புரட்சி சிறுவன் (9) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
புரட்சி சிறுவன் (9)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:00

முன்கதை: தந்தையரின் குடிப்பழக்கத்தால் பள்ளி செல்ல முடியாத ஏழை சிறுவர், சிறுமியர், பெண்களுடன் இணைந்து, குடிக்கு எதிராக அமைதி வழியில் போராடினர். அதில் பங்கேற்ற குப்பை சேகரிக்கும் முருகனை அடித்து உதைத்தார் தந்தை. இனி -

முருகனை சூழ்ந்தது, சிறுவர், சிறுமியர் கூட்டம். அது, தந்தையிடம் அடி விழாமல் பாதுகாத்தது. பெண்களும் திரண்டு கடும் எதிர்ப்பை காட்டினர். ரத்தம் சொட்ட நின்றான் முருகன். அவனுக்கு அனுசரணையாக பேசினர் பெண்கள்.
அதே நேரம், 'உங்க அதிகாரமெல்லாம் எடுபடாது. உங்க மகன் என்றாலும் மிருகத்தனமாக அடிக்க முடியாது...' என்று ஆவேசத்துடன் வாசலுக்கு வந்தனர் பெண்கள்.
கை, கால்கள் நடுங்கியபடி நின்றிருந்தார் முருகனின் அப்பா.
'இதோ பாரய்யா! அடித்து மிரட்ட நினைத்தால், காவலர்களின் லத்திக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஜாக்கிரதை...'
தைரியமாக அதட்டிய பெண்கள், பாதுகாப்பாக முருகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு விவரம் தெரிந்து கொண்டான் மாணிக்கம். உடனடியாக முதல் உதவிக்கு ஏற்பாடு செய்தான்.
''அந்த ஆளை சிறையில் தள்ள ஏற்பாடு செய்யட்டுமா...''
மிகுந்த கோபத்தில் கேட்டார் மருத்துவர்.
''பணிய வைக்க முயற்சிக்கலாம் ஐயா! இப்போதைக்கு சிறையில் தள்ள வேண்டாம்... மிரட்டலே மாற்றங்களை கொண்டு வரும்....''
நம்பிக்கையுடன் சொன்னான் மாணிக்கம்.
''நல்ல யோசனை...'' என்றார் மருத்துவர்.
சிகிச்சை பெற்று, குடிசைக்கு திரும்பிய முருகனின் மனம் நன்றியால் நிறைந்தது. அவன் அம்மாவின் துணிச்சலான செயல் வியப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பு குரல் எழுப்பும் அளவு திடம் பெற்றிருந்தது பெருமிதம் தந்தது.
மருத்துவமனையில் பணியை முடிந்து திரும்பி, சிறுவர், சிறுமியருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினான் மாணிக்கம். முருகனும் உடன் இருந்தான்.
''நம் நாட்டில் ஏழைக் குடும்பங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு காரணமே குடும்ப தலைவர் குடிப்பது தான். சம்பாதிக்கும் பணம் எல்லாம் குடியில் விரயமாகி விடுகிறது. மனைவி மக்கள் பட்டினி கிடக்க நேரிடுகிறது... படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், படிக்காதவர்களாக, ஏழைகளாகவே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம்... இதற்கு தீர்வு காண வேண்டும்...''
கூட்டத்தில் விளக்கமாக பேசினான் மாணிக்கம்.
'பெரிய கருத்தெல்லாம் பேசுகிறாய்...'
குடிசை வாசிகள் நெகிழ்ந்து கைதட்டி வரவேற்றனர்.
''மகளிர் முன்னேற்றக்கழக கூட்டத்துக்கு நேற்று போயிருந்தேன். ஒரு அம்மா மிகவும் துணிச்சலாக குடிக்கு எதிராக பேசியதைக் கேட்டேன்... ஆசிரியர் ரங்கமணியும் பேசினார். குடியால் வரும் தீமைகளை சிறப்பாக எடுத்துரைத்தார்... அந்த பேச்சை கேட்டால் யாருக்கும் அறிவு வளரும்... திருந்தி வாழ வாய்ப்பு ஏற்படும். ஆசிரியரை அழைத்து இங்கும் பேச வைக்கலாமா... கருத்தை சொல்லுங்க...''
கூட்டத்தினரிடம் கேட்டான் மாணிக்கம்.
'கண்டிப்பாக... உடனே ஏற்பாடு செய்...'
எல்லாரும் ஆமோதித்தனர்.
அதன்படி, குடிசைப்பகுதியில் அன்று பொதுக்கூட்டம் நடந்தது. அக்கம் பக்கத்து குடியிருப்பு பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் என நிரம்பியிருந்தது.
அறிவு புகட்டும் வகையில் தெளிவாக பேசினார் ரங்கமணி.
மறைந்திருந்து கேட்டு சுய உணர்வு பெற்றனர் அந்த பகுதி ஆண்கள்.
மாற்றத்தின் விதை, குடிசை பகுதியில் முளைக்கத் துவங்கியது.
கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த மாணிக்கம், ''அஞ்சி அஞ்சி சாகக்கூடாது! பயந்தால் குழந்தைகளும் நடுங்கி கோழையாக மாறும் நிலை ஏற்படும். உரிமைக்காக போராடும் மனநிலையை இழப்பர். கல்வி கிடைக்காமல் அறிவற்ற அடிமையாக வாழும் நிலை ஏற்படும். இவை எல்லாம் நல்லதா...'' என ஆவேசமாக முடித்தான்.
அந்த கூட்டம் பெரும் துணிச்சலை வளர்த்தது.
போதையில் உழன்ற பலர் விழிப்புணர்வு பெற்றனர்.
குடிப்பதை முழுமையாக நிறுத்தா விட்டாலும், மனைவியரை அடிப்பதைப் பெருமளவுக்கு குறைத்திருந்தனர் ஆண்கள்.
தப்பி தவறி வன்முறையில் ஈடுபட்டால், திரண்டு கோஷம் போட்டனர் பெண்கள். இதனால், போதையில் தள்ளாடுவோர் எண்ணிக்கை குறைந்தது. போதை தணிந்த பின் வருவர் அல்லது குறைவாக குடித்திருப்பர்.
பெண்களும், குழந்தைகளும் மனம் வைத்தால் சாதிக்க முடியும் என்பதற்கு, அந்த குடியிருப்பில் நடந்த போராட்டம் எடுத்துக்காட்டாக விளங்கியது.
மாற்றம் மாணிக்கத்துக்கு மேலும் உற்சாகம் தந்தது. பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
போதையில் தள்ளாடிய ஆண்கள் அடங்கி விட்டனர். குடி பழக்கமும் வெகுவாக குறைந்திருந்தது.
குப்பை தொட்டியில் கிடைத்த நகைப்பையை, காவல்துறையில் ஒப்படைத்திருந்த சிறுவன் முருகனுக்கு, பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பணமுடிப்பும், சான்றிதழும் கொடுத்து பாராட்டினார் காவல்துறை தலைவர்.
அந்த தொகையை, வங்கியில் கணக்கு துவங்கி சேமித்தான் முருகன். குப்பை விற்றுச் சம்பாதித்ததில் ஒரு பகுதியை குடும்ப செலவுக்கு தாயாரிடம் கொடுத்தான்; இன்னொரு பகுதியை வங்கியில் சேமித்தான்.
குடிசைப் பகுதியில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை, காவல்துறை தலைவரிடம் விளக்கமாக தெரிவித்தான் மாணிக்கம்.
''மிகவும் மகிழ்ச்சி தம்பி... இன்று நாளிதழ் வாசித்தாயா...''
''இன்னும் இல்லை ஐயா...''
''குடிசைப் பகுதி பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. சிறுவர், சிறுமியர், பெண்களுடன் இணைந்து ஏற்படுத்தியுள்ள புரட்சி பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது...''
விவரமாக சொன்னார் காவல்துறை தலைவர்.
நாளிதழை பிரித்தான் மாணிக்கம்.
பிரமிக்கும் வகையில் பிரசுரமாகி இருந்தது அந்தக் கட்டுரை. பலருக்கு பாடம் கற்பிக்கும் விதமாக அமைந்திருந்தது. அமைதி வழியில் நடந்த போராட்டம் பெற்ற வெற்றி தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தது.
'இந்த புரட்சியை ஏற்படுத்திய சிறுவன், உண்மையாகவே ஒளிமிக்க மாணிக்கம் தான்... இது போன்ற மாணிக்கங்கள், நாடு முழுவதும் பிறக்க வேண்டும்...' என, கட்டுரையை முடித்திருந்தார் ரங்கமணி!
-முற்றும்.

ஜோதிர்லதா கிரிஜா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X