ஜூன் 4- நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்!
ஆழ்வார்களில் முக்கியமானவரான நம்மாழ்வாருக்குரிய தலம் ஆழ்வார்திருநகரி; ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் இவர், வைகாசி விசாகத்தன்று அவதரித்தவர். இதையொட்டி, நம்மாழ்வார் உற்சவம், பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
காரியாருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக அவதரித்தவர் நம்மாழ்வார். இவரது இயற்பெயர் சடகோபர். பிறந்ததிலிருந்தே கண் மூடிய நிலையில் இருந்தார்; குழந்தை அழுவதுமில்லை, சாப்பிடுவதுமில்லை. உணர்ச்சியே இல்லாமல் இருந்த குழந்தையைப் பார்த்து, பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர்.
சடகோபரை, ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரான்கோவிலுக்கு அழைத்து வந்தனர். தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரத்தடி பொந்தில் அமர்ந்து கொண்டார் சடகோபர். பெற்றோர், அவரைத் தூக்க முயன்றனர்; ஆனால், அசைக்கவே முடியவில்லை. 16 ஆண்டுகள், அந்த மரத்தடியிலேயே உணவில்லாமல் இருந்தார்; ஆனால், ஒரு இளைஞருக்குரிய வளர்ச்சி ஏற்பட்டு விட்டது.
அப்போது, வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால், அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. அயோத்தி சென்ற அவர், இறைவனை வணங்கும் போது, தென்திசையில் ஒரு பேரொளியை கண்டார்; அந்த ஒளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த ஒளி வெகுதூரம் அவரை இழுத்து வந்து விட்டது. ஆழ்வார்திருநகரியில் இருந்த புளியமரத்தடிக்கு வந்ததும், ஒளி மறைந்து விட்டது. அந்த மரப்பொந்தில், மகாஞானி ஒருவர் இருப்பதைக் கண்டார் மதுரகவி ஆழ்வார்.
ஞான முத்திரையுடன், மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார்; கண் விழித்தார் சடகோபர். "செத்ததன் வயிற்றில் சிறியது பிறக்கின் எத்தை தின்று எங்கே கிடக்கும்...' (உயிரில்லாத உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என, சடகோபரிடம் கேட்டார் மதுரகவி ஆழ்வார்.
அது வரை பேசாமலிருந்த சடகோபர், "அத்தை தின்று அங்கே கிடக்கும்...' (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப, துன்பங்களை அனுபவித்தபடி, அங்கேயே இருக்கும்!) என்று பதிலளித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு, சடகோபரை, தன் குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவி. சடகோபர், "நம்மாழ்வார்' எனப்பட்டார். பெருமாளே இவருக்கு இந்தப் பெயரை சூட்டியதாகச் சொல்வர். புளியமரத்தடியில், 31 ஆண்டுகள் வசித்தார் இவர். திருமாலைப் புகழும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை, 1,296.
இங்கு பெருமாளை விட, நம்மாழ்வாருக்குதத் தான் சிறப்பு. நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம், ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் இலைகள் மூடாத காரணத்தால், இம்மரம், "உறங்காப்புளி' என்று அழைக்கப் படுகிறது. நம்மாழ்வார் தன், 35ம் வயதில், மாசி மாதத்தில் பூத உடல் நீத்தார். மரத்தின் அடியில் தான் நம்மாழ்வாரின் பூத உடல் புதைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டது. தன் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும், பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி, பெருமை< அடைந்தார் மதுரகவி ஆழ்வார்.
ஆழ்வார்திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோவிலில், நம்மாழ்வார் உற்சவம் மிகவும் பிரபலம். திருநெல்வேலியில் இருந்து, திருச்செந்தூர் செல்லும் வழியில், 40 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் அவதரித்தார். எனவே, அதற்கு, பத்து நாட்கள் முன்னதாக விழா துவங்கி விடும். இந்த விழாவைக் காணும் மாணவர்கள், குருவாகிய நம்மாழ்வாரின் அருளால் சிறந்த கல்வியறிவைப் பெறுவர்.
***
-தி. செல்லப்பா