ஹாலிவுட் வில்லன்களுடன் மோதும் சிம்பு!
வேட்டை மன்னன் படத்தை பிரமாண்டப்படுத்த திட்டமிட்டுள்ளார் சிம்பு. அதற்காக பெரும்பகுதி படப்பிடிப்பை மெக்சிகோ, அமெரிக்க நாடுகளில் நடத்துவது மட்டுமின்றி, பல முக்கிய டெக்னீஷியன்களை ஹாலிவுட்டிலிருந்தே கொண்டு வருகிறார். குறிப்பாக, ஹாலிவுட் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியை, உலகில் இதுவரை எவரும் படப்பிடிப்பு நடத்தாத பகுதியில் நடத்தவும், "லொகேஷன்' தேடி வருகிறார்.
— சினிமா பொன்னையா.
படாதிபதிகளை பயமுறுத்தும் நடிகை!
ரேணிகுண்டா, நந்தி படங்களில் நடித்த போது, அடக்கி வாசித்த சனுஜா, தற்போது, எத்தன் படத்தில் விமலுடன் நடிப்பதைத் தொடர்ந்து, தன் படக்கூலியை தாறுமாறாக உயர்த்தி விட்டார். ஒரே பேமென்ட்டில், 15 லட்சம் ரூபாய் கேட்கிறார். "ரொம்ப அதிகமா இருக்கே...' என்று படாதிபதிகள் சொன்னால், "இப்போது, "புக்' பண்ணினால்தான் இந்த ரேட். எத்தன் ரிலீசுக்குப் பிறகு வந்தால் இன்னும் ஜாஸ்தியாகி விடும்...' என்று சொல்லி பயமுறுத்துகிறார். நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது; நீர்த்த தண்ணீர் உப்பை கெடுத்தது!
— எலீசா.
பால்காரன் வேடத்தில் விஜய்!
வேலாயுதம் படத்தில், பால்காரனாக நடிக்கிறார் விஜய். மக்களில் ஒருவனாக இருந்து, தன் மனிதநேய பண்பால், மக்கள் தலைவர் நிலைக்கு விஜய் உயர்வதே இந்த வேலாயுதம் படத்தின் கதை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், "அகரம் சிகரமாகும்' கதை என்கிறார் அப்படத்தின் டைரக்டர் ஜெயம் ராஜா.
— சி.பொ.,
கேரம் போர்டு கதையில், விளையாடவா!
ஷாம் - சினேகா நடித்த, இன்பா படத்தை, தெலுங்கில், நீலோநாலோ என்ற பெயரில் இயக்கி வெளியிட்டவர் விஜயநந்தா. இவர் தற்போது, தமிழில் நேரடியாக, விளையாடவா என்றொரு படத்தை இயக்குகிறார். கிரிக்கெட், கபடி, பாக்சிங் உட்பட பல விளையாட்டுகளை மையமாக வைத்து, ஏற்கனவே படங்கள் வெளியான நிலையில், இப்படம் கேரம் போர்டு விளையாட்டை மையக் கருவாக வைத்து உருவாகிறது.
— சி.பொ.,
எட்டு வருடத்துக்கு பிறகு வசீகரன்!
பாரதிராஜா இயக்கிய, கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் நடிகர் வசீகரன். அந்தப் படத்திற்கு பிறகு, பட வாய்ப்பு இல்லாததால், பிசினசில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது, உயர்திரு 420 என்ற படத்தின் மூலம், ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். அந்த வகையில், எட்டு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளவர், "இனி, ஹீரோ அல்லாத வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் நடிப்பேன்...' என்கிறார்.
— சி.பொ.,
தெலுங்குக்கு, "டப்' ஆகும் கோ!
கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா - கார்த்திகா நடித்த, கோ படம், ரங்கம் என்ற பெயரில் தெலுங்கிற்கு, "டப்' ஆகிறது. இதனால், ஜீவாவை விட அதிக உற்சாகத்தில் இருக்கும் கார்த்திகா, "இப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றால், அடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்...' என்று கூறுகிறார்.
— சினிமா பொன்னையா.
த்ரிஷா கொடுத்த உத்தரவாதம்!
தமிழில் சரிந்து கிடக்கும் த்ரிஷாவின் மார்க்கெட், தெலுங்கில், பவன் கல்யாணுடன் நடித்த, தீன்மார் என்ற படத்தின் வெற்றி காரணமாக, அவரை பிசியாக்கிவிட்டுள்ளது. அங்கு மையம் கொண்டுள்ள அனுஷ்கா, தமன்னா, ப்ரியாமணி உள்ளிட்ட நடிகைகளுக்கு மத்தியில் தாக்கு பிடித்து நிற்க, முன்பைவிட கூடுதல் கிளாமர் காட்டி நடிக்க, தனக்கு புதிய பட வாய்ப்பு தரும் டைக்டர்களிடம் உத்தரவாதம் கொடுத்துள்ளார் த்ரிஷா. ஆடப்போன கங்கை அண்டையில் வந்தாற் போல!
— எலீசா.
* ஹீரோக்கள் தான், கதைகளுக்கேற்ப தங்களது கெட்-அப்பை மாற்றுவது, உடல் எடை குறைப்பது என்றெல்லாம் செயல்பட்டு வரும் நிலையில், கருங்காலி படத்துக்காக, ஏழு கிலோ எடை கூட்டி நடித்ததாக சொல்கிறார் அஞ்சலி. இதேபோல், கதைகளுக்கேற்ப, தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கேற்ப தொடர்ந்து தன்னை முழுசாக மாற்றி நடிக்க தயாராக இருப்பதாகவும் சொல்கிறார்.
அவ்ளோதான்!