லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அவர்; வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த வாரத்தில் சென்னை வந்திருந்த போது, அலுவலகம் வந்து சந்தித்தார். அவரது துணைவியார் நடனமணி; பரத நாட்டியத்தில் வல்லவர். அவரைப் பற்றியும், அவரது குழந்தைகள் பற்றியும் நலம் விசாரித்து, மாலையில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு நானும், லென்ஸ் மாமாவும் வருவதாகக் கூறி, அதன்படியே சென்றோம்.
சிறிது நேர சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பிறகு, "இங்கிலாந்தில் உள்ள டீன்-ஏஜர்களிடம், "மாரல் வேல்யூ' எல்லாம் எக்கச்சக்கமாக குறைந்து வருவதாக கேள்விப்படுகிறேனே... உண்மைதானா?' எனக் கேட்டேன்.
அவர் சொன்னார்: ஆமாம்பா... நான் சொல்லப் போற நியூஸ், உனக்கு ஷாக் ஆக கூட இருக்கும். இங்கே, 13 வயதுடைய பெண் குழந்தைகளில், கால்வாசி பேர் நான்கிற்கும் மேற்பட்ட, "பார்ட்னர்கள்' வைத்துள்ளனர். 13 முதல், 15 வயதுடையவர்களில், ஆறில் ஒரு பெண்ணும், ஐந்தில் ஒரு பையனும் செக்சில் தீவிரமாக இருக்கின்றனர் - அது, சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் கூட.
குடிபோதையில் இருக்கும் போது, தம் கன்னித் தன்மையை இழந்ததாக, ஐந்தில் ஒரு, "டீன்-ஏஜர்' என்ற விகிதத்தில் கூறுகின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், இங்கிலாந்தில் மட்டும்தான், "டீன்-ஏஜ்' பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகமாக உள்ளது...
இது மட்டுமல்ல, இக்குழந்தைகள் தம் தாய்மொழியான ஆங்கிலத்தை கற்பதிலும் பின் தங்கியே இருக்கின்றனர். மற்ற ஐரோப்பிய மொழி பேசும் குழந்தைகள், தம் தாய் மொழியின் அடிப்படையை, ஒரு வருடத்தில் கற்றுக் கொள்கின்றனர் என்றால், இவர்களுக்கு மூன்று வருடமாகிறது.
மற்ற ஐரோப்பிய மொழிகளை, ஒரு வருடம் படித்தாலே, அவற்றில் உள்ள, 90 சதவீத வார்த்தைகளை சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்கின்றனர் அந்நாட்டு குழந்தைகள்; இதுவே, இங்கிலாந்துக் குழந்தைகள், 30 சதவீதம்தான் கற்றுக் கொள்ள முடிகிறது என்று விலாவாரியாக நண்பர் பேசிக் கொண்டே போக, லென்ஸ் மாமா திருதிருவென்று விழிக்க ஆரம்பித்தார். லென்ஸ் மாமாவின் தர்ம சங்கடத்தைப் புரிந்து கொண்ட நண்பர், "ஓ... உங்களை மறந்து விட்டேனே...' என்று கூறியபடியே, ஜெம்மிசன் பாட்டிலை ஓப்பன் செய்து, "தாக சாந்தி'க்கான சம்பிரதாயங்களை செய்து முடித்தார்.
பின்னர், ஓட்டலின் ரூம் சர்வீசுக்கு போன் செய்து, கடாய் பனீர், முருக் டிக்கா, பிஷ் பிங்கர், ரஷ்யன் சாலட் ஆகியவற்றுக்கும் ஆர்டர் செய்தார். பின்னர், "இந்த ட்ரிப்புக்கு ஏதும் விசேஷக் காரணங்கள் உண்டா?' எனக் கேட்டேன்.
அவரே தொடர்ந்தார்: கண்டிப்பாக உண்டு. புட் இன்டஸ்ட்ரியில் இறங்கலாம் என முடிவு செய்துள்ளேன். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவற்றை விற்பனை செய்வது குறித்து, ஆராய்ச்சி செய்யவே வந்துள்ளேன்.
உங்கள் ஊரில் தயாராகும் பர்பி, லட்டு, பேடா, குலோப் ஜாமூன் போன்றவை சுகாதாரமற்ற முறையில் தயாராகிறது. அத்துடன், ஆர்கனைஸ்டு செக்டரில் இத்துறை இல்லை.
இந்தியாவில் தயாராகும் சாக்லேட்டுகள் மற்றும் மேல்நாட்டு வகை இனிப்புகளின் மார்க்கெட்டை விட, நூறு சதவீதம் அதிக விற்பனையாகின்றன, நான் சொன்ன லட்டு, குலோப் ஜாமூன் போன்ற ஸ்வீட்டுகள். இவற்றின் வருடாந்திர விற்பனை, பத்தாயிரம் கோடி ரூபாய் என்றால், உனக்கு மயக்கம் வருகிறது தானே!
இந்த மார்க்கெட் வருடத்திற்கு, 10 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில், முப்பது நகரங்களில் — குறிப்பாக, வடமாநில நகரங்களில் ஒரு ஏஜென்சி உதவியுடன், சர்வே நடத்தினேன். இதில் கிடைத்த ஆச்சரியமான தகவல்: இந்த நகரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு நாள் காலையிலும், இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜிலேபி விற்பனையாகிறது என்பதுதான்.
இதுபோன்ற ஜிலேபிகளை சுகாதாரமான முறையில், மிஷின்கள் உதவியுடன், தயாரித்து, "டீப்-பிரீஸ்' செய்து விற்கலாம் என்ற யோசனை இருக்கிறது.
மசாலா பொரி மற்றும் வறுத்த பாசி பருப்பு ஆகியவற்றின் மார்க்கெட்டும் சூப்பராக இருக்கிறது. இதன் உள்நாட்டு
விற்பனை ஆண்டுக்கு, அறுநூறு கோடி ரூபாய்.
இங்கே இந்தியாவில், ஐம்பது வெவ்வேறு நிறுவனங்கள், ஊறுகாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான டன் மாங்காய், எலுமிச்சை, பச்சை மிளகாய் பயன்படுத்தி, ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு ஊறுகாய் வியாபாரம் நடக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளேன் என்று கூறும் போது லென்ஸ் மாமா, "ஊறுகான்னதும்தான் ஞாபகம் வருது... சரக்கு சாப்பிடும் போது நாக்கில் தடவிக் கொள்ள மாங்கா ஊறுகாய் இருந்தா அதோட டேஸ்ட்டே தனிதான். போன் போட்டு கொஞ்சம் ஊறுகாய் கொண்டு வரச் சொல்லுங்க...' என்றபடியே இன்னொரு ரவுண்ட்டுக்குத் தயாரானார்.
நான் கடாய் பனீரை ஆள்காட்டி, நடுவிரல் நடுவே லாவகமாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, "ம்... சொல்லுங்க!' என்றேன்.
மீண்டும் தொடர்ந்தார்: இந்தியாவில், முப்பது வகையான அப்பளங்கள் விற்பனையாகின்றன. மல்டி நேஷனல் கம்பெனி ஒன்று அப்பளத் தயாரிப்பு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட எண்ணி, மார்க்கெட் சர்வே ஒன்று நடத்தியது. அப்போது, அப்பள மார்க்கெட் ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் என்று கண்டு கொண்டது.
இதே போல ரெடிமேட் சப்பாத்திக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தியாவில், 60 சதவீத மக்கள் சப்பாத்தியே சாப்பிடுகின்றனர். இந்தியாவில் கோதுமை உற்பத்தியில், 10 சதவீதம் மட்டுமே பிஸ்கெட், ரொட்டி, கேக் தயாரிப்புக்கு செலவாகிறது. மீதமுள்ள, 90 சதவீதமும் சப்பாத்தி, புரோட்டா போன்றவை தயாரிக்கவே பயன்படுகிறது.
ரொட்டி மற்றும் பிஸ்கெட் கம்பெனிகளுக்கிடையே நிலவும், மிகப்பெரிய போட்டி காரணமாக, எக்கச்சக்க விளம்பரங்கள் வெளியாகின்றன. இதனாலேயே இவற்றைத் தயாரிப்பதற்கு அதிக அளவில், கோதுமை செலவாவதாக ஒரு மாயத் தோற்றம் மக்களிடையே உள்ளது.
இந்த ஆராய்ச்சிகளுக்காகவே எக்கச்சக்க பணம் செலவழித்து விட்டேன். விரைவில் புட் புரொடக்ஷன் இன்டஸ்ட்ரியில் கால் பதிக்கப் போகிறேன் என்று கூறி முடித்தார். "இந்தியாவிலேயே இருந்து கொண்டு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமல் இருந்து விட்டோமே!' என எண்ணியபடியே, லென்ஸ் மாமாவை அழைத்துக்கொண்டு, ஓட்டலை விட்டு வெளியேறினேன்.
***
சிற்றிதழ் ஒன்றில் படித்தது இது...
கணவனை கைக்குள் போட்டுக் கொள்ள, மனைவிகளுக்கு யோசனை சொன்னதெல்லாம் அந்தக் காலம்; மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்!
— இந்த, "லீடை' கட்டுரையில் படித்ததுமே, லென்ஸ் மாமாவிற்கு மிக்க உதவியாக இருக்குமே என நினைத்தபடி, மேலும் தொடர்ந்தேன் —
* வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்... ஆனால், முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள் ஏகப்பட்ட வேலை செய்திருப்பதாகத் தோன்றும்!
* உங்கள் உடைகளைக் கழற்றும் போது, ஐந்து ரூபாய் நாணயம், மனைவி எதிரே விழுகிறாற் போல கழற்றுங்கள். மறுநாள், உங்கள் ஆடைகளை கழற்ற, ஒத்தாசை செய்வார், பாருங்கள்!
* சாதாரண வேலையில், உங்கள் மனைவி எது செய்தாலும் (தவறுகள்) "உன்னைத் தவிர, இவ்வளவு அழகாக யார் செய்வர்?' என்று கூறுங்கள்!
* உங்கள் மாமனார் வீட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டே இருங்கள். பெற்றோர் வீட்டுக்கு போக வேண்டும் என்று மனைவி கேட்டால், உடனே அனுப்பி வையுங்கள்!
* உங்கள் மனைவியை விட அழகான பெண் எதிரே போனால், "என்ன பெரிய அழகு?' என்று இடித்துக் கூறுங்கள். (யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று அவளுக்குத் தெரியக் கூடாது!)
— இன்னும் பல யோசனைகள் கூறியுள்ளனர். லென்ஸ் மாமாவுக்கு மட்டுமல்ல, திருமணமான உங்களில் பலருக்கும், இக்குறிப்புகள் பயன்படும் என்றே நினைக்கிறேன்!
அதே புத்தகத்தில், இன்னொரு துணுக்குச் செய்தி...
* மனைவி பணம் கேட்டால் கொடுங்கள். ஆனால், என்ன செலவாயிற்று என்று கணக்கு மட்டும் கேட்காதீர்கள்! கொடுத்த நூறு ரூபாய்க்கு கணக்குக் கேட்டால், 120 ரூபாய்க்கு கணக்குச் சொல்லி,
"அடுத்த வீட்டு அக்காவிடம், இருபது ரூபாய் கடன் வாங்கி சமாளித்து இருக்கிறேன், நாளைக்கு அந்தக் காசைக் கொடுங்கள்...' என்பாள். சந்தேகம் இருந்தால் கேட்டுப் பாருங்கள்!
— இப்படிச் சொல்கிறது அந்த துணுக்கு!
யப்பா... எவ்ளோ கத்துக்க வேண்டி இருக்கிறது!
***