அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 நவ
2020
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 27. அப்பா, அம்மா, இரு அண்ணன்கள், அண்ணிமார்கள் மற்றும் குழந்தைகள் என, கூட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். வாடகை வீடு தான். நான், கார் ஒர்க் ஷாப்பில் பெயின்டராக பணிபுரிந்து வருகிறேன். மாதம், 18 ஆயிரம் சம்பளம். அண்ணன்களும் இதே தொழில் தான்.
எனக்கு சில காலத்துக்கு முன், முதுகில் சிறிய வெண் புள்ளியாக ஆரம்பித்து, 2 அடி வரை படர்ந்தது. மிக பிரபலமான தோல் மருத்துவரை அணுகி, மருத்துவம் பார்த்தேன். பிறகு, அந்த வெண் புள்ளி படரவே இல்லை. எட்டு ஆண்டுகள் ஆகியும் அப்படியே தான் உள்ளது.
மீண்டும் பரிசோதனை செய்து, 'வெண் புள்ளி கிடையாது; தோல் முதிர்ச்சியால் நிறம் மாறியுள்ளது. இதற்கு மருந்து தேவையில்லை...' என்றனர், மருத்துவர்கள்.
வீட்டில் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்து, அடிக்கடி வயிற்று வலி வந்தது. மீண்டும் மருத்துவமனை நாடினோம். 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது, ஒரே ஒரு கிட்னி இருப்பதாக கூறினர். குடும்பத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி.
'நான் தருகிறேன், நான் தருகிறேன்...' என்று அனைவரும் எனக்கு ஆறுதல் கூறினர். ஆனால், மருத்துவரோ, 'ஏதும் செய்ய இயலாது. பிறவியிலேயே இல்லாததால் பொருத்த முடியாது...' என்று கூறிவிட்டார்.
'அதிக எடை கொண்ட பொருட்களை எடுக்க கூடாது. உடல் எடையை கூட்டக் கூடாது...' என்றார், மருத்துவர்.
நான் கட்டுக்கோப்பாக இருக்கிறேன்; எடை, 55 கிலோ. என்னிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆகையால் தான் மற்றொரு கிட்னி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
'ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...' என்றனர். அப்படியே தான் செய்து வருகிறேன், அம்மா.
பிறவியிலேயே கிட்னி இல்லாதபோது, விந்தணு சுரப்பி இல்லை. ஆகையால் உயிரணுக்கள் உற்பத்தி ஆவதில்லை. இதற்கென மருத்துவரை அணுகி, பல பரிசோதனைகள் செய்து விட்டேன்.
'ஓர் குழந்தைக்கு அப்பாவாவது சந்தேகம். ஒருவேளை, விந்து பையில் உயிரணுக்கள் உற்பத்தியானால் ஊசி மூலம் பெறலாம். அதற்கு நிறைய செலவாகும்...' என்றார், மருத்துவர்.
இந்த பிரச்னைகளை, அம்மா மற்றும் அண்ணன்களிடம் கூறி அழுதேன். அவர்களும் அழுதனர்.
நான் ஜாலியாக பழக கூடியவன். எப்போதும் கலகலப்பாகவும், சிரித்த முகமாகவும் இருப்பேன்.
ஆனால், இப்போது எல்லாம் மறந்து விட்டது. சிரிக்க கூட தெரியவில்லை; மன அழுத்தத்தில் உள்ளேன், அம்மா.
இது தெரிந்தும், வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது. என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக வேண்டாம் என, கருதுகிறேன். ஆனால் வீட்டில், 'இதுபற்றி பேச வேண்டாம். நல்லபடியாக திருமணம் செய். கடவுள் துணை இருப்பார். நடப்பது எல்லாம் நன்மைக்கே என நினை...' என்கின்றனர்.
அதை நினைத்து நினைத்து மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். தவறான எண்ணங்கள் என்னை துாண்டுகின்றன. அவர்கள் சொல்வதை போல், நான் திருமணம் செய்து கொண்டு, பின்னாளில் இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுமோ என்று பயப்படுகிறேன். நான் திருமணம் செய்யலாமா, வேண்டாமா...
என்ன செய்வதென்று தெரியாமல், துாக்கம் இல்லாமல் தவித்து வருகிறேன். தங்களின் பதிலை விரைவில் எதிர்நோக்கி, கண்ணீருடன் காத்திருக்கிறேன்.
- இப்படிக்கு,
உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு —
உனக்கு உடலில் மூன்று பிரச்னைகள் இருப்பதாக கூறியுள்ளாய்.
1. முதுகில், 2 அடி நீளமுள்ள தோல் நோய் அல்லது வெண் புள்ளி.
2. பிறவியிலேயே ஒரே கிட்னி.
3. விந்தணு சுரப்பி இல்லை.
சாதாரணமாக ஒரு மனிதனுக்கு முதுகே, 2 அடி நீளம் தான் இருக்கும். உனக்கு அதே நீளத்தில் தோல் பிரச்னை என எழுதியுள்ளாய்.
'மெலனோசைட்ஸ்' இறந்து விட்டாலோ 'மெலானின்' நிறமிகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டாலோ தோல், முடி, கண்களின் நிறம் வெண் நிறமாகி விடும்.
கார்டிகோஸ்டீராய்டு மருந்து, வெண் புள்ளிகளை, 57 சதவீதம் குணப்படுத்தும்.
கீரைகள் பழங்கள் சாக்லேட் காய்கறிகளை உணவில் நிறைய சேர்த்து கொள்ளலாம். வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர் அறிவுரைபடி உட்கொள்ளலாம்.
மீன், வாழைப்பழம், தக்காளி, சோயாபீன்ஸ், முந்திரி பருப்பு பூசணி விதைகள் உண்ணலாம்.
தோல் வியாதிகளுக்கென்று சோப் தனியாக விற்கிறது. அதை உபயோகிக்கலாம். பிறர் உபயோகிக்கும் ஆடைகள் மற்றும் துண்டுகளை பயன்படுத்தக்கூடாது. தோல் வியாதிகள் குணமாக சித்தாவில் சிறந்த மருந்துகள் உள்ளன.
பிறவியிலேயே ஒரே கிட்னியுடன் பிறப்போர் ஆயிரத்தில் ஒருவர். ஒரு கிட்னியுடன் பிறப்போர், இரண்டு கிட்னியுடன் பிறந்தோர் செய்யும் எல்லா பணிகளையும் மேற்கொள்ளலாம்.
ஒரே கிட்னியுடன் பிறந்தவருக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
உன்னுடைய கடிதத்தில், 'விந்தணு சுரப்பி இல்லை' என, ஒரு இடத்திலும், 'விந்து பையில் உயிரணுக்கள் உற்பத்தியானால் ஊசி மூலம் பெறலாம்' என, ஒரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளது. எது உண்மை?
மகனே நீ பின்வரும் விஷயங்களை செய்.
1. மிகச் சிறந்த தோல் நோய் மருத்துவரை அணுகி, உன் முதுகு தோல் பிரச்னைக்கு இரண்டாவது அபிப்ராயம் பெறு. தோல் பிரச்னையை முழுதும் குணப்படுத்த பார்.
2. முழு உடல் பரிசோதனை செய்து ஒற்றை கிட்னி உடலில் எற்படுத்தியிருக்கும் சாதக - பாதகங்களை ஆராய்ந்து அறி.
3. செக்ஸாலஜிஸ்ட்டை அணுகி முழுமையான ஆண்மை பரிசோதனை செய்து கொள்.
உன்னுடைய மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் திருப்திகரமாக அமையாவிட்டால் தயவுசெய்து திருமணம் செய்து கொள்ளாதே. ஏற்கனவே உடல் நோவுகளால் அவதிப்படும் நீ, திருமணம் செய்து, மனைவியையும் துன்பக்கடலில் ஆழ்த்தி விடாதே.
வீட்டாரின் பேராசையை நிறைவேற்ற, திருமணம் செய்து கொண்டால், மனைவியாக வரும் பெண்ணுக்கு யார் பதில் சொல்வது?
எத்தனையோ ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போ.

என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X