திண்ணை | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
திண்ணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 செப்
2020
00:00

ஏ.எல்.எஸ்.வீரய்யா எழுதிய, நாடகமும் சினிமாவும் நுாலிலிருந்து: தலை சிறந்த அரசியல்வாதியாக விளங்கியதுடன், சிறந்த நாடக நடிகராகவும் இருந்தவர், தீரர் சத்தியமூர்த்தி.
ராவ் பகதுார் சம்பந்த முதலியாரின், 'சுகுண விலாச சபா' என்ற அமெச்சூர் நாடக சபாவில், கதாநாயகனாகவே வேடம் போட்டுக் கொண்டிருந்தார், சத்தியமூர்த்தி.
மனோகரா நாடகத்தில், மனோகரனாக, சம்பந்த முதலியார் எழுதிய வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி, நடித்து, மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றார். அவர் நாடகத்தை பார்ப்பதற்கு, கட்டுக்கடங்காத கூட்டம் வரும்; அமோகமாக வசூலாகும்.
அவரின் நாடகங்களுக்கு கிடைக்கும் வசூல் எல்லாம் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், அங்கம் குறைந்தவர்களுக்கான கருணை இல்லங்கள் என, பொது ஸ்தாபனங்களுக்கே போகும்.
சுதந்திரத்திற்கு முன், புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ஆட்சியில் இருந்த காலத்தில், தீவிர காங்கிரஸ்காரர்கள், சமஸ்தான எல்லைக்குள் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
சத்தியமூர்த்தியின், மனோகரா நாடகம், புதுக்கோட்டையில் நடத்துவதாக இருந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள், காங்கிரஸ்காரரான சத்தியமூர்த்தி வர தடை இருந்ததால், அவர் நடித்துக் கொண்டிருந்த, மனோகரன் வேஷத்தை, தானே செய்வதாக முடிவு செய்து, விளம்பரமும் செய்து விட்டார், சம்பந்த முதலியார்.
ஆனால், சம்பந்த முதலியாரின் மறுப்பையும் மீறி, யாருக்கும் தெரியாமல் புதுக்கோட்டைக்கு போய் விட்டார், சத்தியமூர்த்தி. இவர் வந்திருக்கும் விஷயம், நாடகம் நடைபெறும் வரை யாருக்கும் தெரியாது.
நாடகம் நடைபெறும்போது, திடீரென்று, விகடன் எனும் நகைச்சுவை வேடத்தில் தோன்றியதும், புதுக்கோட்டை மக்களிடையே ஆரவாரம் அலைமோதியது. நாடகம் முடிந்தவுடன், அவர் வந்த விஷயம் பரவுவதற்கு முன், சென்னைக்கு திரும்பி விட்டார்.

க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து: இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களுள், கோபாலகிருஷ்ண கோகலேயும் ஒருவர்.
ஒருசமயம், பள்ளியில், கோகலேவிற்கு, வீட்டு கணக்கு கொடுத்தார், கணித ஆசிரியர். ஒரு கணக்கு மட்டும் தெரியவில்லை; தனக்கு தெரிந்த ஒருவரிடம் கேட்டு, போட்டுக் கொண்டு வந்தார், கோகலே.
மறுநாள் வகுப்பறையில், அனைத்து மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை பார்வையிட்டார், ஆசிரியர். கோகலே மட்டும் எல்லா கணக்குகளையும் சரியாக போட்டிருப்பதை கண்டு, அவரை பாராட்டி, பரிசு அளிக்கப் போவதாக கூறினார், கணித ஆசிரியர்.
இதைக் கேட்ட கோகலே, அழ ஆரம்பித்தார்.
'ஏன் அழுகிறாய்...' என கேட்டார், ஆசிரியர்.
'ஐயா, என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் பாராட்டுக்கோ, பரிசுக்கோ நான் உகந்தவன் அல்ல. எனக்கு தெரியாத கணக்கை, அன்பரிடம் கேட்டு போட்டேன். அதனால் தான், நீங்கள் என்னை பாராட்டும்போது, குற்ற உணர்வு தலை துாக்க, அழுது விட்டேன்...' என்றார், கோகலே.
அவர், உண்மை பேசியதைக் கேட்டு, மேலும் ஆச்சரியமடைந்த ஆசிரியர், அவரது முதுகை தட்டிக் கொடுத்து, ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார்.
'ஐயா, இந்த பரிசு பெற, எனக்கு தகுதி இல்லை...' என்றார், கோகலே.
'இருக்கலாம். ஆனால், நீ உண்மை பேசி, அதைவிட, பெரிய தகுதியை பெற்றிருக்கிறாய்...' என்று சொல்லி, மேலும், கோகலேவை பாராட்டினார், ஆசிரியர்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X