கொஞ்சம் குங்குமம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2020
00:00

''நான், கோவிலுக்கு போறேன். நீங்களும் வர்றீங்களா,'' என்றவாறே தன் முன்னே வந்து நின்ற ஜானகியை, நிமிர்ந்து பார்த்தாள், காமாட்சி.
பசும் மஞ்சளை அரைத்து அப்பிய நிறம், எடுப்பான மூக்கு, அகன்று விரிந்த கண்கள். கட்டியிருந்தது வாயில் புடவை என்றாலும் அவளுக்கு மிக அழகிய சோபையைத் தந்தது.
தையல் மிஷினிலிருந்த கால்களை நகர்த்தி, சிறு புன்னகையோடு, ''ஜானு, நீ போயிட்டு வா. எனக்கு தைக்கிற வேலையிருக்கு,'' என்றாள், காமாட்சி.
''இன்னைக்கு ஆடி வெள்ளி. அம்மன் கோவில்ல, விளக்கு போட்டா நல்லதாம்; அம்மா போகச் சொன்னா. அதான் கூப்பிட்டேன்,'' என்றாள், உரிமையோடு.
அது, ஒரு பெரிய போர்ஷன். நடுவில் பொதுவான ஒரு முற்றம் வைத்து, சுற்றி எட்டு சிறிய வீடுகள். முன்னால் ஒரு சிறு வராண்டா, அடுத்து ஒரு சிறிய அறை, அதையடுத்து, ஒரு சமையல் அறை இருந்தது. அத்தனை குடித்தனக்காரர்களும், 20 - 30 ஆண்டுகளாக குடியிருப்பவர்கள்.
அதில் முதலில் குடித்தனம் வந்தது, காமாட்சியின் குடும்பம் தான். காமாட்சியே அங்கு தான் பிறந்தாள். வயது, 29 ஆகிறது. காமாட்சியின் அப்பாவுக்கு, அங்கிருந்த சொசைட்டியில் வேலை. அவளுக்கு அப்புறம், விசாலாட்சி, மீனாட்சி என்று அடுத்தடுத்து பெண் பிள்ளைகள். மிக கஷ்டமான ஜீவனங்கள் தான் அங்கே இருந்தனர்.
எதேச்சையாக வெளியே வந்த ஜானகியின் அம்மா, காமாட்சியை கூப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததும், ''என்னடி, ஜானகி... நீ இன்னும் போகலியா?'' என்றாள்.
''இல்லம்மா, காமாட்சியக்காவ கூப்பிட்டுகிட்டிருந்தேன்...'' என்று இழுத்தாள்.
''அவள ஏண்டி சிரமப்படுத்தறே. நீ மட்டும் போயிட்டு நேரத்தோட வந்து சேருடி,'' என்று, அவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தாள்.
அவள் தலை மறைந்ததும், காமாட்சியிடம், ''நீ சித்த உள்ளே இருக்கப்படாதோ... சின்னவா, பெரியவாள்லாம் வெளியே போறச்ச, உன் முகத்துல விழிச்சுண்டு போனா நன்னாயிருக்குமோ,'' என்று, தோள் பட்டையில் இடித்தவாறே உள்ளே போனாள்.
சமையல் அறையிலிருந்து விடுவிடுவென்று வெளியே வந்த, பர்வதம், ''இனிமே இங்கே உட்காராதேடி. போறவா வர்றவா எல்லாம் முகஞ்சுழிச்சுண்டு போறாள்,'' என்றாள்.
அப்பாவியாக, ''நா வேறெங்கம்மா உட்கார,'' என்றாள், காமாட்சி.
கோபமாக, ''என் தலையில் உட்காரு. கேட்குறா பாரு கேள்வி,'' என்றவள், ''போ, அந்த உள் அறையில் மிஷினை போட்டுக்கோ,'' என்றாள்.
''அங்கே வெளிச்சம் வராதேம்மா.''
''வந்தவரைக்கும் தை. எல்லாருக்கும் என்னால பதில் சொல்ல முடியல. நேத்து, பக்கத்து வீட்டுக்காரர், 'தாலியறுத்தவ, இப்படித் தல வாசல்ல ஒக்காந்துண்டிருப்பதை பார்த்துட்டு போனா, எந்த காரியம் தான் உருப்படும்'ன்னு, என் காதுபடவே சொல்லிண்டே போறார்.''
குபுக்கென்று கண்ணீர் பெருகியது, காமாட்சிக்கு. தான் விதவையா, இப்படி யாராவது சொல்லும்போது தான் தெரிகிறது.
பனிரெண்டு வயதில், பாட்டி பிராணன் போறதுக்குள்ள, காமாட்சிக்கு ஒரு திருமணத்தை பண்ணி பார்க்கணும்ங்கிற ஆசையை நிறைவேற்ற, 15 வயதான அத்தை பையன் ஆனந்துக்கு, அவசரமாக திருமணம் நடத்தினர்.
திருமணமான மூன்றாவது நாளே, குளத்தில் விளையாடப் போன ஆனந்து, நீரில் மூழ்கி இறந்து விட்டான். ஊரார் கூடி, அவளுக்கு விதவைக் கோலத்தை பரிசாகக் கொடுத்தனர்.
சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறிப்போன உற்றார், உறவினருக்கு, மறுமணம் என்ற எண்ணமும் எழவில்லை.
அழகு என்ற சொல்லுக்கு எதிர்பதத்தில் இருந்தாள், காமாட்சி. மாநிறத்துக்கும் சற்று கீழே, பற்கள் வரிசை தப்பி ஒன்றிரண்டு வெளியே எட்டிப் பார்த்து, இடுப்பு அகன்று, குண்டான உடம்பு.
எனவே, யாரும் அவளை மறுமணம் செய்ய கேட்கவும் இல்லை. அவளுக்கும் அப்படியான எண்ணமும் இல்லை. ஆனால், அவள் மனம் புண்பட பிறர் பேசும்போது, அழுகை வரத்தான் செய்யும். அதோடு, காமாட்சியை காரணம் காட்டி, மீனாட்சிக்கும், விசாலாட்சிக்கும் திருமணம் தள்ளிப்போக, பர்வதத்திற்கு அடிக்கடி கோபம் தலைக்கேறியது.
கணவர், வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள், இந்த பெண்களை கரையேத்தணுமே என்று கண்ணீர் விடாத நாளில்லை.
பெண்கள் இருவரும், அருகிலிருந்த கடையில் வேலைக்கு போய் வந்தனர். காமாட்சி மட்டும், தையல் மிஷினோடு ஐக்கியமானாள்.
''அசமந்தமா நிக்காதேடி. உன் தையல் மிஷினை துாக்கிண்டு உள்ளே போ,'' என்று கத்தினாள், பர்வதம்.
''சரிம்மா, இதோ நகர்த்திட்டு போறேன்,'' என்று மெல்லிய குரலில் முனகினாள்.
பர்வதம் கத்தியதை கேட்டபடியே வந்த, சடகோபன், ''ஏண்டி இப்படி கத்தறே... ஊரார் தான் அவளை கரிச்சுக் கொட்டறான்னா, நீ அதுக்கு மேல இருக்க... என்ன பாவம் பண்ணினாளோ அவ, இங்க வந்து பொறக்க,'' என்று வருத்தமாக கூறினார்.
''அவள், இங்கே நன்னாத்தான் இருக்கா. நேரத்துக்கு வடிச்சுப் போட நானிருக்கேன். சம்பாதிச்சு போட நீங்கள் இருக்கேள். பேருக்கு இந்த மிஷினை வச்சுண்டு போறவா, வர்றவாள வேடிக்கை பார்த்துண்டிருக்கா,'' என்று இரைந்தாள்.
''போடி போ, வாய்க்கு வந்ததெல்லாம் பேசிண்டிருக்காதே,'' என்று அவளை அடக்கினார்.
''ஆமா, என்னய அடக்குங்கோ... இந்த பொண்ணுங்கள எப்படி கரையேத்தறதுன்னு தெரியாம நான் தவிக்கிறேன்,'' என்று கண்ணை கசக்கியவாறே உள்ளே போனாள்.
தையல் மிஷினை ஒண்டியாக இழுத்துக் கொண்டிருந்தவளுக்கு உதவியவாறே, ''நீ வருத்தப்படாதேம்மா. அவ எப்பவும் கத்தறது தானே,'' என்று, மகளை சமாதானப்படுத்தினார்.
''அதெல்லாம் எனக்கு வருத்தமில்லேப்பா. அம்மா, உண்மையைதானே சொல்றா. பாவம், தங்கச்சிகளுக்கும் என்னால கஷ்டம் தானே. என்னால என்ன பிரயோஜனம்,'' என்றாள், வறண்ட புன்னகையோடு.

இரவு முழுவதும், காமாட்சிக்கு துாக்கமே வரவில்லை. தன்னால் தன் தங்கைகளுக்கும் எவ்வளவு மன வேதனை.
தங்கைகள் வேலைக்கு போக, சொசைட்டிக்கு கிளம்பினார், அப்பா.
வெளிச்சம் பத்தாமல், தையல் மிஷினோடு போராடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் யாரோ வருவதும், போவதுமாக தெரிந்தது.
நல்ல புடவை கட்டிக்கொண்டு, மல்லிகை பூ தலையில் வைத்திருந்தாள், அம்மா.
வெளியே என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்க்கலாம் என, எழ முயன்றவளை பார்த்த அம்மா, ''எங்கே போகப் போற?'' என்றாள்.
''இல்ல, ஏதோ சத்தம் கேட்குதே என்னன்னு பார்க்க...'' என்று இழுத்தாள்.
''நீ ஒண்ணும் வெளியே போக வேண்டாம். ஜானகிய பெண் பார்க்க வர்றா. உன்னய பார்த்தா அபசகுனமா நினைப்பா. நீ உள்ளேயே இரு. நான் சித்த நாழி அவாத்துக்கு போயிட்டு வந்துடறேன்,'' என்று கூறி, அவள் பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.
காமாட்சியின் உள்ளம், நெருப்பில் விழுந்த புழு போல துடித்தது. 'நான் அப்படிப்பட்ட துக்கிறியா. என்னை பார்த்தால் எந்த காரியமும் நடக்காதா. அடி கடங்காரி, ஏண்டி நீ பிறந்த...' என்று முகத்தை மூடி, சத்தம் வராமல் விம்மி அழுதாள்.
அப்பாவும் சாப்பிட வீட்டிற்கு வர, அவர்கள் வீட்டிலிருந்து திரும்பிய அம்மா, விஷயத்தை கூறினாள்.
''பொண்ண அவாளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. வர்ற முகூர்த்தத்துலயே திருமணத்த நடத்த போறாளாம். ம்ம்... நம்மாத்துல இது மாதிரியெல்லாம் எப்ப நடக்கப் போகுதோ,'' என்று புலம்பியவாறே உள்ளே போனாள்.
''போ போ... எல்லாம் நடக்கிறப்போ நல்லா நடக்கும்,'' என்ற சடகோபன், ''நீ சாப்பிட்டியா காமாட்சி?'' என்று மகளை கேட்டவாறே உள்ளே சென்றார்.
மூளி, முண்டச்சி, தாலியறுத்தவ என்று, எத்தனை பட்ட பெயர்கள் தனக்கு. போதும் இந்த வாழ்வு. தான் உயிரோடு இருக்கும் வரை, தன் தங்கைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படாது. எதுவுமே பிடிக்கவில்லை, காமாட்சிக்கு.
எத்தனையோ பேரிடம் சொல்லி பார்த்தாள், அம்மா. ஒருத்தராவது வீடேறி, பெண் கேட்க வர பயப்படுகின்றனர். தன் கதை முடிந்தால், நிச்சயம் எல்லாம் நல்லதாக நடக்கும்.
ரவிக்கை துணி சுற்றியிருந்த பேப்பரில், 'காவிரியில் மூழ்கி பெண் சாவு' என்ற செய்தி, அவளுக்காகவே போட்டது போலிருந்தது.
மறுநாள், பொழுது புலரும் முன்பே, ஒரு துண்டு காகிதத்தில், 'எனக்கு, வாழப் பிடிக்கவில்லை; காவிரித் தாயிடம் தஞ்சம் அடையப் போகிறேன். தேட வேண்டாம்...' என்று எழுதி வைத்து விட்டு, காவிரியை நோக்கி நடக்கையில், அப்பாவின் பரிதாப முகம் தெரிந்தது.
நாட்கள் உருண்டோடி, வருடங்களானது. மீனாட்சிக்கும், விசாலாட்சிக்கும் அடுத்தடுத்து நல்ல வரன்கள் அமைந்தன. வரதட்சணையின்றி திருமணம் நடந்தது. மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், சடகோபனுக்கு ஒரு கடிதம் வந்தது.
'அப்பா... நான், காமாட்சி ஜோசப் எழுதுகிறேன். நீங்களும், அம்மாவும் நலமா... இறந்து போனவளிடமிருந்து கடிதத்தைப் பார்க்க ஆச்சரியமாக உள்ளதா... காவிரியில் மூழ்கி சாகவிருந்த என்னை காப்பாற்றி, தாயற்ற தன் மூன்று குழந்தைகளுக்கும் தாயாக இருக்க என்னை வேண்டினார், ஜோசப்.
'பல மீன்பிடி படகுகளின் சொந்தக்காரி ஆக்கினார். அவரின் முயற்சியால், அவர் நண்பர்களின் மூலம், மீனாட்சிக்கும், விசாலாட்சிக்கும் நல்ல வரன்களை அனுப்பி, திருமணம் நடக்க உதவினார்ப்பா.
'இப்போது, நெற்றி நிறைய குங்குமத்துடன் நிறைந்த சுமங்கலி என, பெருமிதமாக உள்ளேன். என்னை பார்த்தாலே அபசகுனம் என்ற நிலை மாறி, நான் தொட்டால் தான் கடலில் படகே போகும் என்ற நிலைமையை, என் கணவர் ஏற்படுத்தி விட்டாரப்பா.
'நான் மதம் மாறவில்லை. ஆனால், இந்த உலகில் வாழ நானும் தகுதியானவள்னு, மனம் மாறி விட்டேன். எனக்கும் வாழணும்ன்னு ஆசை இருக்காதாப்பா...'
கடிதத்தை படித்த சடகோபன், குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

மா.சுமதி நடராஜன்
படிப்பு: எம்.எஸ்.சி., - எம்.பில்., - பி.எட்., ஓய்வு பெற்ற ஆசிரியை, இயற்கை ஆர்வலர்.
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் இரண்டாவது முறையாக ஆறுதல் பரிசு பெறுகிறார். தற்போது, மதுரை, மகாத்மா காந்தி நகரிலுள்ள ஷீரடி குபேரசாய்பாபா கோவிலை நிர்வகித்து, ஆன்மிக தொண்டாற்றி வருகிறார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswari - . Madurai,இந்தியா
06-நவ-202023:44:30 IST Report Abuse
Eswari இன்றைக்கும் இந்த சமூகம் மாறவில்லை என்பதற்கு இந்த காமாட்சி கதாபாத்திரம் ஓர் உதாரணம், நல்ல கதை.
Rate this:
Cancel
Eswari - . Madurai,இந்தியா
06-நவ-202023:38:53 IST Report Abuse
Eswari நல்ல கதை. படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது.
Rate this:
Cancel
ambi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-நவ-202011:44:29 IST Report Abuse
ambi இதெல்லாம் ஒரு கதை Waste of time
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X