டைட்டானிக் காதல்... (11) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
டைட்டானிக் காதல்... (11)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2020
00:00

முன்கதை சுருக்கம்: ஜாதி மக்களிடம் பேசி வீடு திரும்பும் ஜோதி, கார்த்திகேயனை திருமணம் செய்ய மறுக்க, அவனை கொன்று விடுவதாக, மாமா கூறுகிறார். கார்த்திகேயனின் அம்மா ஜோதியின் கால்களில் விழுந்து கதற, பயப்படாமல் தைரியமாக இருக்குமாறு சமாதானம் செய்கிறாள்-

''போன காரியம் என்ன ஆச்சு?'' மிக சந்தோஷமாய், உற்சாகமாய், கார்த்திகேயனின் மார்பில் சாய்ந்தபடி கேட்டாள், புவனேஸ்வரி.
''உஷ்... இது, பேச வேண்டிய நேரமில்ல...'' கண்களை மட்டும் உயர்த்தி, அவனை பார்த்தாள்.
''பின்ன... என்ன நேரமாம்?''
''சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்.''
''ஏன், பேசறது சந்தோஷமில்லையா... பின்ன, எது உசிதம்?''
''இது...'' என்று அவளை சேர்த்து தன்னோடு அணைத்து, முன் நெற்றியில் முத்தமிட்டான். பின்னர் இரு கண்களில் முத்தமிட்டான்.
''நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்... எந்தன் வாயினிலே அமுதுாறுதே, புவனா எனும் பேர் சொல்லும் போதிலே...''
''ஆஹா... பேன்ட் போட்ட பாரதியே... நிறுத்தும் நிறுத்தும்.''
''நிறுத்திட்டேன், நிறுத்திட்டேன். ஆமா, எப்பவும் நான் தான் என் அன்பை வெளிப்படுத்தணுமா... ஒருநாள் கூட நீ வெளிப்படுத்த மாட்டியா?''
''பொண்ணுங்கள்லாம் அப்படித்தான்... வெளிப்படுத்த மாட்டோம். அதுவும், நான் குருக்கள் வீட்டு பொண்ணு. ரொம்ப சுத்தம், மடி, ஆச்சாரம்.''
''ஐயோ... போறும் போறும். ஏன் தான் குருக்கள் வீட்டு பொண்ணை காதலிச்சேனோ?''
''வருத்தப்படுறீங்களா?''
''இல்லை... ரொம்ப பெருமைப்படறேன்; போதுமா?''
''கோவமா?''
''பின்ன, இப்படிப்பட்ட சைவத்தை வச்சுக்கிட்டு என்ன பண்றது... அட்லீஸ்ட், கன்னத்திலாவது ஒரு, 'கிஸ்' குடுக்கலாமில்ல?''
''ஏன் இந்த ஏக்கம்... கன்னம் என்ன உதட்டுலயே தரேன்... என்னிக்கிருந்தாலும் தரப்போறது தானே... கடன் எதுக்கு வைக்கணும்?''
இழுத்து, அவன் உதட்டில் முத்தமிட்டாள்.
''அப்படியே ஜிவ்வுனு வானத்துல பறக்கிற மாதிரி இருக்குது.''
''இருக்கும்.''
''கடன்காரி, கடன்காரி. நான் கொடுத்ததை திருப்பித் தரவே இத்தனை... நீயா கொடுத்தா என்னவாம்?''
''அதையும் திருப்பி தரேன்னு வம்பு பண்ணுவீங்க.''
''அது, வம்பா உனக்கு?''
''பின்ன, அதுக்கு பேரு என்ன?''
''அதுதான் காதல்... காதல்ல, காமமும் உண்டு தெரியுமா... குருக்கள் வீட்டு பொண்ணுன்னா, காமம் இல்லாம போயிடுமா... உங்க அப்பாவும், அம்மாவும் இல்லாமலா உங்களையெல்லாம் பெத்தாங்க?''
''ஐயோ, போறும்; நிறுத்துங்க. ரொம்ப ஓவராப் போறது. இப்ப விஷயத்துக்கு வருவோம். ஊருக்கு போனீங்களே, அப்பா என்ன சொன்னார்?''
''அதை நான் சொல்லலாமா... உள்ள வரலாமா?''

திடீரென்று கேட்ட பெண் குரலில், இருவரும் திடுக்கிட்டு, சுதாரித்து திரும்பினர்.
''ஜோதி...'' என்று ஆச்சரியப்பட்டான், கார்த்திகேயன்.
சட்டென்று எழுந்து நின்றாள், புவனேஸ்வரி.
அவளை பார்த்ததும், குழந்தை மாதிரி ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள், ஜோதி. சிறிதும் தயங்காமல், புவனேஸ்வரியின் கன்னங்களில் முத்தமிட்டு சொன்னாள்.
''ஐய்யோ... என்ன அழகுக்கா நீங்க... மாமா, நிஜமாகவே நீங்க ரொம்ப குடுத்து வச்சவரு...''
இன்னமும் ஆச்சரியம் நீங்காதவனாக நின்றிருந்த கார்த்திகேயன், அவளை பார்த்து, ''திடீர்னு நீ எப்படி இங்க?''
''நீங்க சொல்லிட்டு போனதிலிருந்து, இவங்களை பார்க்கணும்ன்னு தோணிச்சு. புறப்பட்டு வந்தேன்.''
''எப்படி வந்த... யார் கூட வந்த?''
''கார்லதான் வந்தேன். நம்ம முத்துதான் ஓட்டிக்கிட்டு வந்தாரு.''
''முத்து எங்க இப்ப?''
''டீ குடிச்சுட்டு வரேன்னு போயிருக்காரு.''
''அப்பா எப்படி உன்னை தனியா விட்டாரு?''
''அத்தைகிட்டயும், அம்மாகிட்டயும், நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போய், ராத் தங்கி மண் சோறு சாப்பிட்டு வேண்டிக்கிட்டு வர்றதா சொல்லிட்டு புறப்பட்டு வந்திட்டேன்.''
''அப்பா...''
''அம்மா சமாளிச்சுக்குவாங்க... திருமணத்துக்காக வேண்டிக்கிறதா சொன்னேன். அம்மா சரின்னிடுச்சு. அத்தைதான் துருவி துருவி கேட்டாங்க... அவங்ககிட்ட மட்டும் உண்மையை சொல்லிட்டேன். பாவம், பெத்த மனசு, பக் பக்குன்னு அடிச்சுக்குது.''
''அம்மா என்ன சொன்னாங்க?''
''அவங்க என்ன சொல்லுவாங்க... மாமாவ மீறி அவுங்களால என்ன சொல்ல முடியும்?''
''திடீர்னு ஒரு போன் கூட பண்ணாம, புறப்பட்டு வந்திருக்க... அப்படி என்ன அவசரம்?''
''சொல்லத்தானே ஓடி வந்திருக்கேன். ஏம் மாமா, அவ்வளவு துாரத்துலேர்ந்து வந்திருக்கேனே... எனக்கு, பசி, தாகம் இருக்காதா... ஏதாச்சும் சாப்பிட குடுக்க கூடாதா?''
''சாரி ஜோதி... வா, மூணு பேரும் போய் எங்கேயாச்சும் சாப்பிடலாம்.''
''சரி மாமா...''
அருகில் நல்ல ஓட்டல் எதுவும் இல்லாததால், தேடிக் கொண்டு வந்தனர்.
''புவனா சைவம், ஜோதி...''
''தெரியும் மாமா... ஐயிறு வூட்டு பொண்ணு; கோவில் குருக்கள் வூட்டு பொண்ணு... நம்மள மாதிரியா சாப்புடுவாங்க?''
''உனக்கு சைவம் பரவாயில்லையா ஜோதி?''
''அக்கா சாப்புடுறதையே நாமளும் சாப்பிடலாம், மாமா.''
''அக்கா அக்கான்னு பார்த்த உடனே ஒட்டிக்கிட்ட?''
''அப்படி ஒட்டிக்கிடவும், பயமா இருக்குது மாமா...''
''ஏண்டா?''
''என் கறுப்பு, அவங்க மேல ஒட்டிக்கிடுச்சுன்னா?'' என்று வெள்ளையாய் சிரித்தாள், ஜோதி.
அந்த பேச்சிலும், சிரிப்பிலும் வெளிப்பட்ட குழந்தை மனதால் கவரப்பட்ட, புவனா, அவளை இழுத்து, அணைத்துக் கொண்டாள்.
''என் மேல கோவமில்லையே?'' என்று சன்னமான குரலில் கேட்டாள்.
''எதுக்கு?''
''இவரை, உன்கிட்டருந்து பறிச்சுக்கிட்டதுக்கு?''
''ஐய்ய... இவரை யாராலும் என்கிட்டருந்து பறிக்க முடியாது. நாங்க ரெண்டு பேரும், பாசமலர் சிவாஜி - சாவித்திரி.''
அரண்டு போனான், கார்த்திகேயன்.
'எவ்வளவு சுலபமாக தன் மனதை மாற்றிக் கொண்டு விட்டாள், இந்த பெண். ஊஹூம்... என்னால் மட்டுமில்லை, புவனாவாலும் முடியாது. இதற்கு மிக ஆழ்ந்த அன்பு வேண்டும். பரந்த மனம் வேண்டும். விட்டுக் கொடுக்கும் தன்மை வேண்டும்.
'எப்படிப்பட்ட நேசமிருந்தால், இப்படி ஓடி வந்திருக்கும்... எப்பேர்ப்பட்ட மனசு... ஒன்றும் தெரியாதவளா இவள்... அப்படி நினைப்பவர்கள் தான், ஒன்றும் தெரியாதவர்கள். நான், அப்பா, அம்மா... ஏன், புவனா கூட ஒன்றும் தெரியாதவள் தான் - இவளோடு ஒப்பிடுகையில்...
'புவனா, என்னை இப்படி விட்டுக் கொடுத்திருப்பாளா, இவளுக்கு? மாட்டாள். அவளாலும் முடியாது. இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். மிக மிக ஆழமான
அன்பு வேண்டும். நேசம் என்பது, தன் மனதிற்கு ஏற்ற மாதிரி நேசித்தவர் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதல்ல. மாறாக, நேசிப்பவருக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்வதும், அவரது இஷ்டத்தை பூர்த்தி செய்து வைப்பதுமே, நேசம்.
'அதைத்தான் இப்போது செய்கிறாள், ஜோதி. என் விருப்பமறிந்து, அதை நிறைவேற்ற முனைகிறாள். தன் ஆசையை, விருப்பத்தை குழி தோண்டி புதைத்து, என் ஆசைக்கு, விருப்பத்திற்கு நீரூற்றி வளர்க்கிறாள்.
'நிச்சயமாக உயர்ந்த பெண், ஜோதி. குடத்தில் இட்ட விளக்கு. இவளை போல், புவனா கூட நடந்து கொண்டிருக்க மாட்டாள். ஜோதி, யு ஆர் ரியலி கிரேட்...' என, நினைத்துக் கொண்டான்.
''என்ன மாமா... சாப்பிடாம யோசிச்சுக்கிட்டிருக்கீங்க?''
''நீ வந்த செய்தி, என்னவாக இருக்கும்ன்ற யோசனை தான்!''
''கொஞ்ச நேரம் போனா, ஒட்டு மொத்தமா சொல்லப் போறேன். சாப்பிட்டு முடிச்சு, வீட்டுக்கு போய் பேசிக்கலாம் மாமா.''

சாப்பிட்டு முடித்து, வீட்டுக்கு வந்தனர். முத்துவை அழைத்து குசலம் விசாரித்தான், கார்த்திகேயன். பின், 500 ரூபாய் கொடுத்து, சாப்பிட்டு வரச்சொன்னான்.
''சாப்பிட்டு நீங்க இப்படி வராந்தாவுல படுத்து, 'ரெஸ்ட்' எடுங்க... நாங்க உள்ள பேசிகிட்டிருக்கோம்.''
''சரிங்க தம்பி...'' என்ற முத்துவின் தயக்கத்தை பார்த்து, ''என்னங்க முத்து...'' என்று கேட்டான், கார்த்திகேயன்.
''வீடு ரொம்ப கலவரமா இருக்குங்க, தம்பி. அப்பா, சிங்கம் - புலி மாதிரி உறுமிக்கிட்டிருக்காரு. அம்மா பயப்படுறாங்க. விஷயம் தெரிஞ்சதும், ஊர் மொத்தமும், அப்பாவை அசிங்கப்படுத்த திட்டம் போட்டாங்க... ஆனா, நம்ம ஜோதியம்மா போய், ஊரை கூட்டி, புத்திசாலித்தனமா பேசி, அவுங்கள தடுத்து நிறுத்துனாங்க.''
''ஜோதியா... நம்ம ஜோதியா?''
''ஆமா தம்பீ... அதத் தெரிஞ்சுக்கிட்டு அப்பா வேற குதிச்சாரு... அதுக்கப்புறம் தான், குல தெய்வம் கோவில்ன்னு சொல்லி, ஜோதியம்மா கிளம்பி வந்தாங்க.''
''ஓ... விஷயம் இவ்வளவு துாரத்துக்கு போயிருச்சா?''
''ஆமா தம்பி... உங்களையும், அந்த பொண்ணையும் எப்படியாச்சும் சேர்த்து வைக்கணும்ன்னு, ஜோதியம்மா பாடு படுறாங்க... அவங்க சொல்றத கேட்டு அப்படியே நடங்க தம்பி.''
அவன், முத்துவை மவுனமாய் பார்த்துக் கொண்டே நின்றான்.
''ஜோதியம்மா நல்லதுதான் சொல்லும்; நல்லதையே செய்யும். அதும்படி நடந்தா, நல்லதே நடக்கும் தம்பீ.''
''சரி, முத்து... ஜோதி சொல்ற மாதிரியே செய்யலாம். நீங்க படுங்க.''
''இப்பதான் எம் மனசு நிம்மதியாச்சு. நீங்க போங்க தம்பி... நா படுக்கறேன்.''
ஆழ்ந்த யோசனையுடன் உள்ளே வந்தான், கார்த்திகேயன்.
தொடரும்
இந்துமதி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X