உண்மையான, 'ரோல் மாடல்!'
சமீபத்தில், என் சினேகிதியின் அழைப்பை ஏற்று, அவளது கிராமத்தில் நடைபெற்ற கோவில் விழாவிற்கு சென்றிருந்தேன்.
விழா நடைபெற்ற மூன்று நாட்களும், அங்கேயே தங்கி, கோவில் வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் என, அனைத்தையும் கண்டு மகிழ்ந்தேன்.
விழாவில், இரு இளைஞர்களையும், ஒரு பெண்ணையும் முன் நிறுத்தி, அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையிலும், பாராட்டியும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்றன.
என் தோழியிடம் விபரம் கேட்டபோது, 'எங்கள் ஊரில் படித்து முன்னேறியவர்கள் மிக குறைவு. சென்ற ஆண்டு, குரூப் - 2 தேர்வில், அந்த பெண்ணும், 'மரைன் இன்ஜினியரிங்' முடித்து ஒரு இளைஞர், வெளிநாட்டிற்கு சென்றார். மற்றொரு இளைஞர், ராணுவத்திற்கு தேர்வானார்.
'இதனால், எங்கள் ஊரின் பெரியவர்களுக்கு, கல்வியின் மீது ஆர்வம் அதிகரித்தது. அதோடு, அவர்களை வரவழைத்து, இந்தாண்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும், அம்மூவரின் முன்னிலையிலேயே நடத்த முடிவெடுத்துள்ளனர். எனவே, எங்கள் ஊருக்கு, அவர்கள் தான், ரோல் மாடல்...' என்றாள், தோழி.
கல்விக்கு எங்குமே, எப்போதுமே மதிப்பு இருப்பது புரிந்தது.
- எஸ். பிரேமாவதி, சென்னை.
உறவினர்களை அடையாளம் காண...
சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு தென்பட்ட விஷயம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மணமகன் தரப்பு உறவினர்கள் அனைவரும் ஒரு நிறத்திலும், மணமகள் தரப்பினர் வேறொரு நிறத்திலும், 'ரிச்' உடை அணிந்திருந்தனர்.
அதுமட்டுமின்றி, அனைவரும் அடையாள அட்டையை கழுத்தில் அணிந்திருந்தனர். அதில், அவர் பெயர், மணமகன் அல்லது மணமகளுக்கு என்ன உறவு என்றும், பளீச்சென்று பொறிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக, திருமணத்திற்கு வந்தவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கும் பழக்கம், இந்நாளில் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், பல ஆண்டுகள் சந்திக்காமல் இருந்த உறவினர்களை கூட அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
திருமணத்திற்கு வந்தோமா, டிபன், காபி சாப்பிட்டோமா, தாலி கட்டி முடிந்ததும், பரிசை தந்து, சாப்பிட்டு அவசர கதியில் வீடு திரும்பினோமா என்ற ரீதியில் தான், பல விருந்தாளிகள் நடந்து கொள்கின்றனர்.
அப்படியில்லாமல் ஆற அமர அமர்ந்து, திருமண நிகழ்வு அனைத்திலும் பங்குபெறும் பழைய தலைமுறையினர், 'அந்த பச்சை புடவை யாரு... அந்த வேட்டிக்காரரு யாருக்கு சொந்தம்... இப்படியும் அப்படியும் உலாத்தும் முதியவர் யாராக்கும்...' என்ற ரீதியில், அடையாளம் தெரியாமல் தவித்து, யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
மேற்கண்ட, 'ஐடியா'வால், யாரையும் எளிதில் அடையாளம் கண்டு அளவளாவி, நலம் விசாரிக்க முடிந்தது. இப்படி வித்தியாசமாக யோசித்து, செயல்படுத்திய உறவினர் யாரென்று விசாரித்து, மனதார பாராட்டினேன். எல்லா திருமணங்களிலும் இந்த யோசனையை கடைப்பிடித்தால், நன்றாக இருக்குமே!
- ஆர். ரகோத்தமன், பெங்களூரு.
இரக்கமற்ற வீட்டு உரிமையாளர்கள்!
கணவரை பிரிந்து, 'ஆட்டிசம்' பாதித்துள்ள, 13 வயது மகனோடு வாழும் நான், மத்திய அரசு துறையில் பணிபுரிகிறேன். என் மகனின் மருத்துவ சிகிச்சைக்காக, தற்காலிகமாக சென்னைக்கு பணிமாற்றல் வாங்கிச் சென்றேன்.
சென்னையில், ஏறக்குறைய நான்கு இடங்களில், வாடகை வீட்டிற்கு முயன்றபோது, 'கணவனின்றி இருக்கும் உங்களுக்கெல்லாம், வீடு வாடகைக்கு விட்டால், எங்களுக்கு தான் பிரச்னை...' என்று கூறி, வீடு தர மறுத்தனர், வீட்டு உரிமையாளர்கள்.
இறுதியில், வயது முதிர்ந்த தம்பதியர், தங்களுக்கு உரிய, ஒரு, 'போர்ஷனை' வாடகைக்கு விட சம்மதித்தனர். பின்னர் தான் தெரிந்தது, அவர்களின் பேத்தியும், 'ஆட்டிசத்தால்' பாதிக்கப்பட்டவள் என்பது.
'ஆட்டிசத்தால்' பாதிக்கப்பட்ட குழந்தை பற்றியும், அதன் அம்மா படும் பல்வேறு சிரமங்களை, அவர்கள் கண்கூடாக பார்த்த காரணத்தால், பெருந்தன்மையோடு எனக்கு பல உதவி செய்தனர். நானும் அவர்களிடம் நன்றியோடு இருக்கிறேன்.
கணவன் இல்லை என்பதாலே, கொஞ்சம் கூட என் மேல் இரக்கம் காட்டாமல் விரட்டிய, வீட்டு உரிமையாளர்களை எண்ணி வேதனைப்படுகிறேன்.
- எம். முருகலட்சுமி, பாளையங்கோட்டை.