இதுதான் பாதை, இதுதான் பயணம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2020
00:00

விடைத்தாள்களைத் திருத்தி, கட்டி வைத்தாள், வினிதா.
மனதில் பெருமித உணர்வு, முகத்தில் புன்னகை...
சொல்லிக் கொடுத்தது போய் சேர்ந்திருக்கிறது. ஒரு மாணவனும் சோடை போகவில்லை. அறிவியல் ஆசிரியராக அவள், தன் பணியை மிகச் சரியாக செய்ய ஆரம்பித்து விட்டாள்.
அப்பாவும் - அம்மாவும் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர். அப்போதே அவளுக்குத் தெரிந்து விட்டது... ஏதோ பஞ்சாயத்து இருக்கிறது, அவளிடம் தீர்ப்புக்காக வந்திருக்கின்றனர்.
சிரித்தபடியே, ''நான் ரெடி... உங்க பிராது என்ன, ஆரம்பிக்கலாம்,'' என்றாள்.
புன்னகைத்தார், அப்பா.
''வினிம்மா... இது, ரொம்ப முக்கியமான வழக்கு. உன் திருமணம் பற்றியது. நீ சொன்னதுபோல, எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. நல்ல டீச்சர் என்று பேரெடுத்து, உன் கனவுகளை நிறைவேற்ற ஆரம்பித்து விட்டாய்...''
''சட்டுன்னு விஷயத்துக்கு வராம, ஏன் சுத்தி வளைச்சுகிட்டு... வினி... மூணு மாசத்துல, உனக்கு திருமணத்தை முடிச்சுடலாம்ன்னு இருக்கோம். நீ கேட்ட, 'டயம்' முடிஞ்சாச்சு. திவாகர், சந்திரன், இந்த இரண்டு பேர்ல ஒருத்தந்தான் இந்த வீட்டு மாப்பிள்ளை. உனக்கே தெரிஞ்ச விஷயம் தான். அந்த ஒருத்தன் யார்ங்கிறதை சொல்லணும் நீ,'' என்றாள், அம்மா.
''ஓஹோ... இது தான் வழக்கா... எனக்கு, ஒரே ஒரு வாரம், 'டயம்' வேணும்,'' என்றாள்.
''ஏன்... இன்னும் எதுக்கு ஒரு வாரம். என் உயிர்த்தோழி சுலோச்சனாவோட, மகன் திவாகர். கல்பாக்கத்துல நல்ல வேலை; ஓவியம் வரையறான், கவிதை கட்டுரைன்னு, முகநுால்ல நல்ல பேர்; வசதியான வாழ்க்கை. சின்ன வயசுல இருந்து உங்க ரெண்டு பேருக்கும் நட்பு இருக்கு. இதுல யோசிக்க என்ன இருக்கு,'' என்று, படபடத்தாள், அம்மா.
''உன் அம்மாகிட்ட இதான் பிரச்னை, வினி... எப்படி அழுத்தமா திணிக்கிறா பாரு. ஆனா, நான் அப்படி இல்லம்மா. சந்திரன், என் நண்பனோட மகன்னாலும், சின்ன வயசுல இருந்தே உனக்குத் தெரியும்னாலும், உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்...
''அவன், 'டீம் லீடரா' இருக்கான். பெரிய கம்பெனியில, கை நிறைய சம்பளம். தனியா, 'ஸ்டார்ட் அப்' துவங்கணும்ன்னு, கனவு வேற... 'நீர்த்துளி'ன்னு ஒரு அமைப்புல இணைஞ்சு, சமுதாயப் பணிகள் எல்லாம் செய்யறான்,'' என்றார், அப்பா.
''சரி சரி சரி...'' என்று எழுந்து, அவர்கள் நடுவில் உட்கார்ந்து, இருவரின் கைகளையும் பற்றியபடி, அவள் சொன்னாள்...
''இந்த மாதிரி அன்புக்கு, நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கேன். மகிழ்ச்சியா, அமைதியா, வசதியா வாழணும். இதுதானே உங்க ரெண்டு பேரோட ஆசையும். தெரியும்பா... அம்மாக்கும் அதை தவிர வேற எந்த சிந்தனையும் இல்லே...
''வர்ற வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சி இருக்கு. ரத்த தானம், கலை, நாடகம், பேச்சுப் போட்டி, சமையல், இலக்கியம்ன்னு, எல்லாமே இருக்கிற மாதிரி. எங்க கல்லுாரி தான், முக்கியமான ஸ்பான்சர்...
''திவாகர், சந்திரன் ரெண்டு பேரையும், 'இன்வைட்' பண்ணியிருக்கேன். சந்திக்க, பேச, புரிஞ்சுக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். என்னால ஒரு முடிவுக்கும் வர முடியும்... சரியா அம்மா, அப்பா,'' என்றாள்.
இருவரும், மலர்ச்சியுடன் தலையாட்டினர்.
கடினமான வேலைகளைச் செய்ய, சோம்பேறியான ஆட்களை தேர்வு செய்கிறேன். ஏனென்றால், அவர்களால் தான், அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழிகளைக் கண்டுபிடிக்க முடியும்...
- பில்கேட்ஸ் சொன்னது, நினைவில் வந்து கொண்டே இருந்தது, அவளுக்கு.
திருமணம்... இதுவும் கடினமான ஒன்று தானே. அவள், சுலபமாகத் தேர்ந்துவிட நினைக்கிறாளா... முடியுமா?
உண்மையில் இருவருமே நல்லவர்கள் தான். பார்த்து மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனாலும், சிறு வயது நினைவுகள் மறக்கவில்லை. ஜோடிப் புறா, கண்ணாமூச்சி, 'கேரம்போர்ட்' என்று விளையாடும் போதெல்லாம், அவளுக்காக விட்டுக் கொடுப்பர்; ஆனால், அவளுக்கு அது பிடிக்காது.
'சமமான வாய்ப்பு கொடுத்தால் போதும்; சலுகை தேவையில்லை; ஆனால், ஏமாற்று இருக்கக் கூடாது...' என்பாள்.
சிரித்த முகத்துடன் தோழமையாக இருப்பான், திவாகர். எப்போதும் ஆழ்ந்த முகபாவத்துடன் கடினமாகவே இருப்பான், சந்திரன். இருவரின் நட்பும், உண்மையிலேயே அவளுக்கு விருப்பமாகத்தான் இருந்தது. வயது ஏற ஏற, குடும்பங்கள், வேலை வாய்ப்பு என்று பிரிந்து போயினர்.
மெல்ல மெல்ல நெருக்கம் குறைந்தாலும், திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர், பெரியவர்கள். வினி, யாரை தேர்ந்தெடுத் தாலும் அதில் மிக்க மகிழ்ச்சி தான் என்று சொல்லிக் கொண்டே இருந்தனர்.
அவளுக்கும் அதில் சம்மதம் தான். பெண், இன்னும் சுமையாகவே இருக்கிற காலம் இது. ஆனால், அவளுக்கு பரிபூரண சுதந்திரம், முழுமையான உரிமை, கல்வியும், அறிவும் கொடுத்த தன்னம்பிக்கை. அதனாலேயே, பொறுப்பும் அதிகமாகி விடுகிறது.
வாசலிலேயே காத்திருந்தனர், அப்பாவும் - அம்மாவும். கதவைத் திறந்து விட்டார், அப்பா. ஸ்கூட்டியின் போர்வையைக் கொண்டு வந்தாள், அம்மா. காற்றில் ஆடிக் கொண்டிருந்த இருவாட்சியை செல்லமாகக் கையால் வருடியபடி, உள்ளே வந்தாள்.
நிகழ்வுகளின் இனிமை இன்னும் நெஞ்சிலேயே இருந்தது. தோழியரை சந்தித்தது, உரையாடியது, உண்டது, சிரித்தது என்று எல்லாமே பிடித்தது. முகமூடியற்ற நட்புகள், நாம் நாமாக இருக்க முடிகிற இயல்பு, அடுத்தவர் சொல்வதைக் கேட்கிற அக்கறை என்று, அழகான காலம் அந்த சிறு காலம்.
குளித்து, உடைமாற்றி உட்கார்ந்தாள்.
''உனக்குப் பிடிச்ச சுக்குக் காபி... உனக்காக அப்பா, ராத்திரி புளி உப்புமா பண்றாராம்... சொல்லு,'' என்று வந்தாள், அம்மா.
''நிகழ்ச்சி நல்லா போச்சா, வினி?'' என்றபடி உட்கார்ந்தார், அப்பா.
''எல்லாம் ரொம்ப அருமையா இருந்தது. வரவே மனசில்லே. பட்டாம்பூச்சிகள் பறக்கிற மாதிரி நாங்களும் பறக்கிறோமோன்னு கூட இருந்தது. திவாகர், சந்திரன் ரெண்டு பேரும் வந்தனர். எல்லாரும் சேர்ந்தே இருந்தோம்,'' என்றாள்.
சுக்குக் காபியின் லேசான காரம், நாக்கை ருசிப்படுத்தியது.
''வெரி குட்... உன்னால முடிவெடுக்க முடிந்தது; இல்லையாம்மா?''
''ஆமாம்பா... திவாகர், நல்லா மாறியிருக்கார், பழைய இனிமை இல்ல... எப்பவும் யோசிக்கிறார். வேலை மேலே ஆயிரம் குறைகள் சொல்றார். கவுன்சிலர் ஆகணுமாம். சமூகம் மேல ரொம்ப கோபம் இருக்கு. யாருக்கும் சுய ஒழுக்கம், நேர்மை, உண்மைத் தன்மை இல்லேன்னு சிடுசிடுக்கிறார்.
''அரசியல்ல இறங்கி, ஒரு கலக்கு கலக்கணுமாம். ரோடு, கட்டடம், அரசு ஆஸ்பத்திரி, மருந்து மற்றும், 'லைப்ரரி கான்டிராக்ட்'ன்னு எடுத்து, கல்லா கட்டணுமாம்... இதே ரீதிலதான் பேசறார், நடந்துக்கறார். அதிர்ச்சியா இருந்தது, எனக்கு.''
அம்மாவின் முகம் கறுத்தது.
''அப்படியா, மோசம் தான்... சரி, சந்திரன் எப்படி இருக்கான்?'' என்றார், அப்பா.
''ஜெம், அப்பா... உண்மையிலேயே ஒரு குறை தெரியல எனக்கு... கண்ணியமான பேச்சு, பெண்கள்கிட்ட மரியாதை; எதுலயும் பரிவு, அக்கறை. எல்லாரையும் நேசிக்கிற பெரிய மனசு. நிறைய பேருக்கு அவரை தெரிஞ்சிருக்கு. 'சோஷியல் ஒர்க்!' முழுமையான மனிதர்பா, சந்திரன்... சந்தேகமே இல்ல.''
சிறுவன் போல முகம் மலர்ந்தார், அப்பா. அம்மாவை ஒரு மகாராஜா போல பார்த்து, பெருமையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். 'பாத்தியா, என் செலக் ஷன்' என்று கேட்காமல், கேட்டார்.
''சோ... நான், திவாகரை திருமணம் பண்ணிக்கறதுன்னு, முடிவு பண்ணியிருக்கேன், அப்பா... சரியா அம்மா?'' என்றாள், வினிதா.
'என்ன... என்ன..' என்றனர், இருவரும்; பதறினாள், அம்மா.
''வேண்டாம்டி கண்ணு... அவந்தான் அரசியல்வாதி மாதிரி, தரமில்லாத மனிதன்னு சொல்றியே... அப்புறம் எதுக்குடி அவன். நான் ஒண்ணும் உன்னை தப்பாவே நினைக்க மாட்டேன், வினி... எனக்கு, உன்னை விடவா சுலோச்சனா முக்கியம்?''
''இல்லம்மா, சொல்றேன்... சந்திரன், இப்பவே நல்ல மனிதரா, பயனுள்ள வாழ்க்கை வாழறவரா இருக்கார். அவருக்கு, பக்க பலம்ன்னு எதுவுமே தேவைப்படாது. ஆனால், திவாகர் மாறியிருக்கார். சின்ன வயசுல பார்த்த ஆளா இல்ல.
''மனசுல ஏதேதோ குழப்பம், பேராசை, வெறின்னு எதிர்மறை எண்ணங்கள் வெச்சிருக்கார். இது, அவரோட இயற்கையான இயல்பு இல்ல. அரசியல் தப்பு இல்ல. சொல்லப் போனா, நல்ல அரசியல் தான் இன்றைய தேவை...
''அரசியல் ஒரு சாக்கடைன்னு, படித்த வர்க்கம் விலகிப் போனதால தான், போக்கிரிகளும், ரவுடிகளும் வந்து கலந்துட்டாங்க... தவிர, இந்த ஊழல் பேர்வழிகள், காலித்தனம் பண்ற சண்டியர்கள் எல்லாருமே, பெண் கூட வாழறவங்கதானே... மனைவி குடும்பம்ன்னு இருக்கறவங்கதானே...
''அந்த மனைவிகள் நினைத்தால், இந்த ஊழல், ரவிடியிசத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்... அரசியல் ஊழல் பெருகறதுக்கு, மனைவியின் பேராசையும் ஒரு காரணம்...
''என் வாழ்க்கைக்கும், ஒரு, 'பர்ப்பஸ்' இருக்கும்மா. திவாகரை திருத்தறதுக்கு மட்டுமில்லே... பணம் மட்டுமே உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்காதுன்னு சொல்லிக் கொடுக்க, விடாமுயற்சி தான் வலிமைன்னு புரிய வைக்க, போராட்டங்கள் தான் பலத்தைக் கொடுக்கும்ன்னு கற்றுக் கொடுக்க...
''உள் அமைதியை உணர்ந்தவர்களால் தான், அதை பிறருக்கு அளிக்க முடியும்ன்னு தெரிய வைக்க... சரியா அம்மா... உங்களுக்கு சம்மதமா, அப்பா?''
அப்பாவின் இமைகளில் நீர் படிந்திருந்தது. மெல்ல அப்பாவின் விரல்களைப் பற்றிக் கொண்டாள், அம்மா. இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள், வினிதா.

வி. உஷா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani - Chennai ,இந்தியா
27-அக்-202013:10:05 IST Report Abuse
Mani This story does not match in reality
Rate this:
Cancel
MUTHUKRISHNAN S - Sankarankovil,இந்தியா
26-அக்-202020:06:35 IST Report Abuse
MUTHUKRISHNAN S நல்லா இருக்கு
Rate this:
Cancel
gayathri - coimbatore,இந்தியா
26-அக்-202009:48:12 IST Report Abuse
gayathri படிக்க மட்டுமே நன்று. உண்மையா வாழ்க்கை வேறு விதம் விறல் விட்டு என்ன கூடிய வகையில் மட்டுமே இது போன்ற மனங்கள். உண்மையை நினைத்து பார்க்க முடியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X