60 ஆண்டு வாழ்க்கையில் 50 ஆண்டுகளை அர்ப்பணம் செய்த சின்ன அண்ணாமலை | கலை மலர் | Kalaimalar | tamil weekly supplements
60 ஆண்டு வாழ்க்கையில் 50 ஆண்டுகளை அர்ப்பணம் செய்த சின்ன அண்ணாமலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2010
00:00

தேசியச் செல்வர், தியாகத் செம்மல், தமிழ்த் தொண்டர் என்றெல்லாம் அழைக்கபட்ட சின்ன அண்ணாமலை, 1920ம் ஆண்டு ஜூன் மாதம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிறந்தவர். தான் வாழ்ந்த அறுபது ஆண்டுகளில், 50 ஆண்டுகளை நாட்டிற்காக அர்ப்பணம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், குன்றக்குடியில் 1930ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் ஊர்வலத்தில், பெருந்தலைவர் காமராசர் அவர்களிடம் மூவர்ணக்கொடி பெற்று கலந்து கொண்டார்.
1936ல் கமலா நேரு அம்மையார் அமரரானதை முன்னிட்டு தேவ கோட்டையில் நடை பெற்ற நகரத்தாரல் உயர்நிலைப் பள்ளியில் ஸ்டிரைக் செய்ததற்காக, எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சை எழுத முடியாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவரது மனதை மாற்ற எண்ணிய அவரது தந்தை, அவரை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றவர், தேசியவாதிகளை ஒன்று சேர்த்து இந்தியன் அசோஷியேஷன் என்ற சங்கத்தை அமைத்தார். அங்கு, இவர் செய்த மதுவிலக்கு பிரசாரத்தை கேட்ட ரப்பர் எஸ்டேட் பெண்கள் சிலர், கள்ளுக்கடைகளுக்கு தீ வைத்தனர். அதற்காக கைது செய்யப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டார். அதனால், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார்.
அப்போது, காந்தியடிகள், இரண்டாவது யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்ய தனிப்பட்ட சத்யாகிரகம் துவக்கினார்.
இவர், சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்யும் போது, கைது செய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.
1941ல் தமிழிசை மாநாடு ஒன்றை நடத்தி, தமிழிசைப் பள்ளி ஒன்றை நிறுவினார். அப்பள்ளி இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.பின், தமிழ்ப்பண்ணை என்ற புத்தகப் பதிப்பகத்தைத் துவக்கினார்.
1942ல் நடந்த ஆகஸ்டு புரட்சியில் தன்னை அர்ப்பணித்து, நாடு, நகரெல்லாம் சுற்றினார். அதனால், அரசாங்கம் இவரை கைது செய்தது. இதைக் கண்டு கொதித்தெழுந்த தேவகோட்டை மக்கள், இவரை கொண்டு சென்ற பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். பின், கோர்ட்டுக்கும் தீ வைத்தனர். அதில், அரசாங்கத்தால், 65 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்தை காரணம் காட்டி, இவருக்கு நாலரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் ராஜாஜி ஆஜராகி எதிர்ப்பான கேசை உடைத்து ஆறு மாதத்தில் விடுதலை செய்ய வைத்தார். பின், ராஜாஜி ஆலோசனைப்படி சென்னைக்கு வந்தார். சென்னை தியாகராய நகரில் தமிழ்ப்பண்ணை என்ற புத்தகாலயத்தை துவக்கினார். அது, தேசபக்தர்களின் பாசறையாக இயங்கியது.
சின்ன அண்ணாமலை என்ற பெயரை இவருக்கு சூட்டி ராஜாஜி அழகு பார்த்தார். இவர், " பூட்டை உடையுங்கள்', "அன்ன விசாரம்', "ஜப்பான் வருவானா அமெரிக்க வைப்பார்' என்ற புத்தகங்களை வெளியிட்டதற்காக ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்கு பிறகு, தமிழையே தமிழ்நாட்டிற்கு ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று ம.பொ.சி. நடத்திய கிளர்ச்சிக்கு மூல பலமாக இருந்தார்.
இளைஞர்களை காங்கிரசில் இழுப்பதற்காக 1969ல் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை துவக்கினார். ஏழு ஆண்டுகள் பல பேரவைகளை நடத்தி காங்கிரஸ் இயக்கத்திற்கு வலுவூட்டினார். இவருடைய தமிழ்ப்பண்ணையிலிருந்து தான் சென்னையில் பல பதிப்பகங்கள் உருவாகின. எனவே, இவரை பதிப்பகங்களின் தந்தை என்றும் சொல்லலாம்.
"ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' போன்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டார். தேச விடுதலை, காங்கிரஸ் கட்சி, பத்திரிகைத் துறை, திரைப்படத்துறை என பலவற்றிலும் பங்காற்றிய இவர், தனது பிறந்த நாளான ஜூன் 6ம் தேதி, 1980ம் வருடம் உயிர் நீத்தார். அவர் மறைந்தாலும், அவருடைய நினைவுகள் வாழ்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X