அன்புள்ள சகோதரிக்கு —
ராணுவத்தில், 29 ஆண்டுகள் பணியாற்றி, 2014ல் ஓய்வு பெற்றேன். வயது, 55. தற்சமயம், பாதுகாப்பு துறையில் பணியாற்றுகிறேன். அரசு பள்ளி ஆசிரியையான மனைவி, கல்லுாரி மூன்றாம் ஆண்டு பயிலும் மகள், பிளஸ் 2 படிக்கும் மகன் என, அனைவரும் சென்னை புறநகரில் வசிக்கிறோம்.
நானும், மனைவியும் அவரவர் பணிபுரியும் இடத்திற்கேற்ப, தனித்தனியாக வாழ்ந்தோம். மனைவிக்கு உறுதுணையாக, சமீபத்தில் மரணமடைந்த அவர் அம்மாவும், அவ்வப்போது என் அம்மாவும் இருந்தனர்.
ராணுவ பணி நிறைவில் கிடைத்த தொகையின் ஒரு பகுதியில், தன்னிச்சையாக வாங்கிய விவசாய நிலத்தில் போதிய வருமானமின்மை; மனைவியின் அக்கா கணவர், என்னிடம் வாங்கிய தொகையை திருப்பி தராததால், மனைவிக்கு என் மீது கோபம்.
இதுதவிர, என் தம்பி மகனின் கல்லுாரி படிப்பிற்கு நான் உதவுவதால், எங்கள் குடும்ப முன்னேற்றத்தை விரும்பாத கிராமத்தில் உள்ள சிலர், என் நடத்தையில் வதந்தி பரப்பினர். அதை நம்பி, பிள்ளைகளிடம் என்னை பற்றி தவறாக புரிந்துகொள்ள வழி வகுத்தாள், மனைவி.
உண்மையில், நாங்கள் இருவரும் சேர்ந்து சம்பாதித்து வாங்கிய சொத்துகள், மனைவியின் பெயரில் உள்ளன. இருப்பினும், பிள்ளைகள் இருவரும் மனைவியின் அருகிலேயே இருப்பதால், அவரின் பேச்சை நம்புகின்றனர்.
வட மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததால், பணம் மட்டுமே அனுப்ப இயலும். மகளின் கல்லுாரி சேர்க்கைக்கு முன்னின்று உதவவில்லை என்று அவளுக்கு புரிய வைக்காமல், குடும்பத்தில் என் மனைவி மட்டுமே உழைத்து கஷ்டப்படுவதாக கூறுகிறார்.
மனைவியுடன், மகன், வங்கிக்கு அவ்வப்போது சென்று வருவதால், குடும்பத்திற்கு நான் பணம் கொடுப்பதை அறிவதோடு, நடுநிலைமையோடு இருப்பான்.
வயதான, உடல்நல குறைவான என் அம்மாவை, இறுதி காலத்தில் உடன் வைத்து, மகனின் கடமையை செய்யாமல் பாவம் புரிவதாக உணர்கிறேன். மேலும், பேரக் குழந்தைகளின் பாசத்திற்காகவும் அவர் ஏங்குகிறார்.
குடும்பத்தில் அடிக்கடி உண்டாகும் இப்பிரச்னைகள், பிள்ளைகளின் கல்வியில் கவனச் சிதறல், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தவறான அடித்தளம், உலகிற்காக கணவன் - மனைவியாக போலி வாழ்க்கை வாழ்தல், குடும்ப முன்னேற்ற பாதிப்பு...
வருமானமற்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை விற்க வற்புறுத்தல், என் அம்மா, தம்பி குடும்பம் மற்றும் நெருங்கிய குடும்ப உறவினர் மீது மனைவியின் வெறுப்பு...
இவையனைத்தும் எனக்கு, மன ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குடும்பத்துடன் வாழ விரும்பும் எனக்கு, சரியான வழிகாட்டுங்கள், சகோதரி.
-இப்படிக்கு,
உங்கள் சகோதரன்
அன்பு சகோதரருக்கு —
ராணுவம், காவல்துறை, வெளிநாடு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் பெரும்பாலான ஆண்களின் இல்வாழ்க்கை, சிறப்பாக அமைவதில்லை. பொருளாதார பாதுகாப்பை விட, கணவரின் அருகாமை தான் பெண்களுக்கு முக்கியம்.
கணவரின் வயதான பெற்றோர் முதல், குழந்தைகளின் படிப்பை கவனிப்பது வரை, அனைத்து பொறுப்புகளும் மனைவியின் தோள் மீது விழுகின்றன.
அஷ்டவதானி, தசாவதானி போல பெண்கள், ஒரே நேரத்தில் பல்வேறு விதமான பொறுப்புகளை ஏற்று செயல்பட முடியாமல், மன அழுத்தத்தால் பரிதவிக்கின்றனர். இந்த கோபத்தை எல்லாம், கணவர் விடுமுறையில் வரும்போதோ, பணி ஓய்வு பெற்று வரும்போதோ, ஆயிரம் டெசிபல்லில் வெடித்து காட்டுகின்றனர்.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* நீ, ராணுவப்பணியில் இருந்தபோது, 29 ஆண்டுகள், குடும்பத்தை சிறப்பாக நிர்வகித்த மனைவிக்கு, 'ஈகோ'வை தொலைத்துவிட்டு, 'ராயல் சல்யூட்' அடி. குடும்பத்திற்காக மிக உழைத்திருப்பதாக, மனைவி, உன் பிள்ளைகளிடம் பெருமை அடித்து கொண்டால், ஆமோதித்து தலையாட்டு. மனைவியுடன் வாக்குவாதம் பண்ணாதே
* விவசாய நிலத்தில் போதிய வருமானம் இல்லை என்றால், அலட்டிக் கொள்ளாதே. சிறப்பான வருமானம் வரும் வரை காத்திரு அல்லது விற்று பணத்தை வங்கியில் போடு
* மனைவியின் அக்கா கணவர் உன்னிடம் வாங்கிய கடனை, சில பல தடவைகள் கேட்டு பார். கொடுக்கவில்லை என்றால், பெருந்தன்மையாக கடனை வசூல் செய்ய பார்
* தம்பி மகனின் கல்லுாரி படிப்பிற்கு உதவுவதால், அவர் மனைவியுடன் உனக்கு தொடர்பிருக்கும் என சந்தேகப்படுகின்றனரா... தம்பி குடும்பத்திலிருந்து விலகி நின்று, உதவி செய். அப்போதும் சந்தேகம் தொடர்ந்தால், உதவி செய்வதை நிறுத்து
* வயதான, உடல்நலக்குறைவான அம்மாவை கவனிக்காமல், 29 ஆண்டுகள் இருந்துவிட்டாய். தவறு தான். ஆனால், தவறை திருத்திக் கொள்ள இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தினமும் அம்மாவுடன் ஒருமணி நேரம் பேசு. வாரம் ஒரு நாள், அம்மாவை நேரில் பார்த்து பேசு. மகன், மகளை, பாட்டியுடன் அளவளாவ செய்
* உன் அம்மா, தம்பி குடும்பத்தினர் மீது, மனைவிக்கு வெறுப்பு இருக்கிறது இல்லையா... இந்த வெறுப்பு இல்லாத குடும்பங்கள் ஏது... வெறுப்பை அகற்ற பார். முடியாவிட்டால் கண்டும் காணாமல் போய் விடு
* கணவன் - மனைவி இல்வாழ்க்கையில், எது போலி, எது ஒரிஜினல் என்று யாரால் சான்றிதழ் தர முடியும்... குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, குடும்பம் என்ற அமைப்பின் வெற்றிக்காக, தாம்பத்யத்தை ஊமை துாக்கத்துக்கு ஓலை வாங்கும் வரை தொடர்வது உத்தமம்
* உன் மகன் - மகளின் கல்வியில் வரும் கவனச்சிதறல்களை அவர்களே சரி செய்து கொள்வர். அவ்வப்போது திருக்குறள் அளவு அறிவுரையை, ஆலோசனையாக வழங்கு
* உலகின், 350 கோடி கணவன்களில் நீயும் ஒருவன். குடும்ப வாழ்க்கை போகும் பாதையிலேயே முரண்டு பண்ணாமல் பயணித்து, நல்ல கணவனாக வெற்றி பெற பார்.
— என்றென்றும் பாசத்துடன்
சகுந்தலா கோபிநாத்.