லெ.நா. சிவக்குமார், சென்னை:ஞாயிற்றுக்கிழமை என்றால், மதிய சாப்பாட்டில், 'கறி' இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி; தமிழகத்தில் மட்டுமா அல்லது நாடு முழுவதும் உண்டா?
தமிழகத்தில், வசதியானவர்கள் வீட்டில் தினமும் உண்டே; நாடு முழுவதும் இதே நிலை தான்! காஷ்மீரில், பிராமணர்கள் வீட்டிலும் இதே நிலை தான். அதே நேரம், சாப்பாட்டு தட்டில் சோற்றை, நாம் வைப்பதற்கு எதிராகவும், மற்ற கறி, கூட்டை, சோறு வைக்கும் இடத்திலும் வைத்து உண்பர்!
* ஷோபனாதாசன், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை: நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க, மத்திய அரசால் முடியாது என, ராகுல் குற்றம் சாட்டியுள்ளாரே...
இவர்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம், இளைஞர்கள் முழுமையாக வேலையில் இருந்துள்ளனரா என்ன?
* கி என்.ஜெ.மகாலிங்கம், நெடுகுளா, நீலகிரி: நடிகர்களால், அரசியல்வாதி ஆக முடிகிறது... ஆனால், அரசியல்வாதிகளால் நடிகர்களாக முடிவதில்லையே... ஏன்?
ஏற்கனவே மக்கள் முன் நடித்துக் கொண்டிருப்பவர்கள், திரையில் வர விரும்புவதில்லை... அதனால் தான்!
அப்துல், திருச்சி: மருத்துவர் ஆகியே தீரவேண்டும் என்று, இன்னும் கனவு காணும், மாணவ - மாணவியருக்கு, என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...
நல்ல கனவு தான்; வாழ்த்துக்கள்! ஆனால், 'நீட்' தேர்வுக்கு தயார் செய்து கொள்ளுங்கள். அரசும், நீதியும் இதில் பிடிவாதமாக உள்ளன. வசதி இருந்தால், பழைய ரஷ்ய நாட்டிலிருந்து பிரிந்த நாடுகளில் கல்வி பயில செல்லுங்கள். அங்கெல்லாம், 'நீட்' தேர்வு கிடையாது!
* கி. ரமேஷ், நெல்லை: அரசியல் உலகில், பெண் தலைவிகள் ஏன் அதிகமாக இல்லை?
ஆண் அரசியல் தலைவர்கள் பேச வரவே, இரண்டு மணி நேரமாகிறது. பெண் தலைவிகள் என்றால், அவர்கள் தலை சீவி, பூ வைத்து புறப்படுவதற்குள், கூட்டத்தின் தேதியே மாறி விடுமே! இதனாலேயே பெண் தலைவிகள், அரசியலில் அதிகம் இல்லை!
கி. அம்பரிஷ், சென்னை: இந்நாளில், நீதி, நேர்மை, நியாயம் என்று சொல்வதெல்லாம் ஒன்றா?
காலை, 'டிபன்' - தோசை, இட்லி, இடியாப்பம் எல்லாம் ஒன்றா... என கேட்டால், எல்லாம் ஒன்று தான்! 'டேஸ்ட்' மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசம்! அவ்வளவு தான்!