பா-கே
சனிக்கிழமை மாலை நேரம்.
எழுத்தாள நண்பர் ஒருவர், புது கார் வாங்கியுள்ளார். அதில், என்னை அழைத்துச் செல்ல, அலுவலகம் வந்திருந்தார்.
லென்ஸ் மாமாவும், குப்பண்ணாவும் சேர்ந்து கொண்டனர். எழுத்தாள நண்பர் வண்டி ஓட்ட, அவர் அருகில் நானும், லென்ஸ் மாமா மற்றும் குப்பண்ணாவும் பின் சீட்டில் அமர்ந்து கொண்டனர்.
எழுத்தாள நண்பர் ஏற்கனவே கார் ஓட்டி பழகியிருந்தாலும், ஏகப்பட்ட சொகுசு வசதிகள் கொண்ட இந்த புது காரை இயக்குவதில் சற்று தடுமாறவே செய்தார்.
காரில் இருந்த ரேடியோவில், 'மாமா மாமா... மியா மியா... குமரு டக்கர் குமரு டக்கர்...' போன்ற அதிரடி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
தலைவலியை உண்டாக்கவே, அதை நிறுத்த சொன்னேன்.
'ஓய் குப்ஸ்... உமக்கு இளமை திரும்பிடுச்சுவே... இப்ப இளைஞர்கள் மத்தியில் இருக்கும், 'லேட்டஸ்ட் ஹேர்-ஸ்டைலே' நீளமா முடி வளர்த்து, கொண்டையோ, குதிரை வாலோ கட்டிக்கொள்வது தான். அதையே நீரும், 'பாலோ' பண்றீர்...' என்று, குப்பண்ணாவை கலாய்த்தார், லென்ஸ்.
காரினுள் இருக்கும் வசதிகளை ஆராய ஆரம்பித்தேன், நான்.
திடீரென, 'ஓரமா போடி...' என்று, வெளியில் குரல் கேட்டது.
'ஏய் லுாஸ்... ஓரமா நின்னு போன் பேச மாட்டியா...' என்று அலறினார், எழுத்தாள நண்பர்.
'ஏம்மா... ஓரமா வண்டியை நிறுத்தி, பேசும்மா...' என்றார், குப்பண்ணா.
என்ன நடக்கிறது என்று வெளியே பார்த்தேன். 20 - 22 வயதுள்ள இளம்பெண் ஒருவர், ஒரு கையில் மொபைல் போனை வைத்து பார்த்தபடியே, இன்னொரு கையில், 'டூ - வீலரின் ஹேண்டில்பாரை' பிடித்து, ஓட்டியபடியே நடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் போட்ட சத்தத்தில், வண்டியை ஓரம் கட்ட ஆரம்பித்தார், அப்பெண்.
'ஏம்பா அலறுறீங்க... வண்டியை கொஞ்சம் தள்ளி ஓரமா நிறுத்துப்பா ரைட்டரு... என்னான்னு போய் பார்த்துட்டு வர்றேன்...' என்று பதட்டத்துடன் இறங்கி சென்றார், மாமா.
'டூ - வீலரை ஸ்டேண்ட்' போட்டு நிறுத்த, அப்பெண்ணுக்கு உதவிய, லென்ஸ் மாமா, அவளுடன் ஏதோ சீரியசாக பேசுவது தெரிந்தது.
அதற்குள், இளம் பெண்களும், இளைஞர்களும் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டுவதை பற்றியும், சாலை விதிகளை சிறிதும் பின்பற்றாதது குறித்தும், இவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் கொடுத்தவர்களை ஏகத்துக்கு திட்டி தீர்த்தனர், எழுத்தாள நண்பரும், குப்பண்ணாவும்.
பத்து நிமிடத்திற்கு பின் திரும்பி வந்து, காரில் ஏறிய லென்ஸ் மாமா, 'பாவம்பா அந்த பொண்ணு. சென்னையில் ஹாஸ்டலில் தங்கி, வேலை செய்யுதாம். வெளியூரில் இருக்கும் அவள் அம்மா, தினமும் மாலை நேரத்தில் போன் செய்து, விசாரிப்பாராம்.
'ரொம்ப நேரம், 'ரிங் டோன்' ஒலித்து, போன் எடுக்கவில்லை என்றால், பயந்து போயிடுவாராம், அவள் அம்மா. அதான், அழைப்பு வந்ததும் உடனே எடுத்து, வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் தகவல் சொல்ல நினைத்துள்ளார். அதற்குள் ஏகப்பட்ட விமர்சனங்கள்...' என்றார்.
'இதையா, 10 நிமிஷமா பேசிட்டு வர்றே...' என்றார், குப்பண்ணா.
'இன்னொரு விஷயமும் சொல்லிச்சுப்பா... இப்ப தங்கியிருக்கிற ஹாஸ்டலில் சாப்பாடு சரியில்லையாம். வேற நல்ல ஹாஸ்டலா தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படி ஏதாவது இருந்தா சொல்ல சொல்லிச்சுப்பா. என் மொபைல் எண்ணை கொடுத்துட்டு, அப்பெண்ணின் எண்ணையும் வாங்கி வந்துட்டேன்...' என்றார், லென்ஸ்.
'ஏம்பா... அந்த பெண்ணின் பேரை கேட்டியா...' என்று, குப்பண்ணா முடிப்பதற்குள், 'ஓ... கேட்டு, என் மொபைலில், பேரையும், நம்பரையும் பதிவு செய்துட்டேன்...' என்றவர் தொடர்ந்து, 'பெரிய மனுஷனா இருக்கே, நிலைமை தெரியாம, அந்தப் பெண்ணை கடுமையா பேசறியே...' என்று, குப்பண்ணாவை ஒரு பிடி பிடித்தார்.
பிறகு என் பக்கம் திரும்பி, 'மணி... நம் அலுவலகத்தில் உள்ள உதவி ஆசிரியையிடம், நல்ல ஹாஸ்டல் ஏதாவது இருந்தால் சொல்ல சொல்லுபா...
'ஓய் ரைட்டரு... நீ, கார் ஓட்டியது போதும். நகர்ந்துக்க, மணி ஓட்டட்டும்... நீ இன்னும் ஆறு மாசம், 'டிரைவிங் ஸ்கூலில்' சேர்ந்து, நல்லா பயிற்சி எடுத்த பின் ஓட்டினால் போதும்...' என்று கூற, முணுமுணுத்தவாறு, எனக்கு வழி விட்டார், எழுத்தாள நண்பர்.
'நாங்க அலுவலக வாசலில் இறங்கிடுவோம். பார்த்து, நிதானமா ஓட்டிட்டு போப்பா...' என்று எழுத்தாள நண்பரை மேலும் கடுப்பேற்றினார், லென்ஸ் மாமா.
ப
மதுரையில் இருந்து வாசகர் மணி
எழுதிய கடிதம்-
நான்கு நபர்களை புறக்கணி: மடையன், சுயநலக்காரன், முட்டாள் மற்றும் ஓய்வாக இருப்பவன்.
நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே: பொய்யன், துரோகி, பொறாமைக்காரன் மற்றும்
மமதை பிடித்தவன்.
நான்கு நபர்களுடன் கடுமையாக நடக்காதே: அனாதை, ஏழை, முதியவர் மற்றும் நோயாளி.
நான்கு நபர்களுக்கு, உன் கடமையை தவிர்க்காதே: மனைவி, பிள்ளைகள், குடும்பம் மற்றும் சேவகன்.
நான்கு விஷயங்களை ஆபரணமாக அணி: பொறுமை, சாந்த குணம், அறிவு மற்றும் அன்பு.
நான்கு நபர்களை வெறுக்காதே: அப்பா, அம்மா, சகோதரன் மற்றும் சகோதரி.
நான்கு விஷயங்களை குறை: உணவு, துாக்கம், சோம்பல் மற்றும் பேச்சு.
நான்கு விஷயங்களை துாக்கிப்போடு: துக்கம், கவலை, இயலாமை மற்றும் கஞ்சத்தனம்.
நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு: மனத்துாய்மை உள்ளவன், வாக்கை நிறைவேற்றுபவன், கண்ணியமானவன் மற்றும் உண்மையானவன்.
நான்கு விஷயங்களை செய்: தியானம் - யோகா, நுால் வாசிப்பு, உடற்பயிற்சி மற்றும் சேவை செய்தல்.
நான்கு விஷயங்களை வீணாக்காதே: நேரம், பணம், வார்த்தை மற்றும் நன்மதிப்பு.
நான்கு விஷயங்களில் கவனம் செலுத்து: கல்வி, உழைப்பு, விழிப்புணர்வு மற்றும் விடாமுயற்சி.
வாழ்க்கை வளம்பெற, இத்தகைய செயல்களை செயல்படுத்தி தான் பார்ப்போமே!