டைட்டானிக் காதல் (3)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
00:00

முன்கதை சுருக்கம்!
தன் மகள் புவனேஸ்வரியை பெண் பார்க்க வருவதாக மாப்பிள்ளை வீட்டார் கூற, மகிழ்ச்சி அடைகிறார், குருமூர்த்தி சிவச்சாரியார். இந்நிலையில், மகள் புவனேஸ்வரி, தான் காதலிக்கும் கார்த்திகேயனை, முதன்முதலில் சந்தித்த அந்த நாளை, நினைத்துப் பார்த்தாள்...

திடீரென்று தான், புவனேஸ்வரிக்கு, அந்த எண்ணம் தோன்றியது. 'ஐ.ஏ.எஸ்., பரிட்சை எழுதினால் என்ன... நம் குடும்பத்தில், கலெக்டரே இல்லையே...'
உடனே, தனக்கு தானே சிரித்துக் கொண்டாள்.
'ஆமாம், ஐ.ஏ.எஸ்., மட்டும் தான் இல்லை. டாக்டர், இன்ஜினியர், வக்கீல், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் என, எல்லாரும் இருக்கின்றனரோ...' என, நினைத்துக் கொண்டாள்.
பிறந்தது, குருக்கள் குடும்பம். பரம்பரை பரம்பரையாக கோவிலில் தான் சேவகம். மஞ்சளும், சந்தனமும் அபிஷேகம் பண்ணி, குங்குமப் பொட்டு வைத்து, விபூதியும், குங்குமமும் கொடுத்து கொடுத்து, அப்பாவின் வலது உள்ளங்கை, பெண்களை போலவே மஞ்சள் நிறமாகவே மாறிப் போனதை கவனித்திருக்கிறாள்.
பெரியப்பா, சித்தப்பாக்கள், அத்தை வீட்டுக்காரர்கள் என, அனைவருமே கோவில் அர்ச்சகர்கள் தான். அத்தனை பேரும் பஞ்சகச்சம் வேஷ்டி, குடுமி தான்.
சிவாச்சாரியார் குடும்பம் என்றால், தெரியாதவர் இல்லை. அப்பாவின் பெயர் குருமூர்த்தி என்பதே யாருக்கும் நினைவில்லை. யாரும் அப்படி கூப்பிட்டதும் கிடையாது. அத்தனை பேருக்கும் அவர், சிவாச்சாரியார் தான்.
அந்த மாதிரி குடும்பத்தில் ஜனித்து விட்டு, தான் மட்டும், 'ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' மாதிரி பறக்க ஆசைப்படுவது எப்படி... யாரிடமிருந்து தனக்கு இந்த உத்வேகம் வந்தது... குடும்பத்தின் முந்தின தலைமுறையில் யாரும் படித்தவர்கள் கிடையாது. பாடசாலை என்பது, அவர்களுக்கு வேத பாடசாலை மட்டுமே.
அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த தனக்கு, ஏற்பட்டிருக்கும் இந்த, ஐ.ஏ.எஸ்., கனவு ரொம்பவும் அதிகமோ... சீகல் பறக்கலாம், சிட்டுக் குருவியால் அப்படி பறக்க முடியுமா, இயலுமா?
ஏன் முடியாது, ஏன் இயலாது?
இத்தனை துாரம் வந்ததற்கே, 'ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' புத்தகம் தானே காரணம். ரிச்சர்ட் பாக் எழுதிய அந்த புத்தகத்தை, அவளுக்கு பரிசாக கொடுத்ததே, ஆங்கில ஆசிரியை, லில்லி ராஜரத்தினம் தான். ஆங்கில பேராசிரியையான அவரே, அவளது கிரியா ஊக்கி. அடிக்கடி கூப்பிட்டு பேசுவார். முடங்கிப் போய் விடக்கூடாது என்பார்.
'உன் சூழ்நிலையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி வர கற்றுக்கொள்... நீ புத்திசாலி. அறிவாளி. இவை, ஆண்டவன் உனக்கு போட்டிருக்கும் பிச்சை. அவற்றை வீணாக்கி விடாதே. பற... மேலே மேலே பற... அதற்கு தான் இந்த புத்தகம்...'
லில்லி ராஜரத்தினம் சொல்லிச் சொல்லி தான், சிறகுகளை விரித்தாள். 'ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' படித்து படித்து, பறக்க கற்றுக் கொண்டாள். மேலே மேலே என, இதுவரை வந்தாயிற்று.
ஐ.ஏ.எஸ்., என்பது, இன்னும் கொஞ்சம் உயரம் தான். முடியும், நிச்சயம் தன்னால் முடியும். உயரத்தை பார்த்து மலைத்து விட்டால், சோர்ந்து போய் உட்கார்ந்து விடுவோம். கூடாது, பற... இன்னும் பற மேலே... அதற்கும் மேலே...
சட்டென்று முடிவுக்கு வந்தாள். அண்ணாநகரில் மிக பிரபலமான, ஐ.ஏ.எஸ்., அகாடமி இருப்பது அவளுக்கு தெரியும். அதைப் பற்றி நிறைய பேர் சிலாகித்து பேசி கேள்விப்பட்டிருக்கிறாள். அந்த அகாடமி, தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரால் நடத்தப்படுவது என்றும் கூறினர். அங்கு போய் விசாரித்து வரலாம் என்று, அலுவலகத்தை விட்டு கிளம்பினாள்.
'நிச்சயமாக அப்பாவிற்கு தெரியக் கூடாது. சொல்லாமல் தான் இருக்க வேண்டும். சொன்னால், மிரண்டு போவார். அப்பா மட்டுமல்ல, குடும்பமே மிரளும். இத்தனை நாட்கள் தன் பக்கம் நின்றவர்கள் எல்லாம், இனி, அப்பா பக்கம் போய் விடுவர். அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து, எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பர்.
'மேலும், 'இத்தனை நாள் உன் இஷ்டத்துக்கெல்லாம் வளைந்து கொடுத்தாச்சு. இந்த, ஐ.ஏ.எஸ்., படிப்பு, கலெக்டர் கனவெல்லாம் ரொம்ப அதிகம். ஏதோ வேலைக்கு போனோமா, வந்தோமா, கல்யாணம் பண்ணின்டோமா, பிள்ளை குட்டி பெத்தோமான்னு குடும்ப வாழ்க்கை வாழ்றதை விட்டுட்டு, இதெல்லாம் என்ன...' என்று, ஒரே குரலில், 'கோரஸ்' எழுப்புவர்.
'ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வேலைக்கு போவதை நிறுத்தி, வீட்டில் அடைக்கப்படலாம். மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிக்கப்படலாம்; குடும்ப வாழ்க்கைக்குள் தள்ளப்படலாம். இவற்றிலிருந்தெல்லாம் தப்பிக்க வேண்டுமானால், சொல்லாமல் தான் படிக்க வேண்டும்...' என, நினைத்துக் கொண்டாளே தவிர, சற்று பயமாகவும் இருந்தது.
'நாம் தப்பு எதுவும் பண்ணவில்லையே... நல்ல விஷயத்தில் தானே ஈடுபடுகிறோம்... தப்பு செய்தால் தான் பயப்பட வேண்டும்...' என, தானே சமாதானமும் சொல்லி, கிளம்பினாள்.
வெய்யில் சுரீரென்று முகத்தில் அடித்தது. செக்கச் செவேலென்ற நிறம் மேலும் சிவந்தது. அவள் அம்மா - அப்பா இருவரையும் கொண்டு பிறந்திருந்தாள்.
அப்பாவின் உயரம், அம்மாவின் நிறம். அப்பா கூட, நல்ல நிறம் தான். ஆனால், ஒரு மாதிரி ரோஜா நிறம். அம்மாவிற்கு தாழம்பூ நிறம். அதைத்தான் அவளும் கொண்டிருந்தாள். சிவாச்சாரியார், கம்பீரம். அந்த கம்பீரம், அவளுக்கு வந்திருந்தது. கண்களும், மூக்கும், கால் முட்டி தொட்ட கூந்தலும், ரவிவர்மா ஓவியம் தான்.
தெருவில் நடந்தால், பெண்கள் கூட திரும்பிப் பார்ப்பர்.
'இந்த சிவாச்சாரியார் குடும்பத்துக்கு மட்டும் இப்படி ஒரு லட்சணம் எப்படி வந்து சேருகிறது?'
'தினமும் அம்பாளை தொட்டு அபிஷேகமும், அர்ச்சனையும் பண்ணுகின்றனர் இல்லையா, அதான் அம்பாள், அம்பாளாகவே ஒவ்வொரு பொண்ணும் பிறந்திருக்கு...'
அப்போதும், தெருவில் போனவர்கள், அவளை திரும்பி பார்த்தபடி தான் கடந்தனர்.
பஸ் ஸ்டாப்பில் நின்று, அண்ணாநகர் பஸ் பிடித்தாள். பஸ்சை விட்டு இறங்கியபோது, அங்கு, ஒரு நீண்ட கார் நின்றிருப்பது கண்ணில் பட்டது. அதை கடந்து, பிளாட்பார ஓரத்தில் இருந்த கடையை நெருங்கி, விலாசம் விசாரித்தாள்.
தெரியாததற்கு அடையாளமாக உதட்டை பிதுக்கினார், கடைக்காரர்.
'இவ்வளவு பெரிய அகாடமியை தெரியாது என்கிறாரே...' என்ற ஏமாற்றத்துடன் நடக்க துவங்கியபோது, அந்த நீண்ட நெடும் கார், அவளை ஒட்டி வந்து நின்றது.
அதனுள் இருந்த இளைஞன், கார் கண்ணாடியை இறக்கி, புன்முறுவளோடு அவளை பார்த்து, 'எக்ஸ்கியூஸ் மி...' என்றான்.
'எஸ்...'
'நீங்க கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்., அகாடமியை தானே கேட்டீங்க?'
'ஆமாம்...'
'நான் அங்கே தான் போகிறேன்...' என்று, கார் கதவை திறந்தவன், 'ஏறிக்கோங்க. ஒரு அழகான பெண்ணை ஏற்றிக்கொண்டு போகிற பாக்கியம் என் காருக்கு கிடைக்கட்டும்...'
'சாரி... அறிமுகமற்ற, அழகான ஆண்களின் கார்களில் ஏறுகிற பழக்கம் எனக்கு கிடையாது...'
'நன்றி...' வேண்டுமென்றே சுத்த தமிழில் சொன்னான்.
'எதற்கு?'
'என்னை அழகானவன் என்று உண்மையை ஒப்புக் கொண்டதற்கு...'
நாக்கை கடித்துக் கொண்டாள்.
'எப்போதாவது நான் பொய் சொல்லுவதுண்டு...'
'உங்கள் முகத்தில் தெரிகிறது...'
'எது... இதற்கு மேல் பேசினால், நான் போலீசை கூப்பிட வேண்டி வரும்...'
'அப்படி நான் என்ன செய்தேன்?'
'வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறீர்கள்...'
'காரில், 'டிராப்' செய்கிறேன் என்பது வம்பா?'
'என்னை ஏன் கூப்பிடுகிறீர்கள். அதோ அந்த கிழவி, வேகாத வெய்யிலில், காலில் செருப்பின்றி நடந்து போகிறார் பாருங்கள். அவரை ஏற்றிப் போங்கள்...'
'அதுவும் சரி தான். என் காருக்கு, இன்று, உங்களை ஏற்றிப்போகிற அதிர்ஷ்டமில்லை. வரேன்...' என்று, காரை நகர்த்தி போய் கிழவியருகில் நிறுத்தி, ஏற்றிப் போவதை பார்த்து திகைத்தாள்.
நிஜமாகவே அவன், அந்த கிழவியை ஏற்றிக்கொண்டு போவான் என, அவள் நினைக்கவே இல்லை.
'அழுக்கு புடவையும், எண்ணெய் காணாத தலையும் கொண்ட கிழவியையா, இத்தனை பெரிய காரில்... விசால மனம் கொண்டவனா அல்லது வேண்டுமென்றே செய்கிறானா... யார் இவன்?
'யாராக இருந்தால் என்ன...' என்று, காலியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, போகும் இடம் சொல்லி ஏறிக் கொண்டாள்.
ஐந்தே நிமிடத்தில், தெருக் கோடியிலிருந்த பெரிய கட்டடத்தின் முன் நின்றது, ஆட்டோ. கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்., அகாடமி என்ற பெயர் பலகை பெரிதாய் மின்னிற்று.
'சே... 10 அடி கூட இல்லை. இதற்கு போய் ஆட்டோவா...' என்று நினைத்தவாறே இறங்கினாள்.
'எவ்வளவுப்பா?'
'நுாறு ரூபாய்...' என்றான், அவன்.
'பத்தடி துாரத்திற்கு, 100 ரூபாயா?'
'நீங்க, கேட்டு ஏறிக்கொள்வதற்கென்ன?'
'நான், இடம் சொன்னபோது, நீ ஏன் பணம் சொல்லவில்லை?'
'நீங்க ஏன் கேட்கவில்லை?'
'சரி, இப்போது என்ன சொல்கிறாய்?'
'நுாறு ரூபாய் என்கிறேன்...'
'மினிமம் தான் தரணும். நான், 40 ரூபாய் தரேன்...'
'சரி, போ...' என்றவன், அவள் கட்டடம் நோக்கி நடக்க ஆரம்பித்தபோது, '50 ரூபாய் குடுங்க...' என்றான்.
'நாற்பதே அதிகம்...'
அவன் முணுமுணுத்துக் கொண்டே, 'சரி, தாங்க...' என்றான்.
தோள் பையில் கை விட்டு, நான்கு, 10 ரூபாய்களை தந்து விட்டு, உள்ளே நுழைந்தாள்.

துாக்கலான ஒப்பனையும், உதட்டில் ஆரஞ்சு வர்ண லிப்ஸ்டிக்குமாக இருந்த வரவேற்பு பெண்ணிடம், 'நான், உங்கள் முதல்வரை பார்க்க வேண்டும்...' என்றாள்.
'யு மீன் மிஸ்டர் கார்த்திகேயன்?'
'அவர் தான் முதல்வரா?'
'அவர் தான் இங்கு எல்லாமே...'
'அப்படியானால் அவரை தான் பார்க்க வேண்டும்...'
'அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கிறீர்களா?'
'இல்லை...'
அந்த பெண் சற்று தயங்கி, 'உங்கள் பெயர்...' என்று கேட்டாள்.
'புவனேஸ்வரி - புவனா...'
'ஜஸ்ட் எ மினிட். உட்காருங்கள்...'
இன்டர்காம் ரிசீவரை எடுத்தாள்.
எதிர் சோபாவில் அமர்ந்து வரவேற்பறையை பார்த்தபோது, ஒப்பற்ற ரசனை தெரிந்தது. முற்றிலும் புதுமையாக இன்றி அனைத்தும் பழமை கலந்தே காணப்பட்டன.
மீனவ பெண், காலில் தைத்த முள்ளை எடுக்கும் சகுந்தலை என, ரவிவர்மாவின் ஓவிய அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது, 'எக்ஸ்கியூஸ் மீ...' என்று வரவேற்பு பெண்ணின் குரல் கலைத்தது.
'சார் உங்களை வரச்சொல்கிறார். நேராக போய் வலதுபுறம் திரும்பினால் முதல் அறை...'
வலதுபுறம் திரும்பி, முதல் அறையின் கதவை மெல்ல ஆள் காட்டி விரலின் முட்டியால் தட்டினாள்.
'எஸ் கமின்...'
உள்ளே நுழைந்தவளை, புன் சிரிப்போடு வரவேற்றான், அவன்.
'வெல்கம் மிஸ் புவனா. பை தி பை, ஐயம் கார்த்திகேயன். இந்த அகாடமியின் பவுண்டர், முதல்வர், அண்ட் ஆல் இன் ஆல்... ப்ளீஸ் டு மீட் யு அகெய்ன்...' என, கை நீட்டினான், கிழவியை காரில் ஏற்றிப்போன, அந்த வித்தியாசமான இளைஞன்.
தொடரும்.
இந்துமதி

Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X