உயிரே உனக்காக... (25)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2011
00:00

இதுவரை: கவிதாவின் குழந்தை, நரேன் வீட்டில் இருந்தது, மதுரிமாவிற்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, நரேனுக்கும், மதுரிமாவுக்கும் விவாதம் நடந்தது. அப்போது, கவிதாவின் மாஜி கணவன் ஆண்டர்சன் அங்கு வந்து, அக்குழந்தையை தான்தான் நரேன் வீட்டில் கொண்டு வந்து விட்டதாக கூறியதோடு, தன்னுடைய மனோவியல் ஆராய்ச்சிக்காக அப்படி செய்ததாகவும் கூறி, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான் —

"அந்தரங்கம் புனிதமானது என்று சொல்லி விட்டால் போதுமா? அர்த்தமும், அழகும் நிறைந்த இந்த சொற்கள், உள்ளத்தின் உண்மையை படம் பிடித்துக் காட்டி விடுமா? இவ்விரு வார்த்தைகள் மூலமே அக்னிப் பிரவேசம் நடத்திக் காட்டி விட்டதாக நம்புவதற்கு நான் ஒன்றும் ஏமாளி இல்லை. இதை, நீ என்னிடம் நிரூபித்துக் காட்ட வேண்டும்...' என்று, மதுரிமா சவால் விடுவதைப் போல உணர்ந்தான் நரேன்.
""மது... நான் சொல்வதை நம்பு... நான் அப்படிப்பட்ட ஆளில்லை.''
""இதைத்தான் நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்; ஆனால், நடப்பவை எல்லாம், அதை நான் நம்பும் விதமாக இல்லை.''
""சரி... நான் எதை, எப்படி நிரூபிக்க வேண்டும்?''
இன்னொரு மனிதனின் முன், தன் மனைவியே தன்னை சந்தேகித்து கேள்வி கேட்பதையும், பரிசோதிப்பதையும் விரும்பாத நரேன் ஒருவித, வெறுப்பிலும், கோபத்திலும் மதுவிடம் கேட்டான்.
""நீங்களும், அந்த கவிதாவும் தவறான எண்ணத்தில் பழகவில்லை. உங்கள் மனதில் அவளுக்கு இடமில்லை என்பதை எனக்கு நிரூபிக்க வேண்டும்.''
மது சொன்னதைக் கேட்டு, சில நிமிடங்களுக்கு பதில் ஒன்றும் பேசாமல், மவுனமாக நின்று கொண்டிருந்தான் நரேன். இதை, எப்படி நிரூபிப்பது என்று யோசிக்கிற மாதிரி மதுவுக்குத் தோன்றியது...
""என்ன யோசிக்கிறீர்கள்? வேறு என்ன சொல்லி இதிலிருந்து தப்பிக்கலாம் என்றா... இல்லை ஏமாற்றலாம் என்றா?''
""தொடர்ந்து தவறாகவே பேசிக் கொண்டிருக்கிறாய். இல்லாத ஒன்றை என்னால் எப்படி நிரூபிக்க முடியும் என்பதுதான் என் யோசனை.''
""இல்லாத ஒன்றா... இல்லாத ஒன்றின் மூலமாகத்தான், இத்தனை பிரச்னை, என் முன் நின்று, என்னை கேலி செய்து கொண்டிருக்கிறதா?''
""பிரச்னை உன் முன் வந்து நிற்கிறதா, நீ எதை பிரச்னை என்கிறாய்?''
இப்போது, கவிதாவின் கணவன் ஆண்டர்சன், குறுக்கே புகுந்து பேசினான்...
""குறுக்கே பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். மேடம், பிரச்னை என்று சொல்வது, உங்கள் வீட்டிற்குள் வந்திருக்கும் கவிதாவின் குழந்தையைத்தான்.''
""அவர் என்ன சொல்கிறார் பார்த்தீர்களா?''
""என்ன சொல்கிறார்?''
""இந்தக் குழந்தையை, எங்கள் குழந்தை என்று அவர் சொல்லவில்லை; கவிதாவின் குழந்தை என்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?''
""இதில், எந்தவித அர்த்தமும் எனக்குத் தெரியவில்லை.''
""எனக்குத் தெரிகிறது... இந்தக் குழந்தையை அவர் தன்னோடு சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பது புரியவில்லையா? நான், உங்களை சந்தேகிப்பதைப் போலவே, அவரும் கவிதாவை சந்தேகிக்கிறார் என்பதை உங்களால் உணர முடியவில்லையா?''
இவ்வளவு நேரமாக நரேனை சந்தேகித்துப் பேசிக் கொண்டிருந்த மதுரிமா, இப்போது ஆண்டர்சனை அவமானப்படுத்தும் விதமாக எழுப்பிய கேள்வியில், ஆண்டர்சனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்; ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, ஒரு அழுத்தமான புன்னகையுடன் பேசினான் ஆண்டர்சன்...
""நீங்கள் சொல்வது சரி மேடம்... இந்தக் குழந்தை விஷயத்தில், எனக்கு கவிதா மேல் நிறையவே சந்தேகம் உண்டு.''
ஆண்டர்சன் மேல் அளவு கடந்த ஆத்திரம் வந்தது நரேனுக்கு. ஆண்டர்சன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடலாமா எனத் தோன்றியது. மிகவும் சிரமப்பட்டு, உணர்வுகளை அடக்கிக் கொண்டான் நரேன்.
"சே... என்ன கணவன்... தனக்குப் பிறந்த குழந்தையையும், தன் மனைவியையும் சந்தேகிப்பதாக, வேறு ஒரு பெண்ணிடம் வெட்கமின்றி சொல்லும் ஜென்மம்!'
ஆண்டர்சன் சொன்னதைப் பற்றிய மதுரிமாவின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. அவன் சொன்னதை வைத்து, ஆண்டர்சனைப் பற்றி நினைத்துப் பார்க்கும் நிலையில் அவள் இல்லை. ஆண்டர்சன் கூறுவதில், அவளது கணவன் நரேனின் பங்கு என்ன என்பது பற்றி மட்டுமே யோசிக்கும் ஒரு சாதாரணப் பெண்ணின், தவறான சிந்தனை மட்டுமே அவளுள் இருந்தது.
""இதற்கு என்ன சொல்கிறீர்கள்?''
""இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இது, இவரும், இவரது மனைவி கவிதாவும் சம்பந்தப்பட்ட பிரச்னை...''
""இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது... எனக்கும் முன்பாகவே அந்த கவிதாவை உங்களுக்குத் தெரியும். இதோ, இப்போது இவர் சொல்லும் இந்தப் பிரச்னையில், உங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.''
""நானும், கவிதாவும் நட்பாகப் பழகுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக, இவ்வளவு பெரிய பழியை எங்கள் மீது போட வேண்டுமா?''
""மிஸ்டர் நரேன்... நீங்கள் என்னைத் தவறாக புரிந்து கொண்டு கேள்வி கேட்கிறீர்கள்... நான் எந்தப் பழியையும் உங்கள் மீது போடவில்லை.''
""தற்போது வேறு என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?''
கோபத்திலும், வெறுப்பிலும், நரேனின் கேள்வி கிண்டலாக வெளிப்பட்டது.
""மறுபடியும் சொல்கிறேன், நான் உங்கள் மேல் பழி சுமத்த இங்கே வரவில்லை. நான் வந்த நேரத்தில், உங்கள் மீது, உங்கள் மனைவி தான் இந்தப் பழியை சுமத்திக் கொண்டிருக்கிறார்.''
""எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி தானே உங்கள் பேச்சு அமைந்திருக்கிறது.''
""நோ மிஸ்டர் நரேன்... மனிதன் ஒரு சூழ்நிலை கைதி என்று நீங்கள் படித்ததில்லையா... எனக்கு, என் மனைவியைப் பற்றி சில சந்தேகங்கள்... அதேபோல், உங்கள் மனைவிக்கும், உங்கள் மீது சில சந்தேகங்கள். இந்த இரண்டுக்கும் பொதுவாய், கவிதா அமைந்து விட்டது தான் பிரச்னையே. என்ன மேடம்... நான் சொல்வது சரியா?''
"ரொம்பவும் சரி...' என்று வாய் திறந்து சொல்லவுமில்லை; "இல்லை' என்று மறுக்கவுமில்லை.
""இல்லை மது... இவர் சொல்வது, குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை மாதிரி தான்... இந்த மனிதர், ஒரு மனோவியல் ஆராய்ச்சியாளர். இவரது தவறான ஆய்வுகள், மனைவியைச் சந்தேகிக்கும் ஒரு மனநோயாளியாக இவரை மாற்றிவிட்டது தான் பரிதாபம்...''
— நரேன் சொன்னதைக் கேட்டு, கிண்டலாக சிரித்தான் ஆண்டர்சன்.
""என்ன செய்வது நரேன்... எல்லா ஆண்களுமே, ஜுலியட் சீசர்களாக பிறந்து விடவில்லையே... சீசரின் மனைவி ஒருத்திக்கு மட்டும் தானே, சந்தேகத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.''
""நான் அப்படி நினைக்கவில்லை... நல்ல மனைவியை சந்தேகிக்கிற கீழான நிலைக்கு நான் என்றும் போக மாட்டேன். என் மனைவி, சீசரின் மனைவியைப் போலத்தான்.''
""உங்கள் மனைவி, சீசரின் மனைவியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் ஜுலியட் சீசரா, இல்லையா என்பது தான் உங்கள் மனைவியின் சந்தேகம்.''
""என்ன சொல்றீங்க?'' என்று சீறினான் நரேன்.
""கிளியோபாட்ரா யார் என்பது தான், உங்கள் மனைவியின் கேள்வி. ஒருவேளை, அது என் மனைவி கவிதாவாக இருப்பாளோ என்பது தான் மேடத்தின் சந்தேகம்.''
சொல்லிவிட்டு, வாய்விட்டு, அட்டகாசமாகச் சிரித்தான் ஆண்டர்சன்.
அதுவரை, அவர்கள் மூவரும் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, திடீரென அழ ஆரம்பித்தது. குழந்தையை சமாதானப்படுத்த, குழந்தையின் அருகே சென்று, இரு கைகளையும் நீட்டி அழைத்தான் ஆண்டர்சன்; குழந்தை, அவனிடம் போக மறுத்தது. மாறாக, நரேனை நோக்கி வந்து, அவனது கால்களை, தன் பிஞ்சுக் கைகளால் கட்டிப் பிடித்து, அண்ணாந்து பார்த்தது.
ஒரு குழந்தையை மையப்படுத்தி, பெரியவர்களாகிய அவர்கள் விளையாடும் விளையாட்டைப் பற்றி ஒன்றும் அறியாத அந்த பிஞ்சு முகத்தைப் பார்க்கவே, நரேனுக்கு பரிதாபமாகவும், பாவமாகவும் தோன்ற, குழந்தையை வாரி அணைத்துத் தூக்கினான் நரேன்; இந்தக் காட்சி, மதுரிமாவை மேலும் கோபப்படுத்தியது.
""பார்த்தீர்களா மேடம்... கவிதாவைப் போலவே, அவள் குழந்தைக்கும் என்னைப் பிடிக்கவில்லை.''
""யாருக்குத் தெரியும்... ஒருவேளை, அந்தக் குழந்தைக்கு தன்னுடைய உண்மையான அப்பா யாரென்று தெரிந்திருக்கலாம்.''
இந்த வார்த்தைகளை, சராசரி பெண்ணைப் போல குத்தலாகவும், அழுத்தமாகவும் சொன்ன விதம், நரேனை மோசமாகக் காயப்படுத்தியது. மதுவின் வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியாதவன், கோபத்தின் உச்சியில், அவள் அருகே வந்து, அவளது கன்னத்தில் ஓங்கி அறைய யத்தனித்தான்.
அதை சற்றும் எதிர்பார்க்காத மதுரிமா, சில வினாடிகளுக்கு மிரண்டு போய் நின்று கொண்டிருந்தாள். ஆண்டர்சன் முன், நரேன் நடந்து கொண்ட விதம், மதுரிமாவை அவமானப்படுத்தி, அவள் கண்களில் நீரை வரவழைத்தது.
தன்னை மீறி தான் செய்துவிட்ட காரியத்திற்காக, வருத்தப்பட்டான் நரேன். சில விஷயங்கள் வாழ்க்கையில் இப்படித்தான் அமைகின்றன. அவை நடந்து முடிந்த பிறகே, நம்மை யோசிக்க வைக்கின்றன. ஆனால், அதன் பிறகு நாம் எத்தனை யோசித்தும், பலனற்றுப் போய் விடுகின்றன.
""சாரி மது...''
அந்த நேரம் பார்த்து அங்கே வந்து சேர்ந்தாள் கவிதா. மன்னிப்புக் கேட்டு நிற்கும் நரேனையும், மன்னிக்க மறுத்து நிற்கும் மதுரிமாவையும் மாறி, மாறி பார்த்து கேட்டாள் கவிதா...
""நரேன்... என்ன காரியம் செய்து விட்டீர்கள். எதற்காக மதுரிமாவிடம் இப்படி நடந்து கொண்டீர்கள்?''
தனக்காக கவிதா, நரேனிடம் பரிந்து பேசியது, மதுரிமாவை எரிச்சல் படுத்தியது. யாருடைய பரிதாபத்தையும், குறிப்பாக, கவிதாவின் இரக்கத்தை ஏற்கும் நிலையில் இல்லாத மதுரிமா, அவளிடம் பொரிந்து தள்ளினாள்...
""யாருடைய பரிதாபமும் எனக்குத் தேவையில்லை. அதிலும், குறிப்பாக, உன் பரிதாபமோ, இரக்கமோ எனக்குத் தேவையே இல்லை.''
""மது... தவறாகப் புரிந்து கொள்ளாதே... நானும் உன் மீது பரிதாபம் காட்டுவதற்காக இங்கு வரவில்லை.''
""பின் எதற்காக வந்தாய்... இதோ, இவர் தனியாக கஷ்டப்படுகிறாரே என, இவர் மீது பரிதாபப்பட்டு, பாசம் காட்ட வந்தாயா?''
""இல்லை... உன் கணவரைப் பார்ப்பதற்காக வும் நான் வரவில்லை... என் குழந்தையை அழைத்துச் செல்லவே நான் வந்தேன்.''
இவர்களுக்கு இடையில் புகுந்த ஆண்டர்சன், ""என் ஆய்வுக்காகத்தான் இந்த குழந்தையை இங்கே கொண்டு வந்து விட்டேன். இதன் மூலம், மனித மனதை பற்றிய பல விஷயங்கள் தெளிவாயின.''
""ரொம்பவும் சந்தோஷம்... நீங்கள் எதிர்பார்த்த தெளிவு பிறந்து விட்டதா... நீதி கிடைத்து விட்டதா?'' என்றாள் மதுரிமா.
""இல்லை... அதற்கு முன்பாக, வேறு ஒரு குழப்பமும், கலகமும் ஏற்பட்டு விட்டது; அதற்குக் காரணம் நீங்கள் தான்.''
""நானா... இதில், நான் என்ன குழப்பத்தை உண்டு பண்ணினேன்?''
""அவசரப்பட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து, அமெரிக்காவுக்கு திரும்பி விட்டீர்கள்.''
""நான் ஆஸ்திரேலியாவிலேயே இருந்திருந்தால்...''
""என் ஆய்வின் அடுத்த கட்டத்திற்கு, நான் இவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றிருப்பேன். தங்களை, வெறும் நண்பர்கள் என, சொல்லிக் கொள்ளும் இந்த இருவரையும், இந்தக் குழந்தையை காரணமாக்கி, வேறு விதமாக யோசிக்க வைத்திருப்பேன்.''
""ரொம்பவும் கேவலம் மிஸ்டர் ஆண்டர்சன்... ஆய்வு என்ற பெயரால், மனிதனின் உன்னதமான உயரிய உறவுகளை, கொச்சைப் படுத்தும் விபரீத விளையாட்டு உங்கள் முயற்சி.''
""மிஸ்டர் நரேன்... உலகின் அனேக ஆய்வுகள், விபரீதங்களை உள்ளடக்கியவை என்பதை நாம் ஒப்புக் கொண்டே தீர வேண்டியுள்ளது.''
ஆண்டர்சன் சொன்னதில் இருக்கும் உண்மை, மதுரிமா, நரேன், கவிதா மூவருக்குமே புரிந்ததால், அவர்கள் மவுனமாய் நின்றனர். ஆண்டர்சனே தொடர்ந்து பேசினான்...
""குழந்தையைக் காணவில்லை என கவிதாவும், நீங்களும், போலீசில் புகார் கொடுத்த ஒரு சில மணி நேரங்களில், குழந்தை உங்கள் வீட்டில் இருப்பதாக, நான் கவிதாவிடம் சொல்லி விட்டேன். அதன்பிறகு நடந்த விஷயங்கள், என்னை, என் பாணியில் கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வைத்தது.''
""அதன் பிறகு என்ன நடந்தது?''
ஆவலுடன் கேட்டாள் மதுரிமா. நிதானமாக அவள் கேள்விக்கு பதில் சொன்னான் ஆண்டர்சன்...
""கவிதா, அவள் குழந்தையைப் பார்க்கும் முயற்சியில் உடனே இறங்கவில்லை. சொல்லப் போனால், குழந்தை உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்பது போல் அவள் நடந்து கொண்டாள். அது, அவள் மீதான சந்தேகத்தை அதிகமாக்கியது.''
""அது மட்டும் தானா?''
""இன்னும் இருக்கிறது... குழந்தையைக் கொண்டு போய் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், நரேனும் செயல்படவில்லை; கவிதாவே வந்து எடுத்து செல்லட்டும் என்பது போல் நடந்து கொண்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது?''
""என்ன தெரிகிறது?''
""கவிதா, தன் குழந்தை நரேன் வீட்டில் இருப்பதில் சந்தோஷப்படுகிறாள் என்பது தெரிகிறது. நீங்கள் வீட்டில் இல்லாத சூழ்நிலையில், கவிதாவின் குழந்தை, தன் வீட்டில் இருப்பதைப் பற்றி, நரேன் பெரிதாய் கவலைப்படவில்லை என்பதும் தெரிகிறது.''
""இதன் மூலமாக அவர்கள் எதிர்பார்த்தது என்ன?'' - மாணவியைப் போல கேள்வி கேட்டாள் மதுரிமா.
""மீண்டும், மீண்டும் சந்திப்பதற்கான காரணமாய் குழந்தை அமைந்து விடும். நரேன் மூலமாக குழந்தைக்குக் கிடைக்கும் பாதுகாப்பிலும், பாசத்திலும், அவர்களுக்குள் நட்பாய் ஆரம்பித்த ஒன்று, வேறுவிதமாய் மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். ஒருவரைப் பற்றி மற்றவர், இதுவரையில் அவர்கள் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்...''
ஆண்டர்சன் சொல்வதை கேட்க, கேட்க, நரேனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
"சந்தேகமில்லை... நிச்சயமாக இவன், இந்த விஷயத்தில் ஒரு மனநோயாளி தான். பாவம் கவிதா... இந்த இம்சையைப் பொறுத்துக் கொள்ள இயலாமல்தான், இவனிடமிருந்து விவாகரத்து வாங்கி இருக்கிறாள்!'
கவிதா பற்றி பரிதாபப்பட்டு, நரேன் யோசித்துக் கொண்டிருக்க, ஆண்டர்சன் சொல்வதை ஏற்க முடியாதவளாய் கேட்டாள் மதுரிமா...
""நீங்கள் சொல்வது நம்புற மாதிரி இல்லையே... நான் ஒன்றும் ஆஸ்திரேலியாவிற்கு, நீண்ட காலத்திற்கு இவரைப் பிரிந்து போய் விடவில்லை. நடன நிகழ்ச்சி முடிந்த ஒரு வாரத்தில் நான் வீடு திரும்பப் போகிறேன்... இந்த குறுகிய காலத்தில், நீங்கள் சொல்வது எப்படி சாத்தியமாகும்?''
""மேடம்... நீங்கள் மிகவும் வெகுளியாக இருக்கிறீர்கள்... நாட்டியத்தைத் தவிர, வேறு எதைப் பற்றியும் நீங்கள் தீவிரமாக யோசிப்பதில்லை என நினைக்கிறேன்.''
""எதனால் அப்படி சொல்கிறீர்கள்?''
""பின்ன என்ன மேடம்... செக்ஸ் என்பதன் தாக்கம் மிகவும் வித்தியாசமானது. அது, ஒரு ஆணையோ, பெண்ணையோ தாக்கவும், வீழ்த்தவும் பல வருடங்கள் தேவையில்லை; சில நிமிடங்களே போதும்.''
சொல்லிவிட்டு, கவிதாவை ஓரக் கண்ணால் பார்த்தான் ஆண்டர்சன். அவன் எதன் காரணமாய், செக்ஸ் பற்றி மதுரிமாவிடம் இந்த அளவிற்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்பது, கவிதாவுக்கு நன்றாகவே புரிந்தது.
என்னிடம் தோற்றுப் போன என் மாஜி கணவன், என்னைத் தோற்கடிக்கும் முயற்சியில், ஒரு பாவமும் அறியாத அப்பாவி மதுரிமாவின் மனதில் விஷத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறான். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது, நம் ஊருக்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல; எல்லா ஊருக்கும், எல்லாருக்கும் பொருந்தும் விஷயம் தான். இவனை வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது.
""இதோ பாருங்கள் ஆண்டர்சன்... விவாகரத்தின் பெயரால் நீங்களும், நானும் தனியே பிரிந்தாயிற்று... இனி நான் யாரோடு, என்னவாக இருந்தால் உங்களுக்கென்ன? அதை கேள்வி கேட்பதற்கோ, தடுப்பதற்கோ நீங்கள் யார்... நீங்கள் வெளியே போகவில்லை என்றால், நான் போலீசைக் கூப்பிட வேண்டி இருக்கும்...''
கவிதா சொன்னதைக் கேட்டு, சப்தமாக, வாய்விட்டுச் சிரித்தான் ஆண்டர்சன்.
""கவிதா... நிச்சயமாக நீ போலீசைக் கூப்பிட மாட்டாய். போலீஸ் வருவதன் மூலம், நான் மட்டுமே பாதிக்கப்படப் போவதில்லை. என்னுடன் சேர்ந்து நீயும், உன்னுடன் சேர்ந்து, இதோ இந்த நரேனும், மதுரிமாவும், எல்லாருமே நாளைய செய்தியாகி விடுவோம்... இதை, நீ நிச்சயம் விரும்ப மாட்டாய்.''
""சரி... உங்களுக்கு இப்போது என்ன வேண்டும், எதற்காக இந்த மோசமான விளையாட்டு?''
""விளையாட்டு இல்லை கவிதா... ஆராய்ச்சி... பொய்யாக நடித்து, உனக்குள் இருக்கும் உண்மையை ஏன் மறைக்கப் பார்க்கிறாய்?''
""எந்த உண்மையை நான் மறைக்கப் பார்க்கிறேன்?''
""உன் உள் மனதில் புதிதாய் பதிந்திருக்கும் பிம்பம் பற்றிய உண்மையை...''
""என் உள் மனதில், என் குழந்தையின் பிம்பத்தைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை; இதுதான் உண்மை.''
""இல்லை... நீ பொய் சொல்கிறாய். இதோ... இந்த நரேனின் மீது உனக்குக் காதல் வந்து விட்டது. இதை, இப்போது நீ மறுக்கலாம் அல்லது மறைக்கலாம். ஆனால், இது காலத்திற்கும் கட்டுப்படுத்தும் உணர்வு இல்லை கவிதா. நிச்சயம் ஒரு நாள், வெகு விரைவில் வெளிவரத்தான் போகிறது... எதனால் அத்தனை உறுதியாகச் சொல்கிறேன் தெரியுமா?''
""ம்... சொல்லுங்கள்.''
""நரேனுக்கும் உன் மேல் காதல் வந்து விட்டது. இது, உங்கள் இருவரின் உள் மனதுக்கும் நன்றாகவே தெரிகிறது. வெளிப்புறத்தில் மறுத்துவிட்டு, உள்ளுக்குள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஹிப்போகிரட்ஸ் நீங்கள் இருவரும்...''
ஆண்டர்சன் பேசுவதை அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாதவளாய், அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் கவிதா.
— தொடரும்.

-தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயஸ்ரீ ரவி - நடிக்,யூ.எஸ்.ஏ
31-மே-201118:58:23 IST Report Abuse
ஜெயஸ்ரீ ரவி நிச்சயம் இந்த அன்டேர்சன் ஒரு hypocrite தான். """மீண்டும், மீண்டும் சந்திப்பதற்கான காரணமாய் குழந்தை அமைந்து விடும். நரேன் மூலமாக குழந்தைக்குக் கிடைக்கும் பாதுகாப்பிலும், பாசத்திலும், அவர்களுக்குள் நட்பாய் ஆரம்பித்த ஒன்று, வேறுவிதமாய் மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். ஒருவரைப் பற்றி மற்றவர், இதுவரையில் அவர்கள் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்...'' நிறைய ஆண்கள் மனைவியை இன்னமும் வேலைக்கு அனுப்பாமல் இருப்பதன் காரணமும் இதுதான். ஆண்டெர்சன் சொல்லுவதில் 1 % நியாயம் அப்படி கவிதாவும், நரேன்-உம் ஏற்கனவே ஒரு சில முறையாவது சந்தித்து இருந்தார்கள் என்றால் பரவாயில்லை என்று consider செய்ய வழி வகுக்கும். தற்போதைய இந்தியாவை cripple செய்யும் character ஆண்டெர்சன். இவரை முதலில் நரேன், மதுரிமா, கவிதா யோசிக்காது கைது செய்ய வைக்க வேண்டும். இல்லையெனில் அந்த குழந்தை நன்றாக வளர முடியாது!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X