இதமான இதயங்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதமான இதயங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2020
00:00

அரக்கப் பரக்க அடுக்களையிலிருந்து வெளியே வந்து, படுக்கையறையை நோட்டமிட்டாள்; நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தது, குழந்தை.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த குழந்தையை, இதமாய் அணைத்து, கன்னங்களிலும், நெற்றியிலும் முத்தங்கள் பதித்தாள்.
துாங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைக்கு முத்தம் கொடுக்கக் கூடாது என்று எப்போதோ, யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. கிறுக்குத்தனமாக அந்த கோட்பாட்டை நிராகரித்து, திரும்பவும் முத்தங்களை பதித்தாள்.
பிறகு, வெகுநேரமாய் பாத்ரூமிற்குள் இருந்த கணவனிடம், ''என்னங்க, நீங்க என்ன, 'டாய்லெட்'லயே குடியிருக்கிறதா முடிவு பண்ணிட்டீங்களா... இன்னிக்கு வெளிய வருவீங்களா, இல்ல நாளைக்கு தானா?'' என்றாள்.
''இதோ வந்துட்டேன், டார்லிங். இன்னிக்கே, இப்பவே,'' என்று சிரித்தபடியே கதவை திறந்தான்.
''நம் தலைவர் இன்னும் எந்திரிக்கலியா?''
''தலைவர், சாவகாசமா எந்திரிக்கட்டும், நா கிளம்பறேன். கொழந்த முழிச்சான்னா, 'கார்ன்பிளேக்ஸ்' குடுங்க. ஆயாம்மா இன்னிக்கு வரமாட்டாங்க. நீங்க, 'லீவ்' போட்டுட்டீங்கல்ல?''
''இன்னிக்குதானே ஒனக்கு கடைசி நாள்?''
''ஆமாங்க... ராஜினாமா கடிதம் எழுதி தயாரா வச்சிருக்கேன். எம்.டி., கையில குடுத்துட்டு, 'இன்னிக்கே, 'ரிலீவ்' பண்ணிருங்க சார்...'ன்னு கேட்க போறேன். எம்.டி., நல்லவர். நம் பிரச்னை அவருக்கு தெரியும்; இன்னிக்கே, 'ரிலீவ்' பண்ணிருவார்.
''ராஜினாமா விஷயம் அவருக்கு மட்டும் தான் தெரியும். ஆபீஸ்ல வேற யார்கிட்டயும் சொல்லல. சொன்னா, என்னை விடவே விடாதுங்க. எல்லாருக்கும் இன்னிக்கு, ஒரு, 'ஷாக்கிங் சர்ப்ரைஸ்' குடுக்கப் போறேன். ப்ரெண்ட்ஸ் எல்லாம் கண் கலங்குவாங்க. என்ன செய்யிறது, நமக்கு வேற வழியே இல்லியே.''
''ப்ரெண்ட்ஸ் கண் கலங்குவாங்க, நீயும் கொஞ்சம் அழேன்.''
''கொஞ்சமா, நல்லாவே அழுவேன். நல்ல ஆபீஸ், அருமையான கொலிக்ஸ்.''
''பிரிவுபசார, 'பார்ட்டி'யெல்லாம் வைப்பாங்கள்ல?''
''கட்டாயம் வைப்பாங்க.''
''மேடம் கூட, நானும், 'பார்ட்டி'க்கு வரலாமில்ல?''
''ஐயோ, நீங்க இல்லாம, 'பார்ட்டி'யா சார்... இவனையும் துாக்கிக்கிட்டு, ஆயாம்மாவையும் கூட்டிக்கிட்டு போவோம்.''
''ஆமா, ஆயாம்மா ஏன் இன்னிக்கு வரலியாம்... இவனை பார்க்காம ஆயாம்மாவால இருக்க முடியாதே?''
''ரேஷன் கடைக்கு போகணுமாம். சொன்ன மாதிரி, இவனை பார்க்காம ஆயாம்மாவால இருக்க முடியாது. நீங்க வேணா பாருங்க, ரேஷன் கடை வேலை முடிஞ்சிருச்சுன்னா, மதியத்துக்கு மேல வந்துருவாங்க.''

கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு போன பின், மூன்று ஆண்டுகளாக, பகல் வேளைகளில், பாதுகாப்பாய், குழந்தையை பராமரிக்கிற பாசமுள்ள, அன்பான ஆயாம்மா.
இருவரும் வீட்டில் இருக்கிற ஞாயிற்றுக் கிழமைகளில், விடுமுறை எடுத்துக் கொள்ள சலுகை வழங்கினர், இருப்பினும், அதை மறுத்து, குழந்தைக்காக, தினசரி வருகை புரிகிற பரிவும், பொறுப்பும் மிக்கவர்.
அடுத்த மாதம், பையனை பள்ளியில் சேர்க்க ஏற்பாடாகி இருந்தது. அவனை பள்ளிக்கு அழைத்து போய், இடைவேளையில் உணவு ஊட்டி, பள்ளி விட்ட பின், வீட்டுக்கு அழைத்து வருவது, அம்மாவுடைய வேலை. அதற்காக தான் இந்த ராஜினாமா.
'தம்பதியர் இருவரும் வீட்டில் இல்லாத பகல் வேளைகளில், சின்னதாய் சமையல் செய்து, வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டியது, ஆயாம்மாவுடைய பொறுப்பு...' என்று, மூன்று பேரும் பேசி, முடிவெடுத்திருந்தனர்.
அன்று சனிக்கிழமையானதால், அரை நாள் தான் அலுவலகம். கையில் ஒரு காகிதத்தோடு, எம்.டி., அறைக்குள் நுழைந்தாள். ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து, விடைபெற்று வெளியே வந்தாள். சக ஊழியர்களிடம் விஷயத்தை சொல்ல, கண்ணீருடன் அவளுக்கு விடை கொடுத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் -
ஆயாவின் கை மணத்தில், மட்டன் பிரியாணியை ஒரு பிடி பிடித்துவிட்டு, குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தபோது, தம்பியிடமிருந்து போன் வந்தது.
'தம்பியும், அவன் பொண்டாட்டியும் கிளம்பி இப்ப வர்றாங்களாம்...' என்று, இவன் தகவல் தந்தபோது, மென்மையாய் கோபித்துக் கொண்டாள்.
''அதென்னங்க தம்பி பொண்டாட்டின்னு கொச்சையா சொல்றீங்க... தங்கச்சி பேர சொல்லலாம்ல... அடடே, கொஞ்சம் முன்னாடி போன் பண்ணியிருந்தாங்கன்னா, 'லஞ்ச்'க்கு வரச்சொல்லியிருக்கலாமே.''
''அதுக்கென்ன, இப்பவும் ஒண்ணும் மோசமில்ல... பிரியாணி மிச்சம் இருக்கான்னு ஆயாம்மாட்ட கேளேன்.''
''ஆயாம்மா... பிரியாணி ரெண்டு பேருக்கு இருக்குமா?'' என்றபடியே, ''ஏங்க, அவங்க ரெண்டு பேர் தான் வர்றாங்களா... பிள்ளைங்களை கூட்டிட்டு வரலியாமா?'' என்றாள்.
''புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேர் தான் வர்றாங்களாம்.''
''பிரியாணி இருக்கும்மா, ரெண்டு பேர் சாப்பிடலாம். யார்ம்மா வர்றாங்க?''
''ஒங்களுக்கு தெரிஞ்சவங்கதான், ஆயாம்மா. இவங்க தம்பியும், அவங்க சம்சாரமும்,'' என்றவள், ''டேய், குட்டிப் பையா... ஒங்க அங்கிளும், ஆன்ட்டியும் வர்றாங்களாம்டா,'' என்றாள்.
வந்தவர்களின் முகங்களில், முக மலர்ச்சியை மீறியதொரு சங்கடம் வெளிப்பட்டது.
''வாங்க, வாங்க, காதல் பறவைகளே, ஒக்காருங்க,'' என்று ஆர்ப்பாட்டமாய் வரவேற்ற அண்ணனுக்கு, ஆர்வம் குன்றிய மறுமொழியை தந்தான், தம்பி.
''காதலாவது, பறவையாவது... கல்யாணம் முடிஞ்சு, எட்டு வருஷமாச்சுண்ணே... மூணு பிள்ளையும் பெத்தாச்சு.''
''இன்னும் பெத்துக்கலாமேடா, தம்பி.''
''அது சரி, அந்த ஒரு வேலையை மட்டுமே செஞ்சுட்டிருந்தா, வேற சோலி எதுவும் பார்க்க வேண்டாமா?''
சங்கடமான முகத்தோடு வந்த, தம்பி, ஒரு நகைச்சுவை துணுக்கை அவிழ்த்து விட்டது, அண்ணனுக்கும், அண்ணிக்கும் சந்தோஷமாய் இருந்தது.
அவள் மடியிலிருந்த குட்டிப் பையனை உற்சாகத்தோடு உசுப்பேற்றி, ''டேய் ராஜா... அங்கிளுக்கும், ஆன்ட்டிக்கும் சலாம் சொல்லு பார்ப்போம்,'' என்றாள்.
நெற்றிக்கு கையை உயர்த்தி, அவன் செய்கையில் சலாம் சொன்னது, அங்கிள் - ஆன்ட்டியிடத்தில் பெரிசாய் வரவேற்பை பெறவில்லை என்பதை இருவரும் அவதானித்தனர்.
தம்பி, நல்ல செய்தியோடு வரவில்லை என்பது புரிந்தது. உவப்பில்லாத அந்த செய்தியை வெளிப்படுத்துவதற்கு தம்பதியர் இருவரும் தயக்கம் காட்டுவதும் புரிந்தது.
சிறிது நேரம் நிலவிய அசாதாரணமான அமைதியை கலைத்தான், அண்ணன்.
''என்ன தம்பி, என்னமோ சொல்லணும்ன்னு நினைக்கிற, நெளிஞ்சுகிட்டு ஒக்காந்திருக்க... என்ன பிரச்னை சொல்லேன்.''
''நம்ம இஸ்லாத்ல, கொழந்தைய தத்து கொடுக்கறதுக்கோ, தத்தெடுக்கிறதுக்கோ அனுமதி இல்லியாம் அண்ணே.''
''இருக்கட்டும், இத ஏண்டா இப்ப என்கிட்ட சொல்ற?''
''நா என்ன சொல்ல வர்றேன்னு நீங்க புரிஞ்சுகிட்டிருப்பீங்க.''
''எனக்கு புரியல, நீயே சொல்லு.''
''அதாவதண்ணே... மூணு வருஷத்துக்கு முந்தி, நாங்க ஒங்களுக்கு கொழந்தைய தத்து கொடுத்தோம். ஆனா, இப்ப தான் தெரியுது, தத்து கொடுக்க நம் இஸ்லாத்ல அனுமதி இல்லைன்னு. அதனால...''
''அதனால?''
''இவன நாங்க திரும்ப எடுத்துக்கலாம்ன்னு...''
தம்பி வாயை மூடும் முன், ஆசனத்திலிருந்து எழுந்து, பாய்ந்து அவன் சட்டையை பற்றி மூர்க்கத்தனமாய் குலுக்கி, ''டேய் ராஸ்கல், என்னடா சொன்ன... இதச் சொன்னது வேற எவனா இருந்தா, அறைஞ்சு பல்லெல்லாம் பேத்துருப்பேன்.
''எங்க கொழந்தையை கடத்திட்டு போற சதி திட்டத்தோடயா ரெண்டு பேரும் கிளம்பி வந்துருக்கீங்க... வந்ததுக்கு, பிரியாணிய தின்னுட்டு ரெண்டு பேரும் கிளம்புங்க. இனிமே, தத்துப்பித்துன்னு ஒளறிக்கிட்டு இந்தப் பக்கம் வராதீங்க.''
திக்குமுக்காடிப் போனான், தம்பி. வெலவெலத்துப் போனாள், அவன் மனைவி. மடியிலிருந்த மகனை, மார்போடு இறுக்கிக் கொண்டாள், அண்ணி.
தம்பியை விடுவித்து, ஆசனத்தில் அமர்ந்து கைக்குட்டையால் வியர்வையையும், அகத்து கொதிப்பையும் சேர்த்து துடைத்தான்.
பிறகு, கொஞ்சம் அமைதியானவுடன், ''சாரிடா தம்பி, உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அந்த வார்த்தையை நீ சொல்லியிருக்கக் கூடாதுடா.''
அனைவரும் அமைதியடைந்தனர்.
தயங்கி தயங்கி, திரும்பவும் வாயை திறந்தான், தம்பி.
''அண்ணே, உணர்ச்சிவசப்படாம, கோபப்படாம நா சொல்றதை கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க.''
''ம், சொல்லு.''
''அண்ணே, எங்களுக்கு மூணு பிள்ளைங்க.''
''மூணு இல்ல, ரெண்டு தான். இவன், ஒங்க பிள்ள இல்ல, எங்க பிள்ள.''
''சரி இருக்கட்டும். நான் என்ன சொல்ல வர்றேன்னா, மூத்த பையன்க ரெண்டு பேர்ல ஒங்களுக்கு யாரப் புடிக்குதோ, அவன நீங்க எடுத்துக்குங்க.''
''எடுத்துக்கிட்டு?''
''இவன எங்களுக்கு திருப்பிக் குடுத்துருங்க.''
''எக்ஸ்சேஞ்ஜ் பண்ணிக்கலாம்ங்கற. ஒரு சரக்க, 'ரிட்டன்' எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா வேற சரக்க தர்றேங்கற.''
''அப்படியில்லண்ணே... ஒங்ககிட்ட எப்படி ஒடச்சு சொல்றதுன்னு தெரியல. என்ன விட இவ சரியா சொல்லுவா. இந்தாம்மா, நீ சொல்லேன்.''
''அண்ணே, நீங்க சொன்ன மாதிரி, நாங்க வேணா இன்னொரு கொழந்த பெத்துக்கறோம்.''
''ஆஹா... ஜோரா பெத்துக்கிருங்க.''
''பெத்து, ஒங்களுக்கு தர்றோம்.''
''பாரும்மா, இவன் சொன்னத தான் நீயும் சொல்ற. அப்புறம் நா திரும்பவும் உணர்ச்சிவசப்பட்டாலும் பட்டுருவேன். 'டாப்பிக்'க மாத்து.''
''பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பொறுமையா கேளுங்க... அண்ணி, நீங்களும் கேளுங்க.''
''ம். சொல்லும்மா?''
''இவன நா வயித்துல சொமந்துட்டிருக்கும்போது, நீங்க ரெண்டு பேரும் எங்க வூட்டுக்கு வந்தீங்க.''
''ஆமா, வந்தோம்.''
''இந்த கொழந்த ஒங்களுக்கு வேணும்ன்னு கேட்டீங்க.''
''ஆமா, கேட்டோம்.''
''பொறக்க போற பிள்ள ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, நாங்க தத்தெடுத்துக்கறோம்ன்னு சொன்னீங்க.''
''ஆமா, சொன்னோம்.''
''ஆனா, ஆனா...''
''ஆனா என்னம்மா, அழாம சொல்லு.''
''ஆனா, அண்ணி... பொறக்கப் போற பிள்ள, கிறுக்கு பிள்ளையாயிருந்தாலும் நாங்க தத்தெடுத்துக்கறோம்ன்னு நீங்க சொல்லல.''
அதற்கு மேல் பேச வார்த்தைகள் வராமல், ரெண்டு கைகளாலும் முகத்தை பொத்தி தேம்பினாள். அவள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், தம்பி...
''இப்படி மன வளர்ச்சியில்லாத ஒரு பிள்ளையை அல்லா எங்களுக்கு குடுப்பான்னு நாங்க நெனைக்கவே இல்லண்ணே. ஊர் ஒலகத்துல, எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க தெரியுமாண்ணே, 'பைத்தியக்கார பிள்ளையை அண்ணன் தலையில வச்சு கட்டிட்டான் பாருடா'ன்னு எங்க காது படவே பேசறாங்கண்ணே.''

அதற்கு மேல் பேச முடியாமல் உடைந்து போனான்.
''எவண்டாவன் எங்க பிள்ளையை கிறுக்குன்னும், பைத்தியக்காரன்னும் சொன்னவன். நீ ஆள அடையாளங் காட்டு, போய் அவனை பொரட்டியெடுத்துட்டு வரேன்.
''ஆட்டிஸம், இப்பல்லாம் ஒலகத்துல சாதாரணம். நாங்க இத, 'ஸ்போர்ட்டிவா' எடுத்துக்கிட்டோம். நீங்க ரெண்டு பேரும், 'ஸ்போர்ட்டிவா' எடுத்துக்கணும். பிள்ளை பாக்கியம் இல்லாமலிருந்த எங்களுக்கு ஆண்டவன் குடுத்த, 'கிப்ட்' இவன். இவன யாரும், நீ உட்பட அவதுாறா பேசறத, நா அனுமதிக்க முடியாது.''
''என்னங்க, நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. அப்புறம் திரும்பவும் நிதானமிழந்துட போறீங்க,'' என்று அவனை அமர்த்தி, சோபாவில் அமர்ந்திருந்த தங்கச்சியின் கையை தன் கைகளில் இறுக்கி, ''கண்ண தொடச்சுக்க தங்கச்சி. இந்த சின்ன மேட்டர நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு சீரியஸ்சா எடுத்துக்கிட்டு, இங்க வந்து அழுவீங்கன்னு நெனைக்கவே இல்லம்மா.''
''அதில்லீங்க, அல்லா எங்க மேல எறக்கி வச்ச சொமையை நாங்க தான சொமக்கணும்.''
''ஒங்க மேல எறக்கி வச்ச சொமை இல்லம்மா... இவர் சொன்ன மாதிரி, அல்லா எங்களுக்கு குடுத்த, 'கிப்ட்' இவன். குழந்தையில்லாம சூன்யமாயிருந்த எங்க வாழ்க்கையில இவன் வந்தப்புறந்தான் ஒரு வெளிச்சம் தெரியுது. அடுத்த மாசம் இவன ஒரு, 'ஸ்பெஷல்' ஸ்கூல்ல போடப் போறோம். நா வேலையை, 'ரிசைன்' பண்ணிட்டேன்.
''இனி, 24 மணி நேரமும் என் மகனோடயே இருக்கப் போறேங்கிறத நெனைக்கிறப்ப, ரொம்ப, 'த்ரிலிங்கா' இருக்கு. இவன் தான் இனி எங்களுக்கு ஒலகம், எதிர்காலம். இவனை பிரிஞ்சு எங்களால இருக்கவே இயலாது. ஆயாம்மா, இன்னிக்கு மட்டன் பிரியாணி செஞ்சாங்க. செம டேஸ்ட். ஒங்க ரெண்டு பேருக்கும் எடுத்து வச்சிருக்காங்க. மொகத்த கழுவிட்டு வந்து சாப்பிடுங்க.''

ஆயாம்மாவுடைய பெயர் உச்சரிக்கப்பட்டதும், அவள் பங்குக்கு உரையாடலில் இறுதியாய் இணைத்துக் கொண்டாள்.
''தங்கச்சி, தப்பா எடுத்துக்காதீங்க... நீங்க பேசிட்டிருந்தத ஆரம்பத்திலிருந்தே நான் கேட்டுட்டு தான் இருந்தேன். ஒரு கட்டத்துல நான் கூட ஒரு திட்டம் போட்டேன்.''
''என்ன திட்டம், ஆயாம்மா?''
''ஒருவேள பிள்ளையை நீங்க கொண்டு போயிட்டீங்கன்னா, ஒங்க வீட்டு வாசல்ல, 'சாகும் வரை உண்ணா விரதம்' இருந்து, பிள்ளையை மீட்டுக்கிட்டு வரணும்ன்னு திட்டம் போட்டு வச்சிருந்தேன். சிரிக்காதீங்க தங்கச்சி, சத்தியமா நா செஞ்சே இருப்பேன். என்னாலயும் இவனை பிரிஞ்சு இருக்க முடியாது.''
தங்கச்சியின் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர், ஆனந்த கண்ணீராய் மாற்றம் பெற்றிருந்தது.
''அண்ணே - அண்ணி, ஆயாம்மா, நீங்கள்லாம் இந்த லோகத்து மனுஷங்க இல்ல. சொர்க்கலோக தேவதைகள். நா பெத்த பிள்ளைக்கு இப்படியொரு அற்புதமான வாழ்க்கையை அமைச்சு தந்த, அல்லாவுக்கு தான் எல்லா புகழும்,'' என்றாள்.
அந்த அறை முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியது. குட்டி பையனும், கைக்கொட்டி சிரித்து, அந்த ஆரவாரத்தில் கலந்து கொண்டான்.

ஏ.ஏ.எச்.கே.கோரி
முழுநேர எழுத்தாளர்.
இதுவரை இவர் எழுதிய சிறுகதைகள் - 300, சிறுகதை தொகுதிகள் - 9, நாவல்கள் - மூன்று, தமிழில் வெளியாகியுள்ளன.
ஆங்கிலத்தில் ஒரு நாவலும் எழுதியுள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தளம் இயக்கத்தில், சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X