உறவுகள் உதிர்வதில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2020
00:00

பளிச்சென்று இருந்தது, வானம். காற்று வீசியதால், தரையில் விழுந்த பலா மரத்தின் பழுத்த இலையை எடுத்து, முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார், பொன்னுச்சாமி.
இலைகளின் மீது படர்ந்திருந்த நரம்புகளை போல, அவரது சதைகள் சுருங்கி, பச்சை நரம்புகள் புடைத்து நின்றன. 70 வயதின் துவக்கம், பொன்னுச்சாமியை பந்தாடிக் கொண்டிருந்தது. கையில் சிறு தடி ஊன்றி நடக்கும் கிழப் பருவம், அவருக்கு சுமையாகத் தெரியவில்லை.
வீட்டில் அடங்கிக் கிடக்காமல், இரண்டு வயது குழந்தையை போல, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். 25 சென்ட் நிலத்திற்கு தெற்கே, வடக்கு நோக்கி அவரது வீடு இருந்தது. முற்றம் தாண்டி, முன் பகுதியில் காய்கறிகளும், பல வகையான மரங்களும், இறுதியில், வாழை மரங்கள் என, ஒரு தோட்டமாகவே இருந்தது.
மொத்த நிலத்தையும் மதில் சுவர் சுற்றி வளைத்திருந்தது. மதில் சுவரை கடந்து வெளியே வருவதற்குள், போதும் போதுமென்றாகி விட்டது அவருக்கு.

அவரது வீட்டின் வலது பக்கத்தில் ஆறுமுகம் வீடு இருந்தது. இவரை விட அவருக்கு, இரண்டு வயது தான் குறைவு. தடி ஊன்றியபடி, அவர் வீட்டுக்கு நடந்தார், பொன்னுச்சாமி.
பால்ய வயதில், இருவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவதும், பள்ளிக்கூடம் செல்வதும், வயதாகி, வாலிபர்களாகி திருமணம் செய்து கொண்டதும், 40 வயது வரை, ஆழமான இழையோடு இருந்தது, நட்பு. அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட பகையில், 30 ஆண்டுகள் நிலைத்திருந்த நட்பு தொலைந்து, பெரும் விரோதம் வளர்ந்தது.

பொன்னுச்சாமியின் வீட்டு முற்றத்தை தாண்டி, 3 அடி நடைபாதை, கிழக்கிலிருந்து மேற்காக இருந்தது. பக்கத்திலிருக்கும் ஆறுமுகம், பிரதான சாலைக்கு வர, அந்த நடைபாதை ஒன்றே, பொது வழியாக இருந்தது.
நடைபாதையை தாண்டி, ஆறுமுகத்தின் அப்பா சுந்தரத்தின், 20 சென்ட் நிலம் காலியாக கிடந்தது. சுந்தரத்தின் மகள் திருமண செலவுக்கு அதை விற்பனை செய்ய முன் வந்தபோது, பொன்னுச்சாமியும், அவரது அப்பா வேலுத்துரையும் சேர்ந்து, நிலத்தை வாங்கிக் கொண்டனர்.
நிலம் கைவசம் ஆனதும், குறுக்கே கிடந்த, 3 அடி நடைபாதை, வேலுத்துரையை உறுத்தியது.
'டேய் பொன்னு... 3 அடி வீதம் கிட்டத்தட்ட, ஒரு சென்ட்க்கு மேல நடைபாதை போகுது. இத, மதில் சுவர் கட்டி அடச்சிட்டோம்னா, வழிப் பாதை நிலத்தோட சேர்ந்துக்கும். மொத்தமா ஒரு மதிலோ, இல்ல முள் வேலியோ போட்டுட்டா, ஒரே பிளாட்டா நீளமா கிடக்கும்...' என்று, யோசனை சொன்னார், வேலுத்துரை.
'நல்ல யோசனை தான். ஆனா, குறுக்கே கிடக்கிற நடைபாதையை அடைச்சிட்டோம்னா, ஆறுமுகம் குடும்பம், மெயின் ரோட்டுக்கு வரணும்னா, நீண்ட துாரத்துக்கு சுற்றி தான் போகணும். வேற வழித்தடமும் இல்ல...' என, மனிதாபிமானத்தோடு சொன்னார், பொன்னுச்சாமி.
'அவன் எங்கேயோ சுத்தி போகட்டும், நமக்கென்ன... நம் நிலம் வழியா நடைபாதை இருக்கு; நாம அடைக்கிறோம். இதை யார் வந்து கேக்கப் போறா... நீ, அடைச்சு மதில் சுவர் கட்டிடு...' தீர்க்கமாக சொன்னார், வேலுத்துரை.
நீண்ட நேரம் விவாதித்தும், விடுவதாக இல்லை, வேலுத்துரை. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக சொன்னார், பொன்னுச்சாமி.

ஒரு வாரத்திற்கு பின், கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் நடைபாதையை அடைத்து, மதில் சுவர் எழுப்ப அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருந்தனர், வேலையாட்கள்.
'பரம்பரை பரம்பரையா, இந்த வழியாத்தான் போய்க்கிட்டு இருக்கோம்... இந்த வழிய நீங்க அடைச்சா, நாங்க சுத்தி தான் போகணும்... கொஞ்சம் கருணை காட்டுங்க, நடைபாதையை அடைக்காதீங்க...' என, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், ஆறுமுகம்.
கேட்பதாக இல்லை, வேலுத்துரை.
பொன்னுச்சாமிக்கு, அப்பாவின் பேச்சை தட்ட முடியவில்லை. அஸ்திவாரம் தோண்டி, கல் அடுக்கப்பட்டது.
நண்பர் ஆறுமுகம், கண்ணீர் விட்டு அழுதது, பார்க்க கஷ்டமாக இருந்தது. அன்றிலிருந்து, ஆறுமுகம் குடும்பத்திற்கும், தன் குடும்பத்திற்குமான உறவு அறுந்து, பெரும் பகை குடியேறியது.
பொது வீதிகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் சந்தித்தால் பேசிக் கொள்வதில்லை. ஆறுமுகத்தின் மகள் நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட அழைப்பில்லை. 13 ஆண்டு கழித்து, வேலுத்துரை இறந்தபோது கூட, ஆறுமுகம் குடும்பத்தார் யாரும் வந்து எட்டிப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட, 30 ஆண்டு பகை, இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
பொன்னுச்சாமியின் மகன் ரகுவரன். அவனது மகன் அபிஷேக் என்று, பாரம்பரியமாக பகை வளர்ந்து கொண்டே இருக்கிறது; ஒட்டும் இல்லை, உறவும் இல்லாத பகையாக இருந்தது, இருவரின் வீடுகளும்.

பொன்னுச்சாமி, தடி ஊன்றியபடி, ஆறுமுகத்தின் வீட்டின் முற்றம் வந்தபோது, பூட்டிக் கிடந்தது, வீடு. அழைப்பு மணியை அழுத்தினார். இரண்டு நிமிடத்திற்கு பின், ஆறுமுகத்தின் மருமகள் கதவை திறந்து பார்த்து, முகம் சுருக்கி உள்ளே போனாள்.
மூன்று நிமிடத்திற்கு பிறகு, வெளியே வந்தார், ஆறுமுகம். அவரது முகமும் அஷ்டகோணலாகியது.
''என்ன?''
''சும்மா, உன்ன பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்.''
''நான் தான் உன் விரோதியாச்சே... என்ன எதுக்கு பார்க்க வரணும். உன் மகனும், என் மகனும் பார்த்தா, மறுபடியும் சண்டை வந்து, கைகலப்பில் முடியும்,'' வெறுப்பாய் சொன்ன, ஆறுமுகத்தை கண்டுகொள்ளாமல், பார்த்தபடியே நின்றார், பொன்னுச்சாமி.
''நம் இரண்டு குடும்பத்திற்கும், இத்தனை ஆண்டுகளாக பகை இருந்தது வாஸ்தவம் தான். இவ்வளவு நாளும் உன்னை விரோதியாவே நினைச்சுட்டேன். மிச்சமிருக்கிற கொஞ்ச காலத்துல, உனக்கு விரோதியா இல்லாட்டியும், ஒரு மனுஷனா இருந்துட்டு போகலாம்ன்னு தோணிச்சு...
''தப்பு எங்க மேல இருந்தாலும், இப்போ உன் வீடு தேடி வந்து, உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், என்னை மன்னிச்சுடு ஆறுமுகம்,'' எந்த கூச்சமும் இல்லாமல், தன்னை விட வயதில் குறைந்த ஆறுமுகத்திடம் மன்னிப்பு கேட்டார், பொன்னுச்சாமி.
''கண் கெட்ட பிறகு, சூரிய நமஸ்காரமா... அன்னிக்கு, வழி பாதையை அடைக்காம இருந்திருந்தா, இத்தனை ஆண்டுகளா நமக்குள்ள பகை வந்திருக்குமா... நீ இங்க வந்திருக்கிற விஷயம், உன் மகனுக்கு தெரியுமா?''
''அத விடு ஆறுமுகம், நீ என்னை மன்னிச்சிட்டியா இல்லையா... அதை சொல்லு.''
''நான் மன்னிச்சு என்ன பிரயோஜனம்... நம்ம பக, நம்ம புள்ளைங்க மேல வந்து, இப்போ அது, பேரப் புள்ளைங்க மேலயும் வந்திருக்கு. இப்போ, நான் உன்னை மன்னிச்சாலும், என் மகன், பேரன் மன்னிப்பாங்களான்னு தெரியல. நான் மன்னிச்சுட்டேன்; உள்ளே வா,'' முகம் மலர்ந்து, அவரை உள்ளே அழைத்தார், ஆறுமுகம்.
''பரவாயில்ல... இது போதும் எனக்கு. உன்கிட்ட மன்னிப்பு கேட்டது, மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா... எனக்கு, 70 வயசு தாண்டியாச்சு. திடீர்ன்னு ஒருநாள், என் சுவாசம் நின்னு போச்சுன்னு வெச்சுக்க, இந்த உலகத்துல ஒரு விரோதியை சம்பாதிச்சுட்டு செத்துப் போயிட்டதா ஆயிடும்.
''சாகும்போது, விரோதிங்க ஒருத்தர் கூட இல்லாம இருக்கணும்ன்னு தோணிச்சு. அதான் வந்தேன். விரோதியோட வீடு தேடி வந்து, மன்னிப்பு கேட்கிறது எவ்வளவு சுகம் தெரியுமா?''
''மன்னிக்கிறது அதை விட சுகம். உள்ளே வா பொன்னுச்சாமி... உள்ளே வந்து ஒரு வாய் காபி சாப்பிட்டு போ.''
''பரவாயில்ல... நீ கூப்பிட்டதே, காபி சாப்பிட்ட மாதிரி தான். நான் வர்றேன்,'' பெரிய மனப்பாரம் இறங்கியது போலிருந்தது. தடியை ஊன்றியபடி வீட்டுக்கு நடந்தார், பொன்னுச்சாமி.
வீட்டுக்கு வந்து, மன்னிப்பு கேட்ட விபரத்தை, 'வாட்ஸ் - ஆப்'பில், செய்தியாக பரப்பி விட்டாள், ஆறுமுகத்தின் மருமகள். அந்த செய்தி, பொன்னுச்சாமியின் மருமகள் காதுக்கும் வந்து சேர, கணவன் ரகுவரனுக்கு, தகவல் தெரிவித்தாள்.
அவன் கொதித்து போனான். அன்று மாலை, அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவன், ''யாரைக் கேட்டு, அந்த ஆறுமுகம் வீட்டுக்கு போனீங்க. அவர் வீட்டுக்கு போய், அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுருக்கீங்க. வெட்கமா
இல்ல,'' என்று, அப்பாவை ஒரு பிடி பிடித்தான்.
''மன்னிப்பு கேட்க எதுக்குடா வெட்கப்படணும். தப்பு செஞ்சது நாம. நடைபாதையை அடைச்சதால ரெண்டு குடும்பத்துக்கும் பகை வந்தது. அப்பா இருந்த வரைக்கும், அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியல. 30 ஆண்டுகளாக பகை கொள்ளுப்பேரன் வரைக்கும், வளர்ந்துகிட்டே இருக்கு.''
''அப்பா... கடைசியா நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க?''
''பழைய பகை மறந்து, இரண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்து மறுபடியும் சந்தோஷமா இருக்கணும். அத பார்த்துட்டு நான் கண்ண மூடணும்.''
''அதான் போய் மன்னிப்பு கேட்டீங்கல்ல... பழைய பகையை மறந்து, ஆறுமுகம் குடும்பம் வரட்டும் பேசுறேன்.''
''நான் மன்னிப்பு கேட்டதால, பழைய பகை, அவன் மனசுலயிருந்து மறைஞ்சிடாது. ஆறுமுகத்துக்கும் வயசாயிடுச்சு, அவன் மனசுலயும் ஆறாத ரணங்கள் இருக்கும். அவன் மன்னிச்சுட்டேன் மனசார சொன்னாலும் உள்ளுக்குள்ள அந்த வலி விலகாமத்தான் இருக்கும்...
''சாவு எப்ப வந்து யாரை முதல்ல அழைக்கும்ன்னு தெரியாது... சிலவேளை முதல்ல போறது அவனா இருக்கலாம்; இல்ல நானா இருக்கலாம். மறுபடியும் அவங்க உறவு கிடைக்கணும்ன்னா, அந்த மதில் சுவர இடிச்சு, நடைபாதை போட்டா, அந்த குடும்பத்துக்கும், நமக்கும், நல்ல உறவு வளரும்ன்னு, என் மனசு ஆசைப்படுது,'' என, தன் மனதை திறந்தார், பொன்னுச்சாமி.
கோபத்தின் உச்சிக்கே போனான், ரகுவரன்.
''வயசானா, உங்க புத்தி ஏன் இப்படி போகுது. தாத்தா செஞ்சது தான் சரி; அவர் கட்டின மதில் சுவரில் ஒரு கல்லை கூட அசைக்க விடமாட்டேன். அப்படி ஒரு
உறவு எனக்கு தேவையும் இல்ல,''
என்றபடி, அறைக்குள் சென்று கதவை தாழிட்டான்.
பொன்னுச்சாமியிடமிருந்து, நீண்ட பெருமூச்சு வெளியேறியது.
'இந்த காலத்து புள்ளைங்களுக்கு, உறவுகள வளர்க்க தெரியல. பக்கத்து வீட்டு ஆளுங்க தான் ஆத்திர, அவசரத்துக்கு முதல்ல ஓடி வர்றதுங்கறது கூட தெரியல. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அப்பா, நடைபாதையை அடைச்சு மதில் சுவர் கட்டச் சொன்னபோது, வலிமையாக எதிர்த்திருக்க வேண்டும்; கட்ட விடாமல் தடுத்திருக்க வேண்டும்...' என, தன்னைத்தானே வருத்தியபடி, தன் அறைக்குள் நடந்தார், பொன்னுச்சாமி. மனம் பாரமாக இருந்தது.

பொழுது விடிந்து வெகுநேரம்
ஆகியும் எழுந்திருக்கவில்லை, பொன்னுச்சாமி. கதவு சாத்தியிருந்தது. மருமகள் டீ எடுத்து வந்து அழைத்தபோது, அவரது உடம்பில் உயிர் இல்லை.
''மாமா...'' என்று பெருங்குரலெடுத்து அழுதாள். ஓடி வந்தான், ரகுவரன். பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருந்த பேரக்குழந்தைகளும் ஓடி வந்தனர்.
மரண செய்தி அறிந்த பலரும் வரத் துவங்கினர்.
ஆறுமுகத்தின் குடும்பத்திலிருந்து யாராவது வருகின்றனரா என்று பார்த்தபடியே இருந்தான், ரகுவரன். மாலை, 3:00 மணிக்கு, சவ அடக்கம் செய்ய, சவப்பெட்டி துாக்கும் வரை பார்வையை வீசினான். ஆறுமுகம் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை.
வீட்டின் வலப்பக்க மூலையில் குழி தோண்டப்பட்டது. சவப்பெட்டி துாக்கிச் செல்லப்பட்டது.
தடியை ஊன்றியபடி, தள்ளாடி தள்ளாடி குழிக்கரையில் நின்றிருந்தார், ஆறுமுகம்.
குழிக்கரையில் பிரார்த்தனை முடிந்து சவப்பெட்டி மூடும் நேரம், ஆறுமுகம் குனிந்து, பொன்னுச்சாமியின் முகத்தில் முத்தம் வைத்தார்.
அந்த காட்சியை பார்த்ததும், மனம் நிறைந்தது, ரகுவரனுக்கு. அந்த துன்ப நேரத்திலும், அந்த காட்சி ஆறுதலாக இருந்தது.

பதினைந்தாவது நாள் சடங்கு முடிந்து, இரண்டு நாட்களுக்கு பின், மதில் சுவர் இடிக்கப்பட்டு, நடைபாதை போட்டான், ரகுவரன்.
அந்த பாதையில், இனி, ஆறுமுகம் குடும்பத்தார் நடப்பரா என்பது கேள்விக்குறி தான். என்றாலும், அப்பாவின் இறுதி ஆசை நிறைவேறி, அவரது ஆத்மா சாந்தமாக, நடைபாதை ஒரு காரணமாக இருக்கட்டும் என்று நினைத்தபடியே, வீட்டை நோக்கி நடந்தான், ரகுவரன்.
துாரத்தில் தடியை ஊன்றியபடி, நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார், ஆறுமுகம்.
புதிய உறவு வீடு தேடி வருவது போல் இருந்தது. உறவுகள் உதிர்வதில்லை என்பது புரிந்தது, ரகுவரனுக்கு.


பால்ராசய்யா
குமரி மாவட்டம், வயது: 52. படிப்பு: எம்.காம்., - பி.ஜி.டி.சி.ஏ.,
'பம்புசெட்' வியாபாரம் செய்கிறேன். 500க்கும் மேற்பட்ட ஒரு பக்க கதைகளும், 100க்கும் மேலான சிறுகதைகளும், ஆறு நாவல்களும், 30 நாடகங்களும் எழுதியிருக்கிறேன். 'தினமலர்' இதழுக்கு இதுவே என் முதல் கதை. அக்கதையே ஆறுதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து, மகிழ்ச்சி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Kalaipandian - Bne,ஆஸ்திரேலியா
22-அக்-202021:50:22 IST Report Abuse
Sundar Kalaipandian super
Rate this:
Cancel
Dr. Keerthivasan Krishnamoorthy - muscat,ஓமன்
18-அக்-202018:15:18 IST Report Abuse
Dr. Keerthivasan Krishnamoorthy Very nice story... nothing wrong in asking sorry for a mistake committed. Saagumpodhu enna kionda pogappogirome. - Dr. Keerthivasan krishnamoorthy, hct, alkhuwair, muscat, oman.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X