''இந்த வீட்டை கட்டுவோம்ன்னு கொஞ்சம் கூட நினைக்கவே இல்லைங்க. ஏதோ கடவுள் புண்ணியத்துல நடந்தது மாதிரி இருக்குதுங்க. வாடகை வீட்ல படாத கஷ்டமெல்லாம் பட்டாச்சு... ஒரு ஊரா, ஒரு வீடா, அப்பப்பா...'' என்றாள், வசந்தி, கணவனிடம்.
''கடவுள் ரூபத்துல வந்த, என் ஒண்ணுவிட்ட அக்காவோட கணவர் தான் காரணம். ஏன்னா, அவர் தான், ஊர்ல, இத்தனை வருஷமா விக்காமலே கிடந்த, நம் பூர்வீக இடத்தை வித்துக் கொடுத்தார். இல்லைன்னா, எங்கேயிருந்து வீடு கட்றதாம்,'' என்றான், கணவர், சுந்தர்.
''ஒரு வழியா கிரஹப்பிரவேசம் நடந்து முடிந்து, குடி வந்தாச்சு. ஆனா, இரண்டொரு வீடுகள் தவிர, அக்கம் பக்கம் யாருமே இல்லையேங்க. நீங்க வேலைக்கு போயிட்டா, எனக்கு பயமா இருக்குமே,'' என்றாள்.
''ஆமா... கம்பளி விக்கிறேன், 'டேங்க்' கழுவுறேன்னு யாராச்சும் வந்தால், கதவை திறந்து வெளிய வந்திடாதே... அப்படியே போக சொல்லிரு... பிச்சை கேட்டு வந்தால் கூட, நம்பாதே; எதுவும் போட வேண்டாம். இரக்கப்பட்டு வெளியே வந்தால், உனக்கு எதுவும் உத்திரவாதம் இல்லை... கவனமா வீட்டுக்குள்ளேயே இரு,'' என்றான், சுந்தர்.
இப்போது தான், லேசாக வயிற்றில் புளியை கரைத்தது போல இருந்தது, வசந்திக்கு.
'அவசரப்பட்டு வீட்டை புறநகர் பகுதியில கட்டிட்டோமோ அல்லது பேசாமல் வாடகைக்காவது விட்டிருக்கலாமோ...' என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.
ஒருநாள் மாலை, 5:00 மணியளவில் வாசல் தெளித்து, காபி போட்டு எடுத்துக்கொண்டு, சற்றே காற்று வாங்கியபடி மொட்டை மாடியில் நடக்கலாம் என்று படியேறினாள்.
அப்போது, கீழே ஏதோ சப்தம் கேட்க, யாராக இருக்கும் என்று மேலிருந்து எட்டிப் பார்த்தாள், வசந்தி.
இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், பேன்ட் சட்டை அணிந்து, 'இன்' பண்ணி, கழுத்துப்பட்டையும், காலில் ஷூவும் அணிந்தபடி நின்றிருந்தான்.
வசந்தியை பார்த்ததும், ''மேடம், ஒரு நிமிடம் கீழே வர முடியுமா,'' என்றான்.
''என்ன விஷயம்,'' என்றாள், வசந்தி.
உடனே, அந்த இளைஞன், ''மேடம், நான் வேணா மேலே வரவா,'' என்றபடி, கேட்டை திறக்க முயற்சித்தான்.
பதறிப் போனாள், வசந்தி.
''ஹலோ... தம்பீ... நீ மேலேயெல்லாம் வரவேண்டாம். இரு...'' என சொல்லியபடியே,
கீழே இறங்கி வந்தாள்.
''என்னப்பா... உனக்கு என்ன வேணும்,'' என்றாள்.
''மேடம்... நான் பொது அறிவு சம்பந்தமான புத்தகம் விற்கிறேன். நீங்கள் கடையில் வாங்குவதை விட, பாதி விலைக்கே கிடைக்கும்,'' என்றான்.
''இங்க பாருப்பா, அதெல்லாம் படிக்க இங்க யாருமில்லை... எனக்கு வேண்டாம், நீ கிளம்பு,'' என்றாள், தன் படபடப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
அவன் எவ்வளவு முயன்றும், இவள் பிடிகொடுக்கவே இல்லை.
''சரிங்க மேடம்...'' என்று சொல்லி கிளம்புவதற்கு முன், வசந்தியின் கைகளை பார்த்தான்.
''மேடம்... உங்க கையில் என்ன வச்சிருக்கீங்க,'' என்றான்.
குழம்பியபடி, தன் கையில் வைத்திருந்த காராசேவு பாக்கெட்டை பார்த்து, ''ஓ... இதுவா, ஒண்ணுமில்லப்பா... நொறுவல் தான்,'' என்றாள்.
''எனக்கு தர்றீங்களா மேடம்,'' என, கேட்டான்.
ஒருவித தர்மசங்கடத்தில், 'இவ்வளவு, 'நீட்'டா இருக்கிறான், இதைப்போய் கேட்கிறானே...' என,
யோசித்தாள்.
'சரி... அவன் போனால் போதும். எதையாவது கொடுத்து அனுப்பி விடுவோம்...' என்று, ''இந்தாப்பா...'' என கொடுத்து அனுப்பி, மெல்ல மாடியேறினாள்.
'இந்நேரம் காபி ஆறியே போயிருக்கும்...' என, நினைத்தபடியே, குனிந்து கையில் எடுத்து நிமிர்ந்தாள். அந்த இளைஞன், இரண்டு காலி மனைகளை தாண்டி, எதிர்புறம் இருக்கும் ஒரு பூட்டிய வீட்டின் வாசலில் அமர்ந்து, தான் கொடுத்த காராசேவை தின்னுவதை பார்த்ததும், ஒரு நிமிடம் கண்கள் கலங்கிவிட்டது, வசந்திக்கு.
பெங்களூரில் தங்கி, வேலை தேடிக்கொண்டிருக்கும், தன் மகனின் நினைவு வந்தது.
'யாரு பெத்த பிள்ளையோ... என்ன படிச்சுட்டு இப்பிடி அலையுதோ... மதியம் சாப்பிட்டானோ இல்லையோ, தெரியலையே...' என, அவள் மனதிற்குள் ஏதேதோ கேள்விகள்.
அவள் சுய நினைவிற்கு வந்து, அந்த பக்கம் பார்த்தபோது, துாரத்தில், மெதுவாக நடந்து போய்க்கொண்டிருந்தான், அவன்.
காலிங் பெல் மூன்று முறை விட்டு விட்டு அடித்ததும், கணவன் சுந்தர் தான் வேலை முடிந்து வந்து விட்டார் என அறிந்து, கதவை திறந்து விட்டு, அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என, உணர்ந்த சுந்தர், ''என்னம்மா... என்னாச்சு உடம்பேதும் சரியில்லையா,'' என்றான்.
அவள் எதுவும் பேசவில்லை.
வசந்தியின் உடம்பை தொட்டுப் பார்த்தான். நார்மலாகவே இருந்தது.
''வசந்தீ... என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்க,'' என்றான்.
அவ்வளவு தான்... அவள் கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர் உதிரவும், அரண்டு போனான், சுந்தர்.
ஊரில் இருக்கும் அவன் அம்மாவும், திருச்சியில் இருக்கும் வசந்தியின் பெற்றோரும் அவன் நினைவில் வந்துபோக... 'ம்... யாராக இருக்கும்...' என்று, அவன் ஒரு, 'ரூட்டில்' தப்பு தப்பாக நினைக்க ஆரம்பித்து விட்டான்.
''வசந்தீ... யாரு, எங்கம்மாவா... இல்லை, உங்க அப்பாவா... யாருக்கு முடியலை,'' என்று கேட்பதற்குள், அவனை முறைத்தாள்.
மனசுக்குள் கொஞ்சம் நிம்மதியானான்.
'ஓ... எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க... அப்ப வேற ஏதோ மேட்டர். கண்டுபிடிப்போம்...' என நினைத்தபடியே, ''செல்லம்... டோன்ட் வொரி... நான் இருக்கேன்டா... நல்ல பிள்ளை இல்ல... ரெண்டே நிமிஷம் பொறு, நான் குளிச்சுட்டு வந்திடறேன்... எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்,'' என்று சொல்லி, குளியலறைக்குள் நுழைந்து விட்டான்.
''ம்... சொல்லு வசந்தி... என் தங்கத்துக்கு என்ன ஆச்சு,'' என, கேட்டபடியே அருகில் வந்தமர்ந்தான்.
''என் பிள்ளையை உடனே பார்க்கணும்,'' என்றாள்.
''ஹா... ஹா... இவ்வளவுதானா... இதுக்காகவா அழுதுகிட்டு உட்கார்ந்திருந்த... ஒரு போனை போட்டு, 'கிளம்பி வாப்பா'ன்னா வரப்போகிறான். இதுக்கு ஏன் அழணும்,'' என்றான்.
உடனே, வசந்தி, இன்று நடந்த விஷயத்தைக் கூறவும், வானுக்கும், பூமிக்குமாக குதித்தான், சுந்தர்.
''என்னது... கேட்டை திறந்தானா... நீ கீழே வந்து பேசினியா... அறிவில்லை உனக்கு, எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... யார் வந்தாலும் பேசாதேன்னு... அவன், காராசேவை கேட்டானாம்... இவள் கொடுத்தாளாம்...'' என, பொறிந்து தள்ளி விட்டான்.
ஒரு வழியாக அவன் கத்தி ஓய்ந்ததும், ''ஏங்க... பெங்களூர்ல நம் புள்ளயும் இப்படிதான கஷ்டப்படுவான். நாம அனுப்பற பணம் அவனுக்கு போதுமாங்க,'' என கேட்டாள், வசந்தி.
''இங்க பாரு, வசந்தி... காலம் முன்ன மாதிரி இல்லை. 'டெக்னாலஜி' எவ்வளவோ வளர்ந்திருச்சு. கையில பணம் இல்லாம இருந்தா, நம் பையன் போன் பண்ணியிருக்க மாட்டானா... சொன்னா, எப்படியாச்சும், 'ரெடி' பண்ணிட மாட்டேனா... 'ஆன்லைன்'ல போட்டா அடுத்த நிமிஷமே அவன்
ஏ.டி.எம்.,ல எடுத்துக்கிடலாமே... ஏன் இப்படி தேவையில்லாம உன் மனச போட்டு குழப்பிக்கிற,'' என்றான்.
''உங்களுக்கு தெரியாதா, நம் பையனுக்கு பொறுப்பு ஜாஸ்திங்க... எதையும் வாய்விட்டு கேட்க மாட்டான். அப்பா, அம்மா கஷ்டப்படுவாங்கன்னு நெனச்சுக்கிட்டு எதையுமே சொல்ல மாட்டான். அதனால தான், எனக்கு இந்த பையனை பார்த்ததும், நம் மகனோட ஞாபகம் வந்திருச்சு. நீங்க பார்க்கலைங்க; அதனால, உங்களுக்கு தெரியலை...
''அவன், தொழிலுக்காக நேர்த்தியா உடுப்பு உடுத்தியிருந்தாலும், கண்களில் பசியும், ஏதோ ஒரு சோகத்தின் பிடியிலும் இருக்காங்கறத என்னால உணர முடிஞ்சதுங்க... அதனால தான், என் உள் மனசு ரொம்பவும் உறுத்த ஆரம்பிச்சுருச்சு...
''அது மட்டும் இல்லைங்க, நீங்க, பெங்களூரில் காலேஜ்ல படிக்கறப்ப, கையில பணம் இல்லாத போது, தங்கியிருந்த அறையின் வாசலில் பூத்திருக்கும் பூக்களை பறிச்சு, அதுல இருக்குற தேனை உறிஞ்சி குடிப்பேன்... அப்படி குடிச்சா லேசா மயக்கம் வரும். பசி தெரியாம அப்படியே துாங்கிருவேன்னு சொன்னதெல்லாம், எனக்கு நினைவுல வர ஆரம்பிச்சுருச்சுங்க...
''அது மட்டும் இல்லைங்க... நீங்க சொல்ற பாதுகாப்பு, விழிப்புணர்வு, பொருள் மற்றும் உயிர் பயம் இது எல்லாத்துக்காகவும் நாம ஒண்ண இழந்து நிக்கிறோமேங்க,'' என்றாள்.
அவன் என்ன என்பது போல, அவளை ஏறெடுத்து பார்த்தான்.
''அதுதாங்க... நாம எல்லாரும் இரக்க குணத்தை இழந்துகிட்டே வர்றோமேங்க,'' என்றாள்.
ஒரு காலத்தில், நாமளும் இப்படித்தானே, 'சேல்ஸ்மேனாக' கஷ்டப்பட்டு வேலை பார்த்தோம் என்று நினைக்கும்போதே, சுந்தர் மனதிற்குள்ளும் ஏதேதோ கடந்த கால அனுபவங்கள் கோர்வையாக ஓடின.
பட்டுக்கோட்டையில் இருக்கும் தன் புதிய வாடிக்கையாளரை பார்த்து, பேசி முடித்து கிளம்பும் தருவாயில், அவர் தன் மனைவியிடம், சாப்பாடு எடுத்து வைக்க சொன்னார்.
'நான் போய் வருகிறேன் சார்...' என்று, சுந்தர் சொன்னதும், 'கை அலம்பிட்டு வாங்க, சாப்பிட்டுப் போகலாம்...' என, வற்புறுத்தி, சாப்பிட வைத்து தான் அனுப்பினார்.
உண்மையிலேயே, அவனிடம் அன்று கையில் பணமில்லை. பஸ்சுக்கு மட்டும் தான் வைத்திருந்தான். அவ்வளவு சுலபமாக யார் வீட்டிலும் சாப்பிடுபவனில்லை. அவரின் விடாப்பிடியான வற்புறுத்தலை தவிர்க்க முடியாமல் தான் சாப்பிட்டான்.
வெயிலில் அலைந்து, தான் களைத்துப்போய் வந்ததை உணர்ந்து தான், முன் பின் பார்த்திடாத அவர்கள் உபசரித்தனரோ என்னவோ என, ஒரு நொடி தன் கடந்த காலத்தை நினைத்தான், சுந்தர்.
'இப்போது மனைவியின் ஆதங்கமும், அந்த இளைஞனும், நம்மைப் போல எந்த சூழ்நிலையில் இருப்பானோ...' என, நினைத்துப் பார்த்ததும், எங்கோ சுரீர் என்று உரைத்தது.
ஒரு வாரம் கழித்து, அந்த தெருவின் முகப்பில், 'அன்பு நகர், குடியிருப்போர் நலச்சங்கம்' என, புதிய பெயர்ப் பலகையும், தடுப்பு போட்டு வைத்திருக்கும் நுழைவாயிலின் அருகே, சீருடையுடன் ஒரு காவலாளியும் அமர்ந்திருந்தார்.
''யார் வந்தாலும், 'விசிட்டிங் கார்டை' வாங்கி உறுதிப்படுத்தி அனுப்புங்கள்... அப்படியே, இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று,'' நாலைந்து பிஸ்கட் பாக்கெட்டுகளையும், தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து, ''யாராவது வெயிலில் வந்தாலோ, களைப்பாக இருந்தாலோ சாப்பிட கொடுங்கள்,'' என சொல்லி, தன் பைக்கை கிளப்பினான், சுந்தர்.
செ. செந்தில் மோகன்