வி.வி.ஐ.பி அனுபவங்கள் (2) -ரஜத் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
வி.வி.ஐ.பி அனுபவங்கள் (2) -ரஜத்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 மே
2011
00:00

(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி)

"நீங்க ஜானகியின் மூட்டு வலியை சரி செய்தது பற்றி ரொம்ப சந்தோஷம்; நான் மறக்க மாட்டேன்...' என்று, என் கைகளை குலுக்கியவாறே சொன்னார் எம்.ஜி.ஆர்., சில்க் சட்டை, லுங்கி அணிந்திருந்தார். அங்கிருந்த டாக்டர்கள் முன்னிலையில், எம்.ஜி.ஆருக்கு சிகிச்சையை ஆரம்பித்தேன்; மூன்று மணி நேரம் சிகிச்சை.
விடியற்காலையில், 5:30 மணிக்கு, தோட்டத் திற்கு சென்று விடுவேன். முதலில், மூன்று மணி நேரம் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை; தொடர்ந்து ஜானகி அம்மாவுக்கு சிகிச்சை. மாலை, 5:30 மணிக்கு, மீண்டும் ஜானகி அம்மாவுக்கு சிகிச்சை. இரவு 9:00 - 11:30 மணிக்கு, மீண்டும் எம்.ஜி.,ஆருக்கு சிகிச்சை.
பெரிய இயக்கத்தின் தலைவர், தமிழகத்தின் முதல்வர், இந்திய அரசியலில் மிக முக்கியமான வி.வி.ஐ.பி., அவருடைய ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்து, கவனத்துடன் செயல்பட்டேன்.
ஏழு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, எம்.ஜி.ஆருக்கு எச்சில் கொட்டுவது நின்று விட்டது; அது, அவருக்கு பெரிய நிம்மதி. அவரது கைகளுக்கு சக்தி வந்தது.
ஜன., 17ம் தேதி, எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள்; அன்று தான் எனக்கும் பிறந்த நாள். அன்று, அவருக்கு நான் மாலை அணிவித்தேன்; எனக்கும் அன்று தான் பிறந்த நாள் என அறிந்த எம்.ஜி.ஆர்., அதே மாலையை எனக்கு அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தார்; மிகவும் பெருமிதமாக இருந்தது.
இந்திராவின் நினைவாக, பல அரசியல்வாதிகள் பங்கேற்ற பெரிய மீட்டிங், டில்லியில் நடந்தது. சென்னையிலிருந்து, டில்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற எம்.ஜி.ஆர்., இந்திராவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசினார். அது, அவருக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்ததும், ஜானகி அம்மாவிடம், "டில்லி மீட்டிங் கில், முப்பது நிமிடங்கள் பேசினேன்; டாக்டர் ராஜாமணி தான் அதற்கு முழுக் காரணம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!' என்றார்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மதிய வேளையில் என்னை அழைத்த ஜானகி அம்மா, "உங்ககிட்டே ஒரு குட் நியூஸ் சொல்லணும்...' என்றார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை; இருந்தாலும், என் ஆவலை அடக்கிக் கொண்டேன். "உங்களுக்கு கார் தரச் சொல்லியிருக்காங்க...' என்றார்.
மறுநாளே, பச்சை நிற புது பியட் கார், பட்டினப்பாக்கத்தில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. என் மனைவிக்கும், எனக்கும், இன்ப அதிர்ச்சி; மகிழ்ச்சி.
என் வாழ்க்கையில், எனக்கு சொந்தமாக கிடைத்த கார், எம்.ஜி.ஆர்., எனக்கு கொடுத்த கார் தான்.
என் மருத்துவத் துறை நண்பர்களுக்கு, இந்த கார் பரிசு, ஆச்சரியமாக இருந்தது.
என் ஒன்றரை மாத பெண் குழந்தை, என் மனைவி, நான், மூவரும் அப்போது, சேப்பாக்கம் அரசு கெஸ்ட் ஹவுசிலிருந்து மாறி, பட்டினப் பாக்கத்தில் உள்ள அரசு கோட்டாவில் ஒதுக்கப்பட்ட பிளாட்டில், கீழ்த்தள வீட்டில் இருந்தோம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆருக்கு, காலையில் மட்டும் தான் சிகிச்சை செய்வேன்; "மாலை நேரத்தில் சிகிச்சை வேண்டாம்...' என சொல்லி விடுவார் எம்.ஜி.ஆர்., ஒரு ஞாயிறு காலை, நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, "இன்று மாலை, "டிவி'யில் நான் நடித்த கலர் படம் ஒளிபரப்புகின்றனர்; நீங்கள் பார்த்து, "என்ஜாய்' பண்ணுங்க. வீட்டில் என்ன, "டிவி' வெச்சிருக்கீங்க?' எனக் கேட்டார்; "சாலிடார், ப்ளாக் அண்ட் ஒயிட்' என்றேன்.
"பிளாக் அண்ட் ஒயிட், "டிவி'யில பார்த்தால் நல்லா இருக்காதே...' என்றார்.
பின்னர், உதவியாளரிடம், "இப்போ நல்ல காஸ்ட்லி கலர், "டிவி' எது, என்ன விலை?' என்று கேட்டார். ஒனிடா, "டிவி!' 12 ஆயிரத்து, 500 ரூபாய் என்று தகவல் கிடைத்தது. "டாக்டர் ராஜாமணி வீட்டில், மதியம் இரண்டு மணிக்குள்ளே, ஒனிடா கலர், அன்று "டிவி' இருக்கணும்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்.,
அவர் சொன்னதைப் போல, பிற்பகல், 12:30 மணிக்கே, எங்கள் வீட்டுக்கு புது ஒனிடா, "டிவி' கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டது. 2:30 மணிக்கு நான் வீட்டுக்குச் சென்ற போது, புது, "டிவி' என்னை வரவேற்றது. எனக்கு கொடுத்ததைப் போல, அவரது பி.ஏ.,க்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் என, 18 பேருக்கு, அன்று "டிவி' வாங்கி, அன்பளிப்பாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.,
அந்த, "டிவி'யை பார்க்கும் போதெல்லாம், அதை, பரிசாக அளித்த எம்.ஜி.ஆரின் நினைவு தான் எங்களுக்கு வரும்.
மறுநாள் காலை, எம்.ஜி.ஆரை சந்தித்த போது, அவருக்கு மனமார நன்றி சொன்னேன். "டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட தன் படத்தைப் பற்றியும், அவர் சில விஷயங்களைப் பேசினார்.
கடந்த, 1986ல், எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாவும், அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்டது. ஜானகி அம்மாவுக்கு, ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும். ஏற்கனவே, மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட எம்.ஜி.ஆருக்கு, செக்-அப் மற்றும் சிகிச்சை செய்ய, நியூயார்க் நகரில், பிரபல ப்ரூக்ளின் மருத்துவமனையின் டாக்டர் ப்ரீட்மேனுக்கு தகவல் கொடுத்தாகி விட்டது. அமெரிக்க பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும், மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.
மறுநாள் இரவு ப்ளைட் என்றால், இன்று என்னிடம் வந்து, "நீங்களும் எங்க கூட நியூயார்க்குக்கு வர்றீங்க...' என்றார் ஜானகி அம்மா; எனக்கோ அதிர்ச்சி! "என்னம்மா திடீர்ன்னு சொல்றீங்க... என்கிட்டே பாஸ்போர்ட் கூட கிடையாது. டிரஸ் எல்லாம் ரெடியா இல்ல. சிகிச்சைக்கு ஆயில், மூலிகை தைலம் ரெடி பண்ணணும்...' என்றேன்.
"நீங்க எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க... ஒருநாள் இருக்கு; எல்லாம் செய்து முடிக்கலாம்...' என்று நம்பிக்கை யுடன் சொன்னார் ஜானகி அம்மா. எம்.ஜி.ஆருக்கு உடைகள் தைக்கும் தையல்காரர், என் டிரஸ்சுக்கும் அளவு எடுத்துட்டு போனார். வெள்ளை பேன்ட், வெள்ளை சட்டை, இரு நிறங்களில், டெர்ரி காட்டன் துணியில், சபாரி சூட்கள் எல்லாம் தைக்க, மறுநாள் காலை, அரசு அதிகாரி ஒருவர் என் வீட்டுக்கு வந்து, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங் கினார். "டிப்ளமாடிக்' என்ற விசேஷ பிரிவில், அன்று மாலையே எனக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் வந்து விட்டது.
டாக்டர் பி.ஆர்.எஸ்., டாக்டர் முத்துசாமி (இதய சிகிச்சை நிபுணர்), டாக்டர் மகாலிங்கம் (இதய சிகிச்சை நிபுணர்), சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் சந்திர மோகன், டாக்டர் நரேந்திரன், ஸ்பீச் மற்றும் ஆடியாலஜிஸ்ட் டாக்டர் மனோகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழுவும், எம்.ஜி.ஆருடன் நியூயார்க் பயணம் மேற் கொண் டது.
அதுதான், எனக்கு முதல் வெளிநாட்டு பயணம்.
நியூயார்க் நகரில், "வெஸ்ட் பெர்ரி' என்ற ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டலின் முதல் மாடியில், எங்கள் குழுவினர் தங்கினோம்.
ஓட்டலில், "செக் இன்' செய்து, எங்கள் லக்கேஜை எல்லாம் வைத்துவிட்டு, எம்.ஜி.ஆரை சந்தித்தோம். "டாக்டர் ராஜாமணி ஏன் கவலையாக இருக்கிறார்?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்., அதற்கு, பி.ஆர்.எஸ்., "அவர் தயாரித்து எடுத்து வந்து மூலிகை தைலம், சூட்கேசில் கொட்டி விட்டது. டிரஸ் எல்லாம், பாழாகி விட்டது; தைலமும் வீணாகி விட்டது...' என்று விளக்கினார்.
உடனே, "கவலைப்படாதீங்க டாக்டர் ராஜா மணி... வேற ஏற்பாடு செய்திடலாம்...' என்றார் எம்.ஜி.ஆர்., மூலிகை தைலத்தை தயாரித்து அனுப்ப, சென்னைக்கு தொலைபேசியில் தகவல் சொன்னேன்.
ஜானகி அம்மா செய்த ஏற்பாட்டின்படி, இந்திய அதிகாரி ஒருவர், அங்கிருந்த, ஸ்வப்னா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெரிய துணிக் கடைக்கு என்னை அழைத்துப் போய், ஐந்து செட் புது ரெடிமேட் ஆடைகள் வாங்கிக் கொடுத்தார்.
அங்கேயும், ஜானகி அம்மாவிற்கு, தினமும் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மசாஜ் செய்து, சிகிச்சை அளித்தேன். டாக்டர் ப்ரீட்மேன் மற்றும் அவர் சகாக்கள், நான் சிகிச்சை செய்வதை அருகே இருந்து கவனித்தனர். என் சிகிச்சை முறை பற்றியும், எம்.ஜி.ஆருக்கு நான் அளித்து வந்த சிகிச்சை பற்றியும், டாக்டர் ப்ரீட்மேனிடம் விளக்கினார் டாக்டர் பி.ஆர்.எஸ்., பரிசோதித்துவிட்டு, "எம்.ஜி.ஆர்., இப்போ நல்ல ஸ்ட்ராங்கா இருக்காரு... குட் ஒர்க்!' என்று மகிழ்ச்சியாக கூறினார் ப்ரீட்மேன்.
செய்மோர் பென்ஸ்வி என்ற மருத்துவர், அங்கு பிசியோதெரபி ஸ்பெஷலிஸ்ட். எம்.ஜி.ஆருக்கு அவர் தான் ட்ரீட்மென்ட் கொடுத்தார். ஆஸ்ட்ரியோ ஆர்த்தரைடிஸ் போன்ற பிரச்னைகளுக்கு நான் எப்படி சிகிச்சை அளிக்கிறேன் என்பதை, மிகவும் ஆர்வமாக கவனித்துப் பார்த்தார் பென்ஸ்வி. நான் நியூயார்க்கில் தங்கும் சில வாரங்கள் அவருக்கு உதவ, எம்.ஜி.ஆரின் அனுமதி பெற்றேன்.
"ஆஸ்ட்ரியோ ஆர்த்தரைடிஸ், மூட்டு மாற்று சிகிச்சை, தீவிர மூட்டுவலி என்று எங்களிடம் நிறைய பேர் வருகின்றனர். நீங்கள் செய்யும் அபூர்வமான சிகிச்சை, நன்கு பலன் கிடைக்கிறது. இங்கே, 35 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு உருவாக்குகிறோம். நீங்கள் எங்களோடு நியூயார்க்கிலேயே தங்கி விடுங்கள்...' என்று டாக்டர் பென்ஸ்வி கேட்டார்.
உடனே, எம்.ஜி.ஆர்., என்ன சொன்னார் தெரியுமா?
— தொடரும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X