முதியோர்களுக்கு பொறுப்பு கொடுங்கள்!
சிறு வயதிலேயே தன் கணவரை இழந்த அத்தைக்கு, குழந்தைகள் இல்லை. என்னையும், தம்பியையும் சொந்த குழந்தைகள் போல வளர்த்தார். எனக்கு திருமணம் ஆன பின், தம்பியும் வெளிநாடு சென்றதால், அத்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்தோம்.
முதியோர் இல்லத்தில் இருந்து, 'அத்தையின் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அவர்கள் இன்னும் நெடு நாட்கள் வாழ்வது கடினம் என, டாக்டர் கூறியுள்ளதால், கடைசி நாட்களில் உங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியுமா...' என்றார், இல்லத் தலைவி.
அத்தையை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.
என் மகளுக்கு பிரசவம் ஆகி, ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. இரண்டாவது மகள், கல்லுாரியில் படித்து வந்தாள். திடீரென்று, அலுவலகத்தில், கட்டாய பயிற்சி வகுப்பிற்கு, என்னை டில்லிக்கு இரண்டு மாதம் செல்லுமாறு பணித்தனர்.
சமையலுக்கு ஒரு பெண்மணியை நியமித்து, வீட்டின் மொத்த பொறுப்பையும் அத்தையிடம் ஒப்படைத்து, டில்லி சென்றேன். பிரசவம் ஆன மகள், பேரனை கவனிப்பது, இரண்டாவது மகளை கல்லுாரிக்கு அனுப்புவது, கணவர் அலுவலகம் செல்ல உதவியதுடன், எங்கள் வீட்டின் மாடி தோட்டத்தையும் பார்த்துக் கொண்டார், அத்தை.
பயிற்சி முடிந்து சென்னை திரும்பியவுடன், அத்தையை இதய மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். என்ன ஆச்சரியம், அவரின் இதயம் முன்பை விட நன்றாக வேலை செய்வதாக கூறினார், டாக்டர்.
'வயதானவர்களிடம் பொறுப்புகளையும், முடிவெடுக்கும் வாய்ப்புகளையும் தந்து, அவர்கள் மிக முக்கியமானவர்கள் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும்படி செய்ய வேண்டும். மேலும், இயற்கையுடன் இணைந்து, செடி, மரம் வளர்ப்பது, பூங்கா மற்றும் கடற்கரைக்கு செல்வது போன்றவற்றில் ஈடுபட வைத்தால், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பர்...' என்றார், டாக்டர்.
வாசகர்களே... முதியோரை அலட்சியப்படுத்தாமல், மதிப்புடன் நடத்தலாமே. யோசியுங்கள்!
- கலா ஜெயக்குமார், சென்னை.
விளம்பரமில்லா சேவை!
எங்கள் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தேன். அப்போது, மினி வேனில், சில இளைஞர்களும், இளைஞிகளும் அங்கு வந்து இறங்கினர்.
அவர்கள் அணிந்திருந்த உடையிலிருந்தே, மருத்துவர்கள் என்பது தெரிந்தது.
'ஸ்டெதாஸ்கோப், பிளட் பிரஷர் மானிட்டர்' உள்ளிட்ட சாதனங்களோடு, கோவிலின் முன், பிச்சையெடுத்துக் கொண்டிருந்த முதியவர்களின் உடல்நிலையை பரிசோதித்தனர்.
மேலும், அவரவர் கூறிய உடல் உபாதைகளுக்கு தகுந்த, மருந்து, மாத்திரைகளையும் இலவசமாகவே வழங்கினர்.
கோவில் அர்ச்சகரான நண்பரிடம், இதுகுறித்து கேட்டேன்.
'இவர்களெல்லாம் மருத்துவ கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள். மாதம் ஒருமுறை வந்து, கோவில் வாசலில் பிச்சை எடுப்போருக்கும், சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கும், இலவச மருத்துவ பரிசோதனை செய்து, உதவி வருகின்றனர்...' என்றார்.
இன்றைய இளைய தலைமுறை, மனித நேயத்துக்கும், மக்கள் சேவைக்கும் முக்கியத்துவம் அளிப்பது கண்டு பெருமையாக இருந்தது.
ஒரு நல்ல செயலை, விளம்பரமின்றி செய்து வரும் அவர்களைப் பாராட்டி விட்டு வந்தேன்!
- சி. அருள்மொழி, கோவை.
தமிழ் உயர்வானது!
இந்த ஆண்டு, நவராத்திரி ஆரம்பத்தின் போது, கோயம்புத்துாரில் உள்ள என் மகள் வீட்டில் தங்கியிருந்தேன். அந்த அப்பார்ட்மென்டில் உள்ள, 10 பெண்கள் சேர்ந்து, ஒரு வீட்டில் கொலு வைத்து, அவரவர் வீட்டில் செய்த நைவேத்தியத்துடன் முதல் நாள் பூஜையை ஆரம்பித்தனர்.
வயதில் மூத்த அம்மையார் ஒருவர், 'இங்க, பள்ளி பிள்ளைங்க இருக்கீங்க... யாராவது விநாயகர் துதி பாடுங்கள். பூஜையை ஆரம்பிக்கலாம்...' என்றார்.
யாரும் பாட முன் வராததால், ஒரு மூலையிலிருந்து, 'பாலும் தெளிதேனும்...' நான்கு வரி பாடலை, ஒரு சிறுமி பாடி முடித்தாள். அவள், அந்த அப்பார்ட்மென்டின் சில வீடுகளில் வேலை செய்யும் பெண்ணின் மகள். கொலுவிற்கு அழைக்கவே, அவள் வர முடியாததால், பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறாள்.
அச்சிறுமியிடம், 'உனக்கு வேறு பாடல்கள் தெரியுமா...' என்று கேட்டனர்.
'கொஞ்சம் தெரியும்...' என்று கூறி, சில தேவார பதிகங்களும், வெள்ளை தாமரை பூவிலிருப்பாள் என்ற பாரதியார் பாடலும், பாடிக் காட்டினாள்.
அப்பார்ட்மென்ட் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழியில் கற்பதால், தமிழில் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அரசு பள்ளியில் படிக்கும் தனக்கு, மாலை வேளையில் ஒரு மணி நேரம் அம்மா, தமிழ் கற்றுக் கொடுப்பதாகவும் கூறினாள், அச்சிறுமி.
'வரும், இந்த, 10 நாட்களும், நீ வந்து பாட்டு பாடு...' என்று கேட்டுக் கொண்டனர், அங்கிருந்த பெண்கள்.
அதுமட்டுமின்றி, அவள் அம்மாவை அழைத்து, தம் குழந்தைகளுக்கும் தமிழில் வகுப்பு எடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், அதற்குரிய கட்டணமும் தருவதாக கூறினர்; ஒரு இடமும் அப்பார்ட்மென்டில் ஒதுக்கிக் கொடுத்தனர்.
விஜயதசமியன்று வகுப்பு ஆரம்பித்து, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- டி. தெய்வானை, திருப்பூர்.