உனக்கு நான் கைரேகை பார்க்க மாட்டேன்!
கைரேகை பார்ப்பதில் நிபுணர், அப்பா. பலர் அறியாத செய்தி இது. ஜோதிடம், ஜாதகம், எண் கணிதம் எல்லாவற்றிலும் வல்லவர்.
அப்பா என்னிடம், 'ஜோதிடம் பொய்யல்ல. அக்கலையைக் கைவரப்பெறாதவர்கள் பார்ப்பதால் தான் அதற்கு அவப்பெயர். எது ஒன்றையும் அறிவியல் ரீதியாக ஆராய்கிறவர்கள், மேலை நாட்டவர்கள்.
'மேலை நாட்டு அறிஞரான, கீரோ போன்றவர்களே இக்கலையை நன்கு ஆராய்ந்து ஏற்றுக்கொண்டனர்...' என்பார்.
இவை பற்றி, அப்பா எழுதிய நுால்களுக்கு இன்னமும் வரவேற்பு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சென்னை, உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்த ஒரு விழாவில், நல்லி செட்டியார் பேசியவை...
'எனக்கு கைரேகை, ஜோதிடத்திலெல்லாம் அதிக நம்பிக்கை இல்லை. உழைப்பை, திறமையை, நம்புகிறவன் நான். இருந்தாலும், தமிழ்வாணன் கைரேகை பார்க்கிறார் என்று கேள்விப்பட்டதுமே, அவரிடம், 'அப்பாயின்மென்ட்' வாங்கி பார்த்தேன்.
'கைரேகை பார்த்த தமிழ்வாணன், 'செட்டியார், நான் எதையும் ஒளித்து, மறைத்து சொல்பவனில்லை. வெளிப்படையாகப் பேசவா?' என்று கேட்டார்.
'நானும்,'சொல்லுங்கள், பரவாயில்லை...' என்றேன்.
'அவரும், 'இன்னும் சில மாதங்களில், உங்கள் தொழிலில் நீங்கள் ஒரு பெரிய சரிவைச் சந்திப்பீர்கள். அதிலிருந்து மீள்வீர்கள். இதன் பிறகு உங்களுக்கு வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி தான்...' என்றார்.
'நான் சிரித்தபடியே எழுந்து வந்து விட்டேன்.
'தமிழ்வாணன் சொன்னதில் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என் தொழில் மீது எனக்கு அபார நம்பிக்கை இருந்தது. நமக்கு எப்படி வரும் சரிவு என்று தான் இருந்தேன்.
'ஆனால், ஆச்சரியம் பாருங்கள். தமிழ்வாணன் சொன்ன அதே காலகட்டத்தில் சரிவைச் சந்தித்தேன். பிறகு, இன்று வரை வளர்ச்சி தான். எப்படித் தமிழ்வாணனால் மட்டும் இப்படித் துல்லியமாகக் கணிக்க முடிகிறது என்கிற வியப்பு, எனக்கு இருந்து கொண்டே இருந்தது...' என்று முடித்தார், நல்லி செட்டியார்.
அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் கூட அப்பாவிடம் வந்து கைரேகை பார்த்த சம்பவங்களை நான் அறிவேன்.
'கைக் கோடுகள் என்பவை கையை மடிப்பதன் மூலம் ஏற்படுபவை. இவற்றைக் கொண்டு எப்படி இப்படித் துல்லியமாக, என் வாழ்வை அருகில் இருந்து பார்த்தவர் போல் சொல்கிறீர்கள்...' என்று வியந்து பேசிய அமெரிக்கர் ஒருவரின் கருத்து, இன்னமும் என் காதுகளுக்குள் ஒலிக்கத் தவறுவதில்லை.
அப்பா, இக்கலையில் இவ்வளவு பெரிய கில்லாடியா என வியந்து, ஒருநாள் என் வருங்காலத்தை அறிய (அவரிடம்) கையை நீட்டுவது (இம்முறை மட்டும் வித்தியாசமான காரணம்!) என, முடிவு
செய்தேன்.
வாழ்வில் உருப்படாமல் போய்க்கொண்டிருந்த எனக்கு, கை ரேகையாவது நம்பிக்கை அளிக்குமா என்று ஓர் எண்ணம் வந்தது.
வீட்டில் அம்மா இல்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். எழுதிக் கொண்டிருந்தார், அப்பா.
கதவோரம் உடம்பில் பாதியை மறைத்து, எப்போது என் பக்கம் பார்வை திரும்பும் என்று காத்துக் கொண்டே இருந்தேன்.
ஊஹும்! திரும்பினால் தானே! எழுத ஆரம்பித்து விட்டால், அவர் வேறு உலகிற்கு மாறி விடுவார்.
கை கடுத்ததோ என்னவோ, பேனாவை வைத்துவிட்டு, வலக்கையை ஓர் உதறு உதறியவர், என் பக்கம் திரும்பி தற்செயலாகப் பார்த்தார்.
என் உடல் மொழியை அவர் நன்கு அறிவார்.
'என்னடா வேணும்...'
'இல்லப்பா... வந்து... என் வருங்காலம் எப்படி இருக்கும்ன்னு நீங்க, என் கைரேகையைப் பார்த்துச் சொல்லணும்...'
'மகனுக்குப் பார்த்தா சரியா வராதுடா! நீ நல்லா வருவே. கைரேகையில், 60 சதவிகிதம் தான் சரியா இருக்கும். 40 சதவிகிதம் பொய் தான்...'
'இல்லப்பா... வந்து...'
'நல்லாப் படி. நல்லா வருவே...'
அவ்வளவு தான்! மறுபடி எழுத ஆரம்பித்து விட்டார்.
அப்பா சொன்னால் சொன்னது தான். உச்சநீதிமன்றத் தீர்ப்பு மாதிரி தான். அம்மா தலையிட்டால் மட்டும், உலக நீதிமன்றத் தீர்ப்பாக எப்போதாவது மாறும்.
அம்மாவிடம் முறையிட்டேன்.
'என்னம்மா இது, ஊருக்கெல்லாம் பாக்குறாங்க. எனக்குப் பார்த்துச் சொன்னா என்னவாம்...' முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டேன்; பலனில்லை.
'அப்பா சொன்னா சரியா இருக்கும், விட்டுடு...'
என் மனு, இங்கும் நிராகரிக்கப்பட்டு விட்டது.
அப்பா மீதான என் நிரந்தர ஏக்கங்களுள் இதுவும் ஒன்றாகிப் போனது.
போலி ஜோதிடருடன் ஒரு விளையாட்டு சில நேரங்களில், ஜாலி மூடுக்கு மாறி விடுவார், அப்பா.
ஒருமுறை, காலைத் தினசரிகள் வாங்க நடந்து போகும்போது என்னையும் அழைத்தார், அப்பா. பாண்டிபஜார், சாந்தா பவனில் காபி சாப்பிட்டு விட்டு, காலைத் தினசரிகளை வாங்கிக் கொண்டு திரும்புவார். அன்று, ஏனோ தாமதமாகி விட்டது.
எந்நாளும் இல்லாத திருநாளாய், 'லேனா, நீயும் என்னோடு வா...' என்றார்.
உடலால், மனதால் அவரிடமிருந்து விலகியிருந்த நாட்கள் அவை. அவர் மீது எனக்கு உள்ள பயத்தைப் போக்கும் முயற்சி இது என்பது, பின்னாளில் எனக்குப் புரிந்தது.
பாண்டிபஜார் என்பது அந்நாளில் ஒரு ஜோதிட உலகம் எனலாம். கிளி ஜோதிடம், வெள்ளி கோல் கொண்ட சிவகங்கை மாவட்டப் பெண்களின் (முகக்) குறி ஜோதிடம், கைரேகை மற்றும் ஜாதகம் என்று, மரத்தடிக்கு மரத்தடி இவர்களின் ஆதிக்கம் அதிகம்.
கண்ணாடி, தொப்பி அணியாத காரணத்தால், சர்வ சாதாரணமாக வலம் வருவார், அப்பா. ஒரு கைரேகை ஜோதிடரைத் தேர்ந்தெடுத்து, 'லேனா... இப்பப் பாரு வேடிக்கையை...' என்றவர், அவர் முன் தரையில் அமர்ந்து கொண்டார்.
ஜோதிடப் பலன்களை முழுவதுமாகக் கேட்டுக் கொண்டு, 'இதுல எதுய்யா செல்வாக்கு ரேகை...' என்று ஆரம்பித்தார் பாருங்கள்! இந்த உரையாடல் தமாைஷ, எழுதி மாளாது.
'ஜோதிடம் என்பது அரிய கலை. சரிவர கற்று ஜோதிடம் சொல்ல வந்து அமருங்கள். ஏமாற்றிப் பிழைப்பது என்ன பிழைப்பு... நான் தான் தமிழ்வாணன்...' என்றாரே பார்க்கலாம்!
திருவிளையாடலில் சிவனை அடையாளம் கண்டுகொண்ட புலவர் நாகேஷ் போல ஆகிவிட்டார், ஜோதிடர்.
மறுநாள் அவர் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது என்பதையும் உங்களிடம் சொல்லியாக வேண்டும்.
ஆண்டான் - அடிமை போலப் போய்க்கொண்டிருந்த எங்கள் உறவில், விடியல் வெளிச்சம் போட்ட சம்பவம் இது. இதோடு முடிந்ததா, இன்னொன்றும் சொல்கிறேன்.
சீர்காழி கோவிந்தராஜன் இறைவணக்கம் பாட, விழா மேடையில், ம.பொ.சி., மற்றும் கவியரசு கண்ணதாசனின் அண்ணனும், திரைப்படத் தயாரிப்பாளருமான, ஏ.எல்.சீனிவாசனுடன் தமிழ்வாணன்.
— தொடரும்
லேனா தமிழ்வாணன்