விசா பப்ளிகேஷன்ஸ், 'பாலகுமாரனின் முகநுால் பக்கம்' நுாலிலிருந்து: திருவண்ணாமலைக்கு போகும் பேருந்தில் இருந்தேன். பகவான் யோகிராம்சுரத்குமாரை பார்க்க திட்டம். அவர் நாமம் ஜபித்துக் கொண்டிருந்தேன். தேஜஸ் ஏறுமல்லவா. அவர் வியப்பார் அல்லவா. எல்லாம் என் கணக்கு; முட்டா கணக்கு.
பிருந்தாவன் லாட்ஜ். முகம் அலம்பி, புது வெள்ளை உடை. பின், விபூதி பட்டை... தேஜஸ் வந்து விட்டது, யோகி வியப்பார் என்ற எண்ணம் வந்தது.
கீழிறங்கினேன். சில பெண்கள் உட்பட, 'ஆட்டோகிராப்' கேட்டனர்.
'அட, பகவான் யோகிராம்சுரத்குமார் பார்க்கவில்லையே இதை. நான் எவ்வளவு, 'பாப்புலர்' என்று தெரிந்திருக்குமே...' மனம் கணக்கு போட்டது; முட்டா கணக்கு. சிறிது துாரம் நடந்து பகவான் இல்லம் போனேன்.
'யார் அது சசி...' பகவான் கேட்டார்.
என் பெயர் சொல்லப்பட்டதும், கம்பி கதவு விரிய திறக்கப்பட்டது.
பாய் அதிகம் விரிந்தது. வழக்கம்போல், அவர் வலப்பக்கம் அமர்ந்தேன்.
'சசி வேற யாரு...' பகவானுக்கு கீச்சு குரல்.
'ஆறேழு பேர் இருக்காங்க, பகவான்...'
'உள்ள வரச்சொல்லு...'
பேருந்தில் என்னிடம் பேச வந்த ஒருவரை புறக்கணித்திருந்தேன். வந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அவர் கையில் சாமந்தி மாலை.
'இவரு யார் தெரியுமா...'
அவரிடம், என்னை சுட்டிக் காட்டி கேட்டார்.
'தெரியும் சாமி, பெரிய ரைட்டரு...'
'மாலைய அவருக்குப் போடு...'
எனக்கு மாலை போடப்பட்டது. நான் வெட்கப்பட்டேன். அடுத்த ஆள், அடுத்த மாலை; அடுத்த ஆள், அடுத்த மாலை; ஏழு மாலைகள் போடப்பட்டன.
'கழற்றக்கூடாது...' என்று கட்டளையிட்டார், பகவான்.
மாலைகள், கழுத்தை அறுத்தன. வியர்த்த வெள்ளை சட்டையில் மஞ்சள், நீலம், சிகப்பு மாலையின் நுால் நிறங்கள் ஏறின. சட்டை பாழாயிற்று. தேஜஸ்? நான் கவலைப்பட்டேன். அதேசமயம் மந்திரித்து விட்ட கோழி போலும் இருந்தேன்.
'வேறு யாரும் உண்டா சசி?'
'இல்லை, பகவான்...'
'பாலகுமார் கிளம்பு. போகலாம். நோ நோ மாலையை எடுக்காதே. இந்தா, இவைகளை வாங்கிக் கொள்...'
இடக்கையில் குச்சி கொட்டாங்குச்சி, வலக்கையில் விசிறி, கழுத்தில் ஏழு மாலைகள். பூம்பூம் மாடு மாதிரி அவரோடு தெருவில் நடந்து போனேன். பார் புகழும் திருவண்ணாமலை, என்னை பார்த்து சிரித்தது.
'நீ பெரிய கிரேட் என்று காட்டத்தானே ஆசைப்பட்டாய். இதோ பகவானே காட்டுகிறார்...' மனம் தவித்தது.
'சத்குரு, நான் அலட்டிக் கொண்டது பிசகு. உங்களை சாதாரணமாக எடை போட்டது தவறு...' என்று, மனம் கலங்கியது.
இச்சம்பவத்துக்கு பின், நான் எழுத்தாளன் என்கிற கர்வம், சிறிதும் வரவேயில்லை. பாராட்டுகளை உள்ளே கொண்டு போனதும் இல்லை.
திருவரசு புத்தக நிலையம், ஏ.எல்.எஸ்.வீரய்யா எழுதிய, 'நாடகமும் சினிமாவும்' நுாலிலிருந்து: குமாரபாளையத்தில், இழந்த காதல் என்ற மேடை நாடகம். ஒப்பனை அறையில் இருந்த, எம்.ஆர்.ராதாவிடம், மேனேஜர் வேக வேகமாக ஓடி வந்தார்.
'நாடகம் பார்க்க, ஈ.வெ.ரா., அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே.சம்பத் வந்திருக்கின்றனர். உட்கார வைக்க இடமில்லை...' என்றார்.
'இஷ்டமிருந்தால் தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும். இல்லையென்றால் போகட்டும்...' என்று, கண்டிப்பாக கூறிவிட்டார், ராதா.
காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வந்த இவர்கள் மூவரும், தரையில் அமர்ந்தே நாடகத்தை பார்த்து ரசித்தனர்.
இடைவேளை நேரம். டக்கென மேடை ஏறினார், அண்ணாதுரை.
'அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல, நாங்கள் வந்துள்ளோம். திராவிடர் கழக மாநாடுகள் நுாறு நடத்துறதும் சரி,
எம்.ஆர்.ராதா, நாடகம் ஒண்ணு நடத்துறதும் சரி...' என்று பாராட்டி, பேசி அமர்ந்தார்.
ராதாவுக்கு மகிழ்ச்சி. நாடகத்தை முழுமையாக பார்த்துவிட்டே, அவர்கள் மூவரும் கிளம்பினர்.
நடுத்தெரு நாராயணன்