* தேங்காய் பர்பி செய்யும்போது, தேங்காயுடன் ஊற வைத்த நிலக்கடலையையும் சேர்த்து அரைத்து செய்தால், அதன் ருசியே அலாதி தான்
* எந்த வகை முறுக்குக்கும், ஒரு ஈடுக்குக்கு தேவையான மாவையே தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். இவ்வாறு செய்வதால், முறுக்கு கடைசி ஈடு வரை சிவக்காது
* ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் அரைத்து, அல்வா கலவையுடன் கலந்து செய்தால், கண்ணாடி போல பளபளப்பாகவும், சுவையுடனும் இருக்கும்
* 'நான் - ஸ்டிக் பேனில்' திரட்டுப்பால் செய்தால், பால் பொங்காது. அடிக்கடி கிளற வேண்டிய அவசியமுமில்லை; ஓரங்களில் ஒட்டாது. சாதாரண பாத்திரத்தில் செய்வதை விட, திரட்டுப்பால் சிறிது அதிகமாகவே கிடைக்கும்
* கோதுமை மாவை வறுத்து, அளவான நீர் விட்டு கரைத்து, கொதிக்க வைத்து, கை விடாமல் நெய் விட்டு கிளற வேண்டும். தேவைக்கேற்ப சர்க்கரை, ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து, அல்வா பதம் வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பினால், சுவையான, மணமான அல்வா தயார்
* முறுக்கு செய்யும்போது, கடலை மாவை குறைத்து, பொட்டுக் கடலை மாவை சேர்த்தால், மொறு மொறுப்புடன் இருக்கும்
* மாலாடு, பாசிப்பருப்பு உருண்டை செய்யும்போது, அதனுடன், கால் பங்கு சத்து மாவையும் சேர்த்து செய்ய, சுவை கூடும்
* எந்த வகையான லட்டு செய்தாலும், சிறிதளவு கோவா சேர்த்துக் கொண்டால், ருசி அதிகரிப்பதுடன், மெத்தென்றும் இருக்கும்
* போளி தட்டும்போது, வாழை இலையின் பின்பக்கம் தட்டினால், இலை சீக்கிரம் கிழியாமல் இருப்பதுடன் போளியும் நன்றாக வரும்
* பஜ்ஜி மாவை, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து செய்தால், மிருதுவாகவும், உப்பியும் வரும்
* பாதுஷா செய்யும்போது, மாவில் கொஞ்சம் தயிர் விட்டு பிசைந்தால், மிகவும் மிருதுவாக இருக்கும்
* மைசூர் பாகு செய்வதற்கு எல்லாரும் கடலை மாவை மட்டும் தான் பயன்படுத்துவர். ஆனால், இரண்டு பங்கு பாசிப் பருப்பு, ஒரு பங்கு கடலை பருப்பு என்ற விகிதத்தில் மாவை கலந்து மைசூர் பாகு தயாரித்தால், ருசியாக இருப்பதோடு, வாயில் போட்டால் கரையும் அளவுக்கு மென்மையாக இருக்கும்
* சீடை செய்யும்போது, வெடிக்காமல் இருக்க, மாவு உருண்டையை, ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போட்டு எடுங்கள்
* தட்டை செய்யும்போது, முழு மிளகு போடாமல், ஒன்றிரண்டாக தட்டிப் போட்டால், வாசனையாக இருக்கும்
* குலோப்ஜாமுனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால், உடையவே உடையாது; விரிசலும் ஏற்படாது.
கீதா ஹரிகரன்