'இன்சூரன்ஸ்' மோசடி... உஷார்!
சமீபத்தில், என் நண்பரின் மகன், 'செகண்ட் ஹேண்ட்' கார் ஒன்றை வாங்கினார்.
பெயர் மாற்றம் மற்றும் 'இன்சூரன்ஸ்' புதுப்பித்தலுக்காக, அவரின் நண்பரை அணுகியிருக்கிறார். அவர் வழிகாட்டுதலின்படி, 'இன்சூரன்ஸ்' முகவர் மூலம், முழு தொகையையும் செலுத்தி, ஆவணத்தை பெற்றிருக்கிறார்.
அதன்பின், ஒருநாள், அந்த கார் விபத்தில் சிக்கி, சேதமடைய, பழுது பார்த்து, அவர்கள் தந்த, 'கொட்டேஷனை' எடுத்து, 'இன்சூரன்ஸ் கிளைம்' செய்ய சென்றிருக்கிறார்.
'இன்சூரன்ஸ்' அலுவலகத்தில், 'வாகனம், வேறொருவர் பெயரில் இருப்பதால், நீங்கள், 'கிளைம்' செய்ய முடியாது. யாரோ உங்களை, எங்கள் நிறுவனத்தின் பெயரை சொல்லி ஏமாற்றியிருக்கிறார்...' என்று கூறியுள்ளனர்.
உடனே, நண்பரின் மகன், தான் பணம் கொடுத்த முகவரை அணுகி, கோபமாக சண்டையிட்டார். அந்த முகவர், மோசடி கும்பலிடம் அழைத்துப் போக, 'போலீசுக்கு போக வேண்டாம்; காருக்கான, 'கொட்டேஷன்' தொகையை நாங்களே தந்து விடுகிறோம்...' என, கட்டைப் பஞ்சாயத்து பேசியிருக்கின்றனர்.
அதற்கு மயங்காமல், போலீசில் புகார் கொடுக்க, 'இன்சூரன்ஸ்' மோசடி கும்பல், இப்போது கம்பி எண்ணுகிறது.
மோசடிகளில் பலவகை உண்டு; இது புது வகை. உஷாராக இருங்கள்!
ஆர். ஜெயசங்கரன், வானுார்.
புதுமையான திருமண பரிசு!
அண்மையில், ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருந்தேன். வரவேற்கும் இடத்தில், ஒரு நகை கடைக்காரர், தங்கம் மற்றும் வெள்ளி காசுகளை விற்பனைக்கு வைத்திருந்தார். ஒரு கிராமிலிருந்து, 10 கிராம் வரை வெள்ளி காசுகளும்; 250 மில்லி கிராமிலிருந்து, 500 மில்லி மற்றும் ஒரு கிராம் எடையிலான தங்க காசுகளும் விற்பனைக்கு இருந்தன.
பரிசு பொருட்கள் வாங்க நேரமில்லாதோர், மொய்யை பணமாக கொடுப்பதற்கு பதில், அவரவர் விருப்பத்திற்கேற்ப, வெள்ளி, தங்க காசுகளை வாங்கி, மணமக்களுக்கு பரிசாக அளித்தனர்.
பரிசாக வந்த மொத்த காசுகளை கொடுத்து, தேவையான, வெள்ளி விளக்கு, டம்ளர் போன்றவற்றை வாங்கிக் கொள்ள ஏற்ற வகையில், தெரிந்த நகை கடைக்காரரை விற்பனைக்கு ஏற்பாடு செய்திருந்த, திருமண வீட்டாரின் செயல் புதுமையாகவும், அருமையாகவும் இருந்தது.
'சுவர் கடிகாரம், டீ செட், குக்கர் என, ஒரே பொருட்களை பரிசாக வருவதை தவிர்க்க, இது, நல்ல ஏற்பாடு...' என்று பாராட்டி வந்தேன்.
விழாவிற்கு வந்தவர்களுக்கும், பணம் கொடுப்பதற்கு பதில், தங்கம், வெள்ளியை பரிசாக கொடுத்தோம் என்ற நிறைவு ஏற்படும். எல்லா விழாக்களிலும் இந்த நடைமுறையை கடைப்பிடிக்கலாமே!
சாந்தினி நடராஜன், மதுரை.
கேலி பேசும் முன் யோசியுங்கள்!
ஒருநாள் கோவிலுக்கு சென்றிருந்தேன். என் தோழி, தன் வயதான மாமனார் - மாமியாரை அழைத்து வந்திருந்தார்.
தோழியின் மாமனார், 'பேன்ட், டி - ஷர்ட்' அணிந்து வந்திருக்கவே, அதைப் பார்த்த இளைஞர் பட்டாளம், எங்கள் காது படவே, 'பெருசுக்கு இந்த வயசுல ஆசையைப் பாருடா... நமக்கு போட்டியா, 'டி ஷர்ட்'ல, 'சீன்' போடுது...' என, ஒருமையில் கேலி பேசினர்.
என்னால் கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. தோழி தடுத்தும் கேளாமல், அந்த இளைஞர்களிடம், 'உங்க வயசுல இப்படி வெட்டியா உட்கார்ந்து வீணா பொழுத கழிக்காம, சுயதொழில் செஞ்சு, வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர், அவர்.
'ஒரு ஆண்டுக்கு முன், 'ஹார்ட் அட்டாக்' வர்ற வரைக்கும் ஓய்வில்லாமல் உழைச்சவர். சட்டையில் பாக்கெட் இருந்தா, அங்க மொபைல் போனை வெச்சு இதயம் பாதிப்படையும்ன்னு, பாக்கெட் இல்லாத, 'டி - ஷர்ட்' போடுறாரு. நீங்க கேலி பேசற மாதிரி, 'சீன்' போடுறதுக்காக இல்ல.
'பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்காட்டியும், காரணம் என்னன்னு தெரிஞ்சுக்காம, கேலி பேசாதீங்க. அதுமட்டுமில்லாம, மன அமைதிக்காக, மக்கள் வர்ற கோவில்கள்ல கூடி அரட்டை அடிச்சு, அவங்களுக்கு மன உளைச்சலை உண்டாக்காதீங்க...' என்று கண்டித்தேன்.
என் கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தோழியின் மாமனாரிடம் மன்னிப்பு கேட்டு, கலைந்து சென்றனர். ஏதாவது பேசி கிண்டலடித்து சிரிக்க வேண்டும் என்பதற்காக இளைய தலைமுறையினர் செய்யும் இதுபோன்ற செயல்கள், சம்பந்தபட்டவர்களுக்கு மனவேதனையை தரும் என்பதை உணருங்கள்!
— ஆர். பிரேமா, மதுரை.