அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2020
00:00

பா-கே
என்னுடைய நீண்ட நாள் வாசகி அவர். கோவையில், அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக உள்ளார். அவ்வப்போது கடிதம் மூலமாகவும், போனிலும் நலம் விசாரிப்பார்.
'கொரோனா' பிரச்னையில் அனைத்தும் முடங்கிவிட, அவருடனான தொடர்பு விட்டு போயிற்று.
சமீபத்தில், ஒருநாள் திடீரென அவரிடமிருந்து போன் அழைப்பு. நலம் விசாரித்தார்.
'கல்லுாரியில் படிக்கும் என் மகளுடன் சென்னை வந்திருக்கிறேன்; சந்திக்க வரலாமா...' என்று கேட்டார்.
வாசகி மட்டும் என்றால் பரவாயில்லை; கல்லுாரி மாணவியான அவர் மகள், நவீன யுவதியாக இருப்பாளே... 'தஸ்ஸு புஸ்ஸு' என்று ஆங்கிலத்தில் ஏதாவது பேசினால், திண்டாட்டமாகி விடுமே... லென்ஸ் மாமாவும் ஆபிசில் இல்லையே... என்று, சற்று தயங்கி, பிறகு, சம்மதித்தேன்.
சொன்ன நேரத்திற்கு சரியாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். தன் மகளை அறிமுகப்படுத்தினார், வாசகி. நான் நினைத்தது போலவே, மாடர்னாக, அதே சமயம் முகத்தில் புத்திசாலி களையுடன் காணப்பட்டார்.
வாசகி எப்போதுமே மூச்சு விடாமல் பேசக் கூடியவர். நீண்ட இடைவெளிக்கு பின் சந்திப்பதால், பல விஷயங்களை படபடவென பேச ஆரம்பித்தார்.
அருகில், தன் அம்மா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அவர் மகள், பொறுக்க முடியாமல், 'ஏம்மா இப்படி தொண தொணக்கிற...' என்று அதட்டினார்.
'அங்கிள்... எங்க அம்மா எப்பவும் இப்படித்தான்... எதிரில் இருக்கிறவங்களை, 'ரம்பம்' போட்டு அறுத்தெடுத்துடுவாங்க...' என்றார்.
'அப்பாடா, தப்பித்தேன்...' என்றேன்.
அப்பாவியாக முகத்தை வைத்து, 'நான் பேசுவது பிடிக்கலையா, மணி...' என்றார், வாசகி.
'இல்லம்மா... நாமே பேசிட்டிருந்தா, மூன்றாவது நபருக்கு, 'போர்' அடிக்கும் தானே...' என்று சமாளித்தேன்.
'சரி... நீ சொல்லு... உன் படிப்பு, எதிர்கால திட்டம் என்ன...' என்று, மகளிடம் விசாரித்தேன்.
'அதெல்லாம் இருக்கட்டும்
அங்கிள்... கொஞ்ச நேரம் ஜாலியா பேசுவோமே...' என்றார்.
அம்மா 8 அடி என்றால், மகள், 16 அடி என்று தீர்மானித்தேன்.
இருவருக்கும் சரியான பதத்தில் காபி கலந்து நீட்ட, வாங்கி ரசித்து குடிக்க ஆரம்பித்தனர்.
'மணி... நீ கலந்து கொடுக்கும் காபிக்காகவே, அடிக்கடி இங்கு வரணும்...' என்றார், வாசகி.
'அங்கிள்... நான் இரண்டு, மூன்று கேள்வி கேட்கிறேன்... பதில் சொல்றீங்களா...'
'ஐயோ... மாட்டிக்கிட்டேன், மாட்டிக்கிட்டேன்...' என்ற படபடப்பு மனதிற்குள் ஓடியது.
அவர் கேட்ட கேள்விகள்...
1. வடபழநியிலிருந்து ஒரு பஸ், காலை, 8:00 மணிக்கு கிளம்பி, மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், மாம்பலம் நோக்கி செல்கிறது. காலை, 8:30 மணிக்கு மற்றொரு பஸ், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் மாம்பலம் நோக்கிச் செல்கிறது. எந்த பஸ் முன்னால் போகும்?
2. ஒரு கிளிக்கு, மூன்று குஞ்சுகள். அன்று, தாய் கிளி வெளியே போக முடியாதபடி அதன் கால்களை கட்டிக்கொண்டு அடம் பிடித்தன, குஞ்சுகள்.
'சரி, கொஞ்ச நேரம் ரயில் விளையாட்டு விளையாடலாம். அப்புறமா நான் போறேன். நீங்க ஒருவர் பின்னால் ஒருவர் என் வாலை பிடிச்சுக்கங்க...' என்று, தாய் கிளி சொல்ல, ஆர்வமாக சிறகை அடித்துக் கொண்டன, குஞ்சுகள்.
ரயில் விளையாட்டு ஆரம்பமானது. 'எனக்கு பின்னாலே மூன்று பெட்டிகள் வருகின்றன...' என்று சொல்லி, முதலாவது நின்ற குஞ்சிடம், 'உனக்கு பின் எத்தனை பெட்டிகள்' என்று கேட்டது, தாய் கிளி.
'எனக்கு பின்னாலே மூன்று பெட்டிகள் வருகின்றன...' என்றது, முதல் குஞ்சு.
இரண்டாவது குஞ்சும், 'எனக்கு பின்னாலே மூன்று பெட்டிகள் வருகின்றன...' என்றது. மூன்றாவது குஞ்சும் அப்படியே சொன்னது.

ஏன், எப்படி?
3. சாக்கு மூட்டையுடன் வேகமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான், பாலு. அவனை தடுத்து நிறுத்தி, 'எங்கே இவ்வளவு வேகமாக போகிறாய்...' என்று கேட்டான், நண்பன் முரளி.
'வயல் காட்டுக்கு கிளம்பின என் அப்பா, முக்கியமானதை மறந்துட்டார். அதை கொடுக்கப் போறேன்...' என்றான், பாலு.
'அப்படியா, அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...' என்று கேட்டான், முரளி.
'ராமன் கையில் இருப்பதன் முதல் எழுத்தையும், அனுமன் கையில் இருப்பதன் கடைசி எழுத்தையும் எடுத்துக்கோ, அதோடு அரிசிக்கு முந்திய நிலையை சேர்த்துக்க. அதுதான் பையில் இருக்கு...' என்று சொல்லிச் சென்றான், பாலு.
அவன் கொண்டு சென்ற பொருள் என்ன?
மூன்றுக்குமே எனக்கு பதில் தெரியவில்லை. நான் விழிப்பதை கண்டவர், பதிலையும் அவரே கூறினார்.
'அவளுக்கு அறிவுரை சொல்வீங்கன்னு பார்த்தா...' என்று இழுத்தாள், வாசகி.
'கவலையேபடாதீங்க, நாய் எதுக்கு வாலாட்டும், மாடு எதுக்கு வாலை துாக்கும்... என்று இக்கால பெண்களுக்கு நன்றாகவே தெரியும்...' என்று கூறி, வழியனுப்பி வைத்தேன்.
மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிகிறதா... தெரியவில்லை என்றால், பக்கத்தை திருப்பி பார்த்துக் கொள்ளுங்கள்.


நம் நாளிதழில் வெளியாகும் குறுக்கெழுத்துப் புதிர்களைப் போடுவதில், வாசகர்களுக்கு அலாதி பிரியம் என, ஆசிரியர் அடிக்கடி சொல்வார். 'நோட்' பண்ணிக்குங்க... அலாதி!
அன்றைய நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் வெளியாகி இருந்த புதிரில், 'பாதை'
என, 'க்ளூ' கொடுக்கப்பட்ட சொல் என்னவெனப் பார்த்தேன். 'ரஸ்தா' என்று இருந்தது. 'இந்த சொல், தமிழ்ச் சொல் போல இல்லையே...' என, மண்டைக்குள் நண்டு குடைய, லென்சிடம் கேட்டேன். 'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை...' என்ற அர்த்தத்தில், என்னை முறைத்தார்.
கூகுளில் தேடினேன். ஆச்சரியம்! தமிழில் கலந்துள்ள வேறு மொழிச் சொற்கள் என, பெரிய பட்டியலே கிடைத்தது.
இவை, 'திசைச் சொற்கள்' என அழைக்கப்படுகின்றன.
இதில், ரஸ்தா என்ற சொல், பாரசீக மொழியிலிருந்து தமிழில் படர்ந்தது எனச் சொல்லப்படுகிறது. பெரும்பாதை என்ற சொல், பாரசீக மொழியில், ரஸ்தா என்று சொல்லப்படுகிறது.
நாம் பயன்படுத்தும் கீழ்க்கண்ட சொற்களும், பாரசீகத்திலிருந்து தமிழுக்கு பயணப்பட்டுள்ளன:
அந்தஸ்து, அலாதி, கம்மி, கிஸ்தி, குமாஸ்தா, சந்தா, சர்க்கரை, சுமார், தயார், பஞ்சாயத்து, பாங்கு, புகார், வாபஸ், ஜாமீன், ஷோக்.
சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளிலிருந்தும் சொற்கள் நமக்கு வந்துள்ளன. அலமாரி, ஆஸ்பத்திரி, மேஜை ஆகியவை எந்த மொழி தெரியுமா? போர்ச்சுகீஸ்!

விடை:
1. இரண்டு பஸ்களுமே முன்னால் தான் போகும்.
2. ஏனென்றால், அவை சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளைகள்.
3. ராமன் கையில் இருப்பது, வில்; அனுமன் கையில் இருப்பது, கதை; அரிசிக்கு முந்தைய நிலை, நெல். ஆக, பாலு எடுத்துச் சென்றது, விதை நெல்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswari - . Madurai,இந்தியா
02-நவ-202023:52:27 IST Report Abuse
Eswari அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும்,"சுவாரஸ்யம்" என்பதை பா. கே. ப. பகுதியில் இருந்து கற்றுக்கொண்டேன்.
Rate this:
Cancel
Singanan Ramkumar - Port Louis,மொரிஷியஸ்
26-அக்-202016:43:43 IST Report Abuse
Singanan Ramkumar ஒரு வேலை எல்லா கிளிகளும் வட்டமா நின்னு ரயில் விளையாட்டு விளையாண்டு இருக்குமோ ???
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
26-அக்-202005:13:22 IST Report Abuse
V.B.RAM நாய் எதுக்கு வாலாட்டும், ??? சரி மாடு எதுக்கு வாலை துாக்கும்? அத அந்த பொண்ணுக்கு தெரியுமா? எனக்கு தெரியவில்லை. யாரவது சொல்லுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X