யோகிபாபுவின் அரசியல், 'பஞ்ச்!'
யோகிபாபு காமெடியனாக, கதையின் நாயகனாக நடித்த எந்த படங்களிலும் மருந்துக்கு கூட அரசியல் வசனங்கள் இடம்பெற்றதில்லை. சமீபத்தில், ஹிந்தி திணிப்பிற்கு எதிராக, 'ஹிந்தி தெரியாது போடா' -என்று எழுதப்பட்ட, 'டீ - சர்ட்'டை அணிந்து, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தற்போது, யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து வரும், பேய் மாமா படத்தின்,
'பர்ஸ்ட் லுக்' போஸ்டரில், 'ஹிந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா...' -என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, எதிர்காலத்திலும் தன் படங்களில் அரசியல் சம்பந்தப்பட்ட, வசனங்களை காமெடி கலந்து பேசி, ரசிகர்களை கவர திட்டமிட்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
சினிமா யுக்திகளை கரைத்து குடித்த, லாஸ்லியா!
'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, தற்போது, மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார், இலங்கை தமிழ் நடிகை, லாஸ்லியா. எந்தவித நிபந்தனையும் போடாமல், மேலும் புதிய படங்களை கைப்பற்றி வருபவர், விளம்பர படங்களிலும் நடித்து, வேகவேகமாக கல்லா கட்டி வருகிறார்.
அவரிடத்தில், யாராவது சீனியர்கள், சினிமா பற்றி, 'அட்வைஸ்' கொடுத்தால், 'எல்லா நெளிவு சுளிவுகளையும் தெரிந்து தான், களத்தில் இறங்கியிருக்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நான், 'கமிட்' ஆகியிருப்பதைப் பார்த்தாலே தெரியவில்லையா...' என்கிறார்.
மேலும், சினிமாவை ஜெயிக்க என்னென்ன யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்பதை, தன் சார்பில், ஒரு பிரசங்கமே நடத்தி, 'அட்வைஸ்' கொடுத்து, வந்தவர்களை திருப்பி அனுப்புகிறார். ஆய உபாயம் அறிந்தவள், அரிதல்ல வெல்வது!
— எலீசா
விஜய் சேதுபதியின், புதிய விளக்கம்!
'ஹீரோ' மட்டுமின்றி, வில்லனாகவும் நடித்து வரும், விஜய் சேதுபதி, 'ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் அழுக்கு உள்ளது. அதை வெளியேற்ற அவர்களுக்கு வழி கிடைக்கிறதா என்பது, எனக்கு தெரியவில்லை. ஆனால், வில்லனாக நடிப்பதன் மூலம், அந்த அழுக்கை வெளியேற்ற எனக்கு வழி கிடைக்கிறது. அதனால் தான், கொடூரமான, 'கேங்ஸ்டர்' வேடத்தை கூட, முழுமையாக உள்வாங்கி, ரசித்து நடிக்கிறேன். அழுக்கு இல்லாத, புதிய மனிதனாக என்னை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே, வில்லன் வேடங்களை கருதுகிறேன்...' என்கிறார்.
- சினிமா பொன்னையா
தனுஷுக்கு, ரூ.8 கோடி கொடுத்த, 'ரவுடி பேபி!'
கடந்த, 2018-ல், தனுஷ் தயாரித்து, நடித்த, மாரி - - 2 படத்தில் இடம்பெற்ற, 'ரவுடி பேபி' பாடல், 'தென்னிந்திய அளவில், இதுவரை வெளியான பாடல்களில், 'யூ - டியூப்'பில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டது...' என்ற வரிசையில், முதலிடத்தைப் பிடித்து, சாதனை செய்திருக்கிறது. அந்த வகையில், இதுவரை, 'ரவுடி பேபி' பாடலை, 96 கோடி பேர், பார்த்து ரசித்துள்ளதால், தனுஷுக்கு, எட்டு கோடி ரூபாய் வழங்கியுள்ளது, 'யூ - டியூப்' நிறுவனம். இந்த மகிழ்ச்சியை, அந்த பாடலுக்காக பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும், விருந்து கொடுத்து, பகிர்ந்து கொண்டுள்ளார், தனுஷ்.
- சி.பொ.,
கறுப்புப்பூனை!
தன் சொந்த படங்களில் நடித்தபோது, மனைவி, அவ்வப்போது, 'சூப்பர்வைசர்' போன்று, படப்பிடிப்பு தளத்திற்கு, 'விசிட்' அடித்ததால், உடன் நடிக்கும் நடிகையருடன், கூச்சத்துடனேயே தயங்கி தயங்கி பேசி வந்தார், சைத்தான் நடிகர். இப்போது, வெளி கம்பெனி படங்களில் நடிக்கத் துவங்கிய பிறகு, ஆளே மாறி விட்டார்.
உடன் நடிக்கும் நடிகையர் வெட்கப்படும் அளவுக்கு, கூச்ச நாச்சமின்றி, இரட்டை அர்த்த வசனங்களை அள்ளி விடுவதோடு, முன்பெல்லாம், 'ரொமான்டிக்' காட்சிகளில் நடிக்க கூச்சப்பட்டவர், இப்போது, ஊடு கட்டி அடிக்கிறார். 'மனைவியின் கட்டுக்காவல் இல்லாததே, நடிகரின் இந்த மாற்றத்திற்கு காரணம்...' என்கின்றனர், படக்குழுவினர். 'சினிமாவுல நல்லா நடிக்கிறாங்களோ இல்லையோ, வீட்டு அம்மணிங்ககிட்ட எல்லா நடிகர்களும் ரொம்ப நல்லாவே, 'ஆக்டு' கொடுக்கிறாங்க...' என்றும், 'கிசுகிசு'க்கின்றனர்.
'பாருடி, 'ஹவுஸ் ஓனரின்' பையன், விஜய் ஆண்டனி பண்ற கூத்து தாங்க முடியல... அந்த பையனின் அப்பா - அம்மா வீட்டில் இருந்தால், 'என்ன அக்கா, நல்லா இருக்கீங்களா... ஏதாவது உதவி செய்யட்டுமா...' என்று கேட்பான். அவங்க வீட்டில் இல்லாவிட்டால், அவன் பண்ற சேட்டைகளும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதும் தொந்தரவா இருக்கு. பொறுமையா இருக்கேன். ஒரு நாளைக்கு அவனுக்கு, 'செம மாத்து' இருக்குடி...' என்று, தன் தோழியிடம் புலம்பினாள், சினேகிதி.
சினி துளிகள்!
* 'ஹீரோ'வாக நடிக்கும் படங்களில், தன் நட்பு வட்டார நடிகர்களுக்கு சிபாரிசு செய்கிறார், விஜய் ஆண்டனி.
அவ்ளோதான்!