சந்திரா என்று சுருக்கமாக அழைக்கப்படும், சந்திரனின் முகத்தை பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. இந்த, 'டேட்டிங்'கும் கை கூடவில்லை என்று!
''ராமன் வீட்டு சேவல், கிருஷ்ணன் வீட்டிலே முட்டையிட்டா, அது யாருக்கு சொந்தம்கிற புதிரை அவளிடம் கேட்டுத் தொலைச்சியா?'' என்று கத்தினேன்.
''ஆமாண்டா. ஆனா, அவசரத்திலே, 'சேவல் எப்படி முட்டை போடும்'ன்னு விடையை சொல்லிட்டேன்,'' என்றான்.
ஆறடி உயரத்தில், சிகப்பு நிறத்தில், கணிசமான ஊதியம் பெறும் ஒருவன், எப்படி இவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்... 'மேட்ரிமோனியலை' பார்த்து அணுகும் பெண்கள் எல்லாம், தனியான ஒரு சந்திப்பை கோருகின்றனர். அத்தோடு, இவன் காலி.
தனிமையில் சந்தித்த மூன்றே நிமிடங்களில், எந்த பெண்ணையும், 'நோ' சொல்ல வைத்து விடும் தன்மை, சந்திராவிடம் இயல்பாகவே அமைந்து விட்டிருந்தது.
முன்பெல்லாம் முன்புறம், 'பசிபிக் ஸ்ட்ராம்' என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்த குறுக்குக் கோடுகள் போட்ட சட்டையை தான், தனக்கு ராசியானது என்று போட்டுச் செல்வான். திட்டித் திட்டி, 'பிராண்டட் டீ - ஷர்ட்'டை போட்டுக் கொள்ளச் செய்தேன்.
தனிமை சந்திப்புக்கு கிளம்பும்போது, தலையில் வழிய வழிய தேங்காய் எண்ணெயை விட்டு வாரிக் கொள்வான். கடிந்து கொண்டபோது, 'என் வகிடு அப்படியே ஸ்கேலில் வரைந்தது போல் இருக்கும் பாரு. இதைப் பார்த்தாலே எந்த பெண்ணுக்கும் என்னை பிடித்துப் போகும்...' என்பான்.
மிகவும் கஷ்டப்பட்டு தான், இந்த பழக்கத்தை மாற்ற முடிந்தது. எனினும், அவனது புதிர் போடும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
அதுவும், மிக எளிமையான, பள்ளி மாணவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் புதிர்களாக கேட்பான். 'ஒரு மின்சார ரயில், கிழக்கிலிருந்து மேற்கே போகிறது. அதன் புகை, எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கிச் செல்லும்...' என்பான்.
மேற்படி புதிரை, ஒரு பெண்ணிடம் இவன் கேட்டு வைக்க, அவள் எழுந்து சென்று விட்டாளாம்.
'மின்சார ரயிலிலேர்ந்து புகை வராதுன்ற விடை, அவளுக்கு தெரியலே. தாழ்வு மனப்பான்மையால அவ கிளம்பிட்டா. நான் விடலே, வேகமாக போய் அவள் வண்டியை எடுப்பதற்கு முன், அந்த பதிலை சொல்லிட்டேன்...' என்று, ஒருமுறை கூறினான்.
கூடவே, 'பதற்றத்திலே, கேள்வியிலே, மின்சார ரயில்ன்றதை குறிப்பிடாமல் ரயில்ன்னு மட்டும் குறிப்பிட்டேன்...' என்றும் கூறினான்.
அந்த பெண், இவனை அறையவில்லை என்பதை அறிந்தபோது, அவன் பெற்றோர் சேகரித்து வைத்த புண்ணியம் தான் என, நினைத்து கொண்டேன். இந்த அழகில், அவன் வீட்டுக் கூடத்தில் உள்ள போஸ்டரில், 'வாழ்க்கையே ஒரு புதிர்' என்ற வாசகம் காட்சியளிக்கும்.
'கேட்பது தான் கேட்கிறாய், கல்தோன்றி மண் தோன்றிய காலத்துக்கு பிறகு உருவான புதிரையாவது கேட்டுத் தொலை...' என்று கூற தோன்றியது. பின்னர் ஒரு நடுவாந்திர தீர்வை உருவாக்கினேன்.
'வாட்ஸ் - ஆப்பில் எவ்வளவோ சுவாரஸ்யமான விஷயங்கள் வருகின்றன. புதிருக்கு பதிலாக அதில் எதையாவது, 'கேஷுவல்' ஆக, உன் பேச்சில் கலந்து விடு. நீ விஷயம் தெரிந்தவன் என்பது போல், அவளுக்குள் பதியும்...' என்றேன்.
பிறகு, முன்னெச்சரிக்கையாக, 'அது என்ன விஷயம் என்பதை, என்னிடம் முன்னதாகவே கூறி விடு...' என்றும் கூறினேன்.
அடுத்த முறை எங்கள், 'குரூப் வாட்ஸ் - ஆப்'பில், யாரோ அவனுக்கு அனுப்பிய ஒரு தகவலை, 'பார்வேர்டு' செய்திருந்தான். அனைத்து தேசிய கீதங்களிலும், இந்தியாவின் தேசிய கீதம் தான் மிகச் சிறந்தது என்று, ஐ.நா., தேர்ந்தெடுத்த தகவல்.
போதாக்குறைக்கு, அதே, 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான, 'ரத்தப் புற்றுநோய் காரணமாக மரண தருவாயில் இருக்கும் என் குழந்தையின் சிகிச்சைக்கு பணம் அனுப்புங்கள்...' என்ற, ஒரு தாயின் வீடியோவையும் அனுப்பியிருந்தான்.
'வாட்ஸ் - ஆப்பிலே நான் அனுப்பினதை பார்த்தே இல்லையா, அதை தான் நான், மைதிலிகிட்ட சொல்லப் போறேன்...' என்றான்.
மிக பதற்றத்தோடு, 'இதையெல்லாம், ஒன் - டூ - ஒன் சந்திப்பில் சொல்ல வேண்டாம்...' என்று எச்சரித்தேன். மேற்படி, 'பார்வேர்டு'கள் காரணமாக, எங்கள், 'வாட்ஸ் - ஆப்' குழுவிலிருந்து பலரும் விலகி விட்டது வேறு விஷயம்.
ஒருநாள், சந்திராவின் முகம், மகிழ்ச்சியாக இருந்தது.
'இன்னிக்கு சாயங்காலம், ராகினின்ற பெண்ணை சந்திக்க போறேன். எனக்கு புதிர் தான், 'செட்டாகும்' நண்பா. தவிர, ஒரு புது புதிரும் கைவசம் இருக்கு...' என்றவன், என் கோபத்தை கண்டுகொள்ளாமல், அதை சொன்னான்.
'பச்சை வண்ணத்திலே இருக்கும். இலையல்ல. மற்றவர்களை காப்பி அடிக்கும். ஆனால், குரங்கு அல்ல... புதிரை சொல்லி, 30 நொடிகள் தான், 'டைம்' கொடுப்பேன். இல்லேன்னா கிளின்ற விடையை சொல்லிடுவேன்...' என்றான்.
என்ன முயற்சித்தாலும், அவன் புதிர் போடுவதை நிறுத்த முடியாது என்பது தெரிந்திருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த புதிரின் விடையை, அவன் சொதப்புவதையும் நிறுத்த முடியாது.
'சந்திரா, அவளிடம் பல விஷயங்களை பேசு. அப்புறமாக கடைசியில், இந்த புதிரை கேட்டுத் தொலை...' என்று, மன்றாடினேன்.
ஒத்துக்கொண்டான். ஆனால், நடந்தது வேறு.
'அவள், பச்சை வண்ண சுரிதார் அணிந்து வந்திருந்தாள். உடனே, எனக்கு கிளி ஞாபகம் வந்திடுச்சு. புதிர் ஞாபகமும் வந்தது. புதிரை முதலிலேயே கேட்டுட்டேன். அப்புறம், 10 நிமிஷம் பேசினோம். அவளுக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. போனசாக இன்னொரு புதிரையும் கேட்டேன். ஆனா, பதில்களை தான் கொஞ்சம் மாற்றி சொல்லிட்டேன்...' என்றான்.
அதற்கு மேல் அவன் பேசுவதை கேட்க பிடிக்காமல், வேகமாக வெளியேறினேன்.
உலக வரலாற்றில் இன்னொரு அதிசயம் நடந்தது. இவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டாள், ராகினி. நிச்சயதார்த்தத்துக்கு சென்றிருந்தபோது, அவள் மிக லட்சணமாக தோற்றமளித்தாள்; நாகரிகமாக நடந்து கொண்டாள். கொஞ்சம் பேசி பார்த்தபோது, அவள் மிக புத்திசாலி என்பது தெரிந்தது.
திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன், உணவகம் ஒன்றில், தற்செயலாக அவளும், நானும் சந்தித்தபோது, அந்த ரகசியம் வெளிப்பட்டது.
''ஒரு சின்ன மனவியல் கேள்வி, ராகினி. உன்னை பிடித்துப் போனதற்கு, சில பல காரணங்களை என்னிடம் சொன்னான், சந்திரா. அவனை, உனக்கு எதனால் பிடிச்சதுன்னு தெரிஞ்சுக்கலாமா,'' என்று, சுற்றி வளைத்து கேட்டேன்.
''மூன்று காரணங்கள்,'' என்று, பதிலின் துவக்கத்திலேயே அதிர வைத்தாள்.
''புதிர்களை அதிகம் பிடித்துப் போனவர்களுக்கு, எதையும், 'எக்ஸ்ப்ளோர்' செய்வதில் ஆர்வம் இருக்கும்ன்னு, எங்கேயோ படிச்சிருக்கிறேன். அந்த தேடல் ஆர்வம் எனக்கும் உண்டு.
''தவிர, அவர் கேட்ட புதிர்களெல்லாம், மிக எளிமையானவை. யாரும் விடை தெரியாமல் குழம்புவதை அவர் விரும்புவதில்லைன்றது புரியுது. அது,
அவரது நல்ல உள்ளத்தை காட்டியது.
''அதே சமயம், அந்த புதிர்களுக்கு, எதிர்பாராத விடைகளை சொன்னார். வீட்டுக்கு போய், அவர் சொன்ன
விடைகளை யோசிக்க யோசிக்க, 'கலைடாஸ்கோப்' போல, எனக்கு விதவிதமான கருத்துகள் கிடைத்தன. இப்படிப்பட்ட ஜீனியஸ் தான் கணவர் என்று, அப்போதே தீர்மானித்து விட்டேன்,'' என்றாள்.
சந்திராவின் வீட்டிலிருந்த போஸ்டர் வாசகம் தான் நினைவுக்கு வந்தது.
அருண் சரண்யா