முன்கதை சுருக்கம்!
கோவிலில் பூஜை செய்யும், குருமூர்த்தி சிவச்சாரியார், தன் மகள் புவனேஸ்வரிக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை அமைய வேண்டும் என, விரும்புகிறார். சாம்பசிவம் என்பவர், சி.ஏ., படித்திருக்கும், தன் மகன் ராஜாராமனுடன் பெண் பார்க்க வருவதாக கூற, மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்நிலையில், கார்த்திகேயன் என்பவனை காதலித்தாள், புவனேஸ்வரி.
பீச்சில், கார்த்திகேயனுடன் நடந்தாளே தவிர, குருமூர்த்தி சிவாச்சாரியாரின் மகள் புவனேஸ்வரியின் மனம், எங்கோ இருந்தது. அப்பாவிடம் காதல் குறித்து சொல்வதென்பது, அத்தனை சுலபமான விஷயமல்ல என்பதும் தெரிந்தே இருந்தது. அவரிடம் சொல்வது ஊருக்கே சொல்கிற மாதிரி.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை ஒட்டிய தெருவில் தான், அவர்கள் வீடு. வீட்டைச் சுற்றிலும் சொந்தங்களின் குடியிருப்பு.
அவள் வீட்டு மாடியில் பெரியப்பா. பக்கத்து வீட்டில் சித்தப்பா. சித்தப்பா வீட்டு மாடியில் சின்ன சித்தப்பா. நான்கு வீடுகள் தள்ளி அத்தை. அதற்கும் அடுத்த வீட்டில் மாமா. தெருக் கோடி வீட்டில், அம்மாவின் கடைசி தங்கை.
இப்படி சொந்தங்களும், பந்தங்களும் நிறைந்த கட்டுக்கோப்பான குடும்பத்தில், ரகசியம் என்ற ஒன்று எப்படி இருக்க முடியும்?
காதலிப்பது என்பது, பெரிய ரகசியம் இல்லை; குற்றமும் இல்லை. எப்படிப்பட்ட காதலும், ஒருநாள் வெளியில் வரத்தான் செய்யும். ஆனால், அப்பா புரிந்து கொள்வாரா, சம்மதிக்க வைக்க முடியுமா...
எப்படி முடியும், படிப்பதற்கே நாள் கணக்கில் அப்பாவை எதிர்த்து போராட வேண்டியிருந்தது. அந்த குடும்பத்தில் படிப்பு என்பதை அறிந்தவள், அவள் மட்டுமே.
பெரியவளானதும், பெண்களை, கோவில் தவிர வேறு எங்கும் வெளியில் அனுப்பாத குடும்பம். 12 வயதில் பெரியவளானாள். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவளை, 'பள்ளிக்கு போக வேண்டாம்...' என்றார், அப்பா.
இத்தனைக்கும், வீட்டிலிருந்து, 10 நிமிட நடை தான். வீட்டின் பின்புறம் ஒதுக்கி உட்கார வைத்த பின், தலைக்கு தண்ணீர் ஊற்றி, செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் முடித்த கையோடு புத்தகங்களை துாக்கிக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினாள்.
'எங்கம்மா கிளம்பிட்ட...' கேட்டார், அப்பா.
'ஸ்கூலுக்குப்பா...'
'இனிமேல், ஸ்கூலுக்கெல்லாம் போகக் கூடாதும்மா...'
'ஏம்ப்பா?'
'நீ பெரியவளா ஆயிட்டம்மா...'
சிரித்தாள், அவள்.
'என்னம்மா சிரிக்கற?'
'சிரிக்காம என்னப்பா செய்யிறது, அழுகிற விஷயமெல்லாம் எனக்கு புடிக்காதுப்பா...'
'எதுக்கும்மா அழணும்?'
'உடம்பு சம்பந்தப்பட்ட இயற்கையான ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தி, இப்படி ஊர் கூட்டினதை நினைச்சா, வேறு என்ன செய்ய முடியும்?'
'அதெல்லாம் சம்பிரதாயம், தொன்று தொட்டு வர்ற விஷயம். நிறுத்த முடியாது...'
'சரிப்பா... அத விடுங்க... அது முடிஞ்சு போன விஷயம்... ஆனால், ஸ்கூலுக்கு போறது அப்படி இல்லையே?'
'அதுவும் தொன்று தொட்டு வர்ற சம்பிரதாயம்மா...'
'அது சம்பிரதாயம்னா, இத்தனை பெண்களுக்கான பள்ளிக்கூடம் வந்திருக்காதேப்பா... லட்சக்கணக்கான பெண்கள் படிச்சிருக்க மாட்டாங்களே?'
'இதெல்லாம் வீண் விவாதம்மா...'
'விவாதம் பண்ணினாத்தான் முடிவு கிடைக்கும். பொண்ணுங்களை படிக்க விடலேன்னா, எந்த ஆஸ்பத்திரியில் நர்ஸ் இருந்திருப்பாங்க... பெண் டாக்டர்கள் இல்லேன்னா, பிரசவம் யார் பார்ப்பாங்க?'
'இதெல்லாம் என்னம்மா பேச்சு...'
'ஒரு பொம்மனாட்டி எப்படி நாட்டை ஆள்றான்னு, நீங்க, இந்திராவை பத்தி எத்தனை தரம் பெருமையா பேசியிருக்கீங்க...'
'இந்திராவும், நீயும் ஒண்ணாயிடுவீங்களா... அவங்க எங்க, நாம எங்க... நம் குடும்பத்துக்கு ஏத்த மாதிரி தான் நாம நடக்கணும்...'
'எட்டாவது ஒரு படிப்பா... இந்த வயசுல, வீட்டுல உட்கார்ந்து என்ன பண்றது?'
'அம்மணி அத்தை, சரோஜா அத்தையெல்லாம் என்ன பண்ணாங்க?'
'ஒயர் பின்னினாங்க... குரோஷா ஊசியை வச்சுக்கிட்டு ஏதேதோ செய்தாங்க... ஸ்வெட்டர் போட்டாங்க...'
'நீயும் அதையெல்லாம் செய்...'
'முடியாதுப்பா... என்னால அதெல்லாம் செய்ய முடியாது; எனக்கு படிக்கணும்...'
அப்பா மறுக்க, இவள் அழ, வீடு திமிலோகப்பட்டது. ஒட்டுமொத்த உறவுகளும் கூடின. அப்பா பக்கம், சித்தப்பாக்களும்; இவள் பக்கம், மற்ற அனைவரும் நின்றனர்.
கடைசியில், குடும்பத்திற்கு மூத்தவரான பெரியப்பா, 'பாவம்டா குழந்தை... 12 வயசுல வீட்டுல உட்கார்ந்து என்ன செய்வா... படிக்கட்டும்டா... காலம் மாறிண்டு வருது...' என்றார்.
'என்னண்ணா இப்படி சொல்றீங்க?'
'ஆமாண்டா. நான் நல்லது தான் சொல்வேன். சொல்றதை கேளு... வீட்டுக்கு மூத்தவன்ற முறையில் சொல்றேன். அவ ஸ்கூலுக்கு போகட்டும்; போக விடு...'
பெரியப்பாவின் குறுக்கீட்டினாலும், அழுத்தமான பேச்சினாலுமே, அன்று, அவள் பள்ளி படிப்பை தொடர முடிந்தது. அதன்பின், ஒருநாள், அவளை தனியாக கூட்டி போய் பேசினார், பெரியப்பா.
'உங்கப்பா என்ன நினைக்கிறான் தெரியுமா குழந்தை... எனக்கு, பிள்ளை, குட்டி இல்லை. அதனால் தான் இதையெல்லாம் ஆதரிக்கிறேன்னு சொல்றான். நீ, என் பொண்ணுதான்னு, நான் நினைக்கிறேன். ஆனால், அவன் அப்படி நினைக்கலையே?'
'பெரி...ய...ப்...பா...' என்று தழுதழுத்தாள்.
'ஒருவேளை, குழந்தை, குட்டி இல்லாததனால தான் இப்படி இருக்கேனோ... உங்கப்பா சொல்றதுல உண்மை இருக்குமோன்னு யோசிச்சு பார்த்தேன். எனக்கு பிறந்த பொண்ணாக இருந்தாலும் இதையே தான் செய்திருப்பேன்ற முடிவுக்கு வந்தேன்...'
பெருமை பொங்க பெரியப்பாவை பார்த்தாள், அவள். கதர் உடுத்தவில்லையே தவிர, பெரியப்பா, காந்தியவாதி. குருக்கள் குடும்பத்தில் முற்போக்கு சிந்தனை உடையவர்.
'பார்த்து நடந்துக்கோ குழந்தை... ஸ்கூலுக்கு போனோமா, வந்தோமான்னு இருக்கணும்... குனிஞ்ச தலை நிமிர கூடாது... என்ன?'
'தலையை குனிஞ்சுக்கிட்டே எப்படி பெரியப்பா நடக்கிறது... யார் மேலயாவது முட்டிக்க மாட்டோமா?'
'அப்படியெல்லாம் முட்டிக்க கூடாதுன்றதுக்காக தான் சொல்றது... நான் சொல்றது புரியுதா குழந்தை?'
ஒன்றும் புரியவில்லை. அதெல்லாம் புரிகிற வயசுமில்லை. ஆனாலும், புரிகிறதென்று தலையாட்டினாள்.
'அப்புறம், உங்கப்பன் என்னை தொலைச்சுப்புடுவான்... அவன் ரொம்ப சாது தான். ஆனால், சாது மிரண்டால் காடு கொள்ளாது...'
'சரி, பெரியப்பா...'
பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின், இதே கட்டம் மீண்டும் உருவாயிற்று. இப்போது, பெரியப்பா இல்லை. அவர் காலமாகி, இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால், இந்த முறை பெரியப்பாவிற்கு பதில் வகுப்பாசிரியைகளும், தலைமை ஆசிரியையும் துணை நின்றனர்.
'பள்ளி முதலாக மட்டுமின்றி, மாவட்ட முதலாகவும் வந்திருக்கிற பெண். இவளால், எங்கள் பள்ளிக்கே பெருமை. ஒரு தகப்பனாக, இவள் பெருமையில் பங்கு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. கல்லுாரிக்கு அனுப்பாமல் இவளை சிறுமைபடுத்தி விடாதீர்கள்...
'அது மட்டுமல்லாமல், முதல்வர் கூப்பிட்டு பரிசு தர இருக்கிறார். இப்படிப்பட்ட பெண்ணை, நீங்கள், கல்லுாரிக்கு அனுப்ப மறுத்தால், முதல்வர் கோபித்துக் கொள்வார்...'
இப்படியெல்லாம் பேசி, பயமுறுத்திய பிறகே கல்லுாரிக்கு அனுப்பப்பட்டாள். அதன் பிறகும் போராட்டம் தான்.
பட்டப் படிப்பில் வெற்றி பெற்று, மேல் படிப்பும் முடித்து, வேலை கிடைத்தபோது, மீண்டும் தடை போட்டார், அப்பா. இந்த முறையும், ஒட்டுமொத்த குடும்பமும் அவள் பக்கம் நின்றது.
'இன்னார் குடும்பம், இன்னார் பொண்ணுன்றது போய், புவனேஸ்வரி வீடு, புவனேஸ்வரியோட அப்பா, அம்மா... புவனேஸ்வரி சொந்தக்காரங்கன்னு சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியறது...' என்றார், பெரிய சித்தப்பா.
'அவளை போய், ஏண்ணா வீட்டுல முடக்கணும்... படிச்ச படிப்பு வீணாக கூடாது... அவளை, வேலைக்கு அனுப்புங்க...' என்றார், சின்ன சித்தப்பா.
'நாங்க தான் படிப்பு வாசனை அறியாமல் அடுப்படியில் குமையறோம்... அவளாவது சொந்த காலில் நின்னு சுயமாக சம்பாதிக்கட்டுமே...' என்றார், பெரிய அத்தை.
இவ்வாறு, ஆளாளுக்கு பேசி, ஒரு வழியாக அப்பாவை சரிக்கட்டி, அவளை வேலைக்கு அனுப்பினர்.
முதல் நாள், அலுவலகம் கிளம்பும் முன், அப்பாவை நமஸ்கரித்தாள்.
'அம்பாளை போய்ச் சேரட்டும்...' என்றவர் தொடர்ந்தார்...
'பனிரெண்டு வயசுல, நீ, என்னை மீற ஆரம்பிச்ச... இன்னிக்கு வரைக்கும் மீறிண்டே தான் வர்ற... இந்த வேலைக்கு போகும் விஷயமே கடைசி மீறலாக இருக்கட்டும்...'
தலை கவிழ்ந்து பேசாமல் நின்றாள், அவள்.
'இதற்கும் மேல் ஏதாவது நடந்தது என்றால், நான் தாங்க மாட்டேன்மா... நொறுங்கி போயிடுவேன்...'
அவள் கண்கள், நீரால் நிறைந்தன.
'இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா... நீங்க பயப்படற மாதிரி எதுவும் நடக்காதுப்பா...'
'நிச்சயமாகத்தான் சொல்றியாம்மா?'
'ஆமாம்ப்பா...'
'சத்தியமாகத்தானே சொல்ற?'
'இதுகெல்லாம் எதுக்குப்பா சத்தியம்?'
'இல்லம்மா... படிக்கணும்ன்னு ஆசைப்பட்ட, நல்ல காரியம். காலேஜுக்கு போக நினைச்ச, அதுவும் நல்ல காரியம் தான்... இப்போ, வேலைக்கு போகப் போற... இதுவும் ஒரு விதத்துல நல்லது தான். இந்த நல்லதுகளோட நிறுத்திக்கம்மா...'
'சரிப்பா...'
'குடும்பப் பேரையோ, குலப் பேரையோ கெடுக்கும்படியா எதுவும் பண்ணிடாத...'
'ஐயோ... என்னப்பா இது?'
'சொல்ல வேண்டியது என் கடமைம்மா... சொல்லிட்டேன், இனி, நடக்க வேண்டியது உன் பொறுப்பு...'
'சரிப்பா...'
'இது, போதும்மா எனக்கு...'
'என்னை, ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா...'
பண்ணினார்.
'நம்ம ஆச்சாரத்துக்கும், குடும்பத்துக்கும், குலத்துக்கும் ஏற்ற மாப்பிள்ளை வரணும். கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகள் பெற்று, நீ, சீரும் சிறப்புமாக வாழணும்மா...'
கார்த்திகேயனை சந்திக்கும் வரை, அவரின் பேச்சு, ஆசிர்வாதம் எல்லாம் நினைவிருந்தன. அவனை பார்த்த அந்த வினாடியிலிருந்து, அவர் சொன்ன அனைத்தும், அவள் மனதை விட்டு மறைந்து போயின. அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் எல்லாம் விலகி, கார்த்திகேயன் மட்டுமே நெஞ்சில் நிறைந்தான்.
— தொடரும்
இந்துமதி