டைட்டானிக் காதல்... (9)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2020
00:00

முன்கதை சுருக்கம்:புவனாவை காதலிக்கும் விஷயத்தை அறிந்த கார்த்திகேயனின் அப்பா சத்தம் போட, அத்தை மகள் ஜோதி, தான் அவனிடம் பேசுவதாக கூறுகிறாள். இந்நிலையில், இவ்விஷயம் ஊர் முழுவதும் பரவி, வேறு ஜாதியில் மணம் முடித்து வைத்தால் சும்மா விடுவதில்லை என, ஜாதி மக்கள் பேசிக் கொள்கின்றனர். இதுகுறித்து சாலாட்சி என்ற பெண் தெரிவிக்க, அங்கு செல்கிறாள் ஜோதி-

அந்த நேரத்தில், ஜோதியை, அங்கு எதிர்பார்க்கவில்லை, கிராம மக்கள்.
நாம் கூட்டம் போட்டது இவளுக்கு எப்படி தெரிய வந்தது என்று நினைத்தனர். யார் போய் சொல்லியிருப்பர் என்று யோசித்தனர். இவற்றையெல்லாம் முன் கூட்டியே நினைத்துப் பார்த்து தான், தெரு கோடியிலேயே நின்று விட்டாள், சாலாட்சி.
''என்ன சாலா?''
''நீங்க போங்க, சின்னம்மா... உங்க கூட என்னை பார்த்தாங்கன்னா, நாந்தா சொல்லிக் கொடுத்தேன்னு கொன்னே போட்டுருவாங்க.''
''சரி... நீ, இங்கேயே நின்னுக்கிடு.''
விடுவிடுவென்று நடந்து, அவர்களை நெருங்கியபோது, ஒவ்வொருவராக மெல்ல நழுவுவதை பார்த்தாள்.
''செங்கோடா, சுப்ரமணி, எட்டி, மருது... எங்க கிளம்புறீங்க... உங்க எல்லார்கிட்டயும் பேசணும்ன்னு தான் வந்திருக்கேன்,'' என்றாள்.
அவர்கள், அப்படியே நின்று, அவளை பார்த்தனர். ஒரு வினாடி யோசித்த, ஜோதி, தொண்டையை செருமி, மெதுவாக, ''நான், உங்ககிட்ட சொல்ல வந்தது, ரொம்ப முக்கியமான விஷயம்...''
''சொல்லுங்க, சின்னம்மா.''
அதற்குள் ஒருவன், ஓடிப்போய் நீல நிற பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து போட்டு, தன் மேல் துண்டால் துாசு தட்டி, ''உக்காருங்க சின்னம்மா,'' என்றான்.
உட்கார்ந்தாள்.
''நம்ம வீடுங்கள்ல ஏதும் சாப்புட மாட்டீங்க... இருந்தாலும் கேக்கிறேன், டீ குடிக்கிறீங்களா சின்னம்மா?''
''நீங்க, எப்போ எனக்கு சாப்பிட குடுத்தீங்க... நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னேன்?''
''இல்ல... சாப்புட மாட்டீங்கன்னு...''
''நீங்களா நினைச்சுக்கிட்டிங்களாக்கும்... நீங்களா நெனச்சு ஒரு முடிவுக்கு வருவீங்களா?''
கூட்டம் பேசாதிருந்தது.
''இந்தா, தேவானை... இன்னிக்கு என்ன குழம்பு வச்ச?''
''கத்தரிக்கா போட்டு காரக் குழம்பு.''
''சோறு இருக்குதா?''
''ஒரு பானை சோறு வடிச்சு வச்சிருக்கேன்.''
''ஒரு பிடி போட்டு, குழம்பு ஊத்தி கொண்டா.''
''சின்னம்மா...''
''அட... கொண்டாங்குறேன்.''
தப தபவென்று தன் வீட்டிற்குள் ஓடினாள். எல்லாம் குடிசையாக கிடந்தவை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஓலை குடிசைகள் அகற்றப்பட்டு, கான்கிரீட் கட்டடங்களாயின. சுள்ளி பொறுக்கி அடுப்பு எரிப்பது நின்று, எரிவாயு அடுப்புகள் வந்தன.
வீட்டுக்கு வீடு இலவச, 'டிவி' பெட்டிகள் கொடுக்கப்பட்டன. பெண்கள், சுள்ளி பொறுக்குவது நின்றது. மழை நாட்களானால், ஈர சுள்ளிகளையும், விறகுகளையும் ஊதி ஊதி பற்ற வைப்பதற்குள் உயிர் போகும் கஷ்டம் நின்றது. எந்த உயிரும் பசியோடிருத்தல் கூடாதென, இலவச அரிசி வழங்கப்பட்டது.
அதன்பின், பெண் முதல்வராக, ஜெயலலிதா வந்தபோது, கல்லுரலில் மாவாட்டுவது நின்றது. அம்மியில் அரைப்பதும், இயந்திரத்தில் பொடிப்பதும் காணாமல் போயிற்று. மிக்சியும், கிரைண்டருமாக மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்கள் வந்து பெண்களின் சுமை குறைந்தது. ஏழைகளின் வீடுகளிலும் கேழ்வரகு கூழும், கம்பங் களியும் நின்று, அவற்றிற்கு பதிலாக இட்லி, தோசைகள் சுடப்பட்டன.
வீட்டிற்குள் வந்த தேவானை, சுடச்சுட இட்லி குண்டானில் இருந்த இட்லிகளில் நான்கு எடுத்து வாழை இலையில் வைத்து, சின்ன கிண்ணத்தில் காரக்குழம்பு ஊற்றி எடுத்து வந்து கொடுத்தாள்.
அதைக் கண்ட ஜோதி, ''உங்கிட்ட நா சோறுதானே கேட்டேன்...'' என்றாள்.
''இல்ல, சின்னம்மா. நீங்க சம்பா அரிசி சோறு சாப்புடறவங்க. எங்க வூட்ல ரேஷன் அரிசி சோறு தான். கொட்டை, கொட்டையா இருக்கும். உங்களால் சாப்ட முடியாது. அதான், இட்லி கொண்டாந்தேன்,'' என்று, பணிவாய் பதில் சொன்னாள்.
பேசாது இலையை வாங்கி, இட்லிகளை குழம்பில் தோய்த்து சாப்பிடும் ஜோதியை, கூட்டம் ஆச்சரியமாக பார்த்தது.
''ரொம்ப நல்லாருக்கு தேவானை.''
சாப்பிட்டு முடித்ததும், இலையை வாங்கி சுருட்டி வீசினாள், தேவானை. கை கழுவ செம்பு நிறைய நீர் எடுத்து வந்தாள். அதற்குள், வயது முதிர்ந்த ஒருத்தி, டீ போட்டுக் கொண்டு வந்தாள்.
''இந்தா பாப்பா... இதக் குடி.''
அதையும் குடித்து முடித்த பின், கூட்டத்தை பார்த்தாள்.
''எல்லாரும் ஒக்கார்ந்துக்கிடுங்க... ஒங்ககிட்ட பேசணும்ன்னு சொன்னேனில்ல?''
ஆண்களும், பெண்களுமாக அவளை சுற்றி அரை வட்டமாக உட்கார்ந்து கொண்டனர்.
''சொல்லுங்க, சின்னம்மா.''
அவள் தொண்டையை செருமிக் கொண்டாள். பின்னர், பேச வேண்டியதை முடிவு செய்து விட்டவளாக, சிறிதும் தயக்கமின்றி ஆரம்பித்தாள்.
''உங்க அத்தினி பேருக்கும், நம்ம பெரிய ஐயா குணம் தெரியும். அவுரு கோவம் தெரியும். ஜாதி வெறி தெரியும். பிடிவாதமும், மூர்க்கத்தனமும் தெரியும். முரட்டு சுபாவம் தெரியும். இந்த கிராமத்துல, ஜாதி மாறி ஒருத்தரைக் கூட கட்ட விட்டதில்ல. சுப்ரமணி, உன் அக்காவ எப்படி பறிகொடுத்தன்னு, இங்க இருக்குற அத்தினி பேருக்கும் தெரியும்.''
ஒரு வினாடி நிறுத்தினாள். எதுவும் பேசாமல், அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது, கூட்டம்.
''சுப்ரமணியோட அக்காவுக்கு நடந்த மாதிரி, இந்த கிராமத்துல வேற யாருக்கும் நடக்கக் கூடாது. இந்த கிராமத்துல மட்டுமில்ல, எங்கயும், யாருக்கும் நடக்கக் கூடாது.''
''நீங்க சொல்றது புரியலீங்களே?''
''புரியும்படி சொல்றேன். நம்ம சின்னய்யா, பட்டணத்துல இருக்குற ஒரு ஐயிரு பொண்ணு மேல ஆசைப்படுறாரு. நல்லா படிச்ச பொண்ணு. பெரிய வேலையில் இருக்குற பொண்ணு... இந்த விஷயம் தெரிஞ்சதிலிருந்து, பெரிய ஐயா, அரிவாளை துாக்கிக்கிட்டு குதிக்கிறாரு...''
அதுவரை விபரம் தெரியாத பாதி ஜனம், வாய் பிளந்தது.
''சின்னய்யாவுக்கு, ஒங்கள கட்டி வைக்கப் போறதாதானே, ஐயா சொன்னாரு.''
''அவரு சொல்லிக்கிட்டு தான் இருக்காரு... ஆனா, சின்னய்யா மனசுல வேற ஒரு பொண்ணுல்ல இருக்குறா. ஐயிரு வூட்டு பொண்ணுங்க பளீர்னு இருப்பாங்க. ரோஜாப்பூ நெறம், தாழம்பு நெறமா இருப்பாங்க.''
''இருக்கட்டும் சின்னம்மா... ஆனா, உங்க குணம்...''
''அவளும் குணவதியாகத்தான் இருக்கணும். இல்லாட்டி போனா, சின்னய்யாவுக்கு புடுச்சிருக்காது.''
''நீங்களே இப்படி பேசுறீங்களே, சின்னம்மா... நீங்க கொழந்தையா இருந்ததுலேருந்து, அவுருக்கு நீங்க - உங்களுக்கு அவருன்னு சொல்லிச் சொல்லித்தானே வளர்த்தாங்க...''
''இருக்கலாம். ஆனா, எனக்கு, சின்னய்யா மனசு சோணக் கூடாது. அவுரு விருப்பத்துக்கு மாறா நடக்கக் கூடாது. அதே மாதிரி, பெரிய ஐயாவோட மானம், மரியாதை குறையக் கூடாது. கோவத்துலயும், ஆத்திரத்துலயும், அவுரு, சின்னய்யாவையோ, அந்த பொண்ணையோ ஒண்ணும் செய்துடக் கூடாது...''
அத்தனை பேரும் மவுனமாக இருக்க, ''இதுக்கு, நாங்க என்ன செய்ய முடியும்?'' சுப்ரமணி கேட்டான்.
''என்ன செய்ய முடியாதுன்னு நினைக்கிறீங்க... இது, ஒங்க குடும்பமும் கூடத்தான். எப்பவுமே நாங்க தள்ளி நின்னதில்ல. நல்லது கெட்டது எல்லாத்துலயும் பங்கு போட்டுக்கிட்டுதா இருக்கோம். அண்ணன் தம்பியா, அக்கா தங்கையாத்தா பழகுறோம்.
''சின்னய்யா உங்க கூட பொறக்காம போகலாம். ஆனா, உங்க எல்லாருக்கும் தம்பி தான். எங்க அத்தை பெத்த மவன்தா... ஆனா, இங்க உள்ள தாய்மாருங்களுக் கெல்லாம் அவுரு மகன் தான்...''
'அம்... மா... டீ...' என, வயதான பெண்கள் உருகினர். ஒரு கிழவி எழுந்து, அவள் கன்னத்தை திருஷ்டி சொடுக்கினாள்.
''சொல்லு அம்மாடீ... நாங்க இன்னா செய்யணும்?''
கை கூப்பினாள், ஜோதி.
''உங்க எல்லாரையும் வேண்டி கேட்டுக்கறேன். பெரிய ஐயாகிட்டருந்து சின்ன ஐயாவையும், அந்த பொண்ணையும், நீங்க தான் காப்பாத்தணும்... அவங்க உசுருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது.''
அவளது கண்கள் கரைந்து, கன்னங்களில் வழிவதை பார்த்த பெண்கள், அழத் துவங்கினர். குரல் கரகரத்தனர், ஆண்கள். எவன் முதன் முதலாக, அவளது மாமனுக்கு எதிராக குரல் எழுப்பினானோ, அவன், ''நீங்க கவலைப்படாதீங்க, சின்னம்மா... நாங்க அத்தினி பேரும் உங்க பக்கம் தான் இருப்போம்,'' என்றான்.
நிம்மதிப் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது, ஜோதியிடமிருந்து.
'அப்பாடா... முதல் தடை உடைத்தாகி விட்டது...'
நாற்காலியில் இருந்து எழுந்து, மீண்டும் கை கூப்பினாள்.
''இந்த விசுவாசத்துக்கு என்னிக்கும் நன்றி உடையவளா இருப்பேன். நா வரேன்... வரும்போது கனத்த மனசோட வந்தேன். இப்ப கொஞ்சம் பாரத்த எறக்கி வச்சிட்டு போறேன்,'' என்றாள், ஜோதி.

தொடரும்
இந்துமதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-நவ-202004:56:07 IST Report Abuse
NicoleThomson அட போங்க அரைச்ச மாவையே அரைச்சுக்கிட்டு
Rate this:
Cancel
SK Abraham - Tirunelveli,இந்தியா
01-நவ-202018:17:31 IST Report Abuse
SK Abraham ஏழைகளின் வீடுகளிலும் கேழ்வரகு கூழும், கம்பங் களியும் நின்று, அவற்றிற்கு பதிலாக இட்லி, தோசைகள் சுடப்பட்டன. -சத்தான உணவுகள் வீண் விளம்பரங்களால் அழிக்கப்படுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X