ஏமாற்றாதே... ஏமாறாதே! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஏமாற்றாதே... ஏமாறாதே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 செப்
2020
00:00

ஜி.எம்., ஜெயராமின் வீடு.
அந்த அதிகாலை நேரத்தில், கம்பெனியின் நிறுவனர் மற்றும் எம்.டி.,யுமான சுப்பாராவ் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை.
''வாங்க சார்... ஒரு போன் செஞ்சிருந்தா, நான் வந்திருப்பேனே,'' மரியாதையுடன் கேட்டார், ஜெயராமன்.
''நோ... இது, முக்கியமான விஷயம். நம்ம ரெண்டு பேர் தவிர, யாருக்கும் தெரியக்கூடாது. போன்ல பேசினாக் கூட, 'லீக்' ஆயிடும்... நீங்க ஒரு உதவி செய்யணும்.''
சுப்பாராவ் குரலில் பதற்றம் தெரிந்தது.
''சொல்லுங்க சார்... என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்வேன்... இட் இஸ் மை டியூட்டி.''
''இல்ல, ஜெயராம்... கொஞ்சம் இல்லீகலான விஷயம்... அதான்.''
ஜெயராம் முகத்தில் இப்போது சந்தேகம்.
''இல்லீகல்னா?''
''வந்து... என் வீட்டுக்கு, இன்னிக்கு, 'ரெய்டு' வரப் போறதா, 'இன்பர்மேஷன்' வந்துருக்கு.''
சுப்பாராவ் சொல்ல, ஜெயராமின் முகம் வியர்த்தது.
''அதான்... கணக்குல வராத, பணம் வெச்சிருக்கேன்... அத இப்ப உங்ககிட்ட கொடுத்திட்டு போறேன்... நாளைக்கு வந்து வாங்கிக்கறேன். ப்ளீஸ்... கார்ல, பணம் இருக்கு, எடுத்துகிட்டு வரட்டுமா,'' கெஞ்சும் குரலில் கேட்டார், சுப்பாராவ்.
ஜெயராமின் முகத்தில், ஏகப்பட்ட பாவங்கள் ஓடின. சில நொடிகள் அவர் ஏதும் பேசவில்லை.
''என்ன ஜெயராம், எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க?'' என்றார், சுப்பாராவ்.
முடிவாக, ஜெயராமின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
''மன்னிக்கணும் சார்... இது, உதவி இல்ல; குற்றம். நீங்க மறைக்க நினைக்குற கருப்பு பணத்துக்கு, என்னை உடந்தையாக இருக்க சொல்றீங்க...
''இத நான் செஞ்சா, உங்களுக்கு என் பேர்ல மதிப்பு வரும். ஆனா, எனக்கு, என் பேர்ல வெறுப்பு வரும். நாணயமா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு வர்ற நான், இப்ப கரும்புள்ளி குத்திக்க விரும்பல... ஐ ஆம், சாரி சார்.''
ஜெயராமன் சொல்ல, சுப்பாராவ் முகத்தில் கோபமும், ஆச்சரியமும் சேர்ந்து காணப்பட்டது.
''ஐ ஆம் யுவர் எம்.டி., ஜெயராமன்.''
''சோ வாட்... அது, ஆபீஸ்ல... இது, பிரைவேட் பிசினஸ்... ஐ ஆம் சாரி சார்.''
அடுத்த நொடி, அங்கு நிற்க விரும்பாமல் வெளியேறினார், சுப்பாராவ்.
ஜெயராம் சற்று வருத்தப்பட்டார்.
'சே... ஏன் இந்த பிரச்னை வந்தது. அனாவசியமா கெட்ட பெயர். யார் தான் நேர்மையை மதித்து பாராட்டுவாங்க. இனி எப்படி மீதி இரண்டு ஆண்டு சர்வீசை கழிக்க முடியும்...' மனதில் குழப்பங்கள் ஆக்கிரமித்தன.
'அப்பா... ஏழுமலையானே... எல்லாம் நீ பார்த்துக்கிட்டா சரி...' என, கடவுள் மீது பாரத்தை போட்டார், ஜெயராமன்.
சுப்பாராவின் கார், அடுத்து, அட்மின் ஜி.எம்., பாண்டியன் வீட்டிற்கு பறந்தது.
திடீர் வரவை ஜீரணிக்க முடியாமல், திக்கு முக்காடினார், பாண்டியன்.
''சார்... வாங்க வாங்க...'' உள்ளே அழைத்தார், பாண்டியன்.
இருவரும் ஒரு அறைக்குள் சென்றனர்.
சுப்பாராவ் தான் வந்த விபரத்தை கூறி, ''மொதல்ல நம்ம ஒர்க் ஷாப், ஜி.எம்., வீட்டுக்கு தான் போனேன். பட், எதிர்பார்க்கவே இல்ல. யோக்கியன் மாதிரி பேசினாரு. இப்ப, உங்களைத்தான் நம்பி இருக்கேன். இந்த பணம், ஒரு நாள் உங்ககிட்ட இருக்கட்டும்... ப்ளீஸ்,'' என்றார்.
பாண்டியனுக்கு நிலைமை புரிந்தது. அவர் பெரிய கொள்கை கோட்பாடுகளுடன் வாழ்பவரில்லை. நெளிவு, சுளிவு தெரிந்தவர்.
''ஒரு நிமிஷம்...'' என்று சொல்லி, உள்ளே சென்று, தன் மனைவியிடம் கேட்டார்.
''ஏங்க... நமக்கு ஒண்ணும் பிரச்னை வராதே... ஒருவேளை, நம்ம வீட்டுக்கும், 'ரெய்டு' வந்தா,'' பெண்களுக்கே உரிய சந்தேகத்தை கேட்டாள்.
''தோ பாரு... இப்படி நாமளே கற்பனை பண்ணிக்க கூடாது. வாழ்க்கையில சின்ன சின்ன, 'ரிஸ்க்' எடுத்து தான் ஆகணும். அடுத்த மாசம், இந்த, எம்.டி., வெளிநாடு போகப் போறாரு... அப்ப நான், எம்.டி.,யாக வாய்ப்பு இருக்கு. இந்த உதவியை கண்டிப்பா செய்யலாம்.''
மனைவியை சமாதானப்படுத்தினார், பாண்டியன். பிறகு வெளியே வந்தார்.
''சார்... உங்களுக்காக இந்த, 'ரிஸ்க்' எடுக்கறேன். ஒரே ஒருநாள் உங்க பணத்தை பார்த்துக்கறேன்,'' என்றார்.
சுப்பாராவ் முகத்தில் பயம் மறைந்தது.
''ரொம்ப தேங்க்ஸ், பாண்டியன்... இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.''
சொல்லிவிட்டு, உடனே வெளியே நின்றிருந்த காரிலிருந்து, ஒரு சாக்கு மூட்டையை எடுத்து வந்தார்.
''என்ன சார் இது,'' கேட்டார், பாண்டியன்.
''அவசரத்துல அப்படியே அள்ளி போட்டு வந்துட்டேன்,'' என்று, மூட்டையை ஒப்படைத்து கிளம்பினார், சுப்பாராவ்.
மறுநாள் -
அதே காலை நேரத்தில், பாண்டியன் வீட்டிற்கு வந்தார், சுப்பாராவ்.
''ரொம்ப தேங்க்ஸ். ஆனா, 'ரெய்டு' நடக்கல... தப்பான, 'இன்பர்மேஷன்'னு நினைக்கிறேன். இதுபற்றி யாருக்கும், எதுவும் தெரிய வேண்டாம்,'' என்று சொல்லி, மூட்டையை வாங்கிச் சென்றார்.
அடுத்து வந்த நாட்களில், எம்.டி., மற்றும் இரண்டு ஜி.எம்.,களும், தத்தமது வேலைகளில் மூழ்கினர். இந்த, 'ரெய்டு' விஷயம் குறித்து, யாரும், எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அன்று, அலுவலக, 'கான்பிரன்ஸ்' அறைக்கு, பாண்டியன் மற்றும் ஜெயராமை அழைத்திருந்தார், சுப்பாராவ்.
''சுருக்கமா சொல்றேன்... நான் அடுத்த வாரம், 'பர்சனல் டிரிப்'பா, யு.எஸ்., போறேன். வர்றதுக்கு ஆறு மாசம் ஆகும். அதுவரைக்கும், இந்த கம்பெனிய, உங்களில் யாராவது ஒருத்தர், எம்.டி.,யாக இருந்து, பொறுப்பாக பார்த்துக்கணும்... ஓ.கே.,'' என்று கூறி, இருவரையும் பார்த்தார், சுப்பாராவ்.
மாதம், 10 கோடி ரூபாய் புழங்கும், கம்ப்யூட்டர் பாகங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில், எம்.டி., பொறுப்பு உயர்வானது.
ஜெயராம் சாதாரணமாக இருக்க, பாண்டியன் கண்களில் பரவசம் தென்பட்டது.
சில நொடிகள் யோசித்து, ''எஸ்... ஐ அப்பாயின்ட், மிஸ்டர் ஜெயராம் ஆஸ் எம்.டி.,'' என்றார்.
பாண்டியன் முகத்தில் பெரிய ஏமாற்றம் தெரிந்தது.
''தேங்க்ஸ் சார்... நான் என், 'டியூட்டி'யை, கண்டிப்பா நீங்க எதிர்பார்க்கறபடி செய்வேன் சார்,'' என்று சொல்லி, வெளியேறினார், ஜெயராமன்.
பாண்டியன் ஏதும் பேசாமல் நின்றிருக்க, அவரையே கூர்ந்து பார்த்தார், சுப்பாராவ்.
''மிஸ்டர் பாண்டியன்... சாரி பார் திஸ் டிசிஷன்... உங்க மனசுல ஓடற எண்ணங்கள் எனக்கு புரியுது. ஒரு இக்கட்டான நேரத்துல உதவி செஞ்சிருக்கோமே... இருந்தும், எம்.டி.,யா வர முடியலேன்னு நினைக்கறீங்க. பட், அந்த சூழ்நிலை, நான் வெச்ச டெஸ்ட்,'' என்றார், சுப்பாராவ்.
பாண்டியன் முகத்தில் அதிர்ச்சி.
''எஸ்... எந்த, 'ரெய்டு' அறிகுறியும் இல்ல... உங்க ரெண்டு பேரோட, கேரக்டரை சோதிக்க, நான் போட்ட, 'ப்ளான்' அது... மிஸ்டர் ஜெயராம், 'ஸ்டிரிக்டா' அவரோட கொள்கை படி, 'ஜெனியூனா' நடந்துகிட்டாரு... நீங்க உதவி செஞ்சீங்க... ஆனா, அதுக்கான சன்மானத்தையும் எடுத்துக்கிட்டீங்க...
''புரியல... நான் அந்த மூட்டையில பணத்தை எண்ணி தான் வெச்சேன். அப்புறம் பார்த்தா, இரண்டு லட்சம் கொறைஞ்சது. எனக்கு கொஞ்சம், 'ஷாக்' தான். இருந்தாலும், உங்களோட உதவிக்கு ஈடா நான், அதுபத்தி கேக்கல... ஓ.கே., இந்த கம்பெனிய நடத்த, நியாயமான ஆள் தான் தேவை... யு அண்டர்ஸ்டான்ட்... நீங்க போகலாம்.''
சுப்பாராவ் சொல்ல, அவமானத்துடன் வெளியேறினார், பாண்டியன்.
நேர்மை என்றுமே மனிதனை உயர்த்தும் என்பதும், அவருக்கு புரிந்தது.

கீதா சீனிவாசன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X