சிறகிலிருந்து பிரிந்த இறகு போல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2020
00:00

''அப்பா... அப்பா... நம் பாட்டியை பார்த்தேன்ப்பா,'' மூச்சு வாங்க நின்றாள், செல்வி.
கையிலிருந்த நாளிதழ் நழுவ, ''எங்கே... எங்கே பார்த்தே?'' என்று எழுந்தான், முரளி.
''உஷ்... அம்மா எங்கேப்பா,'' விழிகளை நாலாபுறமும் உருட்டியபடி கேட்டாள், மகள்.
அவள் கன்னத்தை தட்டியபடியே, ''அம்மா இல்லை; சித்தி வீட்டுக்கு போயிருக்கிறா.''
''அப்பாடா... என் ப்ரெண்ட் அஞ்சு இல்லே... அவளோட அம்மா இன்னிக்கு ஸ்கூலுக்கு வந்தாங்கப்பா... அவங்களோட நம் பாட்டியும் வந்திருந்தாங்க... ஓடிப்போய், பாட்டீன்னு கூப்பிட்டேன். அவங்க என்கிட்ட பேசவேயில்லப்பா... அஞ்சு வேற, 'போடீ... இது எங்க பாட்டி... ஊரிலிருந்து வந்திருக்காங்க'ன்னு சொல்றாப்பா... அந்த பாட்டியும், கட்டிப் பிடிச்சு, அஞ்சுவுக்கு முத்தம் தந்தாங்கப்பா,'' சொல்லி சிணுங்கினாள்.
முரளிக்கு, 'சப்'பென்றாகி விட்டது. குழந்தை யாரையோ பார்த்து ஏமாந்திருக்கிறாள் என, நினைத்து கொண்டான்.
அம்மா காணாமல் போய், ஐந்தாறு மாதத்திற்கு மேலாகி விட்டது, 2,000 ரூபாய் தாளை கொடுத்தனுப்பி, எதுவோ வாங்கி வரச்சொல்லியிருக்கிறாள், மனைவி திவ்யா. பணத்தை எங்கேயோ தொலைத்து விட்டு வந்தவரை, குதறியெடுத்து விட்டாள்.
வரம்பு மீறி பேசியவளிடம், கையையும் நீட்டி விட்டான்.
அம்மாவுக்கு மறதி நோய் இருப்பது தெரிந்தும், அவரை வெளியே அனுப்பியது தப்பு என்ற வாதம் எடுபடவில்லை. யாருமே சாப்பிடாமல் இரவு கழிந்தது. அறைக்குள் போய் தாழிட்டுக் கொண்ட, திவ்யா, பொழுது விடிந்தும் வெளியே வரவே இல்லை.
அம்மாவையும் காணோம். அல்லாடி விட்டான், முரளி.
மெதுவாக வெளியே வந்த திவ்யா, என்ன ஏது என்று எதையும் கேட்டுக் கொள்ளாமலே, வழக்கமான செயல்களில் இறங்கினாள். முரளியின் புலம்பலை சட்டை செய்யவில்லை. குழந்தையை கிளப்பி பள்ளிக்கு அனுப்பினாள்.
ஆபீசுக்கு விடுப்பு போட்டு தேடினான், முரளி; பலன் இல்லை.
இவனும், செல்வியும் தான் தவித்து போயினர். போலீசில் புகார் கொடுக்கக் கூடாது என்று கூறி விட்டாள், திவ்யா.
அம்மாவுக்கு, 'அல்ஸீமர்' என்ற மறதி நோய் வந்தது முதலே, பிரச்னை தான். சற்று முன் நடந்தது கூட மறந்து விடும். முரளியையே, 'யார் பெத்த பிள்ளையோ...' என்பாள்.
அப்பா இறந்து, அம்மாவுக்கும் இந்த நோய் தாக்கம் வந்ததுமே, அவரை ஓரங்கட்டி, குளவி போல கொட்டத் துவங்கி விட்டாள், திவ்யா. இத்தனைக்கும் அம்மா அதிர்ந்து கூட பேச மாட்டாள்.
ஒரு வாரம் ஓடியது.
''அப்பா... அங்கே பாருப்பா... என் ப்ரெண்ட் அஞ்சு போறா... நிறுத்துப்பா வண்டியை,'' என்று, செல்வி கத்தியதால், டூ-வீலரை நிறுத்தினான், முரளி.
நான்கு வீடு தள்ளியிருந்த ஒரு வீட்டு கதவை திறந்து, ஒரு சிறுமி உள்ளே போனாள்.
''அப்பா... இவதாம்ப்பா அஞ்சு. இவ வீட்டுலதான்ப்பா நம் பாட்டி இருக்காங்க. வாப்பா போய் பார்க்கலாம். எனக்கு தெரியும், அன்னிக்கு நீ நம்பலைதானே,'' குழந்தையின் குரலில் ஏக்கம் குமிழியிட்டது.
''சரி... வா போகலாம்,'' என்றவன், செல்வியின் கையை பிடித்து, அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவை திறந்தது, அம்மா தான். ஒரு கணம் கண் இமைத்தலை மறந்தே விட்டது.
'பாட்டீ' என்று தாவிக் கொண்டாள், செல்வி. கைகள் ஒருகணம் வாஞ்சையாக அணைத்து, பிஞ்சு கையினின்று தன்னை விடுவித்துக் கொண்டதுடன், முகத்தின் மலர்வு மாறாமலே, 'யாருடீ தங்கம் நீங்க... உங்க பாட்டி போல இருக்கேனா நான்...' என்ற சொல்லில் மிரண்ட சிறுமி, பின்னால் நின்ற அப்பாவை, நிமிர்ந்து பார்த்தாள்.
''வாங்க தம்பி... யாரு வேணும்,'' என்ற அம்மாவின் கேள்வி, அவனை செதில் செதிலாக்கியது.
''நான்... நான்தாம்மா முரளி, உங்க பிள்ளை...'' என்ற வார்த்தை தொண்டைக் குழியில் அடக்கமானது.
'ரகு... ரகுராமா...' என்று உள்புறம் திரும்பி அழைக்கு முன்பே, வெளியே வந்தவனை தொடர்ந்து, சிறுமியும் வந்தாள்.
''ஐ... செல்வி. அப்பா... என் ப்ரெண்ட்,'' என்றபடியே முன்னே வந்து தோழியின் கையை பற்றிக் கொண்டாள், அஞ்சு.
''வாங்க... வாங்க சார்,'' என்று அழைக்க, மூண்டு எழுந்த துக்கத்தை மறைத்தான், முரளி.
''இவள் செல்வி... வைகைச் செல்வி... சும்மா இந்த பக்கம்... வந்து...'' இழுத்தான்.
''சார், உட்காருங்க... உங்க பெண்ணை ஸ்கூல்ல பார்த்திருக்கேன்...'' என்றவன், ''ஜானு,'' என்று குரல் கொடுத்தான். ''ஒரே நிமிஷம்,'' என்று பதில் வந்தது.
சோபா ஓரமாய் தரையில் அமர்ந்தபடி, முல்லை அரும்புகளை தொடுத்துக் கொண்டிருந்தாள், அம்மா.
அப்பாவோடு வாழ்ந்த காலத்தில் எப்படியோர் திருத்தமாக தெரிந்தாலோ, அப்படியோர் பாங்கும், தெளிவும் முகாமிட்டிருந்தது முகத்தில். முன்னால் அமர்ந்திருக்கிற அம்மாவுக்கும், தன் வீட்டிலிருந்து காணாமல் போன அம்மாவுக்கும் எட்டு அல்ல, எண்ணாயிரம் வித்தியாசம் தெரிந்தது. அது, அவனுக்கு மகிழ்வையும், வருத்தத்தையும் ஒருங்கே தந்தது.
அப்பா இறந்த பின்பு, இந்த தெளிவு, 'மிஸ்சிங்!' கண்கள் பயத்திலேயே மிதக்கும். திவ்யாவின் முன் நிற்கவே தயக்கம். அவள் பேச்சுகளால் தலை இன்னும் தாழும். இப்போது, அம்மாவை இப்படி கண்டதும், மடியில் தலை சாய்த்து கதறத் தோன்றியது.
''இவங்க... இவங்க...'' என்று, பேசத் துவங்கிய முரளியை, ''என் அம்மா,'' என்ற ரகுராமனின் பதில் அடைத்துப் போட்டது.
'அப்பா... நம் பாட்டீப்பா...'
வரும்போது சிணுங்கிய செல்வியின் குரல், அவனை அறுத்தது.
அதன் பிறகு, ரகுவை பார்த்து, நட்பு பாராட்டி, வீட்டுக்கு வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டான். அவ்வப்போது செல்வியும் வருவாள். இருவரும் இதை திவ்யாவிடம் கொண்டு போகவேயில்லை. ஒன்பது வயது சிறுமிக்கு என்ன புரிந்ததோ, அவளும் அமைதியாகவே இருந்தாள்.
அன்று -
ரகுவின் வீட்டுக்கு வந்த முரளி, ''இன்று, என் அம்மாவின் பிறந்த நாள். என் அம்மா இப்போது என்னுடன் இல்லை. நீங்க இதை ஏத்துக்கிடணும்,'' என்று புடவை பார்சலை அம்மாவின் முன் நீட்டினான்.
ரகுவின் முகம் பார்த்த அம்மா, அவன் தலையசைத்த பின்பு அதை வாங்கிக் கொண்டது, முரளிக்கு ரொம்பவே வலித்தது.
திடீரென்று, முரளிக்கு போன் செய்து, காபி ஷாப்க்கு வரும்படி சொன்னான், ரகு. முரளிக்கு முன்பே வந்திருந்த ரகுவின் முகம் ஏனோ சுரத்தின்றி இருந்தது.
''ரகு... என்னாச்சு... யாருக்கும் உடம்பு சரியில்லையா என்ன, என்ன பிரச்னை?'' என்றான், முரளி.
''ப்ச்... இது வேற. எனக்கு, கோயம்புத்துார், 'டிரான்ஸ்பர்' ஆகிருச்சு, முரளி.''
''என்ன?''
''ஆமாம்... அங்கேயே ஆபீஸ் குவாட்டர்ஸ் தர்றாங்க. ஆனா, மனசெல்லாம் குழப்பம்.''
முரளிக்கு முள் குத்தினாற் போன்ற வேதனை. அமைதியாக இருக்க முயன்றான்.
''உங்ககிட்ட மனம் திறந்து பேச ஆசைப்படுறேன், முரளி. நானும், ஜானுவும் அனாதை ஆசிரமத்துலே வளர்ந்தவங்க. படிப்பு முடிச்சதுமே, ஏன், 21 வயசாயிட்டாலே வெளியே அனுப்பிடுவாங்க. அப்படி வெளியே வந்தபோது, யதேச்சையா சந்திச்சோம்.
''அனாதைக்கு அனாதை தான் உறவுன்னு நினைச்சோம்; கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். அஞ்சுவும் பிறந்திட்டா. அப்பதான் ஒருநாள், என் வீட்டு வாசலில் மயக்கமா விழுந்து கிடந்தாங்க, அம்மா. ஆமாம் முரளி, அவங்க என் சொந்த அம்மா இல்லை. இவங்க வந்த பிறகு தான், எங்களுக்கு ஒரு முழுமையே கிடைச்சது.
''தாய் அன்பின் ருசி, எங்க ரெண்டு பேருக்குமே புரிஞ்சுது. அஞ்சுவுக்கு, பாட்டிங்கிற உறவு போனசா கிடைச்சது. அன்னிக்கு மயக்கம் தெளிய வச்சு பேசிப் பார்த்தோம். அவங்க பேரு, விலாசம் எதுவுமே தெரியலை. ஜானு சாப்பாடு தந்ததும், சாப்பிட்டாங்க.
''அன்றைக்கே டாக்டரிடம் போனோம். 'இவங்க, 'அல்சைமர்' நோயாளி. இன்று, இப்போ பார்த்ததை கூட மறந்துடுவாங்க. ரொம்ப ஜாக்கிரதையா, குழந்தை மாதிரி அன்பு காட்டி வைச்சுக்கிடணும். நோயை கட்டுப்படுத்தலாம்'ன்னு சொன்னார், டாக்டர்.
''உள்ளூர பயமாகவும் இருந்தது. அம்மாவை பிரிஞ்ச குடும்பம் என்ன கஷ்டப்படுதோ. ஒருவேளை அந்த குடும்பத்தார் அடையாளம் கண்டுபிடிச்சு, அழைச்சுட்டு போயிட்டா... அஞ்சு தாங்குவாளா... மனசுக்குள்ளே ஒரே பிராண்டல்.
''வந்த புதுசுல, ரொம்ப பயந்து பேசுவாங்க. தலையை நிமிர்த்தவே மாட்டாங்க. அப்புறம், நாங்க அவங்களோட தினம் பேசி பழகினோம்; நார்மலாகிட்டாங்க. இப்போ வரைக்கும், அம்மா என்னைத்தான் பிள்ளையா நினைச்சுகிட்டு இருக்கிறாங்க. பழசை பத்தி ஏதாவது கேட்டா, பயந்து, நடுங்கி, 'நீதானே என் பையன்; இல்லியா?'ன்னு கேட்டு அழறாங்க.
''ஒருவேளை, அம்மா எங்கூடவே இருக்கணும்ன்னு தோணுது. அதேசமயம், அம்மாவுடைய குடும்பம் இவுங்களை பிரிஞ்சு, எவ்ளோ கஷ்டப்படுதோன்னு தோணுது. ஒருநாள் இல்லை ஒருநாள், இதே ஊரிலிருந்தால், பழைய சொந்தங்களோடு, அம்மா இணைய வாய்ப்பு இருக்குன்னு நினைச்சேன். இப்போ, 'டிரான்ஸ்பர் வித் புரமோஷன்...' குற்ற உணர்வா இருக்கு, முரளி...'' எங்கோ வெறித்தான், ரகு.
உண்மையை சொல்லி, தன்னை நிரூபித்துக் கொள்ள முடியாத தன் நிலைமை, வேதனையை தந்தது, முரளிக்கு.
''ரகு, இப்படி யோசிச்சு பாருங்க... ஒருவேளை அம்மா, அவங்க குடும்பத்துக்கு வேண்டாதவங்களா இருந்து, வெளியேற்றப்பட்டிருந்தா... அவங்க அம்மாவோட வரவை விரும்பாதவங்களா இருந்தா...'' சொல்லிவிட்டு, விழிகளை துடைத்துக் கொண்டான், முரளி.
''அம்மாவையா... அம்மாவை வேணாம்ன்னு சொல்கிறவர்களும் இருப்பாங்களா, முரளி.''
''ஹும்... பெற்ற குழந்தையையே துாக்கி வீசிடுறாங்க. அம்மாவை தெருவில் விடுவதா கஷ்டம்.''
உடலும், உள்ளமும் தகித்தது, முரளிக்கு.
''எதையும் போட்டுக் குழப்பிக்காதீங்க, ரகு. அம்மா, சரியான இடத்துக்கு வந்திருக்காங்கன்னு தான் தோணுது. அவங்களை ராணி மாதிரி வச்சிருக்கீங்க. கடைசி காலம், அவங்க நிம்மதியா, அன்பான குடும்பத்துல, முக்கியமான மனுஷியாயிருந்து காலம் கழிக்க போறாங்க.
''தேடி வந்திருந்தா இத்தனை மாசத்துல வந்திருப்பாங்களே. இதையெல்லாம் துாக்கிப் போட்டுட்டு, வேலையை பாருங்க, ரகு... எனி வே, கன்கிராஜுலேஷன்ஸ். ஆனா, நானும், என் பொண்ணும் முடிஞ்சப்போவெல்லாம் கோவை வருவோம். வரலாம் தானே?'' என்றான், விளையாட்டாய்.
அவன் கையை இறுக்கி பிடித்தான், ரகு.
''என்ன முரளி, இப்படி கேட்கறீங்க. நாங்கள் எல்லாம் அன்புக்கு ஏங்குகிற ஜாதி,'' என்றான், ரகு, கண்ணீர் வடித்தபடியே.
முரளியின் விழிகளும் கசிந்தன.
இருவருமே, அம்மா என்றே ஒரே பெண்மணியை எண்ணி அழுதாலும், காரணங்கள் வேறு வேறாக இருந்தன.
சிறகின் அடுக்கிலிருந்து உதிர்ந்த ஒற்றைச் சிறகு, எப்படி மீண்டும் பறவையின் சிறகில் ஏற முடியாதோ அதுபோலவே, தன் தாயின் அன்பு முழுவதும் பகிர்ந்து கொள்ளப்படாமலே பிடுங்கப்பட்டு விட்ட சோகத்தில், கையாலாகாத்தனத்தில் நின்றான், முரளி.
அந்த நாளும் வந்தே விட்டது. வீட்டு சாமான்கள் முதல் நாளே கிளம்பி விட, இவர்கள், காரில் கிளம்பினர். செல்வியும், அஞ்சுவும் அழுது தீர்த்தனர்.
'அம்மா...' கடைசி நிமிடத்தில் ஏதேனும் அதிசயம் நடந்திடுமா.
அம்மாவையே சுற்றி வந்தான், முரளி.
தலை தடவி ஆசிர்வதித்தாள், அம்மா. ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள். செல்வியை கட்டிப்பிடித்து முத்தமிட்டாள். அவ்வளவு தான்! சிறு குழந்தையை போன்ற குதுாகலத்துடன் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டாள்.
முரளி அப்படியே நிற்க, அவன் கையை பிடித்து நகர்த்தி, அருகிலிருந்த பாபா கோவிலுக்குள் நுழைந்தாள், செல்வி. இருவரும், மரத்தின் கீழேயிருந்த சிமென்ட் இருக்கையில் அமர்ந்தனர்.
''அழாதேப்பா... அந்த ஜானு பெரியம்மா மாதிரி, நம்ம அம்மாவும் பாட்டிக்கிட்டே அன்பா இருந்திருக்கலாமில்லே...''
இருவரும் எதுவும் பேசவில்லை.
''அப்பா... பாட்டி, அஞ்சு வீட்டுலே சந்தோஷமா இருக்கிறாங்க; அங்கேயே இருக்கட்டும்பா... அந்த சந்தோஷத்தை, பாட்டிக்கு நம்மாலே, நம் வீட்டுலே வச்சு தர முடியாதுப்பா...'' பெரிய மனுஷி போல பேசிய மகளின் பேச்சில் சுய இரக்கம் தோன்ற, இரு கைகளாலும் முகத்தில் அறைந்து கொண்டான்.
'அம்மா... அம்மா...' என்ற வார்த்தை மட்டும் காற்றில் அலைந்து அலைந்து புரண்டது.

ஜே. செல்லம் ஜெரினா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dindigul Nana - Erode,இந்தியா
04-நவ-202012:56:49 IST Report Abuse
Dindigul Nana அருமை, அருமை, சில பேருக்கு இப்படித் தான் பேயும், பிசாசு போல மனைவி அமைந்து விடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X