சந்தோஷம் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சந்தோஷம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 மே
2011
00:00

பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து, புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, எல்லா பெற்றோருக்கும் தோன்றும் ஆசை, எனக்கும், மனைவி சாவித்ரிக்கும் தோன்றியது.
புருஷன் வீட்டில், அவள் எப்படி இருக்கிறாள் என்று, பார்க்க வேண்டுமென்ற ஆசை தான் அது.
புருஷன் வீட்டுக்குச் செல்லும் பெண், அங்கு சந்தோஷமாக இருப்பாள் என்பது உண்மைதான்; அந்த சந்தேகம் எங்களுக்கு இல்லை.
எல்லாரையும், எங்கும், எப்போதும் அனுசரித்துச் செல்லும் சுபாவம் உள்ளவள் தான் எங்கள் பெண் விஜயா. எல்லாரிடமும் அன்பாகப் பேசி, பிரியமாக பழகுகிறவள் தான். எல்லாரையும் மதிப்பவள் தான்; மரியாதை அளிக்கக் கூடியவள்தான். ஆனாலும், அவள் புருஷன் வீட்டில், எல்லாரிடமும், எப்படி பழகுகிறாளோ என்ற ஒரு அச்சம் எங்களுக்கு இருந்தது.
அதற்கு காரணம், ஒரே பெண் என்று, நாங்கள் அவளை செல்லமாக வளர்த்ததுதான்.
அவளை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவோம். எதை கேட்டாலும், உடனே வாங்கிக் கொடுத்து விட்டுத்தான், அடுத்த வேலையை பார்ப்போம். அவள், எதை செய்தாலும் பாராட்டுவோம்; "ரொம்ப சூப்பரா இருக்கு!' என்று, புகழ்வோம்.
அதனால், அவள் இஷ்டம் போலத்தான் வீட்டில் எதுவும் நடக்கும்.
"உருளைக்கிழங்கு பொரியல்தான் செய்யணும்!' என்பாள் ஒருநாள்.
அவள் சொன்னதை சிரமேற்கொண்டு செய்ய, உருளைக்கிழங்கு வாங்கி வர, காய்கறி கடைக்கு ஓடுவேன்.
ஒரு நாள் வாழைக்காய் பொடிமாஸ், இன்னொரு நாள் பீன்ஸ் உசிலி, மற்றொரு நாள் அவியல், அடுத்த நாள் கத்திரிக்காய், முருங்கைக்காய், சேனைப் போட்டு பொரித்தக் கூட்டு என்பாள்.
அவள் சொன்னதற்கு மறு பேச்சு பேசாமல், அவள் கேட்டதை எல்லாம் செய்து கொடுப்போம்.
தினமும், அவள் என்ன சொல்கிறாளோ அந்த சமையல்தான், சாப்பாடுதான், டிபன்தான்!
சாப்பாட்டு விஷயத்தில் தான் விஜயா இப்படி போலிருக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம்.
டிரஸ் அணிகிற விஷயத்திலும், அவள் இஷ்டம் தான்.
நான், என் மனைவி சாவித்ரி, என் பெண் விஜயா என்று மூன்று பேர்தானே எங்கள் வீட்டில். ஒரு, "டிவி' தான் வைத்திருக்கிறோம். அதில், ஆலய தரிசனம், உபன்யாசம், கதாகாலட்சேபம், கர்நாடக கச்சேரி என, எதையும் எங்களை பார்க்க விட மாட்டாள். கையில் வைத்திருக்கும் ரிமோட்டின் பட்டனை மாத்தி, மாத்தி அழுத்தி, ஏதேதோ சேனலை வைத்துக் கொண்டிருப்பாள். "டிவி' சப்தம் அடுத்த தெரு வரை கேட்கும்.
"சின்னதா வை விஜி!' என்று, நான் எப்போதாவது ஒரு முறை சொல்லி விட்டால் போதும்.
"தினமும் ரெண்டு பேரும் கோவில், குளம்ன்னு போறீங்களே... அது போதாதா? வீட்டிலே, "டிவி'யிலே கூட சுவாமியை தரிசிக்கணுமா? கற்பூரம் காட்டறதைப் பார்த்து, கன்னத்துலே போட்டுக்கணுமா? எவ்வளவு சேனல்ல, எவ்வளவு உபயோகமான நிகழ்ச்சி எல்லாம் வருது; அதையெல்லாம் பார்க்க வேண்டாமா?' என்று, படபடவென பேசுவாள் விஜயா.
"எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்!' என்பது போல, என்னைப் பார்ப்பாள் சாவித்ரி.
"போறாடி... இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணமாகி, புருஷன் வீட்டுக்கு போயிடப் போறா. அப்புறம் நம்ம ராஜ்ஜியம் தானே!' என்பது போல அவளைப் பார்ப்பேன்.
இதுமாதிரி இன்னும் எவ்வளவோ... வீட்டில் சோபா, பீரோ, கட்டில், சமையலறையில் ஒவ்வொரு பொருட்களும், அவள் இஷ்டப்படிதான் இருக்க வேண்டும்.
இங்கே இருக்கும் போது, அவள் ஆசைப்படும்படி நடக்க நாங்களும் உடன்படுவோம்.
கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போனப்புறம் அங்கே அவள் இஷ்டபடி எல்லாம் நடக்குமா? அவள் எங்களிடம் தான் பிடிவாதம் காட்ட முடியும். நாங்கள் அவளை பெற்றவர்கள்; பொறுத்துக் கொள்கிறோம். "போகிறது போ...' என்றிருக்கிறோம். கணவன், மாமனார், மாமியார் எல்லாம் எப்படி பொறுத்துக் கொள்வர்; சகித்துக் கொள்வர்!
"எங்கள் பொண்ணுக்கு கொஞ்சம் பிடிவாத குணம் இருக்கு; அதை, நீங்க தயவு செய்து பொருட்படுத்தக் கூடாது!' என்று, சம்பந்தி வீட்டாரிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது. அது, நாமே, நம்ம பொண்ணை காட்டிக் கொடுத்தது போலாகி விடுமே என்று, நானும், சாவித்ரியும் வாயை மூடி, அவளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
அங்கே, அவள், தான் விரும்புகிறபடி தான், சமையல் செய்ய வேண்டும். தான் இன்னென்ன டிரஸ்தான் போடுவேன் என்பது போல எல்லாம் ஒரு நாளைப் போல தினமும் சொன்னால், அவர்கள் விஜியை அம்மா வீட்டுக்கு ரயிலேற்றி அனுப்பிவிட மாட்டார்களா?
இந்த கவலையே என்னையும், சாவித்ரியையும் தினம், தினம் வாட்டி எடுத்தது.
புருஷன் வீட்டில் விஜயா எப்படி இருக்கிறாள் என்பதை நேரில் பார்த்துவிட்டு வந்தாலொழிய, எங்கள் கவலை தீராது என்று தோன்றவே, நானும், சாவித்ரியும் திருநெல்வேலி சென்று, அவளை பார்த்துவிட்டு வந்துவிட வேண்டுமென்று கிளம்பி விட்டோம்.
எங்கள் சம்பந்தி, சம்பந்தியம்மா, மருமகன் எல்லாரும், ""வாங்க... வாங்க...'' என்று இன்முகத்தோடு வரவேற்றதும், நாங்கள் பயப்படும் படியாக எதுவும் நடக்கவில்லை போலிருக்கிறது என்று, கொஞ்சம் சமாதானம் அடைந்தோம்.
""விஜி.... உன் பெற்றோர், இங்கே, பத்து நாள் தங்கப் போறாங்க. கன்னியாகுமரி, கிருஷ்ணாபுரம், பாபநாசம், குத்தாலம் எல்லாம் அழைச்சுண்டு போய் காட்டிட்டு வரலாம்,'' என்றார் சம்பந்தி செண்பகராமன்.
""இவங்க, இங்கே, பத்து நாள் இருக்கப் போறாங்களா... ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா,'' என்று, ஒரு குழந்தையைப் போல குதூகலித்து சொன்னாள் விஜயா.
""விஜி... கத்திரிக்காய் எண்ணைக்கறி பண்ணு. மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் செய். கோஸ் கூட்டு பண்ணு. அப்பளம், வடாம் பொரி. சேமியா பாயசம் வை...'' என்றாள் சம்பந்தியம்மாள்.
அத்தனையும், விஜயாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத சமையல் ஐட்டங்கள்.
""நீங்க கொஞ்சம் எனக்கு உதவி செய்யுங்கம்மா... எல்லாத்தையும் நிமிஷத்துல செஞ்சுடறேன்!'' என்றாள் விஜயா.
சொன்ன பிரகாரம், மாமியார் காய்கறி நறுக்கி கொடுக்க, புடவையை தூக்கி இடுப்பில் செருகி, சமையலையும் சடுதியில் முடித்தாள் விஜயா.
பிரமிப்பில் நானும், சாவித்ரியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
""அப்பா, அம்மாவை அழைச்சுண்டு, சாயங்காலம் கோவிலுக்கு போயிட்டு வரலாம் விஜி. மஞ்சள் பட்டுப் புடவையை எடுத்து உடுத்திக்கோ...'' என்றாள் சம்பந்தியம்மா.
மஞ்சள் நிறம் விஜயாவுக்கு, பிடிக்கவே பிடிக்காது.
சாயங்காலம் கோவிலுக்கு நாங்கள் போகும் போது, விஜயா மஞ்சள் பட்டுப் புடவையை முகம் சுளிக்காமல், ஒரு முணுமுணுப்புக் கூட இல்லாமல், உடுத்தி வந்தது எனக்கும், சாவித்ரிக்கும் ஆச்சரியமாக இருந்தது. எங்களை நாங்களே கிள்ளிக் கொண்டோம். வலித்தது; கனவில்லை, நிஜம் தான்!
நாங்கள் ஒரு வாரம் சம்பந்தி வீட்டில் இருந்தோம். அந்த ஒரு வாரமும், அங்கே இருப்பது எங்கள் பெண் விஜயா தான் என்பதை, எங்களால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. அவள் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் என்ன சொல்கின்றனரோ, அதை தட்டாமல் செய்தாள்.
தட்டாமல் செய்தாள் என்பதை விட, அதையெல்லாம் மிகவும் சந்தோஷமாக செய்தாள் என்பதை கண் கூடாக பார்த்தோம். எப்படி, இப்படி விஜயா முற்றிலும் மாறிப் போனாள் என்ற கேள்விக் குறி, என் மனதிலும், சாவித்ரி மனதிலும் எழுந்தது.
தனியாக இருக்கும் போது, எங்கள் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வியை, விஜயாவிடம் கேட்டு விட்டோம்.
""ரொம்ப சிம்பிள் அப்பா... சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம், மற்றவங்களை சந்தோஷப்படுத்துறதுதான். எங்கேயோ, எப்பவோ நான் படிச்சது, இந்த வீட்டுக்குள்ளே நான் காலடி எடுத்து வைச்சப்போ எனக்கு ஞாபகம் வந்தது...
""இங்கே, இனிமே நான், மாமனார், மாமியார், கணவரோடு வாழ்ந்தாகணும். அவங்க என்கிட்ட அன்பா, பிரியமா நடந்துக்கணும்ன்னா, அவுங்கள நான் சந்தோஷமா வைச்சுக்கணும்ன்னு தீர்மானம் பண்ணிட்டேன்...
""இந்த வீட்டிலே எனக்கு நிறைவான வாழ்க்கை கிடைக்க, எல்லாரையும் சந்தோஷப்படுத்துறதுன்னு தீர்மானிச்சு, அதை, நடைமுறைப்படுத்த ஆரம்பிச்சேன்; சந்தோஷமா இருக்கேன்!'' என்றாள் விஜயா.
திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண், அங்கே, தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை, விஜயாவே சொன்னதைக் கேட்டதும், எங்களுக்கு நிம்மதி உண்டாயிற்று.
***
- சுகந்தி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X