பதவி உயர்வு தந்து, சென்னையிலேயே பொறுப்பைத் தந்தனர்.
கோப்புகளை ஆய்வு செய்ததில், ஒரு நபர், 75 லட்ச ரூபாய் வரியை செலுத்தாமல் இருப்பது தெரிந்தது. உடனே, அவருக்கு தகவல் தெரிவித்து, நிலுவையை செலுத்துமாறும், அப்படி செய்யத் தவறினால், 'ஜப்தி' நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தேன்.
அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் ஆய்வாளரை அழைத்து, அந்த நபருடைய காரை, 'ஜப்தி' செய்து விடலாம் என, ஒரு, 'வாரண்ட்' கொடுத்து அனுப்பினேன்.
இரண்டு மணி நேரம் இருக்கும். என்னுடன் பணிபுரியும் பல நண்பர்கள், 'என்ன சார் இப்படி செய்து விட்டீர்களே... நீங்கள் பாட்டுக்கு காரை கொண்டு வந்து விட்டீர்களே... போர்டிகோவும் இல்லை, கார் ஷெட்டும் கிடையாது; காரை எங்கு நிறுத்துவதாக உத்தேசம். மேலும், காருக்கு ஏதாவது பாதிப்பு நேர்ந்தால், நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்...' என்றனர்.
அதன் பிறகு தான் எனக்கே தெரியும்... ஆய்வாளர் சொன்னபடி காரை கொண்டு வந்து விட்டார் என்று! கீழே சென்று பார்த்தால், கப்பல் போன்ற ஒரு கார். காதலிக்க நேரமில்லை படத்தில் முதல் காட்சியில் வருமே, அந்த மாதிரி.
இதற்குள், காரின் சொந்தக்காரர் காரை கொடுத்து விடும்படி வேண்டினார்.
'வரி கட்டாத போது என்னால் ஒன்றும் செய்ய முடியாது...' என்று கூறினேன்.
'ஏதாவது ஏற்பாடு செய்து வருகிறேன்...' என்று சொல்லி விட்டு போனார்.
மாலை, 6:00 ஆகி விட்டபடியால், நான் கிளம்ப ஆயத்தமானேன். அப்போது, அந்த நபர், பணத்துடன் வருவதாகவும், காத்திருக்கும்படியும் தொலைபேசியில் சொன்னார். எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், ஒரு வேளை அந்த நபர் பணமாக கொடுக்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுடன் வருகிறாரோ என்று.
ஒழுங்காக பணியை செய்யும் போது, நாம் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், இரண்டு தாள்களில் ஒன்றில், அவர் என்னிடம் வரி பாக்கிக்காக இத்தனை ரூபாய் செலுத்தினாரென்றும், மற்றதில் நான் அவருடைய வரி பாக்கிக்காக இத்தனை ரூபாய் பெற்றுக் கொண்டேன் என்றும் எழுதி வைத்து விட்டேன்.
அந்த நபர், 7:00 மணிக்கு வந்து, 50 ஆயிரம் ரூபாய் தந்தார்.
'ஏதோ ஒன்றுமில்லாததற்கு இதையாவது கட்டினாரே...' என்று, காரை எடுத்துப் போக ஏதுவாக, ஒரு கடிதத்தை கொடுத்தனுப்பினேன். மறுநாள், அதே அலுவலக நண்பர்கள் என்னிடம் வந்து, 'கார் எங்கே?' என்று கேட்டனர்.
'அந்த நபர், 50 ஆயிரம் கட்டினார்; அதனால், திருப்பி கொடுத்து விட்டேன்...' என்றதற்கு, 'என்ன சார்... நீங்களே, 'ஜப்தி' பண்ணுகிறீர்கள்... நீங்களே, 'ரிலீஸ்' பண்ணுகிறீர்கள்... கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டாமா... உங்களுக்கு கமிஷனரிடம் இருந்து ஓலை வரப்போகிறது...' என்று, பயமுறுத்தி விட்டு சென்றனர்.
அலுவலகத்தில் ஒரு நடைமுறை உண்டு. அதன்படி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கமிஷனருக்கு, 'ரிப்போர்ட்' அனுப்ப வேண்டும். அதில், கடந்த மூன்று மாதங்களில் எவ்வளவு வரி பாக்கி வசூல் செய்தோம் மற்றும் என்னென்ன சொத்துக்களை, 'ஜப்தி' செய்தோம் என்பதை தெரிவிக்க வேண்டும்.
இந்த காரை, 'ஜப்தி' செய்தது பற்றி தெரிவிக்கப் போக, 'என் அனுமதி இன்றி எப்படி, 'ரிலீஸ்' செய்தீர்கள்...' எனக் கேட்டால், என்ன செய்வது என்று நினைத்தேன்.
அதே சமயம், இன்னும் இரண்டு மாதம் கழித்து தானே, அந்த ரிப்போர்ட் தர வேண்டும். அதற்குள் கடவுள் ஏதாவது வழி காட்டுவார் என்று, கவலையின்றி இருந்து வந்தேன்.
சில நாட்களுக்கு பின், அந்த நபர் ஒரு கடிதத்தை கொண்டு வந்தார்; அத்துடன், கோர்ட் ஆர்டர் ஒன்றும் இணைத்திருந்தார். அதன்படி, அவருடைய வருமானவரி வழக்கு, அவர் பக்கம் ஜெயம் ஆனபடியால், அவர் ஒரு பைசா கூட கட்ட வேண்டியதில்லை என்று கண்டிருந்தது.
கடவுளை நம்பி இறங்கியதற்கு ஒரு பிரச்னையும் இன்றி முடித்துக் கொடுத்தாரே என்று சந்தோஷம் அடைந்தேன். அடுத்து கொடுத்த, 'ரிப்போர்ட்'டில் அந்த காரைப் பற்றி எழுத வேண்டிய அவசியமே இன்றிப் போயிற்று.
என் அலுவலக வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
- இவ்வாறு எழுதியுள்ளார்.
இப்படியும் சில நல்ல அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
'கணவனும் - மனைவியும் உண்மையாக இருப்பது என்றால் எப்படி...' என்று கேட்டானாம்,ஒருவன். அதற்கு,ஆன்மிக பெரியவர் ஒருவர் கூறிய குட்டிக் கதை இது:
ஒருநாள், குடும்பத் தலைவன் ஒருவன், தன் நண்பர்களுடன் ஜாலியாக குடித்தான். குடிப்பது மனைவிக்கு பிடிக்காது என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.
எனவே, நிச்சயமாக இன்று, வீட்டில் செம ரகளை நடக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனாலும், குடித்து விட்டான்.
போதை தலைக்கேறிப் போயிருந்ததால், அவன் சுய சிந்தனையை முற்றிலுமாக இழந்த நிலையிலேயே வீடு திரும்பினான்.
காலையில், போதை தெளிந்து எழுந்தபோது, விடிந்திருந்தது. மனைவியை தேடியபோது, மேஜையில் ஒரு கடிதம் இருந்தது. அதை எடுத்து படித்தான்.
அதில், 'அன்பே... 'ஹாட் பேக்'கில் சப்பாத்தி இருக்கிறது. நீங்கள், அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன். எனவே, உங்கள் பாஸுக்கு போன் செய்து, 'லீவு' சொல்லி விட்டேன்; நன்றாக ஓய்வெடுங்கள். மாலையில் சந்திப்போம்...' என்று, மிக அன்போடும், பரிவோடும் எழுதப்பட்டிருந்தது.
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
குடித்துவிட்டு வந்ததற்காக, அவன் மீது கோபப்படுவது தான் அவளது வழக்கம். ஆனால், இப்போது என்ன இப்படியொரு திடீர் மாற்றம்?
தன் மகனை அழைத்து, 'இரவு என்ன நடந்தது...' என்று, விசாரித்தான்.
இரவில், வீட்டிற்கு வந்து, குடிவெறியில், அவன் பாத்திரங்களை உடைத்ததையும், வாந்தி எடுத்து உடைகளை அசிங்கம் செய்ததையும் விவரித்தான்.
'அப்புறம், அம்மா உங்களை படுக்க வச்சு, அசுத்தமடைந்த சட்டை, பேன்ட்டை கழற்றும்போது, 'கையை எடு. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு'ன்னு நீங்க கத்தினீங்க...' என்றான்.
கணவன் குடித்திருந்தாலும், தன் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறான் என்ற ஒன்றே, அவன் மீது, அவளுக்கு அன்பைக் கூடுதலாக்கி இருக்கிறது என்பதே, இக்கதையின் அடிப்படை உண்மை.
உண்மைக்கு சக்தி அதிகம்.