தீட்சை பெற்றவர்களும், வேதம் கற்றவர்களும் மட்டுமே மந்திரங்களை உச்சரிக்க கடமைப்பட்டவர்கள். ஆனால், எல்லாரையும் மந்திரம் சொல்ல வைத்த பெருமை, கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமியைச் சேரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத நாட்களில், இந்த மந்திரத்தைச் சொல்வது மிக மிக புண்ணியத்தை தரும்.
கடற்கரை தலமான திருச்செந்துார் உள்ளிட்ட ஆறுபடை வீடுகளிலும், நம் ஊரிலுள்ள முருகன் கோவில்களிலும் அமர்ந்து, கவசம் பாடும் போது, பாதுகாப்பு உணர்வை அடையலாம். மனதிற்கு நம்பிக்கையும், உற்சாகமும் தரக்கூடிய கந்தசஷ்டி கவசத்தில், குறிப்பிட்ட சில மந்திரச் சொற்கள் உள்ளன.
இதில்,
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்.
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
என்ற வரிகள் வருகின்றன. இதன் பொருள் பலருக்கும் தெரிவதில்லை.
ஐயும்(ஐம்), கிலியும் (க்லீம்) சௌவும் (ஸௌம்) ஆகியவை, 'பீஜாக்ஷரங்கள்' எனப்படும். இதை, பீஜம் + அட்சரம் என, பிரிப்பர். 'பீஜம்' என்றால், உயிர்ப்புள்ள விதை. 'அட்சரம்' என்றால், எழுத்து.
'உயிர்ப்புள்ள எழுத்து விதைகள்' ஒன்று சேர்ந்தால் அது, 'மந்திரம்' ஆகிறது. அந்த மந்திர விதைகள், நம் மனதில் துாவப்பட்டால், அது வளர்ந்து பக்தியின் உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன், கடவுளின் திருவடியை அடைவான்.
'ஐம், க்லீம்' என்ற மந்திர எழுத்துக்களும், உயிர்களை உய்விக்கும் ஒளிபொருந்திய, 'ஸௌ' என்ற மந்திர எழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்...
இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் மூலாதார எழுத்துக்குரிய, 'நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே... என் மனக்கண் முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும்...' என்பது, இந்த வரிகளின் பொருள்.
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான, 'சரவணபவ' என்பதை, யார் வேண்டுமானாலும் சொல்லலாம், இதை, 'ஓம் ஐம் சரவணபவாய நம, ஓம் க்லீம் சிகாயை வஷட், ஓம் ஸௌம் சுப்ரமண்யாய நமஹ' என்று மந்திரங்களுடன் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக் கூடாது.
ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, தகுந்த நியம நிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும். இது, எல்லாருக்கும் சாத்தியம் இல்லை என்பதால், கந்தசஷ்டி கவசம் எழுதிய, தேவராய சுவாமிகள், தன் பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்து விட்டார்.
இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நம் முக்திக்காக, தேவராய சுவாமி இதைச் செய்துள்ளார்.
கந்தசஷ்டி கவசம் பாடும்போது, இந்த வரிகளை உணர்ச்சிப்பூர்வமாக, பொருள் உணர்ந்து பாடுங்கள். முருகப்பெருமான் எல்லா நன்மைகளையும் அருள்வார்.
தி. செல்லப்பா