டைட்டானிக் காதல்... (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
00:00

முன் கதை சுருக்கம்
காதல் வலையில் சிக்கிய, குருமூர்த்தி சிவச்சாரியார் மகள் புவனேஸ்வரி, கார்த்திகேயனை சந்தித்த நினைவுகளில் மூழ்கினாள்...

கார்த்திகேயன் நடத்தி வரும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி பள்ளியில் சேர போன போதுதான் அவனுடன் புவனாவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின், ஒவ்வொரு நாளும் அவன், அவளை ஆகர்ஷண சக்தியாக ஈர்த்தான்.
அவனது உயரம், கம்பீரம், நிறம், களையான முகம், முன் நெற்றியில் வந்து விழும் கற்றை முடி. அடிக்கடி அதை அவன் ஒதுக்கி விட்டுக்கொள்வது என, எல்லாமே அவளை கவர்ந்தன. இவை அனைத்துக்கும் மேலாக அவனது நகைச்சுவை உணர்வை மிகவும் ரசித்தாள். கிண்டலும், நக்கலும், குறும்புப் பேச்சும் அவளுக்கு பிடித்துப் போயின.
அவள் வீட்டில் கிண்டலுக்கோ, கேலி பேச்சுகளுக்கோ இடமில்லை. ஆண்களும், பெண்களும் ஒருவித தீவிர முக பாவத்துடன் தான் இருப்பர். வாய் விட்டு சிரிப்பதை மறந்தே போய் விட்டனரோ என்று கூட, இவள் நினைத்திருக்கிறாள்.
சாப்பிடவும், ஸ்லோகங்கள் சொல்லவும் மட்டும் தான், வாய் என, கருதுகின்றனரோ என்கிற சந்தேகமும் எழும். வீட்டு பெண்கள் குளிப்பர், மடியாக இருப்பர், சமைப்பர். தினமும் ஒருமுறை அருகில் இருக்கும் கோவிலுக்கு போவர். வீட்டு வேலைகளை செய்வர், அவ்வளவு தான்.
ஆண்கள் குளித்து, நடு முற்றத்தில் சந்தியாவந்தனம் பண்ணி, காயத்ரி ஜெபித்து, காலை, 6:00 மணிக்கு கோவிலை அடைந்தால், பகல் நடை சாத்திய பிறகு தான் வீட்டுக்கு வருவர்.
சாப்பிட்டு படுத்தால், 3:00 மணிக்கு எழுந்து, கிணற்று நீரை இழுத்து ஊற்றிக்கொண்டு, நெற்றி, கை, மார்பு என, விபூதி பூசி, பஞ்சகச்ச வேஷ்டியுடன் மீண்டும் சாயரட்சை பூஜைக்கு கோவில். இரவு, 10:00 - 10:30 ஆகிவிடும். திரும்ப சாப்பிட்டு படுத்தால், மறுநாள் காலை, 4:30 மணி.
சாமான் தேய்த்து, சமையல்கட்டை ஒழித்து பெண்கள் படுக்கும்போது, கடிகாரம் நடு ஜாமத்தை தொடும். இந்த இயந்திர வாழ்க்கையில் காலத்தை கழித்தவளுக்கு, கார்த்திகேயனின் சிரிப்பும், பேச்சும், குறும்புத்தனங்களும் மிகவும் வித்தியாசமானவைகளாக இருந்தன.
அவன் இயல்பே அப்படித்தான் என்பது தெரியத் தெரிய, அவளுக்கு மிகவும் முக்கியமானவன் ஆனான்; பழகப் பழக முதன்மையானவன் ஆனான்; பேசப் பேச இன்றியமையாதவன் ஆனான்.
'என்ன இது... ஏன் இப்படி மாறிப் போய் விட்டோம்...' என்று யோசித்தாள். யோசிக்க யோசிக்க ஒன்று புரிந்தது. அவனில்லாமல் தான் இல்லை என தெரிந்தது. ஒருநாள் அவனை பார்க்காவிட்டால் கூட, உன்மத்தம் பிடித்தவளாவதை உணர்ந்தாள்.
'நான் மட்டும் தான் இப்படி தவிக்கிறேனா அல்லது அவனும் இப்படி இருக்கிறானா... தனக்காக உருகுகிறானா, தன்னை பார்க்காவிட்டால், பித்துப் பிடித்தவனாகிறானா... இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. அதுவும் உடனே தெரிந்து கொண்டு விட வேண்டும்...' என்று தோன்றவே அலுவலகத்தை விட்டு, அண்ணாநகர் கிளம்பினாள்.
இவள் போன போது, அவனது விசாலமான அறையில் நிறைய பேரோடு இருந்தான். இவளை கண்டதும், பளீரென்று முகம் மலர்ந்தான்.
''ஒரு நிமிஷம் புவனா... இதோ இவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு வருகிறேன்,'' என்று வெளியில் அழைத்து போய் பேசி, அனுப்பி வந்தான்.
''வாட் எ பிளசண்ட் சர்ப்பிரைஸ். வென் ஐ திங்க் ஆப் தி டெவில் - இட் அப்பியர்ஸ் இன் ப்ரெண்ட் ஆப் மீ...'' என்று சந்தோஷமாக சிரித்தான்.
''அப்படியானால் நான் டெவிலா - பிசாசா...'' என்று பொய் கோபம் காட்டினாள், அவள்.
''ஆமாம், பிசாசு தான்.''
''என்... ன...?''
''காதல் பிசாசு... என்னை ராப்பகலாக துாங்க விடாமல் ஆட்டிப்படைக்கிற பிசாசு... 24 மணி நேரமும் நினைச்சு நினைச்சு உருக வைக்கிற பிசாசு.''
இப்போது, அவள் உருகிப் போனாள்.
''நீங்கள் மட்டும் என்னவாம்... இந்த உச்சி வெயிலில் பஸ் பிடித்து, அண்ணாசாலையிலிருந்து அண்ணாநகர் ஓடி வரவழைக்கிற குட்டிச்சாத்தான்...''
''பு... வ... னா...''
''கார்த் தீ...''
சரேலென்று அவளை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான்.
நெற்றியில், கண்களில், கன்னங்களில் முத்தமிட்டுக் கொண்டே வந்து உதட்டை நெருங்கியபோது, சரேலென்று அவனை தள்ளி விட்டாள், அவள்.
''நோ... கார்த்தி...''
''எனக்கு தெரியும். நீ ஐயர் வீட்டு பொண்ணு. முழு சைவம்னு...''
''அப்படின்னா நீங்க?''
''ஊர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன எல்லாம் சாப்பிடுகிறவன்.''
''கார்த் தீ...''
''என்ன மிரண்டு போய் பார்க்குற?''
''நீங்க பிராமின் இல்லையா?''
''இல்லை.''
''சைவம் இல்லையா?''
''இல்லை. அமாவாசை, கிருத்திகை எதுவும் கிடையாது; பார்ப்பதில்லை. காலை, இட்லி, தோசைக்கு கூட மட்டன் குழம்பும், சிக்கன் குழம்பும் வேணும்.''
''ஐயோ... எப்படி கார்த்தி...''
''எப்படின்னா, அப்படித்தான். நாள் நட்சத்திரம் பார்த்து, குலம், கோத்திரம் பார்த்து, ஜாதி, மதம் பார்த்து வருவதில்லை, காதல்.''
அவள் பேசாதிருந்தாள்.
''என்ன புவனா யோசனை... இவனை ஏன் காதலிச்சோம்ன்னு வருத்தப்படறியா?''
''சீச்சீ.''
''இல்லல்லே... நான் யாரு என்னன்னு தெரிஞ்சுக்காமலேதானே காதலிச்ச...''
''ஆமாம். ஆனா...''
''ஆனா என்ன... என் உருவத்தை பார்த்து, நிறத்தை பார்த்து, ஐயர் வீட்டு பையன்னு நினைச்சுட்டியா?''
''ஆ... ஆமாம் கார்த்தி.''
''இதுதான் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம், புவனா. இந்த ஒளிவு மறைவில்லாத பேச்சு தான்; வெட்டு ஒன்று துண்டு ரெண்டு தான்.''
''அது இருக்கட்டும். நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே.''
''கேளு புவனா.''
''வந்து... வந்து... நீங்க, என்ன ஜாதி?''
''ஆண் ஜாதி.''
''கார்த்தீ...''
''தெரிஞ்சு என்ன செய்யப் போற...''
''இல்ல... வீட்ல கேப்பாங்க.''
''நான் சொன்ன பதிலையே சொல்லு.''
அவள் தயங்கினாள்.
''நான் பிராமணன் இல்லை. குருக்கள் இல்லை. சிவாச்சாரியார் குடும்பமில்லை. ஆண்டிற்கு ஒருமுறை, குல தெய்வமான முனீஸ்வரருக்கு கிடா வெட்டி, பூஜை போடுவோமே தவிர, மற்றபடி கோவில்களுக்கெல்லாம் போவது கிடையாது.
''உங்கள் குடும்பமும், என் குடும்பமும் நேர் எதிர். நீயும், நானும் கூட வளர்ப்பு முறையில் நேர் எதிர் தான். அதனால் தான் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.''
கலக்கத்தோடு பார்த்தாள், அவள்.
''அப்படி பார்க்காதே, புவனா. கலங்காதே, அன்பு ஒன்று தான் அடிப்படையே தவிர வேறெதுவுமில்லை. அன்பு தான் முக்கியமே தவிர, வேறொன்றும் முக்கியமில்லை. உனக்கு, என் மீது அன்பு இருக்கிறது தானே?''
தலையாட்டினாள்.
''வாயை திறந்து பதில் சொல்லு.''
''இருக்கிறது.''
''நான் வேண்டும்தானே?''
''நிச்சயமாய் வேண்டும்.''
''நான் இல்லாவிட்டால் உன்னால் வாழ முடியுமா?''
''முடியாது.''
''என்னாலும் முடியாது. எனக்கும் நீ வேண்டும். என்னோடு வாழ்நாள் முழுதும் நீ இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் என, வாழ வேண்டும்.''
''கார்த்தீ...'' என்று அவன் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவள் முகத்தை நிமிர்த்தி, கண்களுக்குள் ஆழமாக பார்த்தான்.
''என்ன அப்படி பார்க்கிறீர்கள்?''
''உன் மனதை படிக்கிறேன்.''
''என்ன படித்தீர்கள்?''
''அதில் மண்டிக் கிடக்கும் பயத்தை படித்தேன். தயக்கத்தை படித்தேன். பயப்படாதே புவனா... தயங்காதே... இது நமக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் பிரச்னை அல்ல. ஜாதி விட்டு ஜாதி காதலித்த அத்தனை பேருக்கும் ஏற்பட்ட பிரச்னை தான்.
''ஜாதி விட்டு ஜாதிக்கே பயந்தால், மதம் விட்டு மதம் காதலிக்கின்றனரே, அவர்கள் நிலைமையை யோசித்து பார். அவர்கள் அத்தனை பேரும் சமாளிக்கவில்லையா, சந்தோஷமாக வாழவில்லை?''
பேசாதிருந்தாள்.
''என்ன, பேசாமல் இருக்கிறாய்... நான் சொல்வது சரிதானே?''
''சரிதான்.''
''நம்மாலும் எதிர்த்து போராட முடியும். வெற்றி பெற முடியுமில்லையா?''
''முடியும்.''
''சந்தோஷமாக வாழ முடியுமில்லையா?''
''முடியும்.''
''பின், ஏன் இப்படி கவலைப்படுகிறாய்... கவலையையும், பயத்தையும் விடு. உன்னோடு நான் இருக்கிற வரை என்ன கவலை, என்ன பயம்?''
''சரி, கார்த்தி.''
''தட்ஸ் இட். இப்போது தான் நீ என் புவனா.''
''எப்போதுமே நான் உங்கள் புவனா தான்.''
''உன் வீடு மட்டுமல்ல, புவனா. என் வீடும் எதிர்க்கும். சண்டை போடும். போராடும். இதுவரை எங்கள் குடும்பத்தின் கல்யாணங்கள் அனைத்தும் சொந்தத்தில் நடந்தனவே தவிர, அசலில் பெண்ணோ, பையனோ எடுத்ததே இல்லை. எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தான்.
''எனக்கு கூட, என் அத்தை பெண்ணை தான் கட்டி வைக்க வேண்டும் என்று, அப்பா முடிவு செய்திருக்கிறார். அவள் பிறந்த உடனே எனக்கு தான் என்று தீர்மானம் பண்ணி விட்டனர்.''
''கார்த்...தீ...''
''எதுக்கு பயப்படற... பயப்படாதே... என்னை மீறி எதுவும் நடக்காது; நடந்து விட முடியாது.''
மவுனமாக அவனை பார்த்தாள்.
''அதுபோல், உன்னை மீறி உன் வீட்டிலும் ஒன்றும் நடந்து விடக்கூடாது... என்ன, சரியா?''
''சரி, கார்த்தி.''
''போராடுவோமா?''
''போராடுவோம்.''
''வெற்றி பெறுவோமா?''
''நிச்சயமாக கார்த்தி.''
அதற்கு பின்னரே, அவள் தெளிவும், உறுதியும் பெற்றாள். 'என்ன ஆனாலும் சரி, கார்த்திகேயனை அடைந்தே தீர வேண்டும்...' என்கிற எண்ணமும், அவளுக்குள் தகதகவென்று தீ மாதிரி பற்றிக் கொண்டது.
இலக்கு இதுதான் என்பதை மனதில் நிர்ணயித்த பின், மெல்ல மெல்ல அதை நோக்கி மிக ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க ஆரம்பித்தாள், புவனா.
தொடரும்
இந்துமதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashokan Subramanian - Kovur chennai,இந்தியா
02-அக்-202013:55:25 IST Report Abuse
Ashokan Subramanian In the current century we too often see this mixture marriages. I am afraid titanic is a broken ship...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X