அன்று, மதிய சாப்பாட்டு இடைவேளை...
உதவி ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலரும் சாப்பிட, மொட்டை மாடியில் அமைந்திருக்கும், 'டைனிங் ஹாலு'க்கு சென்று விட்டனர்.
சாப்பிட போனவர்கள் திரும்பி வந்த பின்னரே, நாங்கள் போக முடியும் என்பதால், அலுவலகத்தை காவல் காத்துக் கொண்டிருந்தோம் நானும், இன்னும் சிலரும்.
அப்போது, அலுவலகத்தினுள் ஆஜரானார், லென்ஸ் மாமா.
'என்ன மணி... தனியா உட்கார்ந்திருக்கே... எல்லாரும் சாப்பிட போயிட்டாங்களா... எனக்கும் பசிக்குது. உன் சாப்பாட்டை கொஞ்சம், பங்கு போட்டுக்கலாம்னா, நீ தயிர் சாதமோ, மிளகாய் பொடி துாவிய இட்லியோ தான் எடுத்துட்டு வந்திருப்பே...
'உதவி ஆசிரியைகள், ஏதாவது ஸ்பெஷலா எடுத்துட்டு வந்திருப்பாங்க... மொட்டை மாடிக்கு போய், 'டேஸ்ட்' செஞ்சுட்டு வர்றேன்...' என்றவர், வேகமாக, மாடிப்படி ஏறலானார்.
பொதுவாக, காலையில் வீட்டிலேயே, 'புல்' கட்டு கட்டி வந்துவிடுவார், மாமா. அப்படியே இடையில் பசித்தாலும், ஏதாவது, 'நொறுக்ஸ்' கொறிப்பார். அதுவும் இல்லையென்றால், வீட்டுக்கு சென்று, மாமி செய்து வைத்திருப்பதை சாப்பிட்டு, 'ரெஸ்ட்' எடுத்துவிட்டு வருவார்.
'இதென்ன புதுசா...' என்று நினைத்து, அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்திற்கு பின், சாப்பிட்டு முடித்து இறங்கி வந்த உதவி ஆசிரியை இருவர், நேராக என்னிடம் வந்து, 'மணி, இனிமே லென்ஸ் மாமாவை மொட்டை மாடிக்கு வர விடாதே...' என்றனர்.
இங்கு ஒரு இடை செருகல்...
எங்கள் அலுவலகம் இருப்பது, பல மாடி கொண்ட, மிகப்பெரிய, 'காம்ப்ௌக்ஸ்!' மூன்றாவது மாடியில், மும்பையில் இயங்கும் தலைமை அலுவலகத்தின் கிளை அலுவலகம் உள்ளது. அதில், வட மாநில இளம் பெண்கள் நிறைய பேர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கான சாப்பாட்டு கூடமும், மொட்டை மாடியில் ஒரு பகுதியில் உள்ளது.
மொட்டை மாடியில், மேல்தளம் அமைத்து, டேபிள் - சேர், மின்விசிறி மற்றும் விளக்கு எல்லாம் பக்காவாக போடப்பட்டிருக்கும். எனவே, மழை, வெயில் பற்றி கவலையில்லை. சுற்றுப்பகுதி திறந்தவெளியாக இருப்பதால், காற்றுக்கும் பஞ்சமிருக்காது.
நீண்ட இடைவெளிக்கு பின், அந்த அலுவலகம் இயங்க ஆரம்பித்திருப்பதால், அன்று காலையிலேயே நிறைய பெண்கள் வேலைக்கு வந்ததை, தபால் அலுவலகத்திற்கு போய் வரும்போது பார்த்தேன்.
'கம்மிங் பேக் டு த பாயின்ட்...'
'என்றும் இல்லாத திருநாளாக, லென்ஸ் மாமா, மாடிக்கு சென்றதும், உதவி ஆசிரியை காட்டமாக பேசுவதற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கே...' என்று நினைத்து, 'ஏன்... என்னாச்சு...' என்று விசாரித்தேன்.
'மாமா, மொட்டை மாடிக்கு வந்தாரா... எங்கள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து, மூன்றாம் மாடி பொண்ணுங்க சாப்பிடுவதைப் பார்த்து, 'ஜொள்' கொட்ட ஆரம்பித்து விட்டார். அவர்கள், வெள்ளையாக, நல்ல கலராக இருப்பதால், 'வெள்ளாவி வைத்து வெளுத்தாங்களா...' என்று சினிமாவில், நடிகை டாப்சியை பார்த்து, தனுஷ் பாடுவது போல், பாடலானார்.
'வாஷ்பேசினில், டிபன் பாக்ஸ் கழுவும் போது, அவர்களில் சில பெண்கள் எங்களுக்கு பழக்கமாகி, புன்சிரிப்புடன் ஒரு சில வார்த்தைகள் பேசுவர். ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்ததால், எங்கள் அருகில் வந்து, பேச ஆரம்பித்தனர்.
'மாமாவும், அவர்களிடம் பேச ஆரம்பித்து விட்டார். 'உன்னோட, 'ஜீன்ஸ், டீ - சர்ட்' நல்லாயிருக்கு. 'ஹேர் ஸ்டைல் சூப்பர்!' தலைமுடியில், ஒரு பக்கம் மட்டும், மஞ்சள் கலர் அடித்திருப்பது அசத்தலாயிருக்கு. 'நெயில் பாலிஷ்' கலர் அருமை...' என்றெல்லாம் புகழ, அந்த பெண்கள் எங்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு போனாங்க...' என்றார், உதவி ஆசிரியை.
'மாமா... இது உங்களுக்கு தேவையா... சாப்பிட போவதாக கூறிவிட்டு, 'கடலை' போட போயிட்டீங்களா...' என்றேன்.
'இல்ல மணி... காலையில் நான் அலுவலகம் வரும் போது, 'கங்கைக் கரைத் தோட்டம், கன்னி பெண்கள் கூட்டம்' போல், இளம் பெண்களை வாசலில் பார்த்தேன். எல்லாம் புதுமுகங்களாக இருந்ததால், யார், எங்கே வேலை செய்யறாங்கன்னு தெரிஞ்சுக்க போனேன்.
'அப்பெண்கள், என்னோடு, 'பிரண்ட்லியா' தான் பேசினாங்க. நாளைக்கு என்னை, அவங்களோடு சாப்பிட கூப்பிட்டிருக்காங்க. சப்பாத்தியும், கடாய் வெஜ் மசாலாவும் எடுத்து வர்றதா சொல்லியிருக்காங்க...
'இவங்க தான் பொறாமையில் என்னை அவங்களோடு பேச விட மாட்டேங்கறாங்க...' என்று, உதவி ஆசிரியைக்கு ஒரு, கொட்டு கொட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார், மாமா.
'நல்லவேளை அவருடன் நான் மொட்டை மாடிக்கு செல்லவில்லை. போயிருந்தால், கை - கால் நடுங்கி, வியர்வையில் குளித்திருப்பேன்...' என்று நினைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
சில ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில், கோடை விடுமுறைக்கு, வெளியூர் சென்றிருந்தவர்களின் பங்களா ஒன்றில் நுழைந்து, திருடச் சென்றான், டிக்ஸன் எனும் திருடன்.
வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் கொள்ளையடித்து திரும்பும்போது, அவ்வீட்டின் கதவில் உள்ள, 'ஆட்டோமேடிக் லாக்கர்' தொழில்நுட்பத்தில் ஏதோ பழுது ஏற்பட்டதால், திறக்க முடியவில்லை.
வேறு வழி ஏதுமில்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே மாட்டிக் கொண்டான், டிக்ஸன். எட்டு நாட்களுக்கு பிறகு, வீட்டு உரிமையாளர் வந்ததும் தான், வெளியே வர முடிந்தது.
அந்த எட்டு நாட்களும், வீட்டினுள் இருந்த காய்ந்து போன நாய் பிஸ்கெட் மற்றும் பெப்சி பானத்தை குடித்து காலத்தை கழித்துள்ளான்.
பொதுவாக, அயல் நாடுகளில், தங்களது வீட்டை, 'இன்சூர்' செய்வது கட்டாயமானது. அதன்படி, வெளியே வந்தவுடன், அந்த வீட்டில் நடந்த நிகழ்ச்சியின் காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டதாக, அவ்வீட்டின், 'இன்சூரன்ஸ் கம்பெனி' மீது வழக்கு தொடர்ந்தான், டிக்ஸன்.
திருடிய பொருட்களை, எடுத்த இடத்திலேயே வைத்து விட்டதால், வழக்கும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, திருடன் டிக்ஸனுக்கு நான்கு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர, வீட்டு உரிமையாளருக்கு உத்தரவிட்டார், நீதிபதி.
- இது எப்படி இருக்கு!