ஆசிர்வதிக்கப்பட்ட வடு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2020
00:00

'வாழ்த்துக்கள், கார்த்தி...'
இந்த வார்த்தைகளுக்காக காத்திருந்தேன்.
ஒரு இனிய மாலை நேரம். எங்கள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் கூடியிருந்தனர். இன்று ஓய்வு பெறுகிறார், எங்கள் ஜெனரல் மேனேஜர். அடுத்த ஜெனரல் மேனேஜர் யார் என்று முடிவு செய்ய, 'போர்டு மீட்டிங்' நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் முடிவு தெரிந்து விடும்.
என்னையும் சேர்த்து மூன்று பேர், போட்டியில் இருக்கிறோம்.
இதோ, 'மீட்டிங்' முடிந்து, வந்து விட்டனர், இயக்குனர்கள். 50 பேர் குழுமியிருந்த அந்த இடம், சட்டென அமைதியானது.
''வாழ்த்துக்கள், மிஸ்டர் கார்த்தி.''
அமைதி கலைந்து, கை தட்டியது கூட்டம்; எனக்குள் ஆனந்தம் பெருக்கெடுத்தது.
எஸ்... எஸ்... நான் தான், நானே தான். அடுத்த ஜெனரல் மேனேஜர்... இலக்கை எட்டி விட்டேன். என் நீண்ட நாள் காயத்தில், இந்த பதவி, மருந்து தடவியது.
'நீ, உருப்பட மாட்டே...' என, சாபமிட்ட அவரின் கோப முகம் என்னுள் தோன்றியது.
அவரின் சாபம் பலிக்கவில்லை. நான் உருப்பட்டது மட்டுமின்றி, பெரிய பதவிக்கும் வந்து விட்டேன். எனக்குள் எக்காளம். அளவில்லா மகிழ்ச்சியை சற்று மறைத்தபடி, சிறு முறுவலுடன் கம்பீரமாக எழுந்து நின்று, கை கூப்பினேன்.
அனைவர் பார்வையும் என்னை நோக்கி திரும்பியது. சில பார்வையில், பாராட்டு; சிலதில் பொறாமை. இருக்கத்தானே செய்யும்.
ஆரத்தி தட்டுடன், வீட்டில் என்னை வரவேற்றாள், மனைவி பானு. விருந்தினர்களும், நண்பர்களும் வந்து போன அமர்க்களம் அடங்க, இரவு, 11:00 மணி ஆகிவிட்டது.
தனிமையில் என்னை கட்டிப்பிடித்தபடி, ''சாதிச்சுட்டீங்க, திருப்திதானே... இனியாவது, ராத்திரிகளில் நிம்மதியாய் துாங்குவீங்களா...'' என்றாள், பானு.
அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி, ''முக்கிய காரியம் ஒண்ணு இருக்கு, கிராமத்திலே. அதை முடிக்கணும். அப்புறம் தான் துாக்கம் வரும்,'' என்றேன்.
துாக்கம் வராமல் புரண்டேன். கடிகாரத்தை பார்த்தேன், அதிகாலை, 3:00 மணி.
சிறியதாய் வாய் திறந்து, குழந்தை போல துாங்கிக் கொண்டிருந்தாள், பானு.
'நீ, உருப்பட மாட்டே...'
என் காதுக்குள் எப்போதும் கேட்கும் குரல், இப்போதும் ஒலித்தது.
கணக்கு வாத்தியாரின் கோப முகம் மனதுக்குள் எழுந்தது. பழைய நிகழ்வு மனதில் ஓடியது.
அப்போது, நான், ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். மீசை முளைக்க ஆரம்பித்த விடலைப் பருவம். 13 - 14 வயது என்பது, தனக்கு எல்லாம் தெரியும் என்ற அறியாமைப் பருவம் அல்லவா... தேவையில்லாத ரோஷமும், அதன் விளைவாய் மூர்க்கமும் கொண்ட பருவம்.
சிலர், படிப்பிலும், இசையிலும் அல்லது வேறு ஏதோ கலையிலோ கவனம் செலுத்தி, அந்த விடலை பருவத்தை வென்று விடுகின்றனர். என்னைப் போல பலர், புரியாத கர்வத்துடன் வீழ்ந்து விடுகின்றனர்.
எங்கள் வகுப்பில், மல்லிகா என்ற பெண்ணும் படித்தாள்; அழகாய் இருப்பாள்.
யோசித்து பார்த்தால், அந்த வயதில் எல்லா பெண்களுமே அழகு தான். பசங்க தான் அந்த வயதில், பாதி மீசை முளைத்தும் முளைக்காமலும், பரு வேறு முகத்தில் வந்து, பார்க்க சகிக்க மாட்டார்கள்.
ஏனோ அந்த பெண் மீது, எனக்கு திடீர் காதல் வந்து விட்டது.
உசுப்பேற்றுவதற்கென்றே எல்லா வகுப்பிலும், எல்லா காலங்களிலும் கூட படிக்கும் நண்பர்கள் இருப்பரே... எனக்கும் இருந்தனர்; என்னையும் துாண்டி விட்டனர்.
காதல் கடிதம் எழுத முடிவு செய்தேன். இதற்கென்றே, ஒரு தலை ராகம் படத்தை, நான்கு ஷோ தொடர்ந்து பார்த்தேன். எனக்குள் கவிதை பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.
மீசை முளைக்காத, டி.ராஜேந்தர் ஆனேன். ஒரு பக்க அளவு கவிதை எழுதி, நான்கு மூலையிலும் மஞ்சள் தடவி (இது, அடுத்த பெஞ்ச் அம்பியின் யோசனை) மல்லிகாவிடம் சமர்ப்பித்தேன். அதற்கு பிறகு தான் தெரிந்தது, என்னை பிடித்தது கவிதை அல்ல, ஏழரை என்று.
நேரே சென்று, அந்த காதல் மடலை, கணக்கு ஆசிரியரிடம் சமர்ப்பித்து விட்டாள், மல்லிகா.
ஒற்றன் மூலம் செய்தி வந்தது. வகுப்புக்குள் வந்தார், ஆசிரியர். அமைதியாய் எல்லாரையும் பார்த்தார். என்னை தவிர, மற்ற எல்லாரையும், 'நீ படிச்சு என்னவாக விரும்பறே...' என்று கேட்டார்.
மாணவர்கள், பதில் கூறினர்.
நேரம் ஆக ஆக, எனக்குள் உதறல் கூடிக்கொண்டே போனது.
'நல்லது. நீங்க எல்லாரும் டாக்டர், வக்கீல், ஆசிரியர், ராணுவம்ன்னு, உங்க வருங்கால கனவை சொன்னீங்க... ஆனால், நம் வகுப்பிலே ஒரு மகாத்மா, கணவர் பதவிக்கு ஆசைப்படறார். அதுவும் இந்த சின்ன வயசிலேயே... அவர் யாருன்னு சொல்லப் போறேன், எல்லாரும் பலமாய் கை தட்டணும். சிவகார்த்திகேயன், எழுந்திரு...'
கணக்கு வாத்தியார் சொல்லவும், அவமானத்துடன் எழுந்து நின்றேன்.
வகுப்பே சிரித்தது.
'படிக்கிற வயசுலே உனக்கு காதல் கேட்குதா...' என்று சொல்லி, குச்சியால் என்னை அடித்து துவைத்து விட்டார், ஆசிரியர்.
அன்று இரவு முழுவதும் துாங்கவில்லை. வகுப்பில் கேட்ட சிரிப்பு சத்தம், எனக்குள் நெருப்பாய் சுட்டது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. மறுநாள், திங்கள். என்னை சுட்ட நெருப்பு, கணக்கு வாத்தியாரையும் சுட்டது.
காலையில் பள்ளி திறந்த ஒரு மணி நேரத்திற்குள், விஷயம் பரவி அமர்க்களப்பட்டது. 'கிசுகிசு'வென ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர்.
'என்னடா விஷயம்...' என, அப்பாவியாய் கேட்டேன், வகுப்பு தோழனிடம்.
'நீ, 'டாய்லெட்' பக்கம் போகலையா... யாரோ அங்க சுவத்துல, கணக்கு வாத்தியாரையும், டவுன் டீச்சர் பத்தியும் அசிங்க அசிங்கமாய் எழுதியிருக்காங்க...' என்றான்.
மதியம் சாப்பாட்டு மணி அடிக்கும் முன், என்னை, தலைமை ஆசிரியர் கூப்பிடுவதாய் சொல்ல, அவர் அறைக்கு சென்றேன்.
உள்ளே சென்றதும், 'பளார்' என்று கன்னத்தில் அறை விழுந்தது. கன்னத்தை தடவியபடி சுற்றி பார்த்தேன். ஓரமாய் நின்று அழுது கொண்டிருந்தார், டவுன் டீச்சர். ரவுத்திர முகத்துடன், எதிரே நின்று கொண்டிருந்தார், கணக்கு வாத்தியார்.
அறைந்த தலைமை ஆசிரியர், கையை ஓங்கியபடி என்னை முறைத்தார்.
துாரமாய் இருந்த தமிழ் ஆசிரியர், 'சார்... இவன் தான், 'கணக்கு'ன்னு எழுதச் சொன்னால், 'கனக்கு'ன்னு எழுதுவான். எப்பவுமே மூணு சுழி அவனுக்கு வரவே வராது...'
நின்று கொன்று விட்டது, தமிழ். என் தவறு, என்னை காட்டிக் கொடுத்து விட்டது. வசமாய் மாட்டிக்கொண்டேன்.
என் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். பள்ளியை விட்டு என்னை நீக்கும் உத்தரவு வந்தது.
பள்ளியை விட்டு கிளம்பும்போது, 'படிப்பு சொல்லித்தரும் குரு மேலேயே களங்கம் சொன்ன நீ, வாழ்க்கையில உருப்படவே மாட்டாய். என் வயிறு எரிஞ்சு சொல்றேன்...' என, என் முன்னே வந்து சாபமிட்டார், கணக்கு வாத்தியார்.
அந்த சமயத்தில், அவர் சாபம் என்னை பெரிதாய் பாதிக்கவில்லை.
அப்பாவின் பதவி மூலம், 'போர்டிங் ஸ்கூல்' ஒன்றில், என் படிப்பு தொடர்ந்தது. அடுத்த ஆண்டு, 10வது பரிட்சையில் நான் பெயிலாகி விட்டேன்.
'குருவோட சாபம் தான் இது. கணக்கு வாத்தியாரிடம் போய் மன்னிப்பு கேள்...' என புலம்பினாள், அம்மா.
அப்பாவும் வற்புறுத்தினார். நான் மறுத்தேன்.
எனது பெயர் சரியில்லை என்று சொல்லி, 'நியூமராலஜி' படி, 'சிவகார்த்திகேயன்' என்ற பெயரை, 'கார்த்தி சிவா' என்று மாற்றி விட்டார், என் மாமா.
அது சுருங்கி, நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில், 'கார்த்தி' ஆகிவிட்டது.
அப்பாவின் ஆதரவால் மீண்டும் அதே பள்ளியில், அதே வகுப்பில் சேர்ந்தேன். சுமாராக தான் படித்தேன். சில மாதங்கள் ஆன பிறகு, திடீரென எனக்குள் ஒரு தீவிர எண்ணம் உருவானது. படித்து, உருப்பட வேண்டும் என்ற வெறி தோன்றியது. அதன் மூலம் கணக்கு வாத்தியார் முகத்தில், கரி பூச வேண்டும் என்ற வெறி.
அந்த வெறி, இதோ இன்று, ஜெனரல் மேனேஜர் என்ற பெரிய பதவி வரை, என்னை அழைத்து வந்து விட்டது.
ஊருக்கு சென்று, கணக்கு வாத்தியாரை சந்தித்து, என் வெற்றியால் அவர் முகத்தில் அறைய வேண்டும் என்ற, நெடு நாளைய கனவு நிறைவேறப் போகிறது. அறையிலிருந்த நிலை கண்ணாடியில் என் உருவத்தை பார்த்தேன். கம்பீரமாய் காட்டியது.
'சாதிச்சுட்டேடா...' கட்டை விரலை உயர்த்தி, என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.
நான் பயணம் செய்த கார், எங்கள் ஊருக்குள் நுழைந்தது. கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த ஊருக்குள் வருகிறேன். முதலில் அவமானம். பிறகு, தயக்கம். என்னை ஊருக்குள் வரவிடாமல் தடுத்தது. கொஞ்ச காலத்தில், என் பெற்றோரும், நான் இருக்கும் இடத்திற்கே வந்துவிட, இங்கு வரும் அவசியம் இல்லாமல் போய் விட்டது.
பார்த்ததும் தெரிந்தது, ஊர், பெரியதாய் ஒன்றும் மாறிவிடவில்லை என்று. எட்டாவது வரை படித்த பள்ளிக்கு சென்றேன்.
கணக்கு வாத்தியாரின் சொந்த ஊர் இது தான். நில புலம் எல்லாம் அவருக்கு இங்கு உண்டு. அதனால், இங்கு தான் இருப்பார்.
''சார்... இங்கு கணக்கு வாத்தியார் சம்பந்தம், அவரை பார்க்கணுமே...'' என்றேன்.
'அவர் ஓய்வுபெற்று, 3 - 4 ஆண்டுகளாச்சே... அதே பழைய வீட்டுல தான் இருக்கார்; வீடு தெரியுமா?' என்றனர், பள்ளி அலுவலகத்தில்.
''தெரியும்,'' என தலையாட்டி, அவர் வீடு நோக்கி சென்றேன்.
அதே போல தான் இருந்தது, அவர் வீடு. வாசலில் உள்ள திண்ணைக்கு, முன்பு வேலி கிடையாது; இப்போது மூங்கில் வேலி போடப்பட்டிருந்தது. வாசலில், தாமரைப்பூ கோலம் போடப்பட்டிருந்தது. அப்படியானால், உள்ளே ஆள் இருக்கின்றனர்.
''சார்,'' என்று, குரல் கொடுத்தேன்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் எட்டிப் பார்த்தார். 'அவர் மனைவியோ?'
''யாரு?''
''கணக்கு வாத்தியார் இருக்காரா?''
''சார், பூஜையிலே இருக்கார். உள்ளே வந்து உட்காருங்க.''
நடுவில் முற்றமும், அதைச் சுற்றி கூடமும் கொண்ட அந்தக் கால வீடு. சேரில் அமர்ந்தேன்.
''குடிக்க தண்ணி வேணுமா... இதோ அஞ்சு நிமிஷத்துல, பூஜை முடிஞ்சு வந்துடுவார்,'' என்று உபசரித்தார், அப்பெண்மணி.
''இல்லை, வேண்டாம்,'' என்றேன்.
இன்னும் சில நிமிடம் தான். அவர் வந்தவுடன், என், 'விசிட்டிங் கார்டு' எடுத்து நீட்டி, 'உங்கள் பழைய மாணவன்...' என்று சொல்ல வேண்டும். நிச்சயம் பெருமைப்படுவார்.
என்னை புரிந்து கொண்டவுடன், 'உருப்பட்டுட்டேன்... உங்கள் சாபம் பலிக்கவில்லை...' என்று சொல்லி, சிரிக்க வேண்டும்.
அப்போது, அவர் முகம் போகும் போக்கை கண்டு ஆனந்தப்பட வேண்டும். என் இத்தனை ஆண்டு தவம், நிறைவேறப்போகும் தருணம் இது.
அதோ வந்து விட்டார். வயதின் மூப்பு தெரிந்தாலும், முகத்தில் அடையாளம் மாறவில்லை.
''யாரு நீங்க?'' என்று கேட்டார்.
''உங்க பழைய மாணவன்,'' என்றேன்.
''யாரு, சிவகார்த்திகேயனா?'' என்று பரபரப்பாய் வினவினார்.
''மறக்கவில்லையா... ஏன், அந்த மாணவன் மட்டும் என்ன ஸ்பெஷல்?'' என்று கேட்டேன்.
அவர் தலை குனிந்தது.
''தப்பு பண்ணிட்டேன். ஒரு ஆசிரியர் பண்ணக்கூடாததை, அந்த பையனுக்கு பண்ணிட்டேன்,'' என்றார், நடுங்கும் குரலில்.
அவர் பார்வை, சுவரை வெறித்தது.
''சின்ன வயசுல பசங்க, கொஞ்சம் விடலைத்தனமாத்தான் இருப்பாங்க... அந்த புரியாத வயசுலே அவங்க தப்பு பண்றது சகஜம் தான். ஆனால், ஒரு ஆசிரியரான நான், அவனை நல்லவிதமாய் திருத்தறதுக்கு பதிலாய் தண்டிச்சுட்டேன்.
''உருப்படமாட்டேன்னு சாபம் வேறு கொடுத்துட்டேன். என் கோபம் நியாயமானதுன்னாலும், ஒரு ஆசிரியராய், நான் பண்ணினது தவறு தான். 'வாத்தியார் ஐயா, உங்க சாபம் பலிச்சுடுச்சு... என் பையன் பெயிலாயிட்டான்'னு, சொல்லி, அவன் அம்மா அழுத போதுதான், நான் பாவின்னு உணர்ந்தேன்.
''அன்னிக்கு பூஜை செய்ய ஆரம்பிச்சேன் அவனுக்காக. அந்த பையன் நல்லா படிச்சு, உசந்த நிலைக்கு வரணும்ன்னு, பகவான் காலை புடிச்சேன். என் சாபம் பலிக்க கூடாதுன்னு, வேண்டிக்கிட்டேன். இன்னிக்கு வரை, என் பிரார்த்தனை அவனுக்காக மட்டும் தான்...'' கலங்கிய குரலில் சொல்லி முடித்தவரை, கண்ணில் நீர் வழிய பார்த்தேன்.
எனக்கு ஞாபகம் வந்தது. சோம்பேறியாய் கிடந்த எனக்குள், திடீரென, 'படித்து உருப்பட வேண்டும்...' என்ற வெறி வந்ததன் காரணம் புரிந்தது. இவரின் பூஜை மற்றும் பிரார்த்தனை தான் எனக்குள் ஒரு வேகத்தை கொடுத்திருக்கிறது.
ஏன், இப்போது மூன்று பேர், ஜெனரல் மேனேஜர் பதவிக்கு போட்டியிட்டபோது கூட, நாங்கள் மூவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்ற நிலையில், எனக்கு அது கிடைத்தது கூட, இவரின் பிரார்த்தனையால் தான் என்று விளங்கியது.
பழி வாங்க வந்த நான், என் வெற்றியை சொல்லி, இவரை தோற்கடிக்க வந்து, தோற்றுப் போனது புரிந்தது. ஆனால், இருவருக்குமே மகிழ்ச்சி தரும் தோல்வி இது.
முழு சரணாகதியுடன் விழுந்தேன், வாத்தியார் காலில்.

என். கிருஷ்ணா
சொந்த ஊர்: திருச்சி - திருவானைக்கோயில். 1990 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறேன். 2005ம் ஆண்டிற்கு பிறகு, கதைகள் எழுதவில்லை. 'வாரமலர்' இதழில் சிறுகதை போட்டி அறிவிப்பு கண்டு, நான் எழுதிய அனுப்பிய கதைக்கு, ஆறுதல் பரிசு கிடைத்தது, பெரும் ஊக்கமாக உள்ளது. எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், 'தினமலர்' பத்திரிகைக்கு இணை எதுவும் இல்லை. என்னுள் இருந்த எழுத்தாளனை மீட்டு, புனர்ஜென்மம் கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswari - . Madurai,இந்தியா
01-நவ-202011:52:23 IST Report Abuse
Eswari ஆசிரியர்கள் எப்போதும் அவர்கள் கடமையிலிருந்து தவறியது இல்லை
Rate this:
Cancel
Subash Chandra Bose - Madurai,இந்தியா
01-நவ-202000:38:56 IST Report Abuse
Subash Chandra Bose Sema strory, sema screen play... Sema turnings..... Simply awesome..... Enjoyed this story.... Thanks
Rate this:
Cancel
Eswari - . Madurai,இந்தியா
31-அக்-202023:34:56 IST Report Abuse
Eswari சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X