* அ. முகமது ரபீக், மதுரை: 'நாம் தமிழர்' கட்சி, எல்லா தேர்தல்களிலும் தோல்வி அடைந்தாலும், தனித்தே போட்டியிடுகிறதே!
சீமான் என்ற ஒருவர் இருப்பதையே, மற்ற அரசியல் கட்சிகள் மறந்து விட்டன. கூட்டணிக்கு அழைப்பார் இல்லாததால் தான், தனித்துப் போட்டி! பத்திரிகைகள் கூட, 'நாம் தமிழர்' என்ற கட்சி என்பது போல் தான் எழுதுகின்றன!
ஆணைகூத்தன், சென்னை: நிறைய சம்பாதித்தும், செலவழிக்க தயங்கும் ஆண்களை, கஞ்சன் என்பீர்களா, சிக்கனப் பேர்வழி என்பீர்களா?
இரண்டுமே இல்லை! சிறந்த நிதி நிர்வாகி எனப் போற்றுவேன்! நிதி நிர்வாகம் சிறந்ததாக இருந்தால் தான், குடும்பம் செழிக்கும்!
என். ஆசைத்தம்பி, சென்னை: தங்களின் நண்பர், எழுத்தாளர், ஆர்னிகா நாசர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
பணி ஓய்வு பெற்ற பின்னும் எழுதிக் கொண்டிருக்கிறார் - புனைப் பெயர்களில்! இந்த பதில் வெளியாகும் நேரத்தில், அவரது மகன் திருமணம் முடிந்திருக்கும்!
* லெ.நா. சிவக்குமார், சென்னை: 'சொந்த நாட்டினரே வேலை இல்லாமல் இருக்கும்போது, பிற நாட்டினருக்கு வேலை அளிப்பது எப்படி...' என்கிறாரே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!
அந்த நாட்டில் வேலை இல்லாதவர்களுக்கு, இந்தியா உட்பட சில நாட்டு மனிதர்களுக்கு உள்ளது போல் மூளை இருந்தால், அமெரிக்க தொழில் அதிபர்கள் பிறநாட்டவருக்கு ஏன் வேலை கொடுக்கப் போகின்றனர்!
பிரான்சிஸ்கா, சென்னை: தாமிரபரணி ஆற்றில் குளித்த அனுபவம் உண்டா?
நாலாம் வகுப்பு படிக்கும்போதே அங்கு தான் நீச்சல் கற்றுக் கொண்டேன். நமது அச்சகப் பிரிவில் பணிபுரிந்த இஸ்லாமிய பெரியவர் கான் பாய் என்பவர், தன் கையில் என்னைப் பிடித்து, நீச்சல் கற்றுக் கொடுத்தார். அப்போதே அடுத்த கரையை எட்டும் வரை படித்து விட்டேன்!
வி. கணேசன், தென்காசி:தமிழர்களாகிய நாம் எப்படி வாழ வேண்டும்?
உள்ளே தனித் தனி சுளைகள் எத்தனையோ இருக்கின்றன; இருந்தாலும், அவை கட்டுப்பாட்டுடன் இருக்கின்றன பலாப் பழத்தில். அதேபோல், நமக்குள் எத்தனையோ பிரிவுகள் உள்ளன. பலாப் பழம் போல, ஒரே அமைப்புக்குள் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!
கே.கே. வெங்கடேசன், செங்கல்பட்டு: படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும் என்ன வேறுபாடு?
முதலாமவன், சம்பளத்திற்காக மாத கடைசி நாளை எதிர்பார்த்திருப்பான்... இரண்டாமவன், சுய தொழில் செய்து, தினசரி காசு பார்ப்பான்!