துள்ளாத மனமும் துள்ளும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
00:00

நகரின் முக்கிய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மூன்று தளங்கள் கொண்ட மருத்துவமனை. அவளுக்கு அன்று இரவு நேரப்பணி.
வரவேற்பறையில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு, இரண்டாம் தளத்திலுள்ள உடை மாற்றும் அறைக்கு சென்று, வெளியே வந்தாள்.
அந்த தளத்தின் வரவேற்பு மேஜைக்கு சென்று, ''இன்னைக்கு, 'அட்மிட்' எதுவும் வந்திருக்கா?'' என்றாள்.
''ஆமா... 204ல கோபால்சாமின்னு ஒரு பெரியவர். சுதந்திர போராட்ட தியாகியாம்; வயசு, 81. இடது காலில் பிராக்சர், படில இருந்து விழுந்துட்டார். பி.ஓ.பி., போட்டுருக்கு. ஒரு வாரம் அப்சர்வேஷன்,'' என்றாள், சக செவிலி.
''சரி... 'கேஸ் ஷீட்'டலாம் குடு?''
கோபால்சாமியின், 'கேஸ் ஷீட்'டைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரது மனைவி தெய்வம், ''சிஸ்டர்...'' என்றவாறு வந்து நின்றாள். இவள் நிமிர்ந்து, ''சொல்லுங்கம்மா,'' என்றாள்.
''குளுக்கோஸ் முடியப் போகுது.''
''எந்த அறை?''
''204.''
''ஓ... கோபால்சாமியா, வாங்க,'' என, கோபால்சாமி அறைக்கு செல்ல, அங்கு ரேடியோவில், 'துள்ளாத மனமும் துள்ளும்...' என, பாடிக் கொண்டிருந்தார், ஜிக்கி. கட்டிலில், இடது முழங்காலில் இருந்து கணுக்கால் வரை மாவு கட்டு போடபட்டு, வாயை பாதி திறந்தவாறு உறங்கிக் கொண்டிருந்தார், கோபால்சாமி.
'ட்ரிப்' முடிந்ததும் கையில் வைத்திருந்த பாட்டிலை, 'ட்யூப்'பில் சொருகி ஸ்டாண்டில் மாட்டி விட்டு வெளியேற முயன்றாள்.
''ஏம்மா, இவருக்கு ராத்தரிக்கு சாப்பிட என்ன குடுக்க?'' என்ற தெய்வத்திடம், ''இட்லி, இடியாப்பம் ஏதாவது கொடுங்க,'' என்றாள்.
''ராத்திரி எப்பவும் வாழைப்பழம் சாப்பிட்டா தான் துாங்குவாரு. கொடுக்கலாமா?''
''கொடுக்கலாம்.''
''பக்கத்துல ஓட்டல் இருக்கா?''
''பஸ் ஸ்டாண்டுக்குள்ள இருக்கு. நீங்க, 'ஹவுஸ் கீப்பீங்'கிட்ட ரூபாய் கொடுத்து விடுங்க; அவங்க வாங்கிட்டு வந்து குடுப்பாங்க.''
''சரிம்மா,'' என்றாள், தெய்வம்.
பின்னணியில், 'சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்; மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்; உறவு கொண்டால் இணைந்திடும்; அதில் உண்மை இன்பம் விளைந்திடும்...' என, ஜிக்கியின் வரிகள், அந்த அறை முழுவதும் பரப்பியிருந்தது, அந்தப் பாடல்.
இரண்டாம் தளத்திலுள்ள இன்டர்காம் ஒலிக்க, இவள் எடுத்து, ''ஹலோ...''
என்க, மறுமுனையில், ''நான் டாக்டர் பேசுறேன்,'' என்றார்.
''குட் ஈவ்னிங் சார், சொல்லுங்க.''
''குட் ஈவ்னிங்... அந்த, 204 பேஷன்ட்டை கொஞ்சம் கவனமா பார்த்துக்கம்மா... அந்த காலத்து சுதந்திர போராட்ட தியாகியாம். வி.ஐ.பி., ஒருத்தரோட ரெக்கமென்டேஷன். சோ...''
''ஓகே சார் பாத்துக்குறேன்.''
''இப்ப என்ன, 'ட்ரிப்' ஓடிட்டு இருக்கு?''
''என்.எஸ்., சார்.''
''அடுத்தும் சலைனயே, 'ஸ்லோ ட்ரிப்'பா சேர்த்து குடு... நைட் துாங்கலைன்னா, அல்ப்ரசோலோம் குடு. வலி இருக்கான்னு கேட்டியா?''
''இல்ல சார்... அவர் நல்லா துாங்கிட்டு இருந்தாரு. 'ட்ரிப்' மட்டும் போட்டுருக்கேன். எழுந்ததும், மாத்திரை கொடுக்கணும்.''
மற்ற அறைகளில் உள்ள நோயாளிகளுக்கு தர வேண்டிய சிகிச்சை பற்றிய ஆலோசனைகளை வழங்கிய டாக்டர், ''சரிம்மா, பாத்துக்க... ஏதாவது பிரச்னைன்னா போன் பண்ணு,'' என்றார்.
இவள், ''தாங்க்யூ சார்,'' என்றதும், இருவரின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
கோபால்சாமிக்கு இட்லி, இரண்டு வாழைப்பழம், ப்ளாஸ்கில் பாலும் வாங்கி வந்து தெய்வத்திடம் கொடுத்தாள், துப்புரவு பணியாளர், கருப்பாயி. தன் கணவனை சாப்பிட எழுப்பினாள், தெய்வம். அவர் எழுந்ததும், தட்டில் இரண்டு இட்லி வைத்து, கோபால்சாமியிடம் நீட்ட, அதை வாங்கி சாப்பிட்டார்.
சாப்பிட்டு முடித்ததும், தெய்வம் பழத்தை நீட்ட, ''வேணாம்... ஒரு மாதிரி இருக்கு. அப்புறம் சாப்பிட்டுக்குறேன்,'' என்றார். மறுப்பு ஏதும் சொல்லாமல் விட்டு விட்டாள், தெய்வம்.
இவள், நோயாளிகளுக்கு இரவு நேர மாத்திரையை கொடுத்து விட்டு, தன் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு முடிக்க, அதிகாலை, 2:00 மணியை தாண்டி இருந்தது.
காலையில் வரும் சக செவிலியிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பொருட்டு, நோயாளிகளுக்கான சிகிச்சை பற்றிய தகவல்களை எழுத துவங்கும் போது, கோபால்சாமியின் அறையிலிருந்து சத்தம் வந்தது.
''போடி இங்கிருந்து... என் கண்ணு முன்னாடி நிக்காத போ,'' என்றார், கோபால்சாமி.
''சும்மா என்னைய எதுக்காக விரட்டுறீங்க... கொலையா பண்ணிட்டேன். பழம் கெட்டுப் போயிடும்ன்னு தின்னுட்டேன். இதுக்கு போயி நடு சாமத்துல, பேயி வந்தா மாதிரி குதிக்குறீங்க,'' என்றாள், தெய்வம்.
''மனுஷியாடி நீ... எங்கயாவது போயி சாவு.''
''உங்கிட்ட இருக்கறதுக்கு அப்படியாவது பண்ணிக்கலாம்... கேவலம் ரெண்டு பழத்துக்கு பெற மாட்டேனா நானு?''
''எனக்கு இப்ப பழம் வேணும்.''
''நா என்னத்த பண்ண... காசு போட்டு வாங்குனத துாற எறியவா முடியும்; தின்னுட்டேன். ஒரு தடவ சொன்னா, கேக்க மாட்டீங்களா... வயசானா புத்தியென்ன மழுங்கியா போயிடும்... ஒருநா திங்காம துாங்குங்க. ஒண்ணும் கரை தாண்டி தண்ணி வந்துராது.''
''இப்ப நா மட்டும் நல்லாயிருந்தேன்னா, உன்னை மிதிச்சு, நரகத்துல சேத்திருப்பேன்.''
''இப்படி பேசித்தான் கால் ஒடிஞ்சு கிடக்குறீங்க... இன்னும் பேசுங்க, வாயி ஒரு பக்கம் கோணிக்கட்டும்,'' என்றாள் தெய்வம்.
''மலட்டு சனியனே.''
''யாரு நானா... கொஞ்ச நேரத்துல நிரூபிச்சுப்புடுவேன்... ஆம்பளைன்ற ஆணவத்துல தடம் மாறி பேசாதீங்க... இத்தனை நாளா ஊரே சொல்லி அவமானப்படுத்துச்சு; இப்ப, நீங்க சொல்லி அசிங்கப்படுத்துறீங்க...
''கேவலம் ஒத்த ரூபா பழத்துக்காக, என்னை, இவ்ளோ பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க... மரியாதையா பேசிப் பழகுங்க,'' என, கண்களில் நீர் ததும்ப, முந்தானையில் துடைத்துக் கொண்டாள், தெய்வம்.
''நீ மட்டும், நான் கால் ஒடிஞ்சு கெடக்குறத, ஏளனமா பேசின...''
''நீங்க பேசினதுக்காக சொன்னேன்; தப்பா இருந்தா மன்னிச்சுக்கங்க.''
''இருந்தாலும் நான் பேசுனது தப்பே இல்ல... நீ மலட்டு சாக்கடை தான்.''
கோபால்சாமியின் இந்த வார்த்தையை தெய்வத்தால் தாங்கிக் கொள்ள முடியாமல், கண்ணீருடன் அறையை விட்டு வெளியேறி, அந்த தளத்தில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, விம்மிக் கொண்டிருந்தாள்.
இவள், தெய்வத்தின் அருகில் சென்று தோளில் கை வைத்தாள். இவளைப் பார்த்து விட்டு, கை மேல் தலையை சாய்த்தாள், தெய்வம். அருகில் அமர்ந்து, தண்ணீர் தந்தாள்.
தண்ணீரை குடித்து முடித்து, ''ரொம்ப நன்றிம்மா,'' என்றாள், தெய்வம்.
''கொஞ்சம் நேரம் இங்கேயே உட்காருங்க. அவரு துாங்குனதுக்கு அப்புறம் அறைக்கு போங்க,'' என்றாள், இவள்.
''இல்லம்மா, இனி துாங்க மாட்டார். நான் முன்னாடியே யோசிச்சிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.''
''உங்களுக்கு பசங்க...'' என, சற்று தயங்கி கேட்டாள், இவள்.
''அந்த பாக்கியத்தை அவர் எனக்கு கொடுக்கல.''
''புரியலை...''
''எங்களுக்கு கல்யாணமாகி, 40 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. ஆனா, ஒருநாள் கூட எங்களுக்குள்ள தாம்பத்ய வாழ்க்கையை வாழ்ந்ததே இல்ல?''
''என்னம்மா சொல்றீங்க.. உண்மையாவா... என்னால நம்பவே முடியல.''
''ஆமா... எனக்கும், அவருக்கும், 14 வயசு வித்தியாசம். நான், அவரோட தாய் மாமன் பொண்ணு தான். சுதந்திரத்துக்கு போராடுனதுனால, 10 வருஷம் ஜெயில்ல இருந்தாரு. வெளியே வந்ததுக்கு அப்புறம், எங்க அத்தை, ஒத்த பிள்ளே தானேன்னு அதிகமா பாசத்தை காட்ட ஆரம்பிச்சிருச்சு.
''மேலும், 30 வயசு பிள்ளையை குளிப்பாட்டுறது, சோறு ஊட்டி விடுறது, தாலாட்டு பாடி துாங்க வைக்கிறதுன்னு, எங்க போனாலும் குழந்தை மாதிரி கூட்டிட்டு போறது, வர்றதுன்னு அதோட கைப்பாவையாவே இவர மாத்திடுச்சு. நாங்கலாம் சிரிப்போம்; திட்டுவோம். ஆனா, இவரு, 'என்னோட ஆத்தா மாதிரி வருமா'ன்னு சொல்லிட்டு போயிடுவாரு.
''அதுக்கப்புறம் என்னை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. கல்யாணம் ஆன புதுசுல என்கிட்ட பேசவே இல்ல. நானும் கொஞ்ச நாள் ஆனதும் சரியாகிடுவார்ன்னு நெனச்சேன். நான் நெனச்சது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன். எங்க வீட்ல இருந்து வந்து பேசிப் பார்த்தாங்க.
''எங்க அத்தையும் புரிய வச்சு பார்த்துச்சு. 'குடும்ப வாரிசை பாக்காம போறோமே'ன்னு, நொந்தே செத்து போச்சு. இன்னைக்கு வரைக்கும் புருஷன் - பொண்டாட்டியா ஒரே வீட்ல இருக்குறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துக்குறோம். அவ்ளோ தான். அவருக்கு என்னெல்லாம் வேணுமோ செய்து கொடுத்துடுவேன்.
''என்ன எவ்ளோ திட்டினாலும் சகிச்சுக்கிடுவேன். 'உனக்கெல்லாம் புருஷன கைக்குள்ள வச்சிக்கத் தெரியல'ன்னு என்னோட சொந்தமெல்லாம் மூஞ்சிக்கு நேராகவே பேசுனாங்க. அப்படின்னா என்னன்னு என் அத்தைகிட்ட கேட்டேன்.
''நான் கேட்டதுக்கு அது, 'வலைக்குள்ள மீன் சிக்கும். தான் சாக போறோமேன்னு வலைக்குள்ள துள்ளுற மீனுக்கும் தெரியும். மீனை என்ன செய்யப் போறோம்ன்னு, வலையை புடிச்சிருக்குறவங்களுக்கும் தெரியும். ஆனா, இந்த ரெண்டுக்கும் நடுவுல இருக்குற வலைக்கு, தன்னோட நிலைமை என்னன்னு தெரியாது. அந்த வலை தாம்மா நீ'ன்னு சொல்லுச்சு. இன்னைக்கு வரைக்கும், அதுக்கான அர்த்தம் எனக்கு தெரியவே இல்லை.''
''நீங்க அவர்கிட்ட இதப்பத்தி கேட்டிருக்கலாமே,'' என்றாள். இவள்.
''வலைய பத்தியா, வாழ்க்கையை பத்தியா,'' சிரித்தவள், ''நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவர்கிட்ட பதில் இல்ல. ஆனா, 'நீ வலையும் இல்ல, நான் மீனும் இல்லை'ன்னு, இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாரு. இப்ப இவரே என்னை மலடின்னு சொல்றாரு.
''ஆம்பளையோட தவறுகள், ஒரு குறியீட்டளவுக்கு கூட இல்ல; ஆனா, என்னை பாரு... ஏன் என்னன்னு காரணமே தெரியாம வாழ்ந்துட்டு இருக்கேன். அந்த விதி தான், எனக்கான பதில் சொல்லணும்,'' என்றாள்.
''நீங்க இங்கயே இருங்க... நான் அவரு துாங்கிட்டாரான்னு பாத்துட்டு வரேன்,'' என்று, கோபால்சாமியின் அறைக்கு சென்றாள், இவள். அவர் துாங்காமல் மின்விசிறியை பார்த்துக் கொண்டு படுத்திருந்தார்.
''ஐயா, துாங்கலையா... கால்ல எதுவும் வலி இருக்கா?'' என்றாள், இவள்.
''மனசுதாம்மா வலிக்குது... அதுக்கு ஏதாவது மருந்து இருந்தா கொடும்மா,'' என்றார், சலிப்பாக.
''வெறும் பழத்துக்காக நீங்க, அம்மாவை திட்டியிருக்க கூடாது.''
''நான் எப்பவும் பழம் சாப்பிடுவேன்னு, அவளுக்கு நல்லா தெரியும். அது தெரிஞ்சும் சாப்பிட்டுருக்கான்னா, என்னை எப்படி கவனிச்சுருக்கறான்னு நீயே பாரு.''
''விடுங்க, அவங்க யாரு... உங்க பொண்டாட்டி தானே?''
''இதுவே என்னோட அம்மாவா இருந்திருந்தா, இப்படி சாப்பிட்டிருக்குமா,'' என, அழ ஆரம்பித்தார்.
''எங்கம்மா சாகுற காலம் வரைக்கும், என்னை எப்படி பாத்துக்கிச்சு தெரியுமா... ஏதாவது நோக்காடுன்னா துடிச்சு போயிடும். அந்த மாதிரி வேற யாராலும் என்னை பாத்துக்க முடியாது,'' என்றார், கோபால்சாமி.
''உங்கள தியாகின்னு சொன்னாங்க... நம்ம நாட்டுக்காக போராடுனவருக்கு சேவகம் பண்றதுக்கு வாய்ப்பு கிடைச்சதுக்கு ரொம்ப பெருமைபட்டேன். ஆனா, தியாகி நீங்க இல்ல; உங்க மனைவி தான். உங்களை இத்தனை வருஷமா சகிச்சுக்கிட்டு இருந்ததுக்காக இல்ல...
''வாய்ப்பிருந்தும் மலடின்னு பேரு வாங்குனதுக்காக. அதுக்கு பின்னால இருக்குற வலியும், நிராகரிப்பும் உங்களுக்கு நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை.''
''சத்தியமா சொல்றேன்... என்னோட அம்மா இறந்து இத்தனை வருஷமா நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல தானே இருக்கோம்... அவளால அந்த இடத்தை தொடக் கூட முடியலையே,'' என்றார்.
இவள் சிரித்தபடியே, ''வீட்ல இடம் கொடுத்துட்டா போதுமா, உங்க மனசுல?'' என்றாள்.
''அதுக்கு வாய்ப்பே இல்லை.''
''இந்த பிடிவாதத்தை முதல்ல துார எறிங்கய்யா... கொஞ்சம் இறங்கி வந்து, அவங்களுக்கு கரிசனம் காட்டுங்க. நீங்க பேசுனதெல்லாம் ஏத்துக்கிட்டு, அதை கடந்ததே, அவங்க உங்க மேல வச்ச அன்பால தான். ஒருமுறை அவங்க மடில தலை வச்சு துாங்கி பாருங்க. எல்லை இல்லா சொர்க்கத்தை நிச்சயம் காண முடியும்,'' என்றாள்.
வெளியே வந்தவள், நாற்காலியில் அமர்ந்திருந்த தெய்வத்திடம், ''ஐயா உங்களை கூப்பிடுறாரு,'' என்றாள்.
தெய்வம் எழுந்து செல்லும் போது, ''கொஞ்சம் நில்லுங்கம்மா...'' என்றாள்.
''இந்த உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களும், வலை மாதிரியான வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்கோம். எண்ணிலடங்கா முடிச்சுகள், சிக்கல்கள்ன்னு இன்னும் நிறைய. அதுல சிக்குறதும், நழுவுறதும் ஆண்களோட தன்மையை பொருத்தது.
''சிக்கிட்டா வருத்தப்படவோ, நழுவிட்டா சந்தோஷப்படவோ முடியாது. ஏன்னா, அந்த வலைய விரிச்சிருக்குறதே, விதி தான். மீன், வலை, விதி தாண்டி கடவுளான பெரும் சமுத்திரமும் தான், இதோட மைய புள்ளிங்கிறதையும் மறந்திடாதீங்க,'' என்றாள் நர்ஸ்.
கண்ணீர் தேங்கியபடி அவளது கையை பற்றிய தெய்வம், ஏதும் பேசாமல், நேரே அறைக்கு சென்றாள்.
கோபால்சாமியும், தெய்வமும் ஒருவருக்கொருவர் கண்களில் பேசிக் கொண்டனர்.
''நா...ன்... உன்னோட.... மடில... தலை வச்சிக்கட்டுமா?'' என்று, தயங்கியபடி கேட்டார், கோபால்சாமி.
பின்னணியில், 'நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்...' என, லீலாவின் குரல், அந்த அறை முழுதும் வியாபித்திருந்தது. தெய்வத்தின் மனம், மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தது.

பா.விக்னேஷ்வரன்
வயது: 28
படிப்பு: டி.பார்ம். நிறைய புத்தங்கள் படிக்கும் ஆர்வம் உள்ளவர். இவர் முதன்முதலாக எழுதிய சிறுகதையே, முதல் பரிசு பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், இன்னும் எழுதும் ஆர்வத்தை விதைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dindigul Nana - Erode,இந்தியா
30-செப்-202016:29:30 IST Report Abuse
Dindigul Nana இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன வரலேன்னா என்ன, காடு வா வாங்குது வீடு போ போங்குது, இது ஒரு கதை, இதை வெளியிட ஒரு ஆளு, அதை வேலை மெனக்கெட்டு படிச்சா நான் ஒரு ஆளு,
Rate this:
Cancel
deep - Chennai,இந்தியா
28-செப்-202006:51:07 IST Report Abuse
deep எனக்கு 30-40 வருடங்களாக வாரமலரில் கதை படிக்கும் பழக்கம் உண்டு. இதைப்போன்ற ஒரு அபத்தத்திலும் அபத்தமான கதையைப் படித்ததே இல்லை. ஆர்னிகா நாசரின் கதைகளே தேவலாம் போல.
Rate this:
lingan - hyderabad,இந்தியா
29-செப்-202011:08:44 IST Report Abuse
linganசரியாக சொன்னீர்கள், this is horrible story....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X