இது நல்ல விஷயம் தானே!
தினமும், மதிய வேளையில், பள்ளிக்குச் சென்று, என் மகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு வருவது, என் மனைவியின் வழக்கம். அப்படி ஒரு நாள், என் மனைவி, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது, பள்ளிக்கு புதியதாய் வந்திருக்கும் ஒரு ஆசிரியை, என் மனைவி மற்றும் அவளைப் போல் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த மற்றவர்களையும் தனியே அழைத்துள்ளார்.
எதற்கு என்று புரியாமல் சென்றவர்களிடம், "இத்தனை குழந்தைங்க தனியா சாப்பிடும் போது, நீங்க ஒரு சிலர் மட்டும், உங்க குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டீங்கன்னா, தனியா சாப்பிடற குழந்தைகளுக்கு, அது, பாதிப்பை ஏற்படுத்தாதா? "நம்ம அம்மாவும், இதே மாதிரி ஊட்டி விடலையே...'ன்னு ஏக்கம் அவங்களுக்கு வராதா?
"நீங்க வீட்ல சும்மா இருப்பதாலோ, இல்ல, உங்க வீடு பக்கத்துல இருப்பதாலோ வந்துடறீங்க... வேலைக்கு போறவங் களும், வெகு தொலைவில் வீடு இருப்பவர்களும் என்ன பண்ணுவாங்க?' என்று கேட்டிருக்கிறார். டீச்சரின் நியாயமான அந்தக் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், என் மனைவி உட்பட அனைவரும், தலை குனிந்திருக்கின்றனர்.
அன்று முதல், என் மனைவி பள்ளிக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புவதோடு சரி... பிஞ்சு உள்ளங்களை நோகடிக்காமல், இதை, எல்லாரும் கடைப்பிடிக்கலாமே!
— எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
என்று தணியும் இந்த பேனர் மோகம்?
என் சகோதரி மகன், தன் தாயிடம், ஐநூறு ரூபாய் கேட்டு, அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.
"என்னப்பா... எதுக்கு, ஐநூறு ரூபாய்? எங்காவது டூர் போகப் போறீயா?' என்று கேட்டேன். அதற்கு அவன், "இல்ல சித்தி... என் நண்பனின் அக்காவுக்கு திருமணம். நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, பேனர் வைக்கப் போறோம்; அதற்குத்தான்...' என்றான்.
அவனிடம், "பேனர் வைத்துத்தான் உங்க வாழ்த்தை தெரிவிக்கணும்ங்கிறது இல்லை; அந்தப் பணத்துல, ஏதாவது, "கிப்டு' வாங்கி தந்து, உங்க அன்பை வெளிப்படுத்தலாமே?' என்றேன் நான்.
வெளியில் சென்று, சிறிது நேரத்தில் வீடு திரும்பியவன், "சித்தி... நீங்க சொன்னதை நண்பர்களோட கலந்து பேசினேன். நல்ல யோசனையாக படவே, "வாட்டர் ஹீட்டர்' வாங்கி கொடுக்கலாம்ன்னு இருக்கிறோம்...' என்றான் சந்தோஷமாக.
அரசியல்வாதிகள்தான் தொட்டதுக்கெல்லாம், "போஸ்டர், பேனர்' என, வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு விளம்பரம் செய்கின்றனர். இப்படியே போனால், "காலைக் கடனை முடித்து, வெற்றிகரமாக திரும்பும் தலைவர் அவர்களே...' என்று கூட, எழுதி வைப்பரோ என, நினைக்க தோன்றுகிறது.
அரசியல்வாதிகளை பீடித்திருக்கும் இந்த பேனர் கலாசாரம், இப்போது சாமானியர்களையும் விட்டு வைக்கவில்லை. கல்யாணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா என தொடங்கி, அனைத்து விசேஷங்களுக்கும் பேனர் வைக்கின்றனர்.
வீட்டு நாய், குட்டிப் போட்ட செய்தியைக் கூட, "மம்மியான எங்கள் ஜிம்மிக்கு வாழ்த்துக்கள்...' என, பேனர் வைக்கின்றனர்... காலம் கெட்டுப் போச்சுன்னு சொல்றதைத் தவிர வேறு வழியில்லை!
— சுமதி பாபு, கோவூர்.
சாப்பாட்டில் பகட்டு தேவையா?
சமீபத்தில், என் தோழி வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அவள் ஷாப்பிங் முடித்து, வீடு திரும்பி இருந்தாள். கடையிலிருந்து, ஒரு மூட்டை பிரியாணி அரிசி வாங்கி வந்திருந்தாள்.
அதை பார்த்து, "வீட்ல ஏதாவது விசேஷமா?' என்று கேட்டேன். என் தோழியோ, "உனக்கு விஷயமே தெரியாதா? எங்க வீட்ல தினசரி சாப்பாட்டுக்கே பிரியாணி அரிசிதான். உப்புமா, கஞ்சி என்று எது செய்தாலும், பிரியாணி ரவையில தான் செய்வோம். குழந்தைகளுக்கு சத்து கிடைக்க வேண்டாமா... பிரியாணி அரிசி சாப்பிட்டால், குழந்தைகள் கொழு, கொழுவென்று வளர்வர்...' என்று பெருமை அடித்தாள்.
அவளுடைய அறியாமையை எண்ணி நொந்து கொண்டேன். பிரியாணி அரிசியில் சுவையும், மணமும் அபாரமாக இருப்பது உண்மைதான். ஆனால், அதை விட அதிகமான சத்துக்கள், பாலிஷ் செய்யாத அரிசியிலும், கைக்குத்தல் அரிசியிலும், புழுங்கல் அரிசியிலும் உள்ளன. திணை, வரகு, கேழ்வரகு போன்ற தானியங்களில், அரிசியை விட அதிகமான சத்துக்கள் உள்ளன.
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது, அவர்கள் சாப்பிடும் அரிசியில் மட்டும் இல்லை. அவர்களின் சமச்சீரான உணவில் தான் உள்ளது. இதை எல்லாம் எடுத்துச் சொல்லியும், அதை புரிந்து கொள்ளும் மனப் பக்குவத்தை அவளுடைய பகட்டும், ஆடம்பரமும் வழங்கவில்லை. பகட்டின் ஆபத்தை பிற்காலத்தில் உணரும் போது, அவள் வருந்துவது நிச்சயம்.
— தஸ்மிலா, கீழக்கரை.