வாக்குறுதி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
00:00

வெளியில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான், சுரேஷ்.
''வீட்லதான இருக்கே, உன்னை உடனே பார்க்கணும். அவசரம்,'' என்றான், போனில், நண்பன் செல்வம்.
''என்ன விஷயம்?''
''அவசரமா, 30 ஆயிரம் பணம் வேணும்.''
''ஒரு முக்கிய வேலையா, தாலுக்கா ஆபீஸ் வரை போறேன். தவிர, என்கிட்ட இப்ப பணமில்லை.''
''அப்படி சொல்லாத, சுரேஷ்... உன்னை நம்பி தான் வர்ரேன்... இன்னைக்கு ஒருத்தருக்கு பணம் கொடுக்கறேன்னு சொல்லியிருந்தேன். மனிதர் இப்போது வாசல்ல வந்து நின்னுட்டார்,'' என்று சொல்லி, மொபைலை, 'ஆப்' செய்தான்.
''யாரு... என்ன விஷயம்,''என்றாள், சுரேஷின் மனைவி செல்வி.
''செல்வம், ஏதோ பணத் தேவைன்னு வர்றான். சொன்னாலும் கேட்கல, சங்கடமாக இருக்கு. வந்தால், ஏதாவது பேசி சமாளிச்சு அனுப்பிடு,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் வந்து நின்றான், செல்வம்.
போனில் சொன்னதை தான் நேரிலும் சொன்னான், சுரேஷ்.
''அப்படி சொல்லிடாதே... நான் இப்போ ஒரு சங்கடத்தில் இருக்கேன். ரெட்டை மூங்கில் தெருவில் இருக்கானே, கீர்த்திவாசன். அவன் அப்பாவுக்கு ஏதோ அவசர சிகிச்சையாம். ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகும் வழியில், பணம் கேட்டு வந்து நின்னுட்டான்.
''அவனுக்கு பணம் கொடுக்கறேன்னு சொன்னதை மறந்தே போய்ட்டேன். இல்லைன்னும் சொல்ல முடியலை, இந்தான்னு எடுத்து கொடுக்க பணமும் இல்லை. நில்லு, இதோ வந்துடறேன்னு சொல்லி, வாசலில் நிற்க வச்சுட்டு ஓடி வந்தேன். 30 ஆயிரம், 'செக்'கா கொடுக்காதே...
''வங்கிக்கு போய் பணம் வாங்க நேரமில்லை. பணமா கொடு... சம்பளம் வந்ததும், திருப்பிக் கொடுத்துடறேன்,'' என்று கையேந்தினான், செல்வம்.
''வர வர, உன் தொல்லை அளவுக்கு மீறிப் போச்சு. எந்த நம்பிக்கையில் ஒருவனை காத்திருக்க வைத்து, என்கிட்ட வருவே... எந்த நேரமும் என்னிடம் ரொக்கம் இருக்கும் அள்ளிக்கிட்டு போகலாம்ங்கற நினைப்பா...
''எனக்கும் கஷ்ட நஷ்டங்கள் இருக்கு. நீ வரும்போதெல்லாம் அள்ளிக்கொடுக்க அன்ன சத்திரமோ, மடமோ இல்லை. உன்னால, என் முக்கிய வேலை கெட்டுடும் போலிருக்கு... வழி விடு,'' என்று கோபமாக கத்தினான், சுரேஷ்.
''என்னடா இப்படி சொல்லிட்ட... வேற ஏதாவது செலவுன்னாலும் தள்ளிப் போடலாம். பாவம், வயசானவர் சிகிச்சைக்கு... முடியாதுன்னு சொல்லிடாத, இந்த ஒரு முறை மட்டும் உதவி பண்ணு... இனி, உனக்கு எந்த தொல்லையும் தர மாட்டேன், ப்ளீஸ்,'' கெஞ்சினான், செல்வம்.
''ஒவ்வொரு முறையும் இதைதான், சொல்லிக்கிட்டு வர்ற. கேட்டப்பல்லாம் கொடுத்து பழகிட்டேன். அது என் தப்பு. இப்ப என்னிடம் இல்லைன்னு சொன்னாலும், புரிஞ்சுக்காம அரித்தெடுத்தால் என்ன செய்ய முடியும். எனக்கும் கஷ்ட நஷ்ட இருக்கு...
''கேட்டு வரும்போதெல்லாம் எடுத்து கொடுக்க, ஏ.டி.எம்., இயந்திரமா வச்சிருக்கேன்... மன்னிச்சுடு... போய் வேற இடம் பாரு... தயவு செய்து கொஞ்ச நாளைக்கு என்னை பார்க்க, இந்தப் பக்கம் வராதே,'' என்று கடிந்து, வேகமாக வெளியேறினான், சுரேஷ்.
சுரேஷ் மனைவியிடம், ''சிஸ்டர்... கீர்த்தி வாசனுக்கு என்ன பதில் சொல்வேன்... நீங்களாவது கொஞ்சம் கொடுத்து உதவக்கூடாதா... 30 இல்லாவிட்டாலும், 15 ஆயிரமாவது கொடுங்க.
''முழுத்தொகை கொடுக்க முடியலை, மீதி பணத்துக்கு வேற யாரையாவது பார்ன்னு அனுப்பி வைப்பேன்... பணமே இல்லாமல் வெறுங்கையுடன் போய் நின்றால், அவன் ஏமாந்துடுவான். ப்ளீஸ்,'' என்றான், செல்வம்.
''அங்க என்ன பேச்சு, என்னிடம் இல்லாத பணம், எப்படி அவளிடம் இருக்கும்,'' என்றான், சுரேஷ்.
கொஞ்சம், 'லேட்'டா போனால், கீர்த்தி போய் விடுவான் என்று, நேரத்தைக் கடத்தி செல்வம் வீட்டுக்கு வர, அவன் அப்பாவோடு அங்கேயே காத்துக்கொண்டிருந்தான்.
பெரும் எதிர்ப்பிலும் அவசரத்திலும், ''என்ன... பணம் கிடைச்சுதா,'' என்றான், கீர்த்திவாசன்.
''கீர்த்தி... சிகிச்சை இன்னைக்கே செய்தாகணுமா... 10 நாள் தள்ளிப் போட முடியுமா?''
''அடப்பாவி... கடைசி நேரத்துல கை விரிக்கறயே, முன்பே சொல்லியிருந்தால், வேறு எங்கேணும் புரட்டி இருப்பேன். இப்படி கழுத்தறுத்துட்டியே... இப்ப அவசரத்துக்கு யாரைன்னு பார்ப்பேன். உன்னிடம் பணமே இல்லையா?''
''இருந்தால், நான் உன்னை காக்க வைப்பேனா?''
''அப்புறம் எதுக்கு கொடுக்கறேன்னு அத்தனை உறுதியாய் சொன்னே... நான் சொன்னதை, நீ இத்தனை சீரியசாக எடுத்துகலைன்னு நினைக்கிறேன்.''
''வாக்கு கொடுத்தால் மட்டும் போதாது... தலை போனாலும், அதை நிறைவேத்தணும்... அதற்கு வக்கில்லைன்னா முதல்லயே சொல்லிடணும். உன் புத்தி எனக்கு தெரியும். ஒரு இடத்துக்கு வர்ரேன்னு சொல்வே, வரமாட்ட. கேட்டால், சாரி மறந்துட்டேன்ப...
''என்னமோ பணம் பெட்டியில் இருக்கிற மாதிரியும், அதை ரெண்டு நாளில் பூட்டை திறந்து எடுத்துக் கொடுக்கற மாதிரியும் அடிச்சு சொன்னே... அதுல நம்பி ஏமாந்துட்டேன்... ஏமாத்துக்காரா ஏமாத்துக்காரா...''
''கீர்த்தி... நீயுமாடா, வேணும்னே தப்பு செய்வேனா... எத்தனை முறை உனக்கு உதவி பண்ணியிருக்கேன்.''
''மொத்தமா இப்ப கவுத்திட்டியே.''
''எப்ப போய் நின்னாலும், பணம் தருவான், சுரேஷ். என் நேரமோ, உன் நேரமோ தெரியலை... இன்னிக்கு பணம் இல்லைனுட்டான்... என்ன செய்ய,'' என்றான், செல்வம்.
''உன்னால் முடியும்னால் மட்டுமே நீ வாக்கு கொடுக்கணும். அடுத்தவரை நம்பினேன், ஆட்டுக்குட்டியை நம்பினேன்னு எல்லாம் சாக்கு சொல்லாதே. நானாங்காட்டியும் சும்மா போறேன்... வேற ஒருத்தனா இருந்தால், முகத்துல துப்பிட்டு போவான். இனியாவது பொறுப்பா நடந்துக்க,'' என்றான், கீர்த்திவாசன்.
''இன்னொரு நாள் ஆஸ்பத்திரிக்கு போவோம்பா,'' என்று, வயதான தந்தையை அழைத்து, வீடு திரும்பினான்.
சிறிது நேரத்தில் செல்வம் வீட்டுக்கு வந்த சுரேஷ், ''சாரிடா... என்ன இருந்தாலும், நான் அப்படி பேசியிருக்க கூடாது. அதிலும், ஒரு முதியவரின் சிகிச்சை செலவு... உண்மையிலேயே என்னிடம் பணம் இல்லை. தவிர, தாசில்தார், 'அப்பாயின்ட்மென்ட்' போகலைன்னா, என் வேலை இன்னும் தள்ளிப் போகும்.''
''தாசில்தார பார்த்தியா... உன் வேலையாவது நல்லபடியா முடிஞ்சுதா?''
''ஓ... அதை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன்... வழியில், ஆஸ்பத்திரிக்கு அப்பாவை கொண்டு போக முடியாதபடிக்கு, நீ ஏமாத்திட்டேன்னு ரொம்ப நொந்துக்கிட்டான், கீர்த்திவாசன். என்னாலும் அந்த பெரியவரை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இப்ப கூட, பணத்துக்கு ஏற்பாடு செய்துட்டு தான் வர்றேன்.''
''உன்கிட்ட பணமே இல்லைன்னு அடிச்சு விரட்டாத குறையா சொன்னே... இப்ப மட்டும் எப்படி வந்ததாம்?''
''என்கிட்ட பணம் இல்லை. ஆனால், செல்வி கழுத்தில் இருந்த நகையை அடகு வைத்து பணம் வாங்கி வந்தேன்,'' என்றான், சுரேஷ்.
சுரேஷின் கைகளை பிடித்து, ''என் மானத்தை காப்பாத்தினே... நன்றி... இந்த உதவியை என்னிக்கும் மறக்க மாட்டேன்,'' என்றான், செல்வம்.
''இனியாவது எச்சரிக்கையா இரு. ஆனால், இது உனக்கு ஒரு பாடம். எல்லா நாளும் ஒரே போல இருக்காது. என்னிடமும் எந்த நேரமும் பணம் இருக்காது. யாருக்கு வாக்கு கொடுத்தாலும், முதல்ல அதை நிறைவேத்த முடியுமான்னு, ஒரு முறைக்கு நாலு முறை யோசித்து, முடியுமானால், 'யெஸ்' சொல்லு. முடியாதுன்னா, 'நோ' சொல்லிடு.
''அப்படி சொல்ல சங்கடமாக இருந்தால், 'முயற்சிக்கிறேன். எதற்கும், நீங்கள் வேறு இடங்களிலும் கேட்டு பாருங்கள்...' என்று, பட்டும் படாமல் சொல்லிடு. அதை விட்டு யாருக்கும், உத்தரவாதம் கொடுத்து, முடியாத நிலையில் கை பிசைந்து நிற்காதே. முன் யோசனை இல்லாமல் யாருக்கும் வாக்கு கொடுத்துடாதே...
''உதவணும்ன்னு, நல்ல மனசு இருந்தாலும், சமயத்துக்கு உதவாமல் காலை வாரிடுவன்னு, கெட்டவன்னும் பேர் வாங்காமல் இருக்கணும்... நகையை அடகு வைத்ததில், செல்விக்கு மன வருத்தம் தான். எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணத்தை கொடுத்துடு,'' என்றான், சுரேஷ்
''திட்டவட்டமா சொல்ல முடியாது, சுரேஷ். 10 நாளில் கீர்த்திவாசன், பணத்தை தந்தால், நானே கொண்டு வந்து கொடுத்துடறேன். கிடைக்காத பட்சத்தில் எனக்கு எப்போது பணம் வருதோ, அப்போது கொண்டு வந்து தர்ரேன். என்னையே நம்பியிராமல், நகையை மீட்க வேறு இடங்களிலும் முயற்சி செய்,'' என்றான், செல்வம்.
இது, எனக்கு தேவை தான் என்று நகர்ந்தான், சுரேஷ்.

எஸ். தனபால்

Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
24-செப்-202011:05:29 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI இந்த காலத்தில் கூட இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா? என்று நினைக்கத் தோன்றியது. அதுவும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்றுள்ளது.
Rate this:
Cancel
20-செப்-202009:35:05 IST Report Abuse
Prasanna Krishnan Dont help anyone in todays world. they will take advantage of your kindness.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X