அன்பு சகோதரிக்கு —
நான், 40 வயது ஆண். ௧௦ ஆண்டுகளுக்கு முன், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு, வேலைக்கு சென்றேன். கடந்த ஆண்டு, அந்த கம்பெனியில் வேலை செய்து கொண்டே என்னுடன் பணியாற்றிய, ஒரு வட மாநிலத்தவருடன் கூட்டாக, துபாயில் ஒரு உணவகம் திறந்தேன்.
உணவகம் நல்லபடியாக நடந்துகொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன், ஒரு மாத விடுப்பில் ஊர் திரும்பினேன். விடுமுறை முடிந்து, துபாய் சென்று பார்த்தபோது, உணவகம், வேறு ஒருவர் கை மாறியிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
நான் விடுமுறையில், ஊர் வந்த சமயம் பார்த்து, கூட்டாளி நண்பர், உணவகத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு கைமாற்றி விட்டு, அதற்கான தொகையை சுருட்டி, கம்பி நீட்டியது தெரிய வந்தது.
நான், 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தேன். நட்பு, நம்பிக்கை என்ற அடிப்படையில், எழுத்துப்பூர்வமாக எந்த ஒப்பந்தமும் இல்லாததால், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
அந்த வட மாநில நண்பரின் விலாசமும் பொய் என்பது, விசாரணையில் தெரிய வந்தது. 10 ஆண்டு காலம் உழைத்து, சம்பாதித்த, 40 லட்சத்தை இழந்த நிலையில், நிம்மதியின்றி, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
வேலையில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. நான் என்ன செய்வது, சகோதரி.
— இப்படிக்கு,
அன்பு சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
நம்பிக்கை துரோகம், மனித குலத்தின் குணம். தந்தையை மகன் ஏமாற்றுகிறான். தம்பிகளை அண்ணன் ஏமாற்றுகிறான். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் ஏமாற்றுகின்றனர். முதலாளியை தொழிலாளியும், தொழிலாளியை முதலாளியும் ஏமாற்றுகின்றனர்.
'ஒரு ஆட்டுக்குட்டியை பார்த்துக் கொள்ளுங்கள். மறுநாள் பெற்றுக் கொள்கிறேன்...' எனக் கூறி, உறவினரிடம் விட்டு சென்றால், ஆட்டுக்குட்டியை வெட்டி தின்று, அவர்கள் ஏப்பமிடுகின்றனர்.
மறுநாள் கேட்டால், 'ஆட்டுக்குட்டியை எங்களிடம் விட்டு சென்றாயா... யாரிடம் கதை விடுகிறாய். எங்களது நேரத்தை வீணடிக்காமல் போய் விடு...'- என கூறுகின்றனர்.
கடல் கடந்து, மனைவி மக்களை விட்டு, ஒரு இந்தியன், அரபு நாட்டுக்கு வேலைக்கு போவது எதற்காக... பணத்துக்காக. உன்னுடைய, 40 லட்ச ரூபாயை, 10 ஆண்டு உழைப்பை, ஒரே நாளில், 'ஸ்வாஹா' பண்ண, உன் கூட்டாளிக்கு தக்க சந்தர்ப்பம் வாய்த்தது என்றால் விடுவானா... மலைப்பாம்பு போல வாரி சுருட்டி விழுங்கி விட்டான்.
உன்னிடம் சில கேள்விகள்-...
உணவகம் துவங்கும்போது நீயும், உன் கூட்டாளியும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போடவில்லையா... எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போடுவது பாதுகாப்பானது என, யாரும் உனக்கு யோசனை கூறவில்லையா?
உன் பங்களிப்பான, 40 லட்சம் ரூபாயை, ரொக்கமாகவா உணவகத்தில் முதலீடு செய்தாய்... வங்கி காசோலை மூலம் முதலீடு செய்திருந்தாய் என்றால், பண பரிவர்த்தனைக்கான ஆதாரம் இருக்குமே?
உனக்கும், உன் உணவக கூட்டாளிக்கும் இடையே, பொது நண்பர்கள் இருந்திருப்பரே... அவர்கள், நீ ஊரில் இல்லாத போது, உணவகம் விற்கப்படுவதை தடுக்கவில்லையா...
நீ, உன் கூட்டாளி மீதான புகாரை, இந்திய துாதரகத்தில் கொடுத்திருக்கலாமே... பாஸ்போர்ட் விவரங்களை வைத்து, கூட்டாளி பணி செய்த கம்பெனியில் இருக்கும் விபரங்கள் மற்றும் அவனின் ஆதார் அட்டை விபரங்களை வைத்து, அவனை கண்டுபிடித்திருக்கலாமே!
உன் கூட்டாளி, யாரிடம் உணவகத்தை கைமாற்றி விட்டு போனானோ, அந்த நபரையும் துபாய் போலீஸ் வைத்து விசாரிக்கலாமே... நீ, துபாய்க்கு வேலைக்கு சென்றது சம்பாதிக்க.
உனக்கேன் துளியும் சம்பந்தப்படாத உணவக தொழிலில், சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய ஆசை வந்தது?
துபாய் சட்டங்கள் மிகமிக கடுமையானவை. வேலை விசாவில் வந்த இரு இந்தியர்கள், தங்கள் பெயரில் உணவகம் ஆரம்பிப்பது, மிகமிக அரிதான விஷயம். நீயும், உன் கூட்டாளியும் ஒரு அரபியர் பெயரில் உணவகம் ஆரம்பித்தீர்களா... நீ, இந்தியா வந்தவுடன் கூட்டாளி, அரபியர் பெயருக்கு முழுமையாக மாற்றிவிட்டு ஓடி விட்டானா?
நீயும், உன் கூட்டாளியும் அரபு நாட்டு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டீர்களா... உரிய முறையில் நீ புகார் கொடுத்திருந்தால், 'இன்டர்போல்' மூலம், உன் கூட்டாளி சிக்கி விடுவானே... உன் கடிதத்தில் நீ சொல்லாமல் சில தகவல்களை மறைத்திருக்கிறாய் என, சந்தேகிக்கிறேன்.
உன் விஷயத்தில், பேராசை பெரும்நஷ்டம் என்பது, நிரூபணம் ஆகியுள்ளது. சூதாட்ட மனோபாவம் ஆபத்தானது. பரமபத அட்டையில் பாம்பு கடித்து ஆரம்பித்த இடத்துக்கு சரிந்து இறங்கி விட்டாய்.
'கொரோனா' நேரத்தில், அரபு நாடுகளில் ஆட்குறைப்பு வெகுவாக நடந்து கொண்டிருக்கிறது. நீ என்ன படித்திருக்கிறாய், துபாயில் நீ என்ன வேலை பார்க்கிறாயா, நீ இஸ்லாமியனா அல்லது வேற்று மதத்தினனா... -எந்த விபரமும் உன் கடிதத்தில் இல்லை.
வாழ்க்கை சினிமா அல்ல; இழந்த பணத்தை நான்கு நிமிட பாடலில் மீட்க. பணி பாதுகாப்பு இருந்து, துபாய் பணியில் தொடர்ந்தாய் என்றால், செலவுகளை சுருக்கி சேமிக்க பார்.
'கொரோனா'வுக்கு பிறகு, நீ இன்னும், 10 அல்லது 15 ஆண்டுகள், துபாயில் பணி தொடர முடிந்தால், இழந்த பணத்தை ஓரளவு சம்பாதித்து விடமுடியும்.
பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, மீண்டும் யாரிடமும் ஏமாறாமல், அமைதியான வாழ்க்கையை வாழ பார். இந்தியாவில் இருக்கும், உன் மனைவி, மக்கள் நலமாக இருக்க, உன் உழைப்பை தொடர்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.