"திப்பு' என்றாலே, புலி என்று தான் பொருள். திப்பு, தன்னை ஒரு புலியாகவே கருதி வாழ்ந்தார். பிரிட்டிஷ் சிங்கத்தை வீழ்த்தி விரட்ட, இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றே தன்னை நினைத்தார். திப்புவின் வாள், பீரங்கி, சிம்மாசனம், ராணுவச் சீருடை, ஆவணங்கள் என அனைத்திலும், புலியின் கர்ஜிக்கும் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
திப்பு தயாரித்திருந்த இயந்திரப் புலி, இந்திய மரச்சிற்ப மரபையொட்டி உருவாக்கப்பட்டது.
1795 து 178 செ.மீ., அளவில், அழகிய வண்ணம் தீட்டப்பட்டு விளங்குகிறது. புலியின் தோள் பக்கம் உள்ள விசையைத் திருகினால், புலி ஆவேசமாக உறுமி, கீழே விழுந்து கிடக்கும் வெள்ளைச் சிப்பாயைக் குதறுவது போலவும், அவன் அலறுவது போன்ற ஒலியை உண்டாக்க கூடியதுமான இயந்திர இசைக்கருவி, புலியின் வயிற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
திப்புவின் மரணத்திற்குப் பின், பிரிட்டிஷார் இங்கிலாந்துக்கு இதை எடுத்துச் சென்று விட்டனர்.
பிரிட்டிஷ் கம்பெனி, தன் முதல் எதிரியாகத் திகழ்ந்த திப்புவை வென்றதைக் கொண்டாடும் வகையில் வெளியிட்ட பதக்கத்தில், சிங்கம், புலியை வெல்வது போன்று பதித்து மகிழ்ந்தனர். மற்றொரு பதக்கத்தில், காரன்வாலிஸ் உருவத்தையும், திப்புவின் பிள்ளைகளை அவன் பணயமாகப் பெறுவதையும் அச்சிட்டனர்.
— "திப்பு சுல்தான் - ஒரு மாவீரன்' என்ற நூலிலிருந்து...
***
சீன தேசத்தில், ஹஸி, ஹோ எனும் இரண்டு ஜோதிடர்கள் இருந்தனர்; அவர்கள், அரசு வேலைக்காரர்கள். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் முதலிய விசேஷ நிகழ்ச்சிகளைப் பற்றிக் கணக்கிட வேண்டியதும், அவற்றைப் பற்றி முன் எச்சரிக்கை செய்ய வேண்டியதும் அவர்களின் வேலை; அதற்காக, அவர்களுக்கு சம்பளம் தரப்பட்டு வந்தது.
கிரகணம் பிடிக்கும் போது, சூரியனும், சந்திரனும், பேராபத்தில் அகப்பட்டு திண்டாடுகின்றனர் என்பது, சீன தேசத்தாரின் நம்பிக்கை. அப்போது, சூரியனையும், சந்திரனையும் ஆபத்திலிருந்து விடு விப்பதற்காக, ஆகாயத்தை நோக்கி அம்புகளை எய்வதும், பறைகளைக் கொட்டுவதும், இன்னும், இவை போன்ற காரியங்களைச் செய்வதும் அந்நாட்டு வழக்கம். இவற்றை எல்லாம், அவர்கள் முக்கியமான மதச் சடங்குகளாகக் கருதினர்.
இவற்றைச் செய்யாமலிருந்தால், நாட்டுக்குப் பெரிய கேடு வந்துவிடும் என்றும் அவர்கள் எண்ணினர். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய வேண்டுமானால், முன்பாகவே அதற்கு தயாராக இருந்தாலன்றி முடியாது அல்லவா?
ஒரு முறை, அந்த இரண்டு வான சாஸ்திரிகளும், கணக்குப் போட வேண்டிய வேலையின் போது, கள்ளைக் குடித்து மயங்கிக் கிடந்தனர். வரப்போகும் சூரிய கிரகணத்தைப் பற்றி அவர்கள் கணக்கிடத் தவறி விட்டனர். ஆகவே, மக்கள் எதிர்பாராத சமயத்தில், திடீரென்று ஒரு சூரிய கிரகணம் வந்து விட்டது. மேலும், அது சாதாரண சூரிய கிரகணம் அல்ல; பூரண சூரிய கிரகணம்.
அப்போது, சற்று நேரம் <உலகமே இருளில் மூழ்கி விட்டது. கிரகணம் நிகழும் போது, நடத்த வேண்டிய சடங்குகள் ஒன்றும் சரியாக நடத்தப்படவில்லை. இந்த தவறால், தங்கள் தேசத்துக்கு ஏதாவது பெரிய தீங்கு ஏற்படக்கூடும் என, மக்கள் பயந்தனர். அரசனிடம் போய், தங்கள் குறையை முறையிட்டனர்.
இப்படி, அரசு ஜோதிடர்கள் செய்தது பெரும் பிழை என்று, அந்த இரண்டு வான சாஸ்திரிகளையும், சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான்; அதன்படி, அவர்கள் தலை வெட்டப்பட்டது.
அந்த கிரகணத்தால், சூரியனுக்கும், நாட்டுக்கும் என்ன ஆபத்து நிகழ்ந்ததோ, நிகழவில்லையோ தெரியாது; ஜோதிடர்கள் இருவருக்கும், அந்த கிரகணத்தால், மிகப்பெரிய ஆபத்து வந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
— பெ.நா.அப்புசுவாமி ஒரு கட்டுரையில்.
***
நாடக உலகில் பழம் பெரும் நடிகர் யதார்த்தம் பொன்னுசாமி. பல நடிகர்களை உருவாக்கி, ஓய்ந்து போனவர். அவருக்கு நிதி திரட்ட, நடிகர் கே.ஏ.தங்கவேலு குழுவினர், திருச்சி தேவர் ஹாலில், ஜூன் 9, 1967ல் நடத்திய, "மனைவியின் மாங்கல் யம்' நாடகத்திற்கு, கட்டணம் வாங்காமல் தலைமை தாங்கினார் ஈ.வெ.ரா., அந்த வகையில், ஈ.வெ.ரா.,வின் நன்கொடை, 150 ரூபாய் என கணக்கிடப்பட்டது.
— "ஈ .வெ. ரா., வரலாறு' நூலில், கவிஞர் கருணானந்தம்.
***
- நடுத்தெரு நாராயணன்