ஞான நுால்களை எழுதி, மக்களை நல்வழிப்படுத்த முனைந்துள்ளனர், மகான்கள். இருந்தாலும், அனுபவப்பட்டால் ஒழிய ஏற்க மறுக்கும் மனதால்,
என்னவாகிறது என்பதை விளக்கும் கதை இது:
தீங்கு செய்து வந்த அசுரர்களை கொல்வதற்காக, தன் முதுகெலும்பை தியாகம் செய்தார், ததீசி முனிவர். அதன் மூலம் வஜ்ராயுதம் செய்த இந்திரன், அசுரர்களை வதம் செய்து, வெற்றி பெற்றார்.
தேவர்களின் வேண்டுகோளுக்காக, அசுரர்களின் வதத்திற்காக தன் அப்பா உயிர் துறந்தார் என்பதை அறிந்தான், ததீசி முனிவரின் மகன், பிப்பலாதன்.
தேவர்களை அழிக்க வேண்டும்; பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையாக தவம் செய்தான்.
காட்சி கொடுத்த சிவபெருமானிடம், 'தாங்கள், நெற்றிக்கண்ணை திறந்து, தேவர்களையெல்லாம் எரிக்க வேண்டும். என் அப்பாவின் மரணத்திற்கு காரணமான தேவர்கள், உயிருடன் இருக்கக் கூடாது...' என, வேண்டினான்.
'நெற்றிக்கண்ணை திறந்தால், அனைத்தும் சாம்பலாகி விடும்; நீயும் சாம்பலாகி விடுவாய்...' என்றார், சிவபெருமான்.
வீம்பு பிடித்தான், பிப்பலாதன்.
'விநாடிக்கு குறைவான நேரம், உன் உள்ளத்தில் நெற்றிக்கண்ணின் சக்தியை வைக்கிறேன். தாங்க முடிகிறதா பார்...' என்றார்.
'சுவாமி... என்னால் தாங்க முடியவில்லை. நெற்றிக்கண்ணை மூடுங்கள்...' என, கதறினான்.
நெற்றிக்கண்ணை மூடினார், சிவபெருமான்.
'தெய்வமே... தேவர்களை எரிக்கச் சொல்லி வேண்டினால், நீங்கள் என்னை எரிக்கிறீர்களே...' என்றான்.
'பிப்பலாதா... அடுத்தவருக்கு தீங்கு செய்ய நினைத்தால், அத்தீங்கு முதலில் நம்மைத்தான் பாதிக்கும். தேவர்களை எரிக்க சொன்னாயே, அவர்களை எரித்த பிறகு, நீ உயிரோடு இருக்க முடியும் என்று நினைக்கிறாயா... உன்னிடம் உள்ள ஐம்புலன்களுக்கும் ஒவ்வொரு தேவதை, அதி தேவதையாக இருக்கிறது.
'மனதின் தேவதை, சந்திரன்; கையின் தேவதை, இந்திரன்; கண்ணின் தேவதை, சூரியன்; மூக்கின் தேவதை, அசுவினி குமாரர்கள். அவர்களை அழித்தால், நீ உயிரோடு இருக்க முடியுமா... ஆகையால், அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காதே...
'தியாகத்தால் பெரும் புகழோடு விளங்குகிறார், உன் அப்பா. அந்த தியாக உள்ளத்தோடும், மனோ பலத்தோடும் உன் காரியங்களை செய்...' என்று மறைந்தார், சிவபெருமான். பிப்பலாதன் மனதில் இருந்த பழி வாங்கும் உணர்ச்சியும் மறைந்தது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
வீட்டில் துளசியை வளர்ப்பது சிறப்பு. காலையில் எழுந்ததும், துளசியை தரிசிப்பதால், நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது, சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம், வீண்.