டைட்டானிக் காதல்... (7)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2020
00:00

முன்கதை சுருக்கம்: புவனாவை காதலிக்கும் கார்த்திகேயன், அப்பாவிடம் பேசுவதற்கு முன், அத்தை மகள் ஜோதியிடம் பேச முடிவு செய்து, அவளது அறைக்கு சென்றான் -

''ஜோதி...''
கார்த்திகேயனின் குரல் கேட்டு, வாரி சுருட்டி, எழுந்து நின்றாள்.
''மா... மா...''
''என்ன ஜோதி, உடம்பு சரியில்லையா... ஏன் இந்த நேரத்துல துாங்குற?''
''துாங்கல மாமா... சும்மா படுத்துட்டு இருந்தேன்.''
''ஏன்... தலைவலியா, சூடா காபி குடிக்கிறது தானே?''
''அதெல்லாம் ஒண்ணுமில்ல. போர் அடிச்சுச்சு... அதனால, படுத்து கிடந்தேன்.''
''எங்க, அத்தையை காணோம்?''
''கோவிலுக்கு போனாங்க.''
''நீ போகலையா?''
''இல்ல மாமா... அம்மா கூட போனா, சும்மா பேச்சு குடுக்கும்.''
''உனக்கு பேச புடிக்காதா?''
''அம்மாகிட்ட என்ன பேசுறது... யாரை பத்தியாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும்.''
''குறை சொன்னால் உனக்கு பிடிக்காதா?''
''யாருகிட்ட தான் மாமா குறை இல்லை... எல்லார்கிட்டயும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தானே செய்யும்... அதைப் போய், பூதக்கண்ணாடி வச்சு பார்த்துகிட்டா இருக்கிறது?''
''அட...'' என்று வியந்தான்.
''என்ன மாமா?''
''எத்தனை அழகா பேசுற... உனக்கு இத்தனை அழகா பேச வரும்ன்னு எனக்கு தெரியாதே.''
''அழகாத்தான் இல்ல. பேசுறதாவது அழகா இருக்கட்டுமே.''
''கருப்பா இருந்தா, அழகில்லன்னு அர்த்தமா ஜோதி?''
''கருப்பு, யாருக்கு மாமா புடிக்குது?''
''ராமரையும், கிருஷ்ணனையும் எல்லாருக்கும் புடிக்குதே.''
''கிருஷ்ணன் கருப்பு, ராமன் கருப்பில்லையே மாமா?''
''கருப்பத்தான் நீலம், பச்சைன்னு சொல்லுறாங்க. பாரதியார் கூட, 'காக்கை சிறகினிலே நந்தலாலா'ன்னு தான் பாடினாரு.''
''கிருஷ்ணனின் கருப்பு புடிக்குது. காக்கா கருப்பு புடிக்குது. மனுஷங்க கருப்பாக இருந்தா யாருக்கும் புடிக்க மாட்டேங்குதே...''
''ஏன், எங்கப்பங் கூடத்தான் கருப்பு. புடிக்கலையா?''
''ஆம்புளைங்க எப்படி இருந்தாலும் புடிக்கும்; ஏத்துக்குவாங்க. ஆனா, பொம்பளைங்களை யாரு ஏத்துக்குறாங்க. நாங்க கருப்பா இருந்தா, யாரு ஏத்துக்குவாங்க?''
''ஏன் ஜோதி, அப்படி சொல்ற... நா ஏத்துக்குவேன் ஜோதி.''
''நெஜமாவா மாமா சொல்றீங்க?''
''நெஜமாத்தான் சொல்றேன்.''
''என்ன ஒங்களுக்கு புடிக்குமா?''
''ரொம்ப புடிக்கும்.''
''மா... மா...'' என்று முகம் மலர்ந்தாள். அருகில் வந்து, தயங்கி தயங்கி கேட்டாள்.
''ஒங்களை கட்டிப் புடிச்சுக்கலாமா?''
''புடிச்சுக்கோ... தங்கச்சி, அண்ணனை கட்டிப் புடிக்கிறதுல என்ன தப்பா இருக்க முடியும்?''
அதிர்ந்து, ஓரடி பின்வாங்கினாள்.
முகத்தில் சொல்ல முடியாத கலவரமும், பயமும் எட்டிப் பார்த்தது.
''என்ன அப்படிப் பார்க்குற?''
''என்ன மாமா சொல்றீங்க?''
''என்ன ஜோதி?''
''தங்கச்சின்றீங்க.''
''ஆமா, ஜோதி.''
''உங்களுக்கு, என்னை கட்டி
வைக்கப் போறதா...''
''அது, அப்பாவோட எண்ணம். ஆனா, எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல.''
''மாமா?''
''நீ அப்படி நினைக்கும்படி நான் எப்பவாவது பேசியிருக்கேனா, ஜோதி?''
பேசாதிருந்தாள்.
''தப்பா பழகியிருக்கேனா?''
நீர் கோர்த்த கண்களுடன், அவனை ஏறிட்டாள்.
''அப்படியெல்லாம் பேசாததுனாலயும், பழகாததுனாலயும் தான் மாமா, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சது.''
''ஜோதி...''
''கட்டிக்கிட்டா உங்களையே கட்டிக்கிடணும்ன்னு நினைச்சேன். மாமா வேற, 'நீதான் என் மருமகள்'ன்னு சொல்லிச் சொல்லி, என் ஆசையில எண்ணெய் ஊத்தி எரிய வச்சாரு. இப்ப திகுதிகுன்னு பத்திக்கிட்டு எரியுது. இப்ப போய் இப்படி சொன்னா எப்படி மாமா?''
''நீ என்னை நினைக்கிற மாதிரியே நானும் ஒருத்திய நினைக்கிறேனே, ஜோதி. அவளும் என் மேல பைத்தியமா இருக்கா... ரெண்டு பேரும் உசுருக்கு உசுரா காதலிக்கிறோம்.''

மெல்ல கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, ஒரு விநாடி வாயடைத்து நின்றாள். பின், ''யாரு மாமா, அந்த பாக்கியசாலி?'' என்று கேட்டாள்.
''புவனேஸ்வரின்னு பேரு. மெட்ராஸ்ல இருக்கா. பெரிய படிப்பு படிச்சிருக்கா. கோவில் குருக்களோட பொண்ணு. ஐயிரு வீட்டு பொண்ணு...''
''பார்க்க நல்லா இருப்பாங்களா, மாமா?''
''எலுமிச்சை நிறம். கண்ணும், மூக்கும் தீர்க்கமா அம்பாள் மாதிரி இருப்பா.''
''அம்பாள்ன்னா யாரு மாமா?''
''சிவனோட மனைவி பார்வதி தேவியை அவங்க அம்பாள்ன்னு தான் சொல்றாங்க... நம்ம மாதிரி முனியம்மா, எல்லம்மா, முத்தம்மா, லிங்கம்மா, மாரியம்மானெல்லாம் பேரு வைக்க மாட்டாங்க. அம்பிகே, ஈஸ்வரி, தேவின்னு தான் சொல்லுவாங்க.''
''ஐயிரு வூட்டு பொண்ணுன்னு சொல்றீங்க... நம்ம வூட்ல வந்து எப்படி மாமா இருப்பாங்க?''
''நீ இருக்கல்ல... பழக்கிவிட மாட்ட...''
''ஆமாண்டா... அவ பழக்குவா... நான் பார்த்துகிட்டிருப்பேன்,'' என்ற கர்ண கொடூரமான அப்பாவின் கோபக் குரல் கேட்டு திரும்பினான்.
''எல்லாம் கேட்டுக்கிட்டுதாண்டா இருந்தேன்... ஐயிரு பொண்ணாமில்ல... ஐயிரு பொண்ணு... செருப்பு பிஞ்சிரும்.''
''அப்பா.''
''என்னடா தம்பி... உம் மவன் இப்படி சொல்றான்... அப்ப என் பொண்ணு கதி,'' என்று அலற ஆரம்பித்தாள், ஜோதியின் அம்மா செல்லாயி.
''என் மவ என்ன ஆவாடா... சும்மா கெடந்த பொண்ணு மனசுல ஆசையை துாவி வெதச்சிட்டு, இப்ப அரிவாளால வெட்ட வெச்சுட்டியேடா தம்பி,'' என்று வயிற்றிலும், தலையிலும் அடித்துக் கொண்டாள்.
''அட, சும்மா இருக்கா நீ வேற... சத்தம் போட்டு ஊரைக் கூட்டிக்கிட்டு.''

அதற்குள் அடுக்களையிலிருந்து ஓடி வந்தாள், பூவாயி. புடைப்பதையும், நெல் குத்துவதையும், இடிப்பதையும் விட்டு வேடிக்கை பார்த்தனர், பெண்கள். கழனிக் காட்டிலிருந்து வந்த ஆட்கள் ஸ்தம்பித்து நின்றனர்.
''இவன் சொன்னான்னா, இவன் இஷ்டத்துக்கு ஆட விட்ருவேனா... பொலி போட்டுற மாட்டேன்...''
''ஐயோ, மாமா... அவரு, உங்க மவன் மாமா,'' பயந்து கதறினாள், ஜோதி.
''நான் பொலி போட்ருவேன்னு சொன்னது இவனையில்ல. அந்த பொண்ண. இந்த வீட்டுக்குள்ள நுழையுற தைரியம் வருமா அவளுக்கு?''
''வரும்ப்பா... நானே கூட்டிக்கிட்டு வருவேன்.''
''செருப்பு பிஞ்சிரும் ஜாக்கிரதை.''
''இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேம்ப்பா... உங்க ஒடம்புல ஓடுற அதே ரத்தம் தான், என் ஒடம்புலயும் ஓடுது. உங்களுக்கு இருக்கிற பிடிவாதம் தான் எனக்கும் இருக்கும்.''
''வெளிய போடா எச்சக்கல நாயே... இந்த வீட்டுக்கு, ஜோதி தான் மருமவ. வேற ஒருத்திய நுழைய விட மாட்டேன்.''
''எனக்கு, புவனா தான் பொண்டாட்டி... வேற யாரும் பொண்டாட்டியாக முடியாது.''
பொறி பறக்கும் விதமாக, அவன் கன்னத்தில் பளாரென்று விழுந்தது.
அதை எதிர்பார்க்காமல் ஆடிப்போனான், அவன்.
''ஐயோ... ராசா...'' என்று ஓடி வந்த பூவாயியையும் அறைந்தார். தலைமயிரை பிடித்திழுத்து தள்ளினார்.
''எல்லாம் உன்னாலதாண்டி... அவனுக்கு இத்தனை தைரியம் வந்ததுக்கு காரணம், நீதான்...'' என, காலால் உதைத்தவர், ''உன்னை கொல்லணும்டி,'' என்றார்.
அம்மா வதை படுவதை காணமுடியாத, கார்த்திகேயன், ஓடி வந்து தடுத்தான். குறுக்கில் வந்து அவள் மீது விழுந்தாள், ஜோதி.
''மாமா... நிறுத்துங்க மாமா...
எனக்காக இந்த வீட்ல சண்டை
நடக்கிறது புடிக்கல...''
''உனக்காக இல்ல மருமகளே... எனக்காக... நான், நம்ம ஜாதி சங்க தலைவன்... நம்ம வூட்லயே இப்படின்னா, ஊர் மொத்தமும் காரித் துப்பாது... அதைவிட, நான் நாண்டுக்கிட்டு சாவலாமில்ல...''
வாரிச் சுருட்டி எழுந்த பூவாயி, அவர் வாயை பொத்தினாள். அவள் கண்களிலிருந்து கரகரவென்று நீர் கன்னங்களில் வழிந்தது.
''என்ன பேச்சு பேசறீங்க...''
''உம் மவன் ஜோதியை கட்டாட்டி, எனக்கு வேற வழி தெரியல. ஊர்ல தலை காட்ட முடியாது.''
''கட்டுவாங்க, அவன் கட்டுவான்.''
''அவன சொல்லச் சொல்லு.''
''சொல்லுப்பா, ராசா... சொல்லு.''
அவன், பேசாமல் நின்றான்.
''எப்படி நிக்குறான் பாரு... அப்பன் செத்தா என்ன அவனுக்கு... சொத்து மொத்தமும் கிடைக்குமில்ல...''
''உங்க சொத்துல எனக்கு ஒரு பைசா வேணாம்.''
''ராசா...'' உரத்து குரல் கொடுத்தாள், பூவாயி.
''உங்கொப்பனுக்கு ஏதாச்சு ஒண்ணு ஆச்சுதுன்னு வச்சுக்க, அதுக்கு மேல நான் உசுரு வாழ மாட்டேன். எங்க ரெண்டு பேர் பொணத்து மேல ஏறி மிதிச்சுகிட்டு போயி, அந்த அய்யிரு பொண்ணை கட்டிக்க.''
திடீரென்று அம்மா, அப்பா பக்கம் சேர்ந்தது கண்டு திகைத்து நின்றான், கார்த்திகேயன்.
''ஐயோ, அத்த... மாமா தான் பேசுறாருன்னா... நீங்களும் பேசுறதா... நீங்க ரெண்டு பேரும் போங்க... என் மாமன்கிட்ட நான் பேசிக்கறேன்.''
''நீ என்னத்தடி பேசுவ... அப்பன் ஆயிக்கு அடங்காத புள்ள, ஒனக்கா அடங்குவான்,'' என்றாள், செல்லாயி.
''அம்மா...'' என்று, வாழ்க்கையில் முதல் முறையாக தன் அம்மாவை முறைத்தாள், ஜோதி.
தொடரும்
இந்துமதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nandhalal - Chennai,இந்தியா
19-அக்-202012:52:08 IST Report Abuse
Nandhalal Intere marriages will not not solve the e issues. Only way to solve e issue is to teach that there is "No high or low classification due to e" all are equal e. But everyone have got different practises which should be protected for next generation too. All the practise are for good way of life. let them write stories to motivate the people to grow themself and also to be innovative in their life.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X